சிரிக்கும் மரபொம்மை
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6434
சிரிக்கின்ற மரத்தால் ஆன பொம்மை. அதைச் செய்தது யார் என்பது யாருக்குமே தெரியாது. அதற்குள் விலை உயர்ந்த இரத்தினங்கள் இருக்கின்றன. அதன் மதிப்பு இரண்டரை இலட்சத்தைத் தாண்டும். அந்த இரத்தினங்களை உள்ளே வைத்துக் கொண்டு அந்த மர பொம்மை அமைதியாக சிரித்துக் கொண்டிருக்கிறது.
அந்த இரத்தினங்கள் நாம் வாழும் இந்த பூமி படைக்கப்பட்ட கணத்தில் உண்டானதாகக் கூட இருக்கலாம்.
இல்லாவிட்டால் பூமி படைக்கப்பட்ட பிறகு இலட்சக்கணக்கான வருடங்களைத் தாண்டி இங்கு வந்ததாகக் கூட இருக்கலாம். பல இலட்சம் வருடங்களாக அது பூமிக்கு அடியிலேயே கிடந்திருக்கும். எத்தனையோ வருடங்கள் கடந்த பிறகு மனிதர்கள் அவற்றை பூமிக்கு அடியில் இருந்து எடுத்து சாணை பிடித்து, பட்டை தீட்டி ஒளிபெறச் செய்திருப்பார்கள். பல்வேறு வண்ணங்களில் அந்த இரத்தினங்கள் பிரகாசிக்கத் தொடங்கியிருக்கும். அதற்குப் பிறகு அவற்றுக்கு நடந்தது என்ன? யாரோ அதை ஒரு பஞ்சில் சுற்றி சிரிக்கின்ற மர பொம்மைக்குள் வைத்து விட்டார்கள். அது பல்வேறு கடல்களையும் தாண்டி கப்பலில் இங்கு வந்திருக்கலாம். அந்த மர பொம்மையைக் கடலோரத்தில் யாரோ குழி தோண்டி புதைத்து விட்டார்கள். எதற்காக? யாருக்குமே தெரியாது. காலப் போக்கில் மர பொம்மையை புதைத்து வைத்த இடத்தை அவர்கள் மறந்து போயிருக்கலாம். அது கடலோரத்தின் அலைகள் மேலும் கீழுமாய் ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் நனைந்த மண்ணிற்குள் சிரித்துக் கொண்டு இருந்தது.
அந்த மர பொம்மையைச் சுற்றி ஒரு சிறிய காதல் கதை இருக்கிறது. எத்தனையோ பேர் தெரியாமல் அந்த மரபொம்மையை மிதித்து மிதித்தே அது பூமிக்குள் ஆழமாகப் புதையுண்டு போயிருக்க வேண்டும். அவைகள் அவ்வப்போது ஏறி இறங்கி மண் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும்போது மரபொம்மையின் தலை லேசாக வெளியே தெரிய வரலாம். யார் கண்ணிலும் படாமல் அந்த பொம்மை அங்கேயே சிரித்துக் கொண்டிருந்தது - பூமியில் ஒரு பொக்கிஷத்தைப் போல! அது யார் கண்ணில் படும்? யாருக்கு அந்த அதிர்ஷ்டம் வாய்த்திருக்கிறது?
அலைகள் மேலேயும் கீழேயும் ஏறி இறங்குவதைப் போல காலம் படு வேகமாகக் கடந்து கொண்டிருந்தது. கடற்கரை மேலோட்டமாக பார்த்தால் மிகவும் அழகாக இருந்தது. அருமையான, சுத்தமான காற்று. ஆனால், மனிதர்கள் அதை சுத்தமில்லாமல் அசிங்கப்படுத்தி வைத்திருந்தனர். அதைச் சுத்தம் செய்து அழகுபடுத்த
அங்கு யாருமே இல்லை. மலம் கழிப்பதும், சிறுநீர் இருப்பதும் அந்தக் கடற்கரையில் சர்வ சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதற்கு மத்தியில் சாயங்கால நேரங்களில் காற்று வாங்குவதற்காக வரும் ஆண்களும், பெண்களும் நன்றாக ஆடைகள் அணிந்து அங்கு கிடக்கும் பாறைகளில் போய் அமருவார்கள். பக்கத்திலேயே துறைமுகம். அதில் பாய் மரக்கப்பல்கள் அவ்வப்போது வரும். பெரிய கப்பல்கள் கடலில் தூரத்திலேயே நின்றுவிடும். அதிலிருந்து பெரிய படகுகளில் சரக்குகளை இறக்குவார்கள்.
கடலையொட்டி இருக்கும் சிறு நகரம் மிகவும் பழமையானது. அந்த நகரம் கூட மிகவும் அசுத்தமானதுதான். அதனால் என்ன? சாலமன் சக்கரவர்த்தியின் காலம் தொட்டே அந்த நகரம் மிகவும் புகழ் பெற்ற ஒன்றாயிற்றே! சுலைமான் நபியின் காலம்!
எத்தனையோ ஆயிரம் வருடங்கள் கடந்து போய்விட்டன. இருந்தாலும் அந்தச் சிறு நகரத்திற்கு சொல்லிக் கொள்கிற மாதிரி பெரிய ஒரு மாற்றமும் உண்டாகவில்லை. பழமையான பழகிப்போன அந்த நாற்றம் மட்டும் கொஞ்சமும் மாறாமல் அப்படியே இப்போதும் இருக்கிறது. கடற்கரை அழகாக இருக்க வேண்டும், அசிங்கமில்லாமல் இருக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் மனிதர்கள் கொஞ்சமும் கவலையேபடாமல் இருக்கிறார்களே! அது எப்படி? அவர்களுக்கு ஏன் அழகுணர்வு என்ற ஒன்று இல்லாமலே போய்விட்டது? கண்களில் மை இடுவதற்கும் முகத்தில் பவுடர் பூசுவதற்கும் ஸ்ப்ரே அடிப்பதற்கும் அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. சென்ட் அடிக்கவும் நன்றாகத் தெரிந்திருக்கிறார்கள். ஹை ஹீல்ஸ் செருப்புகள் அணிய நன்றாகப் பழகிக் கொண்டிருக்கிறார்கள். ஆண்கள் நீளமாக தலை முடியை வளர்ப்பதற்கும் கிருதா வைக்கவும் நன்கு கற்றிருக்கின்றனர். பலரும் டிரான்சிஸ்டர் ரேடியோக்களை கையில் வைத்துக் கொண்டுதான் தெருவிலேயே நடக்கிறார்கள். மொத்தத்தில்- இந்த மாதிரியான விஷயங்களில் மக்கள் நவ நாகரீகமானவர்களாக மாறிவிட்டார்கள். எங்கு பார்த்தாலும் அரசியல் கட்சிகளின் வண்ணம் பூசிய கொடிகளின் ஆர்ப்பாட்டங்கள்தான். எந்தப் பக்கம் நோக்கினாலும் ஊர்வலங்களும் வானைப் பிளக்கும் கோஷங்களும்தான். ரேடியோக்கள்... ஒலி பெருக்கிகள்... டெலிவிஷன்கள்...
அந்த நகரத்திற்கு நிறைய பஸ்கள் வந்து போய்க் கொண்டிருக்கின்றன. வியாபாரிகள்... மீனவர்கள்... முஸ்லீம் பள்ளி வாசல்களும் அங்கு இருக்கின்றன. இரண்டு மூன்று இந்து கோவில்களும், ஒரு கிறிஸ்தவ தேவாலயமும் இருக்கிறது. மூன்றிலுமே எல்லா காரியங்களும் ஒலி பெருக்கி மூலம்தான். அங்கே ஒரு உயர்நிலைப்பள்ளி இருக்கிறது. ஒன்றிரண்டு கருணை இல்லங்களும், ஒன்றிரண்டு பஜனை மடங்களும் ஒரு பாலவாடியும் இருக்கவே இருக்கிறது. பிறகு- ஒரு திரைப்பட அரங்கு, ஒன்றிரண்டு கள்ளுக் கடைகள், இரண்டு மூன்று தேநீர் கடைகள். ஐந்தாறு நாற்றம் பிடித்த ஹோட்டல்கள்... போலீஸ் ஸ்டேஷன் இல்லை. ஒரு கஸ்டம்ஸ் அலுவலகம் இருக்கிறது. ஒரு மீன் மார்க்கெட், காய்கறி கடைகளும், மாமிசக் கடைகளும், சோடாவும் மற்ற பொருட்களும் விற்பனை செய்யப்படும் ஏகப்பட்ட பெட்டிக் கடைகளும் அங்கு இருக்கின்றன. சாராயம் எங்கு பார்த்தாலும் கிடைக்கும்! கள்ளச் சாராயமும் கள்ளக்கடத்தலும் சர்வ சாதாரணமாக நடக்கும். தெருக்கள் நாற்றம் பிடித்தவையாகவும், மனிதர்கள் நிறைந்ததாகவும் இருக்கும். பாய்மரக் கப்பல்களில் வரும் வெளிநாட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அரேபியர்கள்தான். அவர்களின் பாய்மரக் கப்பல்களுக்கு கேடுகள் வரும் பட்சம், அதைச் சரி செய்வதற்கு இடங்கள் இருக்கவே செய்கின்றன. அப்படிப்பட்ட ஒரு இடத்தில் இருக்கும் அலுவலகத்தில் ஒரு டைப்ரைட்டர் இயந்திரம் இருக்கிறது. அதில் முதலாளியே, அவசியம் என்று வருகிறபோது ஒரு விரலால் கடிதங்களை டைப் செய்வார். முன்னால் அங்கு ஒரு டைப்பிஸ்ட் வேலைக்கு இருந்தாள். வியாபாரம் சரியாக நடக்காததால், டைப்பிஸ்ட் வேலையை விட்டுப் போக வேண்டியதாகிவிட்டது.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் டைப் ரைட்டிங்கிலும் சுருக்கெழுத்திலும் மிக உயர்ந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற ஒரு முஸ்லீம் இளம்பெண் வேலை தேடி அங்கு வந்தாள். பெயர்- ரம்லத்துபீபி. வயது இருபத்தொன்று. பார்ப்பதற்கு பெரிய அழகி என்று சொல்வதற்கில்லை. கொஞ்சம் கறுப்பு நிறம். ஆரோக்கியத்தைப் பற்றி குறை கூறுவதற்கில்லை. யார் அவளைப் பார்த்தாலும் "பாவம் இந்தப் பெண்" என்று கட்டாயம் கூறுவார்கள்.