சிரிக்கும் மரபொம்மை - Page 9
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6436
"தர்றோம்.."
சிறிதுநேர அழுகை முடிந்து, தலையை உயர்த்தி பார்த்தபோது அபுல்ஹஸனைக் காணோம். அன்று மாலை தாய்க்கும் மகளுக்கும் புதிய ஆடைகள் வந்து சேர்ந்தன. ரம்லத்து பீபிக்கு ஸ்பெஷலாக வாங்கப்பட்ட விலை உயர்ந்த புடவைகள், ப்ளவ்ஸுகளுக்கும், பாவாடைக்கும் உள்ள துணிகள், ஸ்பெஷல் ப்ரேஸியர்கள், தங்க வளையல்கள், பவுடர், ஸ்ப்ரே, கண்மை, டூத் ப்ரஷ், டூத் பேஸ்ட், கைக்கடிகாரம், செருப்புகள், குடை அவற்றுடன் ஆயிரம் ரூபாய்.
ரம்லத்துபீபி- அபுல்ஹஸன் திருமணம் மிகவும் சிறப்பாகக் கொண்டாட்டங்களுடன் நடைபெற்றது. ஊரில் இருந்த எல்லோரையும் திருமணத்திற்கு அழைத்திருந்தனர். மம்முஹாஜியும் திருமணத்திற்கு வந்திருந்தான். ரம்லத்துபீபியின் வீடு வாடகைக்கு விடப்பட்டது. அவளும் அவளின் தாயும் அபுல்ஹஸனின் வீட்டில் வந்து தங்கினார்கள். ஒரு நாள் ஒரு குறிப்பிடத்தக்ககாரியம் நடைபெற்றது. ரம்லத்துபீபியின் இரண்டு கையொப்பங்களை வங்கிக்காரர்களின் ஒரு ஃபாரத்தில் அபுல்ஹஸன் வாங்கிக்கொண்டு போனான். அந்தக் கையெழுத்து எதற்கு என்று அவளுக்குத் தெரியாது. அன்று இரவு அபுல்ஹஸன் ஒரு செக் புத்தகத்தையும் பாங்க் பாஸ் புக்கையும் ரம்லத்துபீபியின் கையில் தந்தான். பாஸ் புக்கைத் திறந்து பார்த்த ரம்லத்துபீபி வாயடைத்துப் போனாள். அவளால் நம்பவே முடியவில்லை. இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் ரம்லத்து பீபியின் கணக்கில் போடப்பட்டிருந்தது.
"இந்தப் பணம் எங்கே இருந்து வந்தது?"
"என்கிட்ட நீ கொடுத்தேல்ல அந்தச் சிரிக்கிற மர பொம்மை? அதுல நிறைய ரத்தினக்கற்கள் இருந்துச்சு. அதுல இருந்து கொஞ்சத்தை நான் வெளியே இருக்குற ஒரு பெரிய நகரத்துல கொண்டு போய் விற்றேன். அதோட சொந்தக்காரர் யாருன்னு ரம்லத், உனக்குத் தெரியுதுல்ல? உன்னோட பேர்ல இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்களோட அனாதை ஆலயங்களுக்கு ரெண்டாயிரத்தி ஐநூறு ரூபா வீதம் கொடுத்தேன்."
"இது எல்லாமே நான் தந்த சிரிக்கிற மரபொம்மையிலயா இருந்துச்சு?"
"வா..."
அவர்கள் வரவேற்பறைக்கு வந்தார்கள். சிரித்துக் கொண்டிருக்கும் மர பொம்மையை டெலிவிஷன் செட்டின் மேல் இருந்து அபுல் ஹஸன் எடுத்து தலையைத் திருப்பிக் கழற்றினான். ரம்லத்துபீபியின் இரண்டு கைகளிலும் கொட்டினான். பிறகு பொம்மையைச் சரிப்படுத்தி மீண்டும் டெலிவிஷன் செட்டின் மேல் வைத்தான். அவள் ஆச்சரியப்பட்டு நாற்காலியில் அப்படியே உட்கார்ந்துவிட்டாள்.
உள்ளங்கையில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் பல நிறங்களிலுள்ள இரத்தினக் கற்கள்!
அவள் பார்த்தாள். டெலிவிஷன் செட்டின் மேல் சிரித்துக் கொண்டிருக்கும் மர பொம்மை இப்போதும் சிரித்துக் கொண்டே இருந்தது.
மங்களம்.