சிரிக்கும் மரபொம்மை - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6435
இருபத்தஞ்சு வருஷ காலம் முஹம்மது நபிக்கு கதீஜாபீபி மட்டும்தான் மனைவி. கதீஜாபீபியோட மரணத்துக்குப் பின்னாடி சில பெண்களை நபி மனைவிகளா ஏத்துக்கிட்டாரு. நபி மட்டும் அப்படிச் செய்யல... அப்போ வாழ்ந்துக்கிட்டு இருந்த பல முஸ்லீம்களும் அப்படி நடந்திருக்காங்க. எதற்காக அவர்கள் ஒண்ணுக்கும் மேற்பட்ட பெண்களை மனைவிமார்களா ஏத்துக்கணும்? போர்களில் ஏகப்பட்ட முஸ்லீம் ஆண்கள் மரணமடைஞ்சிட்டாங்க. இதனால நிறைய முஸ்லீம் பெண்கள் அனாதையா ஆயிட்டாங்க. அவர்கள்ல பெரும்பாலான பெண்களுக்கு அனாதையாக்கப்பட்ட பிள்ளைங்க இருந்தாங்க. அப்படிப்பட்டவங்களைத்தான் வாழ்ந்துக்கிட்டிருந்த நபியும் மற்றவர்களும் மனைவிமார்களா ஏத்துக்கிட்டு பாதுகாப்பு கொடுத்தது."
"மகளே, இதை எல்லாம் எழுதவும் படிக்கவும் தெரியாத மம்முஹாஜியைப் போல ஒரு ஆளுக்கிட்ட சொல்லி என்ன பிரயோஜனம்? அவங்கக்கிட்ட பணம் இருக்கு. ஆணவம் இருக்கு. அவுங்க விருப்பப்படி கல்யாணம் பண்ணித் தர்றதுக்கு காஸிகளும் தங்ஙன்மார்களும் மவ்லவிமார்களும், முஸ்லியாக்கன்மார்களும் இருக்கவே செய்றாங்க. பிறகென்ன?"
"உம்மா... இஸ்லாம் மதத்துல அனேக மனைவிகளைத் திருமணம் செய்றதுக்கு அனுமதி கிடையாது. அப்படின்னா, அதற்கு அனுமதியே கிடையாதா? இருக்கு... ஏற்கனவே இருக்குற மனைவிக்கு பைத்தியம், குஷ்டம், இல்லாட்டி வேற ஏதாவது குணமாக்க முடியாத நோய்கள், குழந்தை பெற முடியாத நிலை... இப்படி ஒரு சூழ்நிலை இருந்தா ஆரோக்கியமுள்ள ஒரு பெண்ணை புதுசா ஒரு ஆளு மனைவியா ஏத்துக்கலாம். அப்படி நடக்குறதுக்கு சரியான காரணம் வேணும்னு சொல்லப்பட்டிருக்கு. பிறகு நான் தான் சொன்னேன்ல... போர் காரணமாக அனாதைப் பிள்ளைகளும் விதவைகளும் எண்ணிக்கையில் அதிகமாக ஆகுறப்போ, பெண்கள் அதிகமாகவும் ஆண்கள் குறைவாகவும் இருக்குற ஒரு சூழ்நிலை உண்டாகுறப்போ பாதுகாப்பு கருதி முஸ்லீம் ஆண்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட முஸ்லீம் பெண்களைத் திருமணம் செய்து கொள்ள இஸ்லாம் மதம் அனுமதிச்சிருக்கு. அப்படிப்பட்ட நிலை வர்றப்ப மட்டுமே ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிமார்கள் ஒரு ஆளுக்கு இருக்கலாம்."
"நான் இதை எல்லாம் மம்முஹாஜிக்கிட்ட சொல்லல மகளே!"
ரம்லத்துபீபி கேட்டாள்.
"உம்மா... பல மனைவிமார்கள் இருக்குறதைப் பற்றி அல்லாஹுவோட வசனமான குர் ஆன் என்ன சொல்றதுன்னு உங்களுக்கு ஞாபகத்துல இருக்கா? நான் சொல்றேன். "அனாதைக் குழந்தைகள் விஷயத்தில் நீங்கள் சரியாக நடக்கவில்லை என்று நீங்கள் அச்சம் கொள்வீர்களேயானால், உங்களுக்கு நன்றாகப் படுகிற பெண்களை இரண்டோ மூன்றோ அல்லது நான்கு முறை கூட திருமணம் செய்து கொள்ளுங்கள். இப்போது சரியாக நடக்கவில்லை என்று உங்கள் மனதில் பட்டால், ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து கொள்ளுங்கள்" (குர்-ஆன்). அப்படின்னா அனாதைக் குழந்தைகளைக் கொண்ட விதவைகளா இருக்கணும்... அனாதைகளைக் காப்பாற்றுவதற்குத்தான் மறு கல்யாணமே செய்யணும். இப்போ என்னைப் போல இருக்குற ஒரு கன்னிப் பெண்ணோட திருமணத்தைப் பற்றி முஹம்மது நபி என்ன சொல்றாருன்னா "ஒரு கன்னிப் பெண் தன்னுடைய அனுமதி இல்லாமல் திருமணமே செய்விக்கப்படக்கூடாது". அப்படின்னா மம்முஹாஜி என்கிட்ட கேட்கச் சொன்னாரா?"
"இல்ல மகளே... உன்னைக் கல்யாணம் பண்ணித்தரச் சொன்னாரு."
"நான் என்ன பசு மாடா? சரி... உம்மா, அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?"
அவளின் தாய் சொன்னாள்.
"நான் ஒண்ணும் சொல்லல. கோபத்துல அந்த ஆளை அடிச்சிட்டேன்."
"அந்த அளவுக்கு போயிருக்க வேண்டியதில்லை."
"என்னால தாங்க முடியல. மகளே, கிழட்டு பட்குஸ்."
"அப்படிக்கூட சொல்லியிருக்கக் கூடாது."
"சரி... நீ ரொம்பவும் சந்தோஷமா இருக்குற மாதிரி இருக்கியே!"
ரம்லத்து பீபி ஒன்றும் சொல்லவில்லை. காதல் விஷயமாச்சே! அதை எப்படி தன் தாயிடம் கூறுவாள்? அவள் லேசாக புன்னகை செய்தாள். அவளின் மனதிற்குள் புன்னகைத்தவாறு நின்றிருந்தான் அபுல்ஹஸன். அவள் அவனை மனதிற்குள் நினைத்து நினைத்து புளகாங்கிதம் அடைந்தாள்.
"உனக்கு பசி எடுக்கலையா மகளே?"
"பசி இருக்கு..."
அவர்கள் பலாப் பழத்தையும், வேக வைத்த தட்டைப் பயறையும், சர்க்கரை போட்ட பால் கலக்காத தேநீரையும் சாப்பிட்டார்கள்.
மறுநாள் பொழுது விடிந்தது. அப்போது அவர்கள் பார்வையில் ஒரு பயங்கர காட்சி! வேலிகள் அனைத்தும் பிய்க்கப்பட்டிருந்தன. தட்டைப் பயறு கொடிகள் வெட்டப்பட்டு சிறு சிறு துண்டுகளாகக் கிடந்தன. முற்றத்தில் இருந்த மிளகாய்ச் செடிகளும், கத்திரிக்காயும், வெண்டையும், மிளகும் முழுமையாகப் பறிக்கப்பட்டு வாசல் படி அருகில் கூட்டமாகப் போடப்பட்டிருந்தன.
யார் இப்படி ஒரு கொடுமையான காரியத்தைச் செய்தது?
பக்கத்து வீட்டுக்காரர்களை அழைத்துக்கொண்டு வந்து காட்டினார்கள். எல்லோரும் அவர்களுக்கு நடந்த இந்த விஷயத்திற்காக மிகவும் வருத்தப்பட்டார்கள். இந்த மாதிரியான ஈவு இரக்கமறற ஒரு செயலைச் செய்தது யார் என்பதை அவர்கள் யாராலும் சொல்ல முடியவில்லை. எதற்காக இப்படிச் செய்தார்கள் என்பதும் அவர்களுக்குப் புரியவில்லை. அன்றே இன்னொரு வருத்தப்படக்கூடிய சம்பவமும் நடந்தது. ரம்லத்துபீபி பார்த்துக் கொண்டிருந்த வேலையும் இல்லாமல் போனது. யாரோ சொல்லித்தான் இதுவும் நடந்திருக்கிறது.
"ரம்லத்துபீபி, இனிமேல் நீ வர வேண்டாம். இந்தா அஞ்சு ரூபாய்..."
ரம்லத்துபீபி திரும்பி வந்தாள். கடற்கரையில் இருந்த கரிய பாறையில் மனதில் கவலைகள் ஆக்கிரமிக்க, நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தாள். அபுல்ஹஸன் வரவேயில்லை.
அபுல்ஹஸன் எங்கே போனான்?
ரம்லத்துபீபி வீட்டிற்குத் திரும்பினாள். வேலை இல்லாமற் போன விஷயத்தை தன் தாயிடம் கூறினாள். அவளின் தாய் சிறிது நேரம் எந்த பதிலும் கூறாமல் மௌனமாக இருந்தாள்.
பிறகு சொன்னாள்.
"பரவாயில்ல மகளே... நம்மளைப் படைச்சவன் நம்மைக் காப்பத்துவான்..."
கடவுள் மட்டுமே அவர்களைக் காப்பாற்றுவார்! நாட்கள் கடந்தோடின. கஷ்டங்கள் அடுத்தடுத்து உண்டாக, கையில் இருந்த சில தங்க நகைகளை விற்று அவர்கள் வாழ்ந்தார்கள். அதைக் கொண்டு அரிசி வாங்கினார்கள். மற்ற பொருட்களை வாங்கினார்கள். இப்படி நாட்கள் போய்க்கொண்டிருந்த போது நடு இரவு நேரத்தில் அவர்கள் வீட்டின் மேல் யாரோ கற்களை எறிந்தார்கள். விளக்கை எரிய விட்டு வாசலைத் திறந்து பார்க்க அவர்களுக்கே பயம். தாயும், மகளும் பயந்து நடுங்கி மனதிற்குள் கடவுளைத் தொழுதார்கள்.
"அல்லாஹுவே... இரவு, பகல் எந்நேரத்திலும் உண்டாகிற பயங்களில் இருந்து எங்களை நீதான் காப்பாத்தணும்..."
மறுநாள் இரவில் வீட்டின் மேல் யாரோ கல்லெறிந்ததைப் பற்றி பக்கத்து வீட்டுக்காரர்களிடம் அவர்கள் சொன்னார்கள். கற்களை எறிந்தது யார் என்பது யாருக்குமே தெரியாது.
ஒரு ஆண் வீட்டில் அவர்களுடன் இருந்தால்...? யாரை அழைத்து இருக்கச் செய்வது? அப்படி யாருமே இல்லையே! அனாதையான இரண்டு உயிர்கள்! அவர்கள் தங்களைக் காப்பாற்றும்படி கடவுளிடம் வேண்டினார்கள்.