Lekha Books

A+ A A-

சிரிக்கும் மரபொம்மை - Page 7

sirikkum-mara-bhommai

"ரம்லத் என்ன செய்றாப்ல?"

"ஸ்கூல் ஃபைனல் பாஸ் பண்ணிட்டு ஷார்ட் ஹேண்ட்லயும், டைப் ரைட்டிங்லயும் நல்ல மார்க் வாங்கி பாஸ் பண்ணினா. ஒரு சின்ன வேலை கிடைச்சது. அதுவும் இப்போ இல்லாமல் போச்சு."

பிய்ந்து கிடக்கும் வேலிகளையும், முற்றத்தில் குவிந்து காய்ந்து கருகிப் போய் குவியலாகக் கிடந்த மிளகாய்ச் செடிகளையும் கத்திரிக்காயையும், வெண்டையையும், தட்டைப் பயறு கொடிகளையும் அழைத்துப்போய் காட்டிய அவள் சொன்னாள்.

"எங்களோட கஷ்ட காலம்னுதான் சொல்லணும். ஒரு மனிதனோட கல்யாண ஆசையால வந்த வினை இது..."- தொடர்ந்து மம்முஹாஜி செய்த துரோகச் செயல்கள் ஒவ்வொன்றையும் எதையும் மறைக்காமல் அபுல்ஹஸனிடம் சொன்ன ரம்லத்தின் தாய் தொடர்ந்து கூறினாள்.

"மம்முஹாஜியை எதிர்த்துப் பேச இங்கே யாருக்குமே துணிச்சல் கிடையாது. சொல்லப்போனா, எங்களோட உயிருக்கு பாதுகாப்பே இல்லாம இருக்கு. அல்லாஹு மட்டும்தான் இப்போ எங்களுக்கு பாதுகாப்பு. இந்த வீட்ல அடுப்பு எரிஞ்சி எத்தனையோ நாட்கள் ஆயிடுச்சு. சாயங்காலம் இங்கே விளக்கு கொளுத்தி எவ்வளவு நாட்கள் ஆச்சு தெரியுமா? இன்னைக்கு மம்முஹாஜி வந்து எங்களோட நிலத்தையும் வீட்டையும் அவருக்கு விற்கச் சொல்லி வற்புறுத்தினாரு கம்மியான விலைக்கு. போறப்போ தேங்காய் காய்ச்சிருச்சில்லன்னு சொல்லிட்டுப் போனார்..."

"நீங்க எதைப் பற்றியும் கவலைப் பட வேண்டாம்."

அபுல்ஹஸன் கைக் கடிகாரத்தைப் பார்த்தவாறு சொன்னான்.

"நான் போயிட்டு ஒரு மணி நேரத்துல வர்றேன்."

அபுல்ஹஸன் புறப்பட்டான். முற்றத்தில் நின்றவாறு ரம்லத்து பீபியிடம் சொன்னான்.

"ரம்லத்... தைரியமா இரு."

"சிரிக்கிற மர பொம்மை எங்கே?"

"வீட்ல டி.வி. செட்டுக்கு மேல இருந்து சிரிச்சிக்கிட்டு இருக்கு."

அபுல்ஹஸன் கிளம்பினான். சாயங்காலத்திற்கு முன்பு இரண்டு பேர் வீட்டிற்குத் தேவையான பொருட்களைச் சுமந்து கொண்டு வந்தார்கள். அரிசி, உப்பு, மிளகு, மஞ்சள், வெங்காயம், தேங்காய், எண்ணெய், பருப்பு, மண்ணெண்ணெய், சர்க்கரை, தேயிலை, விறகு- எல்லாமே இருந்தன. பல நாட்களுக்குப் பிறகு அந்த வீட்டில் முதல் முறையாக அரிசி போட்டு சோறு ஆக்கினார்கள். வீட்டின் முன் விளக்கு ஒளிர்ந்தது.

மாலை நேரம் முடிந்து இரவு எட்டிப் பார்த்தது. சிறிது நேரத்தில் அபுல்ஹஸன் அங்கு வந்தான். அவனுடன் டார்ச் விளக்குகள், அரிவாள் ஆகியவற்றுடன் நான்கு ஆட்கள் வந்தார்கள். அபுல்ஹஸன் ரம்லத்து பீபியிடம் சொன்னான். "யாரும் சத்தம் போடாதீங்க. பெருசா ஒண்ணும் நடக்கப் போறது இல்ல. நாங்க இருட்டுல ஒரு மூலையில மறைஞ்சு இருந்து அவரோட ஆட்கள் வராங்களான்னு பார்க்கறோம்."

"சாயா?"- ரம்லத்து பீபி கேட்டாள்.

"போடு... அஞ்சு டம்ளர் பால் கலக்காத சாயா..."

"அஞ்சு டம்ளர்களுக்கு இங்கே எங்கே போறது?"

"அப்படின்னா சாயாவும் ஒரு டம்ளரும் கொஞ்சம் தண்ணியும் கொடு..."

இரவு ஒன்பது மணி ஆனபோது முன்பக்கம் இருந்த விளக்கு அணைக்கப்பட்டது. அந்த வீடும் நிலமும் இருட்டில் மூழ்கியது. ஒரு சிறு ஓசை கூட இல்லை. இரவு மணி பதினொன்று ஆன போது நிலத்தில் யாரோ நடந்து வரும் ஓசை கேட்டது. "குக குக"வென்று ரகசியக் குரலில் பேசும் சத்தமும் கேட்டது. அவர்கள் தென்னை மரங்களில் ஏறினார்கள்.

ஐந்து பேரும் இருளில் முற்றத்தில் வந்து நின்றார்கள். கையில் தேங்காய் குலைகளுடன் மரத்தை விட்டு இறங்கிய இரண்டு பேர் டார்ச் விளக்கு வெளிச்சத்தில் நின்றிருந்தார்கள். இரண்டு பேரின் முதுகிலும் அரிவாள் பலமாக விழுந்தது. அந்த இரண்டு பேரையும் வாசலுக்குக் கொண்டு வந்தார்கள். கயிறு வாங்கி அவர்களைக் கட்டிப் போட்டார்கள்.

"எங்களை விட்டுடுங்க..." - தேங்காய் திருடர்கள் சொன்னார்கள்."நாங்க கடல்ல மீன் பிடிக்கிறவங்க. மம்முஹாஜியோட கடற்கரைக்குப் பக்கத்துல இருக்குற இடத்துல நாங்க குடிசைகள் கட்டி வாழ்ந்துகிட்டு இருக்கோம். அவர் சொன்னதை நாங்க கேட்கலைன்னா மம்முஹாஜி எங்களை வீட்டை விட்டே துரத்திடுவாரு."

"இங்கே வேலிகளைப் பிய்ச்சதும், மிளகாயையும், கத்திரிக்காயையும் மற்ற செடிகளைப் பறிச்சதும், தேங்காய், பலா எல்லாத்தையும் திருட்டுத்தனமா பறிச்சு கொண்டு போனதும், ராத்திரி நேரத்துல வீட்டு மேல கல்லெறிஞ்சதும் யாரு?"

"மம்முஹாஜி சொல்லி நாங்கதான் செஞ்சோம்."

"சரி... நான் சொல்ற படி செய்யணும்... என்ன? சரி... நடங்க." அவர்கள் நடந்தார்கள். மம்முஹாஜியின் வீட்டின் முற்றத்தை அடைந்ததும் அழைத்தார்கள்.

"ஹாஜியாரே!"

உள்ளேயிருந்து. "யார்டா?" என்று குரல் வந்தது.

"ஐத்ரோஸும் குட்டி ஆலியும்..."

"தேங்காய் எத்தனை இருந்ததுடா?"

"ரெண்டு கொலையை சாய்ச்சப்போ, அவங்க பிடிச்சிட்டாங்க."

"ரெண்டு பொம்பளைங்களா? அவுங்களைக் கொன்னு கடல்ல வீசி எறிய வேண்டியதுதானேடா? முட்டாள் பசங்களா!"

மம்முஹாஜி விளக்கைப் போட்டு வாசல் கதவைத் திறந்தான். ஏழு பேர் நின்றிருப்பதைப் பார்த்து அப்படியே செயலற்று நின்றுவிட்டான்.

"என்ன விசேஷங்கள் மம்முஹாஜி?"- அபுல்ஹஸன் கேட்டான். "ஒண்ணுமே தெரியாத ஏழைங்களான அந்த ரெண்டு பெண்களையும் கொன்று கடல்ல வீசி எறியணுமா? முஹம்மது நபி சொல்றாரு. பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் பசியாகக் கிடக்கிறபோது வயிறு நிறைய உண்பவன் முஸ்லீமே அல்ல. நீங்க வயிறு நிறைய சாப்பிட மட்டும் செய்யல. மனப்பூர்வமா பக்கத்து வீட்டுக்காரங்களை பட்டினி கிடக்கும்படி செய்ததோடு இல்லாம அவுங்களைக் கொல்லுறதுக்கும் முயற்சி பண்ணி இருக்கீங்க. அதோட நிற்காம அவுங்களைக் கொன்னு கடல்ல வேற வீசி எறியச் சொல்றீங்க. நீங்க ஏழு கல்யாணங்கள் பண்ணி இருக்கீங்க. பல பெண்களையும் எத்தனையோ குழந்தைகளையும் நீங்க அனாதையா விட்டுட்டீங்க. அனாதைகளுக்கு உதவணும்னு தான் முஹம்மது நபி சொல்லி இருக்காரு. வாழ்க்கையில நீங்க ஏதாவது நல்ல காரியங்கள் செய்திருக்கீங்களா?"

"நான் ரெண்டு தடவை ஹஜ் யாத்திரை போயிருக்கேன்."

"ஹஜ் யாத்திரை போறதை ஏன் ரெண்டோட நிறுத்திக்கிட்டீங்க? அதற்குப் பிறகும் போயிருக்க வேண்டியதுதானே! அங்கே அரேபியா இருக்கு. மக்காவுல க, அபய் இருக்கு. ரேடியோ, தங்கம், கடிகாரம்னு கடத்தி ஒவ்வொருமுறையும் ஹஜ் யாத்திரைக்குப் போய் வர்றப்போ குறைஞ்சது ஐயாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்ல? ஹஜ் வியாபாரம் உண்மையிலேயே லாபகரமானது. பணக்காரனாகலாம். ஊர்ல பெரிய மனிதனாகலாம். விருப்பப்படி பல பெண்களைக் கல்யாணம் பண்ணிக்கலாம். சொன்னால் உங்களுக்குப் புரியுமான்னு தெரியல. ஹஜ் யாத்திரைன்றது ஒரு முஸ்லீமோட வாழ்க்கையில் மிகவும் புண்ணியமான ஒரு செயல். வாழ்க்கையில் இருக்கிற கொடுக்கல், வாங்கல் எல்லா விஷயங்களையும் விட்டுட்டு புனிதமான எண்ணத்துடன் சுத்தமான மனசுடன் இறக்கத் தயாராக இருக்கும் மன நிலையுடன இருக்குறவங்கதான் ஹஜ் யாத்திரைக்கே போகணும்.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel