சிரிக்கும் மரபொம்மை - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6435
அவர் பரந்த மனதைக் கொண்ட ஒரு அருமையான மனிதர். அவளை எந்தவித கவலையும் இல்லாமல் வளர்த்தார். நன்கு படிக்க வைத்தார். முஸ்லீம்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பி வைத்து கல்வி கற்கச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிராத அந்தக் கால கட்டத்தில், மத சம்பந்தமான கல்வியைக் கற்கவைத்ததோடு அவளைப் பள்ளிக்கூடத்திற்கும் அனுப்பி வைத்தார். கப்பலில் இருந்து படகுகளுக்கு இறக்கப்படும் சரக்குகளைக் கணக்கு எழுதி வைக்கும் வேலை பார்த்தார் அவளின் வாப்பா. அவருக்கு இதில் நல்ல வருமானம் கிடைத்தது. ஒவ்வொரு நாள் இரவிலும் வீட்டிற்கு வருகிறபோது, அவளுக்கும் அவளின் தாய்க்கும் தின்பதற்கு ஏதாவது இனிப்புப் பலகாரங்களை அவர் கட்டாயம் வாங்கிக் கொண்டு வருவார்.
ஒரு முறை காரமும் உப்பும் கொண்ட பருப்பு வடை தின்ன வேண்டும் போல் இருந்தது அவளுக்கு. தன்னுடைய வாப்பாவிடம் தான் ஆசைப்பட்டதை அவள் சொன்னாள். அவ்வளவுதான்- அடுத்த நாளே பருப்பு வடையுடன் அவர் வந்தார். சில நேரங்களில் வேக வைத்த பழங்களுடன் வருவார். வாழ்க்கை எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் அழகாகப் போய்க் கொண்டிருந்தது. டைப் ரைட்டிங், சுருக்கெழுத்து ஆகியவற்றில் அதிகமான மதிப்பெண்கள் பெற்று அவள் தேர்ச்சியடைந்தபோது, மகிழ்ச்சியடைவதற்கு பதிலாக அவள் மனம் துக்கத்தில் மூழ்க வேண்டியதாகிவிட்டது. நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. காற்று பலமாக வீசிக் கொண்டிருந்த ஒரு மாலை நேரத்தில் ஏகப்பட்ட பொருட்களுடன் வந்து கொண்டிருந்த படகு கடுமையான காற்றில் சிக்கி மனிதர்களுடன் கடலில் மூழ்கி விட்டது.
அதிலிருந்த எத்தனையோ ஆட்கள் காணாமல் போனார்கள். அந்தக் கூட்டத்தில் ரம்லத்துபீபியின் வாப்பாவும் சேர்ந்துவிட்டார். எல்லோரையும் கடல் விழுங்கிவிட்டது! அவரின் குடும்பம் அனாதையாகிவிட்டது. விளைவு- அவளின் தாய் மம்முஹாஜியின் வீட்டில் வேலைக்காரியானாள். மம்முஹாஜியை இதுவரை அவள் பார்த்ததில்லையே தவிர, அந்த மனிதனைப் பற்றி அவள் பல கதைகளையும் கேட்டிருந்தாள். அவன் இதற்கு முன்பு பாக்கெட்டில் கையை விட்டு பணத்தைத் திருடுவதையும், கொள்ளையடிப்பதையும் தான் தொழிலாகக் கொண்டிருந்தான். பிறகு தேநீர் கடை சொந்தக்காரரானான். சாலையோரத்தில் ஓலை வேய்ந்த ஒரு கட்டிடம். அதில் இரண்டு மூன்று பெஞ்சுகள் போடப்பட்டிருக்கும். ஒரு பழைய பலகையால் ஆன அலமாரி. ஒரு நாற்காலி. ஒரு மேஜை. கொஞ்சம் கண்ணாடி டம்ளர்கள்... தட்டுகள். இரண்டு மூன்று பழக்குலைகள். புட்டும், அப்பளமும், மாட்டுக்கறியும், தேநீரும்... அந்தத் தேநீர் கடைக்கு நிறைய ஆட்கள் வருவார்கள். அங்கு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் பாய் மரக் கப்பலில் வரும் அரேபியர்கள்தாம். திருட்டுத்தனமாக தங்கத்தைக் கடத்திக் கொண்டு வந்து விற்றுக் கொண்டிருந்த காலம் அது. அரபு நாடுகளில் இருந்து திருட்டுத் தனமாகக் கொண்டு வரும் தங்கத்தை வைத்து ஏகப்பட்ட பேர் பெரும் பணக்காரர்கள் ஆனார்கள். மம்மு பணக்காரன் ஆனது ஒரு துரோகச் செயலை வைத்துத்தான். திருட்டுத்தனமாகக கடத்திக்கொண்டு வந்த தங்கத்தை விற்ற ஒரு அரேபிய மனிதன் இரண்டு இலட்சம் ரூபாய் நோட்டுகளை ஒரு புதிய மண்ணெண்ணெய் டப்பாவுக்குள் வைத்து ஈயத்தை உருக்கி அதை நன்றாக மூடி கையில் எடுத்துக்கொண்டு வந்தான். தன்னைப் பிடிப்பதற்காக சுங்க இலாகாவைச் சேர்ந்தவர்கள் பின்னால் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள் என்று அவன் சந்தேகப்பட்டான். அவன் மனதிற்குள் பயம் வந்தது! அந்த அரேபியன் தன்னுடைய நண்பனான தேநீர் கடைக்காரன் மம்முவின் கையில் அந்த டப்பாவைக் கொடுத்து விட்டு சொன்னான். "இது இங்கேயே இருக்கட்டும். நாளைக்கு நான் வந்து வாங்கிக்கிர்றேன்..."
அரேபியன் போனான்.
டப்பாவுக்குள் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்ட மம்மு இரவில் கதவை அடைத்து விட்டு பெஞ்சுகளின் மீதும் அலமாரி மீதும் நிறைய மண்ணெண்ணெயை ஊற்றினான். தன்னுடைய கடைக்கு அவனே தீ வைத்தான். மறுநாள் காலையில் அரேபியன் வந்தபோது, மம்முவின் எரிந்துபோய் சாம்பலாகக் கிடக்கும் தேநீர் கடையைப் பார்த்தான். அதில் ஒரு மூலையில் அந்த டப்பா எரிந்து கிடந்தது. அரேபியன் மம்முவைப் பார்த்து நெஞ்சில் அடித்துக் கொண்டான். வாய் விட்டு அழுதான். மனதிற்குள்ளும் அழுதான்.
எது எப்படியோ மம்மு பணக்காரனாகி விட்டான். இரண்டு முறை மக்காவிற்கு ஹஜ் யாத்திரை சென்றான். இப்படித்தான் பிக் பாக்கெட்டாகவும், திருடனாகவும் தேநீர் கடை சொந்தக்காரனுமாக இருந்த மோசடிப் பேர்வழி மம்மு, மரியாதைக்குரிய மம்முஹாஜி
ஏழு முறை திருமணம் செய்து கொண்டான். அவற்றில் நான்கு பெண்களை "தலாக்" சொல்லிவிட்டான். மீதி மூன்று பேர் மனைவிகளாக இருக்கிறார்கள். ஏழு மனைவிமார்கள் மூலமாக அவனுக்கு மொத்தம் இருபத்து நான்கு பிள்ளைகள். சிலரை அவன் கவனிக்காமல் விட, அவர்கள் அவனைப் பற்றிய குற்றச்சாட்டுகளுடன் வெளியே அலைந்து திரிந்தனர். மம்முஹாஜியைப் பொறுத்தவரை, அவனுக்கு எப்போது பார்த்தாலும் புதிது புதிதாகத் திருமணம் செய்து கொண்டே இருக்க வேண்டும். ஏதாவதொரு வீட்டில் இளம்பெண் இருப்பது தெரிய வந்தால், "எனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்திடு" என்று பெண் பார்க்க வந்து விடுவான். அவர்கள் அவனுக்குப் பெண் தர முன்வரவில்லை என்றால் அவ்வளவுதான்- பல விதத்திலும் அவர்களுக்குத் தொந்தரவுகள் தர ஆரம்பித்து விடுவான். அப்படிப்பட்ட தொல்லைகளை உண்டாக்குவதற்கு மம்மு ஹாஜியிடம் நிறைய பேர் கைவசமே இருக்கிறார்கள். அப்படிப்பட்ட மோசமான மனிதனான மம்முஹாஜியின் வீட்டில்தான் ரம்லத்துபீபியின் தாய் வேலை பார்க்கிறாள். எல்லாமே தந்தையின் மரணத்திற்குப் பிறகு உண்டான சூழ்நிலையால் வந்த விளைவு. ஒரு நல்ல காலம் அவர்களுக்கு எப்போது வரும்?
"ஹா... சிரிக்கிற மரபொம்மை"- யாரோ பின்னால் இருந்து சொன்னார்கள்! இனிமையான குரல்! ரம்லத்துபீபி திடுக்கிட்டு பின்னால் திரும்பிப் பார்த்தாள். புன்னகை ததும்ப உயரமான ஒரு இளைஞன் நின்றிருந்தான். ஆள் நல்ல சிவப்பு. தலை முடியை பின்னோக்கி வாரிவிட்டிருந்தான். முகத்தில் அரும்பு மீசை. பிரகாசமான கண்கள். வெள்ளை நிறத்தில் சட்டையும் வேட்டியும் அணிந்திருந்தான். கையில் கடிகாரமும் கட்டியிருந்தான். கால்களில் செருப்புகள் இருந்தன. கையிடுக்கில் ஒரு செய்தித்தாள் இருந்தது.
ரம்லத்துபீபியின் மனதில் இனம் புரியாத ஒரு உணர்வு உண்டானது. இதுவரை பார்த்தே இராத அந்த இளைஞன் மேல் அவளுக்கு ஒரு ஈர்ப்பு உண்டானது. அவன் மீது திடீரென்று அவளுக்கு காதல் தோன்றியது. அவனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க வேண்டும் போல் இருந்தது.