சிரிக்கும் மரபொம்மை - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6435
இரவும், பகலும் மாறி மாறி படுவேகமாக நீங்கிக் கொண்டிருந்தன. ஒரு இரவில் தென்னை மரங்களில் இருந்த தேங்காய்கள் அனைத்தையும் யாரோ பறித்துக் கொண்டு போய்விட்டார்கள். மறுநாள் இரவில் பலாமரத்தில் இருந்த பழங்கள் எல்லாவற்றையும் திருடிக்கொண்டு போய்விட்டார்கள். இந்த கொடுமைகளை எல்லாம் அவர்கள் யாரிடம் போய் கூறுவார்கள்? போலீஸிடம் போய் கூறலாம் என்றால் பக்கத்தில் போலீஸே கிடையாது. காவல் நிலையம் இருப்பது அங்கிருந்து ஐந்தாறு மைல் தூரத்தில். பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கூறினார்கள். அவர்களுக்கு எதுவுமே புரியவில்லை. வாழ்க்கை பட்டினி, கஷ்டம், பிரச்சினை என்று நகர்ந்து கொண்டிருந்தது. விளக்கு கூட கொளுத்த முடியாத நாட்களும் அவர்கள் வாழ்க்கையில் வரவே செய்தது. பல நாட்கள் மாலை வேளைகளில் அவர்களால் விளக்கை எரிய வைக்கக் கூட வசதி இல்லாமல் வீடே இருட்டில் மூழ்கிக் கிடந்தது.
நீலம்கலந்து ஆடைகளைத் துவைப்பதாகச் சொல்லி பக்கத்து வீடுகளில் இருந்து கஞ்சித் தண்ணீரை வாங்கி வந்து அதில் உப்பு போட்டு அவர்கள் குடித்தார்கள். நாட்கள் இப்படிப் போய்க் கொண்டிருக்க, ஒரு நாள் மதிய நேரத்தில் மொட்டைத் தலையும், கையில் தடியுமாக மம்முஹாஜி அங்கு வந்தான். அவன் சொன்னான்.
"எனக்கு ஒரு செய்தி வந்தது. இந்த நிலத்தையும் வீட்டையும் நீங்க விக்கப் போறதா சொன்னாங்க. நான் இதை வாங்குறதா முடிவு பண்ணி இருக்கேன். ஆமா... இதுக்கு பணம் எவ்வளவு வேணும்?"
ரம்லத்துபீபி தளர்ந்து போய் வீட்டிற்குள் படுத்துக் கிடந்தாள். அவளின் தாய் வாசலில் நின்றவாறு சொன்னாள்.
"நாங்க இதை விக்கப் போறதா யார்கிட்டயும் சொல்லல. இதை வித்தாச்சின்னா, நாங்க எங்கே போறது?"
"நீங்க எங்கேயாவது போய் சாகுங்க! அதைப்பற்றி எனக்கு என்ன கவலை? இங்க சாத்தானோட தொந்தரவுகள் நிறைய இருக்குன்னு கேள்விப்பட்டேன். ராத்திரி நேரங்கள்ல வீட்டு மேல கல்லெறி விழுமே!"
அதற்கு ரம்லத்துபீபியின் தாய் எதுவும் பதில் கூறவில்லை. மம்முஹாஜி சொன்னான்.
"நான் என்ன சொல்றேன்னா, இந்த இடத்தை வித்துட்டு நீங்க உடனடியா இங்கேயிருந்து போறதுதான் நல்லதுன்னு எனக்குப் படுது. உன் மகளைக் கல்யாணம் பண்றதுக்கு இங்கே யாரும் வரப் போறது இல்ல. கல்யாணமே ஆகாம வயசாகிப் போயி உன் மகள் சாகப்போறா. பிறகு... திருடனுங்க வேற நிறைய இருக்காங்க. தேங்காயும், பலாவும் உங்களுக்குன்னு ஒண்ணுமே இருக்காது... ம்... தேங்காய்கள் மறுபடியும் காய்க்க ஆரம்பிச்சிடுச்சு. அவ்வளவுதான்... எல்லாத்தையும் திருடனுங்க கொண்டு போகப் போறாங்க. நான் சொல்றேன்றதுக்காக இல்ல... எல்லாத்தையும் வித்துட்டு ஊரை விட்டே போறதுதான் உங்களுக்கு நல்லது... சாத்தானோட தொந்தரவுகள் இருக்குற இந்த இடத்தை நானே வாங்குறதுன்னு முடிவு பண்ணிட்டேன். காசு ஒண்ணும் அதிகமா கிடைக்காது."
மம்மு ஹாஜி தடியை ஊன்றியவாறு தொந்தியை முன் பக்கம் தள்ளிக்கொண்டு விரல்களில் இருந்த மோதிரங்களை எல்லோரும் பார்க்கும் வண்ணம் தாடியைத் தடவி விட்டவாறு பந்தாவாக நடந்து போனான்.
"என் ரப்பே! எங்களை நீதான் காப்பாத்தணும்!” - தாயும் மகளும் வேண்டினார்கள். அன்று மாலை ஐந்து மணிக்கு ஒரு வெடிச்சத்தமும், தொடர்ந்து பெரிய ஆரவாரமும் கேட்டது. என்னவென்று விசாரித்தபோது அவர்களுக்குத் தெரிய வந்தது- ஊரில் இருக்கும் ஒரே திரைப்பட கொட்டகை நெருப்பில் எரிந்து கொண்டிருக்கிறது!
அது ஓலையால் ஆனது. நெருப்பு வேகமாகப் பிடித்து படர்ந்து அருகில் இருந்த தேநீர் கடைகளும் தென்னை மரங்களும் எல்லாம் கூட எரிந்தன. இதைப் பார்க்க ரம்லத்துபீபியும் போயிருந்தாள். போன இடத்தில் கொஞ்சமும் எதிர்பாக்காமல் ஏதாவதொன்று நடக்கும் என்று அவளும் எதிர்பார்க்கவில்லை. காலம் மாறப் போகிறது! நெருப்பு உயர எழுந்து எரிந்து கொண்டிருந்தது. அதை அணைப்பதற்கு ஃபயர் எஞ்சின் எதுவும் உடனே வர சாத்தியமில்லை. நெருப்பு தொடர்ந்து பரவாமல் இருக்க ஆட்களே அருகில் இருந்த ஓலை வேய்ந்த கட்டிடங்களுக்கு வெளியே தண்ணீரை ஊற்றினார்கள். அங்கு வசித்துக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் வீட்டை விட்டு ஓடி வந்து வெளியே நின்றிருந்தார்கள். எங்கு பார்த்தாலும் ஒரே இரைச்சலும் ஆரவாரமுமாக இருந்தது. அதற்கு மத்தியில் இனிமையான ஒரு குரல்.
"ரம்லத்து..."
யார் என்று பார்த்தால் புன்னகை தவழ நின்றிருக்கும் அபுல் ஹஸன்!
ரம்லத்துபீபிக்கு மயக்கம் வருவதைப் போல் இருந்தது. அவள் ஒரு தென்னை மரத்தைப் பிடித்துக் கொண்டு நின்றாள். அபுல்ஹஸன் அருகில் வந்தான்.
"ரம்லத்... ரொம்பவும் இளைச்சுப் போயிட்டியே! உனக்கு என்ன ஆச்சு? ஆமா... உன்னை நான் எங்கேயெல்லாம் தேடுறது? ஒவ்வொரு நாளும் கடற்கரைக்குப் போயி பாதையில் உட்காருவேன். சரி... உன் வீடு எங்கே இருக்கு? வா... நாம உன் வீட்டுக்குப் போவோம். சில விஷயங்கள் பேச வேண்டியதிருக்கு..."
அவர்கள் நடந்தார்கள். ரம்லத்துபீபி அழுதாள். வீட்டை அடையும் வரை அழுது கொண்டே இருந்தாள். வீட்டை அடைந்ததும், ஒரு நாற்காலியை எடுத்துக் கொண்டு வந்தாள். அதை வாசலில் போட்டு விட்டு சொன்னாள்.
"உக்காருங்க..."
அபுல்ஹஸன் உட்கார்ந்தான். ரம்லத்துபீபி அழுதவாறு சொன்னாள்.
"ஒரு சாயா உண்டாக்கித் தரக்கூட எங்களால முடியாது. அந்த அளவுக்கு பயங்கரமான கஷ்டத்துல நாங்க இருக்கோம்."
"சாயா வேண்டாம். எனக்கு ஒரு டம்ளர் தண்ணி தா போதும்."
ரம்லத்துபீபி உள்ளே போய் ஒரு டம்ளர் தண்ணீருடன் திரும்பி வந்தாள். அதை அவனிடம் கொடுத்தாள். பிறகு உள்ளே போய் தன் தாயிடம் சிரித்துக் கொண்டிருக்கும் மரபொம்மை கிடைத்த விஷயத்தையும், அதை அபுல்ஹஸனிடம் தந்ததையும் ரம்லத்துபீபி சொன்னாள். அவளின் தாய் வாசல் பக்கம் வந்து அபுல்ஹஸனைப் பார்த்து விட்டு கேட்டாள்.
"நீ கோயா மைதீன் முதலாளியோட மகன்தானே?"
அபுல்ஹஸன் எழுந்து நின்று சொன்னான்.
"ஆமா..."
கோயாமைதீன் முதலாளி பெரிய ஒரு வியாபாரி. பணக்காரர்!
அவளின் தாய் சொன்னாள்.
"உட்காரு... நான் ஒரு யூகத்துல சொன்னேன்..."
"நான் அதிக நாட்கள் இந்த ஊர்ல இல்ல..." அபுல்ஹஸன் சொன்னான்."நான் படிச்சதெல்லாம் வெளியிலதான். பி.ஏ. பாஸானேன். பி.எல். படிச்சேன். வக்கீலாகணும்னு நினைச்சேன். வாப்பாவுக்கு வயசாயிடுச்சு. வியாபாரத்தையும் வீட்டு விஷயங்களையும் பார்த்துக்குறதுக்கு ஆள் இல்ல. அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடி உம்மா இறந்துட்டாங்க. ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டு வியாபாரத்துல வாப்பாவுக்கு உதவியா இருக்கணும்னு நினைக்கிறேன்..."
"ரம்லத்தோட வாப்பா கடல்ல விழுந்து இறந்துட்டாரு அவரோட பேர்- அப்துல் ஹமீது. அவர் இறந்த பிறகுதான் எங்களுக்கு கஷ்ட காலமே..."