
எண்ணெய் சாயத்தால் ஆன ஓவியங்களுக்குப் பின்னால் தேள்களும் எட்டுக்கால் பூச்சிகளும் ஒளிந்திருந்தன. மூன்று வருடங்களுக்குப் பிறகு தன் சொந்த வீட்டிற்கு வந்திருக்கிறாள் அம்மிணி. படுக்கைமீது முஷ்டியால் அடித்தபோது தூசிப்படலம் உயர்ந்தது. எலியை ஞாபகப்படுத்தும் ஒரு நாற்றம் அறையில் தங்கி நின்றது. "இரவில் என்னால் இங்கு படுக்க முடியாது.''
பதினாறு வயது கடந்த மகள் உரத்த குரலில் கூறினாள்.
"வேண்டாம். தூங்குவதற்கு நாம் குருவாயூருக்குப் போவோம். "வனமாலா குசுமம்” என்ற ஹோட்டலில் அறை எடுப்போம்.'' அம்மிணி சொன்னாள்.
மின்சாரம் செயல்படவில்லை.
எலிகள் கம்பிகளைக் கடித்துத் தின்று விட்டிருந்தன. கிணற்றில் குப்பைகள் மேலே கிடந்தன.
"எனக்கு தாகம் எடுக்கிறது. ஏதாவது பருகாமல் இருக்க முடியாது.'' மகள் சொன்னாள்.
"யாரையாவது வரச் செய்து இளநீர் கொண்டு வரும்படி கூறுவோம். கொஞ்சம் பொறுத்திரு.'' அம்மிணி சொன்னாள்.
தென்னை மரத்தில் ஏறுவதற்கு யாரும் கிடைக்கவில்லை. வேலிக்கு அப்பால் இருந்த பாதையில் தெரிந்தவர்கள் நடக்கவில்லை. அம்மிணி என்ன செய்வது என்று தெரியாமல் நின்றிருந்தாள்.
"அம்மா, எதற்காக என்னை அழைத்துக் கொண்டு வந்தீர்கள்? என்னை பயமுறுத்தவதற்கா? கொஞ்சநேரம் கடந்தால், இரவு நேரமாகிவிடும். பிறகு... இங்கே இருக்க பயமாக இருக்கும்.'' மகள் சொன்னாள்.
பழைய தென்னை மரங்கள், பழைய மாமரங்கள்... கண்களில் தெரிந்த மரங்களையும் பொந்துகளையும் அன்பு கலந்த பார்வையுடன் அம்மிணி பார்த்துக் கொண்டிருந்தாள்.
பெரும்பாலும் வற்றிப் போய்விட்ட குளம்... கோழிகள் மட்டும் வருடங்களின் பயணத்தைத் தெரிந்து கொள்ளாமல் பழைய மாதிரியே சத்தம் உண்டாக்கிக் கொண்டு உலாவிக் கொண்டிருந்தன.
"இதை விற்கப் போகிறோம். இறுதியாக ஒரு தடவை பார்ப்பதற்காக வந்திருக்கிறோம். நான் பிறந்து வளர்ந்தது இங்கேதான்.'' அம்மிணி சொன்னாள்.
"இந்தக் காட்டுப் பகுதியில் என்னால் இருக்க முடியாது. நாம் போவோம்.'' மகள் சொன்னாள். நீல நிற ஜீன்ஸும் சட்டையும் அணிந்து, வெட்டப்பட்ட முடியுடன் வாசலில் நின்றிருந்த இளம் பெண்ணைப் பார்த்து அம்மிணி ஆச்சரியப்பட்டாள். இவள் தன்னுடைய மகளா? இந்தப் புராதன இல்லத்தின் வாரிசா? பல கெட்ட செயல்களுக்கும் மன்னிப்பு கேட்பதைப்போல அம்மிணி நிலத்தைத் தொட்டு வணங்கினாள். அந்த வணக்கத்தைப் பார்த்து மகள் கிண்டலாகச் சிரித்தாள்.
"இந்த அரக்கனின் கோட்டையை வாங்கப் போவது யார்?'' மகள் கேட்டாள்.
"துபாயில் வேலை பார்க்கும் ஒரு மனிதர். ஒரு கோடி ரூபாய் ரொக்கமாகத் தருவதாகக் கூறியிருக்கிறார்.'' அம்மிணி முணுமுணுத்தாள்.
"இந்த சிதிலடமைந்த வீடும் நிலமும் அவருக்கு எதற்கு? பம்பாயிலோ கொச்சியிலோ அவர் வீடு வாங்கலாமே?'' மகள் கேட்டாள்.
"இந்த ஊரில் விளையாடி வளர்ந்த மனிதர். இந்த இடத்தை வாங்குவதற்குக் காரணம் இனிய நினைவுகளை மனதில் தொடர்ந்து வைத்திருப்பதற்காக இருக்கலாம்.'' அம்மிணி சொன்னாள்.
"அம்மா, உங்களுக்கு அந்த ஆளைத் தெரியுமா?''
"அந்தக் காலத்தில் தெரிந்திருந்தேன். என்னுடைய பத்தாவது பிறந்த நாளன்று முற்றத்தில் உட்கார்ந்து விருந்து சாப்பிட்டார். நான் அதை இப்போதுகூட நினைத்துப் பார்க்கிறேன்.''
"அவர் எல்லாவற்றையும் பார்த்து மாறியிருப்பார். முற்றத்தில் உட்கார்ந்து உணவு சாப்பிட்ட மனிதர் இன்று உங்களுக்கு கோடி ரூபாய் தருவதற்குத் தயாராக இருக்கிறார்!'' மகள் சொன்னாள்.
"அவர் சிறிதும் மாறியிருக்க மாட்டார்.'' அம்மிணி ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவாறு கூறினாள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook