பத்து தலைவர்கள் வரவேண்டும்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6929
பெரும் மதிப்பிற்குரிய தலைவரே,
ஸலாம். என்னுடைய உடல்நிலை மிகவும் நன்றாக இருக்கிறது. தாங்கள் திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இந்த நலிந்து நாறிப்போயிருக்கும் சமுதாய அமைப்பில் தங்களுக்கு ஒரு மனைவி தேவைதானா? எது எப்படியோ- தங்களின் பெயரையே சதா நேரமும் உச்சரித்துக் கொண்டிருக் கும் இங்கேயுள்ள தொழிலாளிகள் தாங்கள் ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டப் போகிறீர்கள் என்பதை அறிந்து ஆனந்த வெள்ளத்தில் மூழ்கித் திளைத்திருக்கிறார்கள்.
இனி ஒரு விசேஷமான செய்தியைச் சொல்கிறேன். பத்து தலைவர்கள் இங்கு தேவைப்படுகிறார்கள். தங்கள் கட்சியில் இருந்து தாங்கள் போதும். மற்ற கட்சிகளில் இருந்து ஒன்பது நபர்கள் வரட்டும். தாங்கள் பத்து பேரும் எவ்வளவு சீக்கிரம் இங்கு வரவேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் இங்கு வரவேண்டும். வழிச் செலவுக்கான பணத்தை இந்த மாதம் தேங்காய் விற்றோ, அல்லது இந்தியாவின் விடுதலைக்காகப் பாடுபட்டதற்காக அரசாங்கம் தருகிற பென்ஷன் தொகை கிடைக்கிறபோதோ நான் அனுப்பி வைக்கிறேன். பத்து தலைவர்கள் எதற்குத் தேவைப்படுகிறீர்கள் என்பதை பின்னர் கூறுகிறேன்.
சமீபகாலமாக நான் அதிகம் எழுதுவதில்லையென்றும், பெரிய சோம்பேறியாக நான் ஆகிவிட்டேன் என்றும் தாங்கள் எனக்கு எழுதியிருந்த கடிதத்தில் தெரிவித்திருந்தீர்கள். அருமைத் தலைவரே, எழுதுவதற்கு நேரம் கிடைக்கவில்லை. அதற்காக எழுதாமல் இல்லை; எழுதுகிறேன். நம்முடைய இந்த வீட்டில் வந்து வசித்துக் கொண்டிருக்கும் சிலருக்கு மட்டும் சிலவற்றை எழுதிக் கொடுத்தேன். கெட்டு நாறிப் போயிருக்கும் ரேஷன் காலம். இருந்தாலும், தேங்காய்க்கு நல்ல விலை இருக்கிறது. தலைவர்களைப்போல கண்ணில் ரத்தமில்லாத வேறு சிலரும் இருக்கவே செய்கிறார்கள். பத்திரிகையாளர்கள், பிரசுர கர்த்தாக்கள், விமர்சகர்கள், வாசகர்கள்- இவர்களுக்குக் கிடைத்த சோறு போதிய அளவில் இல்லையென்று, கண்டதையெல்லாம் குடித்தால் நாம் என்ன செய்வது?
எனக்கு இங்கு மிகவும் கடுமையான வேலை. இந்தத் தோட்டத்தில் உள்ள செடிகளையெல்லாம் வெட்டி ஒழுங்குபடுத்த வேண்டும். பாம்புகளையும் தேள்களையும் விரட்டிவிட வேண்டும். கரையான், எலி ஆகியவற்றை ஓட்ட வேண்டும். இங்கே இருக்கும் பாம்பும் தேளும் மிகவும் பலம் பொருந்தியவை. தேளின் நீளம் மட்டும் ஒரு அடி, முக்கால் அடி என்று இருக்கும். சில நேரங்களில் தன்னுடைய குட்டிகளை மேலே ஏற்றிக்கொண்டு இது செல்லும். நான் இந்த வீட்டையும் தோட்டத்தையும் விலைக்கு வாங்கியவுடனே பாம்புகளையும் தேள்களையும் பார்த்துச் சொன்னேன்:
“குழந்தைகளே... நான் இந்த இடத்தை விலைக்கு வாங்கியிருக்கேன். நீங்க வேற எங்காவது போயிடுங்க. இங்கே இனிமேலும் நீங்க இருக்கறதுன்றது அவ்வளவு நல்லா இருக்காது. அது உங்களோட உடல்நலத்துக்கு நல்லதில்ல. நான் இப்போ அமைதியா இந்த விஷயத்தை உங்கக்கிட்ட சொல்றேன். ஜாக்கிரதை அண்ட் உஷார்!''
ஆனால், நஹி... பாம்புகளும் தேள்களும் வெறுமனே இருந்து கொண்டே சத்யாகிரகம் பண்ணுகிற மாதிரி என் வீட்டைச் சுற்றியுள்ள தோட்டத்தை விட்டு கொஞ்சம்கூட நகராமல் இங்கேயே தங்களின் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தன.
இங்கே வேலி கட்டுதல், களை எடுத்தல், தேங்காய் மட்டைகளை வெட்டி விடுதல், தென்னங்கன்றுகளை நடுதல், பாக்கு, வாழை, பலா, மா, ரோஜா, மரவள்ளிக்கிழங்கு, மிளகு, கொய்யா, சீமைக்கொன்றை, சப்போட்டோ- இதோடு நிற்கவில்லை- தெய்வமே, மனைவி! விஷயம் என்னவென்றால் அவள் சம்பந்தப்பட்ட விஷயங்களும் இருக்கின்றன. அக்னி சாட்சியின் வகையில் மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி, வெண்டை, கத்திரிக்காய், பயறு வகைகள், கீரை, சுரைக்காய், இளவங்காய், பூசணிக்காய், புடலங்காய், ரஷ்யன் இஞ்சி- இவ்வளவையும் நட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இதைச் செய்வது யார்? அடியேன்தான். அப்படியானால் இந்த வரலாற்று எழுத்தாளன் நாளொன்றுக்கு எத்தனை குடம் தண்ணீர் மொண்டு எடுக்க வேண்டியதிருக்கிறது என்பதை பெரும் மதிப்பிற்குரிய தலைவரே... தாங்களே சிந்தித்துப் பாருங்கள். ப்ளீஸ் ஸ்டாப். வேலை இதோடு முடியவில்லை. வீடு இருக்கிறது. இதற்கு வெள்ளை அடிக்க வேண்டும். அங்குமிங்குமாய் இடைவெளி இருக்கிற இடமாகப் பார்த்து சிமெண்ட் பூச வேண்டும். ஜன்னல்கள், கதவுகள் எல்லாவற்றையும் சுரண்டி, நன்றாகக் கழுவிவிட்டு, காயவைத்து, வார்னீஷ் தேய்க்க வேண்டும். சில ஜன்னல்களுக்கு கதவுகள் இல்லை. அவற்றை உடனே ஏற்பாடு செய்து கொண்டு வந்து பொருத்த வேண்டும். இதை எல்லாம் செய்யும் முக்கிய வேலைக்காரன் இந்தச் சரித்திர எழுத்தாளன்தான். என் மனைவிக்கு பெரிய அளவில் பேன் விவசாயம் இருக்கிறது. அவை அதிகமாக இருக்கும் இடம் எங்களின் அருமை மகளின் சிறிய தலைதான். வழுக்கைத்தலை உள்ளவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுவது சாதாரணமான ஒன்று என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. இருந்தாலும், அவர்களுக்கும் சில நேரங்களில் பார்வைக் குறைவு வந்துவிடுகிறது! புருவங்கள்!
நேற்று நான் வெறுமனே கண்ணாடியை எடுத்துப் பார்த்தேன். அப்போது என் கண்களில் படுகிறது ஏழு பேன்கள். இரண்டு புருவங்களிலும் அவை இருக்கின்றன. இது வெளிநாட்டைச் சேர்ந்த ஏதோ ஒரு பெண்ணுக்குச் சொந்தமானது என்று என்னுடைய மனைவி கூறுகிறாள்.
ரைட். பெண்கள் வெற்றிக்கொடி நாட்டட்டும்! என்ன சொல்வதாக இருந்தாலும், கூற வேண்டியதைக் கூற வேண்டும் அல்லவா? மனைவிக்கு ஒரு பூந்தோட்டம் வேண்டும். அவள்தானே எனக்கு சோறும் தேநீரும் தந்துகொண்டிருக்கிறாள்.
இவ்வளவு வேலைகளையும் நான்தான் பார்க்க வேண்டுமா என்றொரு கேள்வி இருக்கிறது. கேள்வி சரியானதுதான். தலைவரே, ரைட். இதோ வருகிறார் உங்களின் சீடரான தொழிலாளி. தொழிலாளிகள் வெற்றி பெறட்டும்!
கடவுளின் ஆசியுடன் நேரம் சரியாகக் காலை ஒன்பது மணி இருக்கும். பிரபல தொழிலாளிகளின் விரோதியும் கறுப்புச் சந்தை பிரமுகரும் பணக்காரனுமான வைக்கம் முஹம்மது பஷீர் படிகளைப் பார்த்தவாறு உட்கார்ந்திருக்கிறார். இப்படிப் பார்த்துப் பார்த்து அவர் அமர்ந்திருக்கும்போது, கடவுளின் அருள் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் வருகிறார். அவரின் கண்களில் கூலிங் க்ளாஸ் இருக்கிறது. டெர்லின் சட்டையும், இரட்டை வேஷ்டியும், ஷூவும், வாயில் ஒரு ஓரத்தில் புகைந்து கொண்டிருக்கும் சிகரெட்டுமாய் ஒரு மனிதர். அவர் மெதுவாக வீட்டை நோக்கி வருகிறார். ஒருவித வெறியுடன் வாயில் இருந்த சிகரெட் முழுவதையும் பிடித்து முடிக்கிறார். தொடர்ந்து தலைவரே, உங்களைப் பற்றி பத்து நிமிடம் புகழ்ந்து தள்ளுகிறார். நீங்கள் கொடுத்ததாம் இந்தத் தொழிலாளி அணிந்திருக்கிற டெர்லின் சட்டை. குஸால். தொடர்ந்து ஐந்து நிமிடம் அரசியல் பாடம் நடத்துகிறார்.