பத்து தலைவர்கள் வரவேண்டும் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6932
(இந்த இரண்டுக்கும் சேர்த்து நான் அறுபது ரூபாய் தருகிறேன். தலைவரை எனக்குத் தெரியும் என்பதால், எனக்கு ஐந்து ருபாய் தள்ளுபடி. தொழிலாளிகளும், தலைவர்களும் வெற்றி பெறட்டும்!)
அவரிடம் ஒரு பை இருக்கிறது என்று நான் இதற்கு முன்பு சொல்லவில்லை. ஆனால் பை ஒன்று இருக்கிறது. அந்தப் பையுடன் அவர் செழிப்பாக வளர்ந்திருக்கும் ஒரு தென்னை மரத்தை நோக்கிச் செல்கிறார். பையிலிருந்து ஸ்ரீஜித் சுத்தியலை அவர் எடுக்கிறார். ஒரு பெரிய ஆணியும் எடுக்கிறார். (இவர் தச்சர்கள் இனத்தில் பிறந்த ஒரு ஆசாரியாக இருக்கலாம்.) ஆணியை அவர் தென்னை மரத்தில் அடித்து இறக்குகிறார். மரங்களையும், பறவைகளையும், மிருகங்களையும், சிறிய பூச்சிகளையும், மனிதர்களையும் விரும்புகிற- அன்பு வைத்திருக்கின்ற ஒருவனின் இதயத்தில் இருந்து இரத்தம் வழிகிறது. நம்முடைய சகோதர தச்சர் தன் பையை ஆணியில் தொங்கவிடுகிறார்! ஸாரி... அவர் சட்டை காலருக்கு அடியில் ஒரு கைக்குட்டையை மடக்கி வைத்திருப்பதை நான் உங்களிடம் கூறவில்லை. அவர் அதை எடுத்து மடித்து பாக்கெட்டில் வைக்கிறார். அதோடு சேர்த்து கூலிங் க்ளாஸையும். பிறகு... சட்டையைக் கழற்றுகிறார். அப்போது நாற்றம்பிடித்த, அருவருப்பான ஒரு அழுக்கடைந்துபோன பனியன் வெளியே தெரிகிறது. இந்த பனியன் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதுதான். இது முன்பு நல்ல வெண்மை நிறத்தில் இருந்தது. சட்டையை மடித்துத் தோளில் போடுகிறார். தொடர்ந்து இரட்டை வேஷ்டியை அவிழ்த்துவிடுகிறார். மீண்டும் மடிக்கிறார். இப்போது ட்ரவுசர் வெளியே தெரிகிறது. பார்க்க சகிக்கவில்லை. (இதையெல்லாம் சொல்கிறபோது, பெரும் மதிப்பிற்குரிய தலைவருக்குத் தோன்றும்- இந்த அப்பிராணி தொழிலாளிகளுக்கு தோய்த்துத் தேய்த்த பேண்ட் அணிய வாய்ப்பு இருக்கிறதா? இந்த தொழிலாளிகள் கஷ்டம் என்று முடியும் என்றெல்லாம்). ஸாரி... அவர் சட்டையையும் வேஷ்டியையும் பையில் வைக்கிறார். இப்போது வேலை செய்ய பயன்படும் கருவிகள் வந்து சேர்கின்றன. ஒரு இடதுசாரி பத்திரிகையில் ஷூவைச் சுற்றி, பைக்குள் வைக்கிறார். இப்போது வேலை ஆரம்பமாகிவிட்டது என்கிறீர்களா? அதுதான் இல்லை. அவர் சிறுநீர் கழிக்கச் செல்கிறார். (நம்மிடம் இரண்டு ஏக்கர் நிலம் இருக்கிறது). அவர் போவது ஒரு ஃபர்லாங் தூரத்தில் உள்ள ஒரு தோட்டத்தை நோக்கி. அங்கே பாம்பும் தேளும் இல்லை. இப்படி சிறுநீர் கழிப்பது, சிகரெட் பிடிப்பது, தேநீர் அருந்துவது, உணவு சாப்பிடுவது, சூரிய பகவானைப் பார்த்துவிட்டு, "இன்னைக்கு வேகம் கொஞ்சம் குறைவுதான்' என்று சொல்வது- எது எப்படியோ... மணி நான்கு ஆகிவிடுகிறது.
அவர் ஆடைகளையும் மற்ற உடைமைகளையும் அணிகிறார். வேலை செய்ய பயன்படும் கருவிகளை பைக்குள் அடக்குகிறார். ஒரு சிகரெட்டை எடுத்து உதட்டில் வைத்து ஊதுகிறார்.
உதட்டில் லேசான புன்முறுவல். கையை நீட்டுகிறார்- “குட்பை. ஃபிஃப்டிஃபை ருபிஸ்!'' என்று கூறியபடி. நான் அந்தக் கையில் தூசியைத் தட்டியவாறு புன்சிரிப்புடன் ஐம்பத்தைந்து ரூபாயை எடுத்துத் தருகிறேன். (இது இன்று. அடுத்த வாரம் பத்து ரூபாய் கூடும். அப்படியே கூடிக்கொண்டே இருக்கும்.)
தலைவரே, இவர் யார்? இவர்தான் உங்களின் ஆசாரி. இவர்தான் இன்னொரு முகத்துடன் வேலி கட்ட வரும் மனிதர். இவர்தான் கல்வேலைகள் செய்ய வரும் மனிதர். நிலத்தைக் கொத்த வருகிற மனிதரும் இவர்தான். இந்த மனிதர்தான் நாட்டின் உயிர். எதிர்காலத்தில் நாட்டை ஆளப்போகிறவரும் இவர்தான்!
அருமைத் தலைவரே, இப்போது என்னிடம் உளி, நெம்புகோல், மண்வெட்டி, கைவாள், ஹாக்ஸா, வெட்டுக் கத்திகள், பெரிய அரிவாள்கள், கோடரிகள், பிக்காஸுகள்- எல்லாமே இருக்கின்றன. முன்பே சொன்னேனே... நான்தான் முக்கிய தொழிலாளி என்று. எனக்கு உதவியாக மருமகன்கள் இருக்கிறார்கள்.
தங்களின் எட்டு மணி நேரம் வேலை செய்யும் தொழிலாளி மிகவும் கஷ்டப்பட்டு மூன்று அல்லது நான்கு மணி நேரம் வேலை செய்வார். அதுகூட அவ்வளவு நன்றாக என்று சொல்ல முடியாது. உங்களைப் போன்ற தொழிலாளிகளின் தலைவர்கள் இவர்களிடம் ஒரு விஷயத்தைச் சொல்லாமல் விட்டுவிட்டீர்கள். அதாவது- வேலை செய்ய வேண்டும் என்பதை. வேலையே செய்யாமல் சம்பளம் வாங்குவது. எந்த வேலையையும் இரண்டு விதத்தில் செய்யலாம். ஒன்று- வேலையை எப்படியாவது முடிப்பது. இன்னொன்று- அதையே அழகாக, முறையாக, முழுமையாகச் செய்து முடிப்பது.
எந்த வேலையையும் முழுமையாக, எந்தவித குறையுமின்றி செய்து தீர்ப்பதுதான் நல்லது.
தலைவரே, இப்போது நான் ஆசாரி, மூசாரி, கொல்லன், தட்டான் என்று அனைத்துமாக இருக்கிறேன். நான் ஜன்னல் வேலைகள் செய்கிறபோது, பல விதங்களிலும் எனக்கு பாதிப்பு உண்டாகிறது; பரவாயில்லை. சில விரல்களின் நுனிகள் ஏற்கெனவே போய்விட்டன. மனைவியைத் திட்டுகிறேன். மகளையும் மகனையும் அடிக்கிறேன். காரணம்- ஒரு ஆணியை அடித்தபோது, சுத்தியல் வேகமாக அடித்தது என்னுடைய இடது கையின் பெருவிரலைத்தான்.
வாழ்க்கை இப்படிப் போய்க்கொண்டிருக்கிறது. தாங்களும் தங்களைப் போன்ற நாட்டு நன்மைக்காக முழங்குகிற மற்ற ஒன்பது தலைவர்களும் உடனே இங்கு வரவேண்டும். வழிச் செலவுக்கான பணத்தை நாளையோ நாளை மறுநாளோ நான் அனுப்பி வைக்கிறேன். தங்கத் தலைவரே, எனக்கு வாழ்க்கையில் பெரிய விருப்பமெல்லாம் ஒன்றும் இல்லை. சிறிய மனிதன்... சிறிய விருப்பம்...
தங்களையும் தங்களுடன் வரும் மற்ற ஒன்பது தலைவர்களையும் நல்ல சாப்பாடு போட்டு, மது அருந்த வைத்து, மயக்கமடையும் அளவுக்குச் செய்து, இந்த நிலத்தில் போட்டு நன்றாக அடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய இறுதி விருப்பம். அடித்துவிட்டு உங்கள் பத்து பேரையும் மகிழ்ச்சியுடன் நான் சுடுவேன். நன்றாகக் குறி பார்த்து எல்லாரும் கடைசி சாம்பல் ஆகிற வரை விடமாட்டேன்.
பிறகு... என்னுடைய துணியையும் கோவணத்தையும் நீக்கிவிட்டு, அந்தச் சாம்பலை என் உடல் முழுக்க பூசுவேன். மீதி இருக்கும் சாம்பலில்...
"தந்தானோ... தானானோ... தனதந்தானோ' என்று புரட்சி கீதம் பாடியவாறு நடனமாடுவேன்.
நல்வாழ்த்துகள்! மங்களம்.
சுபம்!
சொந்தம்,
வைக்கம் முஹம்மது பஷீர்
(பேப்பூர்)