பிதாமகன்
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 6349
1
பொந்தியோஸ் பீலாத்தோஸ் ஒரு கடிதம் எழுதுகிறார்!
பிரபஞ்சத்தின் தந்தையான ஜூபிடர் கடவுளின் அருளாலும், வெற்றி வீரரும் மக்களின் தலைவருமான ரோம சக்கரவர்த்தி டைபீரியஸ் க்ளாடியஸ் நீரோவின் கருணையாலும், மிகப்பெரிய ரோம சாம்ராஜ்யத்தின் பிரதிநிதியும் யூதர்கள் வசிக்கும் முழு பகுதிக்கும் கவர்னருமான பொந்தியோஸ் பீலாத்தோஸின் கையொப்பம். அதிகார முத்திரை ஆகியவற்றுடன்... டேய் அன்டோனியஸ், மேலே எழுதப்பட்டிருக்கும் வினோதமான பெருமைகளைப் படித்தும், என்னுடைய முத்திரையின் வண்ண ஜொலிப்பைப் பார்த்தும் நீ திகைத்து நின்றுவிட வேண்டாம். அப்படி திகைத்து நிற்கக் கூடிய மனிதன் நீ இல்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
மேலே சொல்லப்பட்டிருப்பது போலத்தான் இப்போது என்னுடைய செயல்கள் ஒவ்வொன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதைக் கடைசியாக நீ எனக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று நினைக்கும்போது புரிந்து கொண்டிருப்பாய் என்று நினைக்கிறேன். சக்கரவர்த்தியும், வரலாறும், ஜூபிடர் கடவுளும் சேர்ந்து (ஜூபிடர் கடவுளின் பெயரை உச்சரிக்க நானும் படித்துக் கொண்டேனா) என்னை இங்குவரை கொண்டுவந்து சேர்த்து விட்டார்கள் என்று இப்போதைக்குச் சொன்னால் போதும் அல்லவா?
டேய், இரண்டு சக்கரவர்த்திகளுக்காக கடந்த கால் நூற்றாண்டு காலமாக நான் உலகம் முழுவதையும் சுற்றிக் கொண்டிருந்தபோது அவ்வப்போது நீ எங்கிருக்கிறாய், என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று நான் நினைத்துப் பார்ப்பேன். உன்னைத் தேடியும் பார்த்திருக்கிறேன். ஆனால், ரோம சாம்ராஜ்யத்தின் முழு சக்தியையும் பயன்படுத்தித் தேடியும், உன்னைப் பற்றி எந்தத் தகவலும் எனக்குத் தெரியாமலே போய்விட்டது. திடீரென்று ஜூபிடர் கடவுள் (ஹா! ஹா! கடவுளின் பெயர் மீண்டும் வந்து விட்டது) மின்னலைத் தோன்றச் செய்வதைப்போல உன்னுடைய கடிதம் எனக்கு வந்து சேர்ந்திருக்கிறது. அதைப் பார்த்து அன்டோனியஸ், நான் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தேன் தெரியுமா? ஒரு வகையான தனிமை உணர்வும், கவலைகளும் மனதில் தோன்ற ஆரம்பித்து விட்டிருந்ததா. வாழ்க்கையே இருளத் தொடங்கி விட்டதோ என்று கூட நினைக்க ஆரம்பித்து விட்டேன். அந்த நேரத்தில்தான்& என்னுடைய நல்ல நேரம் என்றுதான் சொல்ல வேண்டும்& என்னுடைய உயிர் நண்பனான அன்டோனியஸ். நீ என்னைப் பற்றி நினைத்துப் பார்க்கிறாய். அதற்காக நான் நன்றி கூறுகிறேன். நண்பனே, நான் முன்பெல்லாம் இந்த மாதிரி உணர்ச்சி வசப்பட்டு நீ என்னைப் பார்த்திருக்கவே மாட்டாய். என்னைப் பற்றியும் பல விஷயங்களை உன்னிடம் நான் கூற வேண்டியிருக்கிறது.
இன்று ஸாபத். அதனால் நான் சொல்வதைக் கேட்டு எழுதும் யூத இளம்பெண் இன்று வேலைக்கு வரவில்லை. சொல்வதைக் கேட்டு எழுதும் பெண் என்று கூறியவுடன் உனக்குப் புன்சிரிப்பு தோன்றுகிறதா என்ன? இல்லையடா... நீ நினைப்பது போல் அப்படியொன்றும் இல்லை. அவள் உண்மையிலேயே அழகான ஒரு இளம் பெண்தான். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அவளுக்கு லத்தீன், க்ரீக், ஹீப்ரு ஆகிய மொழிகள் நன்றாகவே தெரியும். ஒரு மகளைப் போல அவள் மீது எனக்கு மிகவும் பிரியம் உண்டு. அப்படியும் சில உறவுகள் இந்த வாழ்க்கையில் நமக்குத் தேவைப்படத்தானடா செய்கின்றன? அவள் பெயர் ரூத். பெயர் மிகவும் நன்றாக இருக்கிறது. இல்லையா? நம்முடைய ரோமப் பெண்களுக்கு ஏன் இந்த மாதிரி கிளுகிளுப்பு உண்டாக்குவது மாதிரியான பெயர்கள் இல்லாமல் இருக்கின்றன? அவள் என்னுடைய மனைவி ஜூலியாவின் ஒரு தோழியின் மகள். (அதனால்தான் இந்த அளவுக்கு மரியாதையாக நடந்து கொள்கிறேன் என்று மனதில் நீ நினைக்க வேண்டாம்) அவள் இங்கு இல்லாததால் சில விஷயங்களை என்னுடைய சொந்த கையால் சிறிதும் மறைக்காமல் நான் எழுதட்டுமா? இன்னொரு வார்த்தையில் கூறுவதாக இருந்தால் உனக்குக் கடிதம் எழுதும் போதாவது என்னுடைய கையால் நான் எழுதக் கூடாதா? கையெழுத்து நன்றாக இல்லாமல் இருந்ததற்காக நீயும் நானும் பள்ளிக் கூடத்தில் வாங்காத அடிகளா?
டேய், நாம் இருவரும் கடைசியாகப் பிரிந்தது உன் ஞாபகப் படத்தில் இருக்கிறதா? நாம் பிரிந்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. கொளீஸ்யத்திற்கு தெற்கே இருந்த தெருவில் கனவுலகம் போன்றதொரு விலைமாதுகளின் இல்லத்தின் கற்களால் ஆன படிகளை விட்டு இறங்கி தூசியையும் இரத்தத்தையும் மிதித்தவாறு இருட்டைக் கிழித்துக்கொண்டு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நாம் இருவரும் நடந்து சென்றோம். அன்று நாம் இருவரும் என்னென்ன மதுவையெல்லாம் அருந்தினோம். எப்படிப்பட்ட காமக் களியாட்டங்களில் எல்லாம் ஈடுபட்டோம். துருக்கி நாட்டைச் சேர்ந்த அழகிய இளம் பெண்களும் மாஸிடோனியன் பையன்களும் நமக்கு அலுத்துப் போன போது நீ அலிகள் வேண்டுமென்று சொன்னாய். உடனே அவர்கள் எகிப்து நாட்டைச் சேர்ந்த அலிகளைக் கொண்டு வந்தார்கள். டேய், நாம் என்னவெல்லாம் செய்தோம்? எகிப்து நாட்டைச் சேர்ந்த அலிகள் மீது இருக்கும் துர்நாற்றத்தைத் தாங்க முடியவில்லை. அரேபியாவைச் சேர்ந்த அலிகள்தான் வேண்டும் என்று கூறி நாம் பாத்திரங்களை வீசி எறிந்தோம். மதுக் குப்பிகளை வீசியெறிந்து உடைத்தோம். மேஜைகளைக் கீழே தள்ளி விட்டோம். விலை மாதுகள் இல்லத்தின் சொந்தக்காரிக்கு நேராக வாளை உருவினோம். நீ என்னைச் சுட்டிக்காட்டி அவளுடன் சேர்ந்து கத்தியதை இப்போதும் நான் மறக்கவில்லை.
இங்கு நின்று கொண்டிருப்பது யார்? ரோம சாம்ராஜ்யத்தின் ஒரு துணை படைத்தலைவன்& எச்சரிக்கை. வாசனைத் திரவியங்கள் பூசிய அரேபியர்களைத் தவிர, வேறு யாருமே எங்களுக்கு வேண்டாம். அவர்களை எங்கே ஒளித்து வைத்திருக்கிறீர்கள்? எந்த செனட்டரை திருப்திபடுத்துவதற்காக அவர்களை நீங்கள் யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்திருக்கிறீர்கள்?
உனக்குப் பின்னால் நின்றவாறு நான் வாளைச் சுழற்றினேன். அப்போது வாள் என் கையிலிருந்து நழுவிக் கீழே விழுந்தது. கார்ஸிக்காவில் அவள் பிறந்து வளர்ந்த மலையிடுக்குகளின் கடினத் தன்மையை ரோமுக்கு வருவதற்கு முன்பே தன்னிடம் வைத்திருந்த அந்த விலைமாதுகள் இல்லத்தின் இளம் சொந்தக்காரி சீனப் புகையிலையால் நிறம் மங்கிப் போயிருந்த பற்கள் அனைத்தையும் வெளியே காட்டி அப்போது சிரித்தாள். கீழே விழுந்த வாளை எடுத்து என்னுடைய இடுப்பில் இருந்த உறைக்குள் போட்டேன். பிறகு, உன் நெஞ்சிலும் என் நெஞ்சிலும் ஒவ்வொரு நகம் நீண்ட சுண்டு விரலை வைத்தவாறு அவள் சொன்னாள். (டேய், அந்த நிமிடத்தின் சூடு எந்த அளவுக்கு இருந்தது) பரட்டை நாய்களே, மதிப்பிற்குரிய ரோம சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தியே நான் கொடுக்கும் பெண்களில் திருப்திபட்டுக் கொள்கிறார். இதுவரை என்மீது ஒரு குறை கூட அவர் சொன்னதில்லை.