பிதாமகன் - Page 9
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 6351
காரணம்& அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று அவன் சொன்னது, அவனுடைய அடி முட்டாள்களான சீடர்களுக்குப் புரியவில்லையென்றாலும், அவனுடைய சினேகிதிகளான எங்களுக்கு நன்றாகவே புரிந்தது. ஆனால், இப்போது எங்களுக்குக் கவலை இல்லை. நாங்கள் சம்பவம் நடந்த அந்த நாளுக்குப் பிறகு அவனுக்காக அழுததே இல்லையே. அவன் மீண்டும் உயிர்த்தெழுந்துவிட்டான் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா? தெரியாது. அவன் எங்களைப் பார்ப்பதற்காக உடனே வருவான் என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரியாது. பீலாத்தோஸே, பிரபஞ்சத்தின் தந்தையான ஜூபிடர் கடவுளின் கவனக் குறைவாலும், வெற்றி வீரரான டைபீரியஸின் ஆர்ப்பாட்டமான நடவடிக்கைகளாலும் யூதர்களின் ஒட்டுமொத்த பகுதிக்கும் கவர்னராக இருக்கும் உங்களுக்கு என்ன தெரியும்? நாங்கள் இனிமேல் எதற்காக பயப்பட வேண்டும்? எதற்காகக் கவலைப்பட வேண்டும்? நாங்கள்அன்று அவன் நிலையைப் பார்த்து அழுதோம். அவன் முகத்தில் பலரும் துப்பியதைப் பார்த்து வாய்விட்டு அழுதோம். அவன் உடலில் வழிந்த குருதியைப் பார்த்து அழுதோம். நீங்கள் அவன் மேல் அடி விழச் செய்தீர்கள். அவனைக் காப்பாற்றுவதற்காகத் தான் அப்படிச் செய்தீர்கள். புரோகிதர்களின் அடிகளால் தளர்ந்து போயிருந்த உடல்மேல் தான் நீங்கள் மீண்டும் அடிவிழச் செய்தீர்கள். அவனைக் காப்பாற்றுவதற்காகத்தான் அப்படிச் செய்ததாக நீங்கள் ஜூலியாவிடம் சொன்னதை நாங்கள் சிறிதளவிலாவது நம்பத் தயாராகவே இருக்கிறோம். சில நேரங்களில் கெட்ட மனிதன் கூட நல்ல செயலைச் செய்வான். அப்படிப்பட்ட முரண்பாடான விஷயங்கள் உங்களுக்கு நன்கு பழகிப் போன ஒன்றாயிற்றே. ஆனால், உண்மையிலே கடிதம்தானே உங்களின் மனதை முழுவதுமாக மாற்றியது? அந்தக் கடிதத்தை மட்டும் நாங்கள் அனுப்பியிருக்காவிட்டால், இயேசுவின் ரட்சகன் என்று நீங்கள் சொல்லிக் கொள்ளும் சம்பவம் நடந்திருக்குமா? உங்களின் சட்ட அறிவைப் பற்றி இந்த அளவிற்குப் பெருமையாகப் பந்தாவாகப் பேசிக் கொண்டிருக்க முடியுமா? அந்த நண்பருக்கு எழுதிய கடிதத்தில் நீங்கள் என்னவெல்லாம் கூறியிருக்கிறீர்கள்? நீங்கள் இயேசுவைப் காப்பாற்ற முயன்றதாகவும், அதற்கு இயேசு சம்மதிக்கவில்லை என்றும் எழுதியிருக்கிறீர்கள். இயேசு, வரலாற்றுக்கு இரையாகிப் போன ஒரு மனிதன் என்றும், சக்தி இல்லாத ரட்சகன் அவன் என்றும் நீங்கள் அந்தக் கடிதத்தில் எழுதியிருக்கிறீர்கள். நண்பரே, பீலாத்தோஸே! இயேசுவைக் காப்பாற்ற அவனுடைய தந்தையான கடவுளால் கூட முடியாது என்று அவனுடைய சினேகிதியான நான் கூறுகிறேன். அவனுடைய சினேகிதிகளான எங்களுக்குத் தெரிந்த அளவிற்கு அவனை வேறு யாருக்குத் தெரியும்? பீலாத்தோஸ், உங்களுக்குச் சிறிது கூட சம்பந்தமில்லாத இந்த இயேசுவின் மிகப் பெரிய தோல்வி எது என்று நான் சொல்லட்டுமா? அவன் எங்களை& பெண்களை அவனுடைய உலகத்திற்குள் எல்லா வாசல் கதவுகளையும் திறந்து உள்ளே வரும்படி செய்யவில்லை. சில கழுதைகளான ஆண்களைச் சீடர்கள் என்று கூறிக் கொண்டு அவன் நடந்து திரிந்தான். அவர்களுக்காக அவன் செலவிட்ட நேரத்தையும், பொறுமையையும் எங்களுக்காகச் செலவிட்டிருந்தால், அவனுக்கு இத்தகைய ஒரு முடிவு இவ்வளவு சீக்கிரம் வந்திருக்காது. இப்படிப்பட்ட ஒரு பயங்கரமான முடிவு வந்திருக்கவே வந்திருக்காது. தன்னுடைய சொந்த தாயைக் கூட அவன் தூரத்தில்தான் நிறுத்தி வைத்தான். சகோதரிகளையும்தான். அவன் அப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாது. தாயும் மனைவியும் காதலியும் சகோதரியும் காட்டும் அன்பையும், பாசத்தையும் வேறு யாரால் காட்ட முடியும்? அவன் தன்னுடைய தந்தையைத் தேடிப் போகும் அதே நேரத்தில் தன்னுடைய அன்னையைப் பற்றியும் புரிந்து கொண்டிருந்தான் என்றால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். அதற்குப் பதிலாக அவன் தந்தையைத் தேடி சந்து பொந்துகளில் எல்லாம் தட்டுத் தடுமாறி நடந்து திரிந்தான். தந்தை யாராக இருந்தால் என்ன? கர்ப்பப்பைதானே அவனுடைய உண்மையான தந்தை? கஷ்டம்! அவன் மனதை யாரால் மாற்ற முடியும்? உயிர்த்தெழுந்து வரும் இயேசுவாவது திரும்பி வந்து, பாவம் அந்த மரியத்தின் கால்களில் விழுந்து, 'அம்மா, உன்னை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது' என்று கூறுவானா? இந்த முறை நான் அவனிடம் இந்த விஷயத்தை மனம் திறந்து கூறிவிடுவது என்று முடிவெடுத்திருக்கிறேன். ஆனால், அந்தத் திருட்டு சீடர்களின் காதுகளில் நான் கூறுவது விழாமல் இருக்க வேண்டுமே. உயிர்த்தெழுந்து வந்தவுடன் அவர்கள் மீண்டும் அவனுடன் போய் ஒட்டிக் கொள்வார்களே. அதைப் போல அவனை விட்டு ஓடித் தப்பிக்கவும் செய்வார்களே. பீலாத்தோஸே, என்னுடைய உயர் அதிகாரியே, உண்மையாகப் பார்க்கப் போனால் நீங்கள் பிடித்து அடிகள் கொடுத்து அனுப்பியிருக்க வேண்டியது அந்தச் சீடர்களைத்தான். கதஸமேன் தோட்டத்தில் வைத்து இயேசுவைப் புரோகிதர்கள் பிடித்த போது ஒரு சீடன் உடம்பில் துணியே இல்லாமல் தப்பி ஓடியிருக்கிறான். என் இயேசுவே, உன்னுடைய நிலை இப்படி ஆகிப் போய் விட்டதே! இன்று இப்படியொரு நிலை என்றால், நாளை உன்னுடைய கடவுள் உலகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்? நீ எந்தக் காரணத்தால் எங்களிடம் உன்னுடைய ரகசியங்கள் முழுவதையும் மனம் திறந்து கூறவில்லை? எதற்காக அந்த விருந்திற்கு எங்களை நீ அழைக்கவில்லை? உணவு பரிமாறுவதற்கு வேண்டியாவது உனக்கு நாங்கள் உதவியாக இருந்திருப்போமே. சிறிது கூட மனவலிமையே இல்லாத ஆண்களிடம் உன்னுடைய கடவுள் ராஜ்யத்தை ஒப்படைக்க உனக்கு எப்படி தைரியம் உண்டானது? நாங்கள் உன்னுடைய கடவுள் ராஜ்யத்தை எங்களின் கர்ப்பப்பைகளில் வைத்து காப்பாற்றுவோமே! அதை வளர்த்து இந்த ஆகாயத்திற்கும் பூமிக்கும் பரப்பி இருப்போம் அல்லவா? நீ எங்களுடைய அன்பை நிராகரித்ததற்கு, உன் தாயை நிராகரித்ததற்கு, உனக்கு என்னவெல்லாம் நடக்கக் கூடாதோ அவையெல்லாம் நடந்தன. இனிமேலும் அவை நடக்குமோ என்று உண்மையாகவே அச்சம் கொள்கிறேன். இயேசுவே, உண்மையாகப் பார்க்கப் போனால் ஒரு ஆணைப் போல, நீ எங்களுடன் உறவு கொண்டிருந்தாயானால், பெண்மை இல்லாத ஒரு கடவுளின் ராஜ்யத்தைக் கற்பனையே பண்ணியிருக்க மாட்டாய். எதற்காக நீ உன்னுடைய கடவுளின் ராஜ்யத்திலிருந்து பெண்களின் அன்பும், அரவணைப்பும் ஆதரவும் அறவே வேண்டாமென்று நிராகரித்து ஒதுக்கினாய்? அதன் அடித்தளங்களை சில முட்டாள்களுக்கு ஏன் நீ எழுதிக் கொடுத்தாய்? அது உனக்கு எவ்வளவு பெரிய நஷ்டம் தெரியுமா? அது எங்களுக்கும் கூட நஷ்டம்தான். சரி... போகட்டும் போகட்டும்... போனதெல்லாம் போகட்டும் (ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவாறு) இயேசு, எனக்கு மனத்திற்குள் பயமாகவே இருக்கிறது.