பிதாமகன் - Page 13
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 6261
எனக்கு அந்த மனிதரைக் கொஞ்சம் கூட பிடிக்காது என்பது வேறு விஷயம். அவர் இயேசுவை வெறுமனே விட்டால் அதற்குப் பிறகு மதப் பெரியவர்களின் வாய்களை மூடுவது என்பது ஒரு சாதாரண விஷயமில்லை. ஆனால் ஹெரோதேஸ் என்ன செய்தார் தெரியுமா? எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இயேசுவை என்னிடமே மீண்டும் அனுப்பி வைத்தார். பின்னால்தான் எனக்கே தெரியவந்தது, அவரின் கேள்விகளுக்கும் இயேசு எந்தவித பதிலும் சொல்லவில்லை என்பதே. இந்த இடைப்பட்ட நேரத்தில் எனக்கு சிறிது நேரம் கண்களை மூடி தூங்குவதற்கான நிமிடங்கள் கிடைத்தன என்பது மட்டுமே மீதி. அதற்குப் பிறகு என்ன செய்வது? மக்களின் நடவடிக்கை கட்டுப்பாட்டை மீறி போய்க் கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது. நான் இயேசுவைப் பார்த்தேன். இயேசு என் கண்களையே அதே ஆபத்தான அன்புடன் பார்த்தவாறு நின்றிருந்தான். நான் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரச் சொன்னேன். எல்லோரின் முன்பும் என்னுடைய இரண்டு கைகளையும் கழுவியவாறு நான் சொன்னேன். ‘இந்த நேர்மையான மனிதனின் குருதியில் எனக்கு எந்தவித பங்கும் கிடையாது. நீங்கள் இனிமேல் என்னவேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.’ நான் மீண்டும் இயேசுவின் முகத்தைப் பார்த்தேன். மிகவும் களைத்துப் போய் குருதியும் காயங்களும் இருந்த அந்த முகத்தில் எந்தவித உணர்ச்சி மாறுபாட்டையும் என்னால் காணமுடியவில்லை. நான் அவனை யூதர்களின் கைகளில் ஒப்படைத்தேன். டேய், ஒருத்தனை கொலை செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துவிட்டால் அதற்குப் பிறகு மக்கள் கூட்டம், பட்டாளம் எல்லோரும் எப்படியெல்லாம் வெறியாட்டம் ஆடுவார்கள் என்பது நமக்குத் தெரியாதா என்ன? அந்த விஷயம் மிகவும் கம்பீரமாக, எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடந்தது. உள்ளே நடந்த அந்த விஷயங்களெல்லாம் கேட்டு எழுதும் அந்தப் பெண்ணுக்கு எதற்கு தெரிய வேண்டும்? அதனால்தான் இந்தக்கடிதத்தை நானே எழுதுகிறேன். என் கையெழுத்தைக் கொஞ்சம் பொறுத்துக் கொள். அது மட்டுமல்லடா. அவளும் ஒரு யூதப் பெண்தானே! அழகும் இளமையும் கொண்டவளாயிற்றே! இயேசுவின் வலையில் அவளும் வீழ்ந்தாளோ என்னவோ யாருக்குத் தெரியும்? இந்த ஜூலியாவின் சினேகித வட்டம் அப்படியொன்றும் மகிழ்ச்சியடையக் கூடிய விதத்தில் இல்லையென்று பல நேரங்களில் எனக்குத் தோன்றியிருக்கிறது. ஆனால், என் அண்டோனியஸ், குடும்ப அமைதி என்பது ஒரு முக்கியமான விஷயமாயிற்றே! பிறகு... உனக்குத்தான் தெரியுமே. நம்மை போன்ற கெட்ட மனிதர்களுக்குப் பெரிய அளவில் குரலை உயர்த்தி கேள்வி கேட்க எப்படி முடியும் என்பதையும் ஒரு நிமிடம் நினைத்துப்பார். அதனால் மவுனமாக இருப்பதே நல்ல மனிதனுக்கு அடையாளம் என்று நடந்து கொள்வதுதானே சிறந்தது? காலம் எல்லா விஷயங்களுக்கும் நிச்சயம் பதில் சொல்லவே செய்யும். டேய், இயேசு உயிர்த்தெழுந்து வந்தால் என்னைப் பார்ப்பதற்கு வருவானா? உனக்கு என்ன தோன்றுகிறது? எதற்கு என்னைப் பார்க்க அவன் வரவேண்டும் என்று தோன்றுகிறதா? அவனுடைய உலகம் வேறு எங்கோ இருக்கிறது. பிறகு ஒரு விஷயம்... ஒரு ஆட்சித்தலைவன் என்ற முறையில் வரலாற்றுரீதியான ஒரு ஆர்வம் எனக்கு இருக்கவே செய்கிறது. அவன் வாக்குறுதி தந்தபடி ஒரு தெய்வ ராஜ்யத்தை அவன் என்றாவதொரு நாள் அமைப்பானா? அப்படியொரு நல்ல இடம் இருக்குமானால் டேய் அன்டோனியஸ், நாம் இரண்டுபேரும் மனப்பூர்வமாக அங்கு சென்று ஒரு நல்ல வாழ்க்கையைத் தொடங்குவோம். அதற்கான ஒரு விண்ணப்ப மனுவாக என்னுடைய இந்தக் கடிதம் இருக்கட்டும். இந்தக் கடிதத்தை நீ பத்திரமாகப் பாதுகாத்து வை. உன்னுடைய புத்தகங்களுக்கு மத்தியில் இதற்கும் ஒரு இடம் கொடு. இயேசுவின் தெய்வராஜ்யத்தில் உனக்கு என்ன ஆகவேண்டும் என்று ஆசை? நீ ஒரு நூல்களைப் பாதுகாத்து வைக்கும் மனிதன் வேலையைப் பார். நான் ஒரு மிருகச் சாலையைப் பார்த்துக் கொள்ளக் கூடியவனாக இருந்து கொள்கிறேன். சில நாட்கள் சென்ற பிறகு, நமக்கு ஒருவித அலுப்புத் தோன்றுமா என்ன? பார்க்கலாம். சில நாட்கள் அந்த வேலைகளில்தான் இருந்து பார்ப்போமே! சரி... உன்னுடைய பதில் கடிதத்திற்காக நான் காத்திருக்கிறேன். உனக்கு நல்லது நடக்கட்டும்.
உன்னுடைய உயிருக்குயிரான நண்பன்,
பொந்தியோஸ் பீலாத்தோஸ்.
4
கேட்டு எழுதும் பெண்ணுக்கு
மயக்கம் வருகிறது!
மலைகளின் அடிவாரத்தின் வழியாகவும் கற்களும் புற்களும் ஏராளமாக இருக்கும் வறண்டுபோன சமவெளி வழியாகவும் ஜெருசலேமிலிருந்து வரும் ஒருபாதை. வண்டிச் சக்கரங்களின் அல்லது குதிரைக் குளம்புகளின் அடையாளமே சிறிதும் இல்லாத இந்த கிராமத்து பாதை ஆட்டிடையர்களின் & கள்ளி பொறுக்க வரும் பெண்களின் & சிறுசிறு கிராமங்களிலிருந்து எப்போதாவது ஜெருஸலேமில் இருக்கும் பெரிய தேவாலயத்திற்கு வந்து கடவுளைத் தொழ வரும் கிராமத்து மனிதர்களின் பாதை என்பதை அதைப் பார்க்கும் போதே நமக்குத் தெரியும். யாருக்கும் குறிப்பாக எங்காவது போவதற்காக உண்டாக்கப்பட்ட பாதை அல்ல இது. எப்படியோ காலம் காலமாக வரலாற்றின் சிறிய செயல்களை நிறைவேற்றுவதற்காக அந்த மண்ணில் நடமாடிக் கொண்டிருந்த ஊரும் பேரும் இல்லாத காலடிகளுக்குக் கீழே மெல்ல மெல்ல உருவாகிய பாதை இது. பாதையில் இரு பக்கங்களிலும் இருக்கும் புழுதிக்கும் இந்தப் பாதைக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. சொல்லப் போனால், இரண்டு பக்கங்களில் இருக்கும் புழுதியை விட பாதையில் இருக்கும் புழுதி சற்று உறுதியானதாக இருக்கும். அவ்வளவுதான். ஆங்காங்கே விழுந்து கிடக்கும் ஆட்டின் சாணமும் கழுதையின் எச்சமும்தான் இந்த கிராமத்துப் பாதைக்கு உயிரின் அடையாளத்தை தந்து கொண்டிருந்தன. தூரத்தில் கண்களை ஒட்டினாலும் சிறப்பாகக் கூறும்படி ஒன்றும் இல்லை. அமைதியாக இருக்கும் மலைகள். வெயிலில் காய்ந்து கிடக்கும் சமவெளிகள். ஏதாவதொரு இனிய காட்சியைக் காணவேண்டும் என்று ஆசைப்படும் ஆண் அல்லது பெண் கட்டாயம் தங்களின் தலையை உயர்த்தி மேல் நோக்கிப் பார்த்தே ஆகவேண்டும். அங்கே காற்று பட்டு இங்குமங்குமாய் அலைபாய்ந்து கொண்டிருக்கும் மேகங்களின பரிதவிப்பையும் நீலவண்ண வானத்தின் பிரகாசத்தையும் அபூர்வமாக தென்படும் பறவைகளையும் அவர்கள் பார்க்கலாம். அதோடு சூரியனையும்தான். இரவு நேரமாக இருந்தால் ஆகாயத்தில் மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களைக் காணலாம். கீழே மணல்களில் தன்னுடைய காலடிச் சத்தம் கேட்டு நடுங்கி ஒடும் தேளைப் பார்ப்பவன் அதிர்ஷ்டசாலி என்றுதான் சொல்ல வேண்டும். வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு குள்ள நரியையோ, பதுங்கிக் கொண்டிருக்கும் ஒரு முயலையோ பார்த்தால் அந்த நாள் நிச்சயம் யாராலும் மறக்க முடியாத ஒரு நாளே.
+Novels
Short Stories
July 31, 2017,
May 28, 2018,
March 7, 2016,
June 3, 2016,