பிதாமகன் - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 6351
உயரம் குறைந்த, மென்மையான, சற்று தடித்த அதே நேரத்தில் நல்ல வடிவமைப்பைக் கொண்ட அழகான இளம்பெண்தான் ரூத். அவளின் சுருண்ட தலைமுடி விரிந்து தோள் மீதும் முதுகிலும் கிடந்தது. சற்று முன்பு ஒரு மின்னல் கீற்றைப் போல வெளியே வந்த அவளது கால் இப்போது நீலநிற ஆடைக்குள் இன்னொரு கால்மீது போடப்பட்டு இருந்தது. வெளுத்து சிவந்து காணப்பட்ட அவள் பாதங்களில் ஓடிய நீல நரம்புகள் நகங்களின் நிறத்தில் போய் இரண்டறக் கலந்து காணாமல் போகின்றன. சிந்தனையில் ஆழ்ந்திருக்கும்போதுகூட அவள் முகம் மிகவும் அழகாகவே இருந்தது. அவளது அழகான உதடுகளில் அவ்வப்போது புன்சிரிப்பு அரும்பிக் கொண்டிருந்தது. அவளின் விழிகளின் ஓரத்திலும் அதே புன்சிரிப்பு மறைந்திருந்தது. முகத்தில் லேசான கர்வத்தின் சாயல் தெரிந்தது.
ரூத் (தனக்குள்): இன்றைக்கு என்ன ஆனது? பெரியவரைக் காணோமே! நேற்று இரவு அதிகமாக அவர் மது அருந்தியிருக்க வேண்டும். பூனை வந்து விட்டது. இனி நாய் வரவேண்டும். கிளி வரவேண்டும். மான்குட்டி வரவேண்டும். யானை வரவேண்டும். முயல் வரவேண்டும். பிறகு லேசாக ஆடித் தளர்ந்த வண்ணம் கவர்னர் பொந்தியோஸ் பீலாத்தோஸ் வருவார். இது எல்லாம் காலையில் ஒழுங்காக அந்த மனிதர் படுக்கையை விட்டு எழுந்தால். இந்த மிருகங்களிடமாவது அந்த மனிதருக்குப் பாசம் இருக்கிறது என்பது உண்மையிலேயே பெரிய விஷயம்தான். அவர் நேற்று தன்னுடைய ஏதோ ஒரு பழைய நண்பனுக்கு எழுதி பெட்டியில் ஒளித்து வைத்திருந்த கடிதத்தில் எழுதியிருக்கிறார் & என் மீது ஒரு தந்தை தன்னுடைய மகள் மீது கொண்டிருக்கும் அன்பைக் கொண்டிருப்பதாக. மகளைப் போல! அவரது வார்த்தைகளை நம்புவதற்கு ரோம நாட்டு பெண்கள்தான் வரவேண்டும்.
அவர் சொல்லுவதைக் கேட்டு எழுதுவதற்காக உட்கார்ந்திருக்கும்போது அவ்வப்போது எழுதிக் கொண்டிருக்கும் மேஜைக்குக் கீழே அந்த மனிதரின் கால் நீண்டு வந்து என்னுடைய கால்களைத் தொடுவதை அவர் சோம்பல் முறிப்பதன் விளைவு என்று நான் நம்ப வேண்டுமா என்ன? சரி... அப்படியே நம்புகிறேன். ஆனால், ஏற்கனவே எழுதியதைப் படித்துப் பார்ப்பதற்காக எனக்குப் பின்னால் வந்து அவர் மிகவம் நெருக்கமாக நிற்கும்போது அதில் ஏதோ தவறு இருப்பதை என்னால் உணர முடிகிறதே! நிச்சயம் அவர் செயலில் தவறு இருக்கிறது என்று ஒரு பெண்ணான நான் கூறுகிறேன். இருந்தாலும் பெரியவரை வெறுமனே சந்தேகத்தின் பெயரில் விடுவோம். ஒரு விதத்தில் பார்த்தால் இந்த பீலாத்தோஸ் உண்மையிலேயே ஒரு பாவம் என்றுதான் சொல்ல வேண்டும். உலகத்தில் என்னென்ன நடக்கின்றன என்பதைப் பற்றி இந்த மனிதருக்கு எதுவுமே தெரியாது. காலையில் படுக்கையை விட்டு எழுந்தால் அதற்குப் பிறகு அவர் வாழ்வது தனக்கென்று சொந்தமாக அவர் அமைத்துக் கொண்ட உலகத்திற்குள்தான். அவரின் மூக்கிற்கு முன்னால் என்ன தெரிகிறதோ, அதுதான் அவருக்கு வாழ்க்கை. யாராவது ஒரு பெண் முன்னால் வந்து விட்டால் போதும், அவளையே வெறித்துப் பார்க்க ஆரம்பித்து விடுவார். ஏதாவது ஒரு மிருகத்தைப் பார்த்துவிட்டால் அதற்குப் பக்கத்தில் போய் நின்று அதைத் தடவ ஆரம்பித்து விடுவார். சில நேரங்களில் மிருகம் அவரை உதைக்கவோ கடிக்கவோ குத்தவோ செய்வதுண்டு. அந்த மிருகம் அவர் மீது கொஞ்சம் விருப்பம் காட்டினால் போதும், அவ்வளவுதான்& அதற்கு அருகிலேயே மணிக்கணக்கில் மனிதர் உட்கார்ந்து விடுவார். பெண் அவர் மீது விருப்பம் இருப்பது மாதிரி காட்டினால், மனிதர் பரபரப்பாகி விடுவார். அதற்குப் பிறகு எல்லா விஷயங்களும் திருட்டுத்தனமாக வேலைக்காரர்கள் மூலம் நடந்து கொண்டிருக்கும். இந்த மனிதர் எப்படி யூதர்கள் வசிக்கும் இந்தப் பகுதியை ஆண்டு கொண்டிருக்கிறார் என்பது யெஹோவிற்கு மட்டும்தான் தெரியும். ரோம சாம்ராஜ்யத்தின் கம்பீரத்தால் எப்படியோ இந்த மனிதரின் பதவியும் இங்குள்ள ஆட்சியும் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று கூறுவதைத் தவிர வேறு எப்படி கூற முடியும்? பூட்டி வைப்பது என்பது இவரின் இன்னொரு வேலை. பூட்டி வைக்கும் பொருள் யாருக்கும் தெரியாது. அதை யாரும் பார்ப்பதில்லை என்று இந்த மனிதர் நினைத்துக் கொண்டிருக்கிறார். தான் கைப்பட எழுதும் எந்த விஷயமாக இருந்தாலும் அதை உள்ளே பூட்டி வைத்து விடுகிறார் மனிதர். அப்படி பூட்டி வைக்கப்படும் பொருளைத்தான் ரகசியங்களைத் தேடும் யாராக இருந்தாலும் முதலில் திறந்து பார்ப்பார்கள் என்ற உலகத்து உண்மையை இந்த மனிதருக்குத் தெரியாமல் இருப்பதுதான் விந்தையாக இருக்கிறது. நானும் ஜூலியாவும் கள்ளச்சாவி உருவாக்குவோம் என்ற எண்ணம் ஏனோ இந்த பீலாத்தோஸுக்கு உண்டாகவே இல்லை. இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது சில நேரங்களில் கிழவனின் நீளமான ரோமன் மூக்கைப் பிடித்து கொஞ்ச வேண்டும்போல் தோன்றுகிறது யானைத் தந்தத்தால் ஆன அந்தத் தடிமனான பெட்டியில் ஜூலியாவும் நானும் பார்க்காத பொருள் என்ன இருக்கிறது? இது எதுவுமே தெரியாத இந்த மனிதர் தான் எழுதும் ஒவ்வொரு முட்டாள்தனமான கடிதத்தையும் இதற்குள் பத்திரமாகப் பூட்டி வைத்துக் கொண்டிருக்கிறார். காதல் கடிதங்களும், காதல் கவிதைகளும் கூட இவற்றில் அடக்கம். சக்கரவர்த்தியின் காம உறவு சம்பந்தப்பட்ட விஷயத்திற்குப் பயன்படும் சில பொருட்களும் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற வினோதமான விதிகளும்கூட அங்கு இருந்தன. இவ்வளவு பெரிய ரோம சாம்ராஜ்யத்தின் மகத்தான் ரகசியங்களெல்லாம் இந்தப் பெட்டியை விட்டு கீழே இறங்கி என் தலைக்குள் வந்து அமர்ந்திருக்கின்றன. இந்த மனிதரின் காதலர்களின் பெயர்களும், காதலிகளுடைய பெயர்களும் எனக்கும் ஜூலியாவிற்கும் நன்றாகவே தெரியும். ‘என்னைக் கஷ்டப்படுத்தாமல் இருக்கும் காலம் வரையில், நான் எதைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. நான் அந்த மனிதரை என்றோ மன்னித்து விட்டேன்’ என்று ஜூலியா சொல்லுவாள். ஜூலியாவை அந்த மனிதர் தேவையில்லாமல் கஷ்டப்படுத்துவதில்லை. இந்த விஷயங்களெல்லாம் அவர்களுக்கிடையே எப்போதோ முடிந்துவிட்டன. சொல்லப்போனால் ஜூலியாவைப் பார்ப்பதற்கே பயப்படுவார் பீலாத்தோஸ். அவள் தன்னைவிட புத்திசாலி, விஷயங்கள் தெரிந்தவள் என்ற விஷயம் கிழவருக்கு நன்றாகவே தெரியும். அவள் படிக்கும் நூல்களையும் அவள் செய்யும் தியானங்களையும் பார்த்து உண்மையாகவே இவர் பயப்படுவார். புலியையே பாய்ந்து பிடிக்கக் கூடிய ஏதோவொரு சக்தி அதற்குள் மறைந்திருப்பதாக எண்ணி இந்த மனிதர் மனதிற்குள் நடுங்குவார்.