பிதாமகன் - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 6266
அதனால்தான் சொல்கிறேன் என் அன்டோனியஸே, என் அன்பு நண்பனே, நீ இப்போது செய்து கொண்டிருக்கும் வேலைகளை முழுமையாக நிறுத்திவிட்டு, திரும்பவும் வந்து ஒரு நல்ல பெண்ணைக் கண்டுபிடித்து (அவளை எனக்கும் நீ விட்டுத்தர வேண்டும்... ஹா!ஹா!ஹா!) டைபர் நதிக்கரையிலோ ஆப்பியன் பாதையோரத்திலோ ஒரு நல்ல வீட்டை உண்டாக்கி, வேண்டுமென்றால் சில நூல்களை மீண்டும் வாங்கி சேகரித்து இனி இருக்கும் காலமாவது நீ சுகமாக வாழ ஆரம்பிப்பதுதான் நல்லது என்று நான் நினைக்கிறேன்.
குழந்தைகள் நமக்கு கட்டாயம் இருக்க வேண்டும். குழந்தைகள் இல்லையென்றால் ஏதோ ஒரு குறை இருப்பது போலவே தோன்றும். மனைவியும் வேலைக்காரர்களும் சேர்ந்து அந்தக் குழந்தைகளை வளர்த்துக் கொள்வார்கள். நாம் அதைப் பற்றி சிறிது கூட மண்டையைப் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். அவர்களை எப்போதாவது ஒருமுறை பார்த்தால்கூட போதும். ஆனால், அவர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மரணமடையும் நேரத்தில் நாம் எதுவுமே இங்கு விட்டுச் செல்லவில்லை என்றொரு உணர்வு நம்மை ஆட்டிப் படைக்கத் தொடங்கும் என்பது என் எண்ணம். குழந்தைகள் என்பது ஒரு அதிர்ஷ்ட சோதனை என்று கூட நான் கூறுவேனடா, ஆன்டோனியஸ். வீர பராக்கிரமசாலிகளாக உலகப் புகழ்பெறும் பிள்ளைகளுமாகப் பிறக்கிறார்கள் என்று வைத்துக் கொள். அவர்கள் உண்டாக்குகிற சாம்ராஜ்யத்தில் ஒரு மிகப்பெரிய அரண்மனையின் வராந்தாவில் வெயிலை அனுபவித்துக் கொண்டிருக்கும் காட்சியை மனதில் ஒரு நிமிடம் நினைத்துப் பார். நினைத்துப் பார்க்கும் போதே அது எவ்வளவு சுகமான ஒரு அனுபவமாக இருக்கிறது. அதே நேரத்தில் அதிகாரமும், பலமும், செல்வமும் நம்மிடம் மட்டுமே இருக்கின்றன என்று வைத்துக் கொள். அப்படியொரு சூழ்நிலை இருந்தால் நம் பிள்ளைகள் நம்மிடம் சண்டைபோட ஆரம்பிப்பார்கள். கோபம் கொள்வார்கள். வாள் முனையில் நம்மைப் பற்றி வாய்க்கு வந்தபடி குற்றச்சாட்டுகளையும் இல்லாததையும் பொல்லாததையும் கூறுவார்கள். அது மட்டும் உண்மை. சில வேளைகளில் அவர்கள் நம்மைக் கொலை செய்யவும் முயலலாம். சில நேரங்களில் நாம் அவர்களைக் கொல்லவேண்டியது வந்தாலும் வரலாம். ஒரு சில வேளைகளில் நான் இரண்டு வாரங்களுக்கு முன்பு காப்பாற்ற முயன்ற ஒரு இளைஞனின் விஷயத்தைப் போல, வரலாறு அவர்களைக் கொல்லலாம். எது இருந்தாலும் பரவாயில்லை. வரலாறு என்று சொல்லப்படுவது இப்படித்தானே பல விளையாட்டுகளைப் புரிந்து கொண்டு இருக்கிறது. அதற்குள்ளே ஜூபிடர் கடவுள் மிகவும் பலத்துடன் தன்னுடைய கையை நுழைத்தார் என்றால் அவருக்கு என்னுடைய வாழ்வுதான். (நான் எவ்வளவு கவனமாக இருக்கிறேன் என்பதைப் பார்த்தாயா?) இதிலிருந்து எப்படி தப்பிப்பது, அன்டோனியஸ்? ரட்சகனாக முயற்சிப்பதால் என்ன பயன்? உன்னுடைய ஆதரவு மையத்தைப் பற்றி நான் கேவலமாகப் பேசுகிறேன் என்று நினைக்காதே. உண்மையிலேயே பார்க்கப் போனால் உன்னுடைய கடிதம் இரண்டு வாரங்களுக்கு முன்னால் வந்திருந்தால் இயேசு என்ற பெயரைக் கொண்ட அந்த இளைஞனை நான் ஏதாவது சில தகிடு தத்த வேலைகள் செய்து அந்த திருட்டு யூதர் கூட்டத்திடமிருந்து காப்பாற்றி உன்னுடைய ஆதரவு மையத்திற்கு அனுப்பி வைத்திருப்பேன். உன்னுடைய விசித்திரமான சிந்தனை ஓட்டங்களுடன் ஒத்துப் போகக்கூடிய ஒரு மனிதன்தான் அவன். ஒருவேளை ஹா!ஹா!ஹா! உன்னுடைய பழைய வாழ்க்கை முறையோடு ஒத்துப் போகக்கூடிய மனிதனாகக் கூட அவன் இருக்கலாம். காரணம்& அந்த மனிதனுக்காகக் கண்ணீர் வழிய காத்து நின்றவர்களெல்லாம் பேரழகிகளான யூதப் பெண்கள்தாம். எனக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான ஒன்றிரண்டு பெண்கள் கூட அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள் என்பதையும் முன்கூட்டியே நான் கூறிவிடுகிறேன். அதனால் உன் ஆர்வத்தைக் குறைவாக நான் மதிப்பிடவில்லை என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். டேய், ரோமன் விலைமாதுகளிடமும் குழந்தைகளிடமும் என்னையும் உன்னையும் தவிர வேறு யார் வரலாற்றுரீதியாக இந்த அளவுக்கு ஈடுபாடு கொண்டிருக்க முடியும்? ஒருவேளை என்னால் காப்பாற்ற முடியாமற்போன அந்த இளைஞன் உன்னுடைய ஆதரவு மையத்திற்கு வந்து அங்கிருக்கும் மனிதர்களில் தானும் ஒருவனாக ஆகியிருக்கலாம். நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து ரோம சாம்ராஜ்யத்தையும் இந்தப் பரந்து கிடக்கும் உலகம் முழுவதையும் காப்பாற்றியிருக்கலாம். (எதிலிருந்து? யாரிடமிருந்து? அதைப்பற்றி எனக்கு எதுவுமே தெரியாது.) அதற்கு உதவியாக இருந்ததற்காக நான் மரணமடைந்து பரலோகத்தை நோக்கிச் செல்லும் போது ஜூபிடரின் வலது பக்கத்தில் ஒரு தங்கத்தால் ஆன சிம்மாசனமும் எல்லா பரமானந்தங்களும் எனக்குக் கிடைத்திருக்கும்.
இப்படி எத்தனை நல்ல நல்ல கனவுகள். நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்க விரும்புகிறேன். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாதவன் என்ன ரட்சகனடா, அன்டோனியஸ்? உலகம் முழுவதற்கும் தலைவன் என்றும் ரட்சகன் என்றும் பேசப்பட்ட ஜூலியஸ் சீஸர் ஒரே குத்தில் மரணத்தைத் தழுவவில்லையா? டேய், ஒருவன் ரட்சகனாக இருக்கிறான் என்றால் அதற்கு ஒரு விவஸ்தை இருக்க வேண்டும். இந்த ரோம சாம்ராஜ்யம் முழுவதையும் இந்த உலகம் முழுவதையும் ஒரே நிமிடத்தில் எந்தவித குறைகளும் இல்லாமல் ஆக்கி காப்பாற்றி மகிழ்ச்சியில் மிதக்க வைக்கக்கூடிய முழுத் தகுதி சம்பந்தப்பட்ட ஆளுக்கு இருக்க வேண்டும். அந்த மகிழ்ச்சியான சூழ்நிலையைப் பார்த்து ஆனந்தம் அடைந்து, மரணமில்லாத ரட்சக பதவியை அனுபவித்து வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய கொடுப்பினை இருக்க வேண்டும். அதற்குத் தேவையான அதிகாரமோ படைபலமோ மந்திர சக்தியோ& எது வேண்டுமென்றாலும் அவையெல்லாம் கட்டாயம் அந்த மனிதனிடம் இருக்க வேண்டும். இது எதுவுமே இல்லாமல் ஒரு நிமிடம் ரட்சகன், இன்னொரு நிமிடம் ரட்சிக்கப்பட வேண்டியவன் என்று சொல்லிக் கொண்டிருந்தால், நிச்சயம் அது நல்லதல்ல. அது நமக்குப் பின்னால் கூடிக் கொண்டிருக்கும் நாட்டு மக்களை ஏமாற்றுவதாகத்தான் அர்த்தம். ஏன் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வது என்று கூட இதைச் சொல்லலாம்.
டேய், இயேசு என்ற பெயரைக் கொண்ட அந்த மனிதனை நான் விசாரிக்கும் போது, நீகூட என் அருகில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அந்த மனிதன் சொன்ன பட்டும்படாத சில விஷயங்கள் ஒருவேளை உனக்கும் புரியலாம். எனக்கு ஒரு விஷயமும் புரியவில்லை என்பதே உண்மை. நீ அப்போது என்னுடன் இருந்திருந்தால் ஒருவேளை அந்த அப்பாவி இளைஞனைக் காப்பாற்றுவதற்கு ஏதாவது ஒரு வழியை நீ சொல்லிக் கொடுத்திருப்பாய் என்று என் மனத்திற்குப் படுகிறது.