பிதாமகன் - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 6351
அதற்குப் பிறகு தானே ஒரு துணை படைத்தலைவனும், அவனுடைய தோழனும் காசை வைத்துவிட்டு வெளியே போங்களடா, பிச்சைக்கார நாய்களே!' அதோடு நிற்காமல் அவள் தன்னுடைய கறுப்புவண்ண ஆடையை மேலே தூக்கித் தன்னுடைய வெளிறிப் போய் காணப்பட்ட தடிமனான தொடைகளை நம்மிடம் காட்டியவாறு அவள் சத்தம் போட்டாள். அவள் சத்தமாக கைகளைத் தட்டியது இப்போதும் பசுமையாக என் ஞாபகத்தில் இருக்கிறது. அதற்குப் பிறகு எனக்கு ஞாபகத்தில் இருப்பது படிகளில் தலைகீழாக விழுந்து கிடந்த நம் இருவரின் மீதும் காரித் துப்பிய கார்ஸிக்கன் குண்டர்களின் முகங்கள்தாம். நம் இருவரின் உடல்களிலுமிருந்த ஆடைகள் முழுமையாகக் காணாமல் போயிருந்தன. நீ டைபர் நதிக்கரையில் இருக்கும் உன் மாளிகை புத்தக அறையின் ஒரு மாதிரியான வாசனையோடு மூழ்கிக் கிடக்கும் குளிர்ச்சியான படுக்கையை நோக்கி லேசாக ஆடியவாறு நடந்து சென்றிருப்பாய். உடம்பில் துணி எதுவும் இல்லாமல் இருந்ததால் வேறு நீ எங்கும் போயிருக்க வாய்ப்பில்லை. போகும் வழியில் நீ உனக்கு மிகவும் பிடித்தமான உன்னுடைய பழைய காதல் பாட்டுகளைப் பாடியிருக்கலாம். நான் எப்படியோ படைக்களத்தில் இருக்கும் என்னுடைய கூடாரத்திற்கு, காவலாளிகள் யாரும் என்னுடைய நிலையைப் பார்த்திராத வண்ணம் வந்து சேர்ந்தேன்.
காமக் களியாட்டங்கள், அடிகள், மது ஆகியவற்றின் பாதிப்பிலிருந்து விடுபடுவதற்காக காலையில் எண்ணெய் போட்டு உடம்பைத் தேய்த்து விட்டுக் கொண்டிருந்தேன். அப்போதுதான் செய்தி கொண்டு வரும் ஆள் அந்தச் செய்தியைக் கொண்டு வந்தான். நேராக நிற்காத தலையுடன் நான் சக்ரவர்த்தியின் உத்தரவைப் படித்தேன். 'இன்றே பிரிட்டனுக்குப் படையைக் கொண்டு செல்ல வேண்டும்.' அன்று ரோமை விட்டு நான் புறப்பட்டதுதான். அன்டோனியஸ், அதற்குப் பிறகு அகஸ்டஸும் டைபரீஸும் என்னைப் பொறுத்தவரை ஞாபகச் சின்னங்களாக மட்டுமே இருந்துவிட்டன. கார்த்தேஜ், கார்த்தோபா, ஸ்மிர்ணா, ஆர்மேனியா, டெமாஸ்கஸ், அலெக்ஸாண்ட்ரியா, கடைசியில் இந்த யூதர்களின் வறண்டு காய்ந்து போய்க் கிடக்கும் நாட்டிற்கு வந்து ஏழு வருடங்கள் ஆகிவிட்டன. டேய் அன்டோனியஸ், நீ பொறாமைப்படக்கூடாது. எப்படிப்பட்ட வகை வகையான அதரத்தேன்களை நான் பருகியிருக்கிறேன்! எந்த மாதிரியான வித விதமான மது வகைகள் என்னுடைய நரம்புகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன. எத்தனை ஆயிரம் இரத்தக் களங்களை இத்தனை வருடங்களில் நான் பார்த்திருக்கிறேன்! எப்படிப்பட்ட காற்றுகளையெல்லாம் நான் சுவாசித்திருக்கிறேன்! எப்படிப்பட்ட மலர்களையும் மரங்களையும் நான் பார்த்திருக்கிறேன்! பறவைகளை வளர்த்தேன். நாய்கள் மேல் பிரியம் வைத்தேன். பழங்களைத் தின்றேன்... அன்டோனியஸ், கடந்து வந்த என்னுடைய வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் போது, எனக்கு திருப்தி உண்டாகியிருக்கிறதா என்று யாராவது கேள்வி கேட்டால், பதில் சொல்லாமல் நான் மவுனமாகத்தான் இருப்பேன். நான் ரோம சாம்ராஜ்யத்திற்காக என்னுடைய சக்ரவர்த்திக்காக வேலை செய்தேன். அந்தச் சமயத்தில் எனக்குக் கிடைத்த சுகங்களை நான் அனுபவித்தேன். அவ்வளவுதான். இதுதான் ஜூபிடர் கடவுள் (டேய், நான் இந்த உண்மையை மறைக்கவில்லை. கடவுளின் பார்வை என்மீது பட ஆரம்பித்துவிட்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்) எனக்கு வாழ்க்கையில் தந்த பங்கு. அதன் சரியையும் தவறையும் பற்றி சொல்வதற்கு நான் யார்?
என்னுடைய இந்த ஓட்டங்களுக்கும் வாழ்க்கை உயர்வுகளுக்கும் இடையில் ஒருமுறை விசாரித்தபோது தான் எனக்கே தெரிய வந்தது. நீ உன்னுடைய வீட்டின் கீழ்ப்பகுதியில் இருந்த பாரசீக துணிக்கடையை விற்றுவிட்டு, நீ சேகரித்து வைத்திருந்த நூல்களை மார்க்கஸ் லான்ஜினஸின் பள்ளிக்கூடத்திற்கு தானமாகத் தந்துவிட்டு காணாமலே போய்விட்டாய் என்கிற உண்மையே. உன்னுடைய வீர சாகச மோகக் கதைகளை நினைத்துப் பார்த்தபோது நீ கப்பல் ஏறி இந்தியாவுக்கோ சைனாவுக்கோ போயிருப்பாய் என்றுதான் நான் நினைத்திருந்தேன்.
நான் சொன்ன வார்த்தைகளைக் கொஞ்சம் நீ கேட்டிருந்தால், அன்டோனியஸ், இப்படிப்பட்ட எந்த விஷயங்களுமே நடந்திருக்காது. முன்பே நான் உன்னிடம் பலமுறை கூறியிருக்கிறேனே, வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் ஒரு ஆண் திருமணம் கட்டாயம் செய்து கொள்ள வேண்டும் என்று. ரோம நாட்டில் உள்ள நகரங்களில் பணமும், அழகும் உள்ள, உனக்குப் பொருத்தமான எத்தனைப் பெண்கள் திருமணம் செய்வதற்குத் தயாராக இருப்பார்கள்! அதைப்பற்றி கொஞ்சமும் நினைத்துப் பார்க்காமல் அந்த சேர்த்து வைக்கப்பட்ட நூல்களுக்கு மத்தியில் ஒரு புழுவைப் போல தனியாக நீ வாழ வேண்டிய அவசியம் என்ன? உன்னுடைய கட்டுக்கடங்காத காமவெறியை ஒரு நல்ல பெண் புரிந்து கொண்டு அதற்கேற்றபடி நடந்து வீட்டிற்குள் எரிந்து கொண்டிருக்கும் ஒரு நெருப்புச் சுடரைப் போல பிரகாசமாக இருந்து உன்னை பத்திரமாகப் பார்த்துக் கொண்டிருப்பாள். ஆனால், நீயோ நூபியன் அலிகளின் நகக்கீரல்களுக்கும், ஆர்மேனியன் நாட்டைச் சேர்ந்த அழகான குண்டர்களின் வறண்டுபோன முத்தங்களுக்கும், ரோம விலைமாதுகளின் வெறுக்கத்தக்க காமக்களியாட்டங்களுக்கும் அடிமையாகிவிட்டாய். அதைத்தான் உன்னுடைய தலைவிதி என்கிறேன்.
டேய், உன்னைப் போல நானும் ஒரு திருமணமாகாத இளைஞனாகத்தான் இருந்தேன். ஆனால், கடைசியில் எனக்கு பொருத்தமான ஒரு ரோமநாட்டுக்காரியை நான் கண்டுபிடித்து, அதன் மூலம் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தைத் தேடிக் கொண்டேன். லான்ஜினஸின் பள்ளிக்கூடத்தில் படித்தவள்தான் ஜூலியா. உன்னைப் போல புத்தகங்களை வாங்கி சேர்த்து வைக்கும் பழக்கம் அவளுக்கும் உண்டு. உன்னைப் போல சிறிதும் தேவையே இல்லாத பல விஷயங்களையும் சிந்தித்துக் கொண்டிருக்கும் பெண்தான் அவளும். எதற்காகப் பிறவி என்ற ஒன்று இருக்கிறது? எதற்காக உறவுகள் உண்டாக்கப்படுகின்றன? மரணத்திற்குப் பிறகு என்ன இருக்கிறது? உண்மை என்றால் என்ன? உண்மை என்பது ஒன்றே ஒன்றுதானா? இல்லாவிட்டால் பல உண்மைகள் இருக்கின்றனவா, இப்படி பல விதப்பட்ட விஷயங்களையும் நினைத்துக் கொண்டிருப்பாள் ஜூலியா. சொல்லப் போனால், இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு நான் இப்போது ஜூலியாவை சுதந்திரமாக இருக்கச் செய்திருக்கிறேன். அவள் என்னையும் அப்படி விட்டிருக்கிறாள். எதுவுமே இல்லையென்றாலும் என்னுடைய குறட்டை ஒலியை இத்தனை காலமும் அவள் பொறுத்துக் கொண்டிருக்கிறாளே! அது ஒன்றே போதுமே! அன்பு என்பதை அறிந்த இப்படிப்பட்ட ரோம நாட்டுப் பெண்கள் எவ்வளவுபேர் இருப்பார்கள்? அதற்காக நான் ஒரு புண்ணிய ஆத்மாவாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று நீ நினைத்து விடக்கூடாது, அன்டோனியஸ். ஒரு ரோமன் கவர்னருக்கு முடியாது என்று என்னடா இருக்கிறது? என் மனதில் இருக்கும் விருப்பங்களுக்கு ஒரு எல்லை இருக்கிறதா என்ன?