Lekha Books

A+ A A-

ஒரு தேச துரோகியின் தாய்

oru-desadhrogiyin-thaai

தாய்மார்களைப் பற்றி எத்தனை நிமிடங்கள் - நாட்கள் - மாதங்கள் கூட பேசிக் கொண்டேயிருக்கலாம். நகரைப் பகைவர்கள் சூழ்ந்து கொண்டு பல நாட்கள் ஆகிவிட்டன. சிவந்த ஜுவாலையில் இருந்து கிளப்பிய வெண் புகைப்படலம் நகரைச் சுற்றிலும் பரவிக் கிடந்தது. அதன் பிழம்பை அச்சத்துடன் எல்லோரும் நோக்கிக் கொண்டிருந்தனர்; நகரைத்தைச் சுற்றிலும் தீ ஜுவாலை வலமிட்டுக் கொண்டிருந்ததென்றால், நகர மக்களின் மனதை சூனியம் ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருந்தது.

பகைவர்கள், கழுத்தை பாசக்கயிறு இறுக்குவதுபோல தங்களுடைய கொடும் பிடியை நகரைச் சுற்றிலும் செயல்படுத்திக் கொண்டிருந்தார்கள். நடுவில் அக்கினி தகித்துக் கொண்டிருக்க, அதனைச் சுற்றிலும் அந்த அமைதியான இரவு நேரத்தில் மனித நிழல்கள் தாண்டவமாடிக் கொண்டிருந்தன. தடித்துக் கொழுத்த குதிரைகளின் காற்குளம் பொலிகளும் அமைதியைக் கிழித்து ஆர்ப்பரித்துக் கொண்டுதானிருந்தது. ஆயுதங்களின் உரசல் ஒலிகளும் வெற்றியைக் குறிக்கும் ஆனந்த வெளிப்பாடுகளும், பாடல்களும் எங்கோ தூரத்திலிருந்து காற்றில் மிதந்து வந்து கொண்டிருந்தன. பகைவர்களின் பாட்டு - பகைவர்களின் வெற்றிக் களிப்பு - இந்த அகன்று பரந்து கிடக்கும் உலகத்தில் இதை விட மற்றுமோர் கொடூரமான சப்தம் வேறு என்ன இருக்கிறது !

நகர மக்கள் தண்ணீர் படுக்கும் ஆறுகளில் - ஒரே சவக் குவியல்கள் ! எல்லாம் பகைவர்களின் வேலைதான் ! அவர்கள் செய்த அட்டூழியங்கள் இது ஒன்றோடு நின்று விடவில்லை. நகரத்தைச் சுற்றியிருந்த சுவரோரங்களில் அடர்ந்து கிடந்த முந்திரிச் செடிகளை வேரோடு அழித்து ஒழித்துவிட்டார்கள். சாகுபடி செய்த நிலங்களைக் காலால் மிதித்து நாசமாக்கினார்கள். பழச்செடிகளை வெட்டி எறிந்தார்கள். பகைவர்களின் அட்டூழியத்தால் நகரமே கதி கலங்கிப் போயிருந்தது. சிறிதும் இடைவெளியின்றி பகைவர்தம் துப்பாக்கியும், பீரங்கியும் தங்கள் வேலையைச் செவ்வனே செய்து கொண்டிருந்தன. போர் செய்த அயர்வுடன், வயிற்றுக்கே உணவு உண்ண முடிந்த போர்வீரர்கள் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு, நகரத்தின் மிகக் குறுகலான தெருக்களில் நடந்து திரிந்தார்கள். திறந்துவிடப்பட்ட சாளரங்கள் வழியே போர்க்காயம் பட்ட வீரர்களின் வேதனைக் குரல்களும், லேசான முனகல்களும், பெண்களின் வழிபாட்டுக் குரல்களும், குழந்தைகளின் அழுகையொலிகளும் காற்றோடு காற்றாய்க் கலந்து ஒலித்துக் கொண்டிருந்தன. ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ள வேண்டும் என்றால்கூட மெதுவாக, மிகமிக மெதுவாக - ரகசியம் பேசுகின்ற பாணியில்தான் பேசிக்கொண்டனர். பேச எண்ணியதைக்கூட அவர்களால் முழுமையாகப் பேசிக்கொள்ள முடியவில்லை. பாதிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, காதைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்ட, பகைவர்கள் யாராவது வருகிறார்களா என்று கண்களால் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். பகலைவிட இரவுகள்தான் மிகவும் கொடூரமாயிருந்தது. மயான அமைதியில் வயிற்றைக் கலக்கும் ஓலங்களும், முனகல்களும், காற்றைக் கிழித்துக் கொண்டு எதிரொலிக்கும். தூரத்தில் உயர்ந்து நிற்கும் குன்று பகைவர்தம் பாசறைகளை மறைத்துக் கொண்டிருக்கும். இரவோடு இரவாய்க் கரைந்து ஏதோ கருமையான ஒரு பிராணியாய் உயர்ந்து நிற்கும் மலையின் கீழிருந்து மெல்ல மெல்ல ஏறிக் கொண்டிருக்கும் நிலவு. தங்களுடைய உயிர் மீதே நம்பிக்கை இழந்த நகர மக்கள் பசியாலும், தாகத்தாலும் ஏற்பட்ட உடல் அசதியில் தூரத்தில் தெரியும் பகைவர்தம் பாசறைகளையே வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். உலகில் உள்ள ஒவ்வொன்றுமே அவர்களிடம் மரணம் குறித்து ஓலமிடுவது போலிருந்தது. வானில் ஒரு நட்சத்திரமாவது தன்னுடைய முகத்தை முழுமையாகக் காட்டிக் கொண்டிருக்க வேண்டுமே ! எல்லாமே ஏதோ பயந்து போனதுபோல் மேகப் போர்வையின் பின் தங்களை மறைத்துக் கொண்டிருந்தன. விளக்கு ஏற்றுவதற்குக் கூட அவர்கள் ஒவ்வொருவரும் நடுங்கினர். நகரின் தெருக்கள் இருளால் மூடப்பட்டுக் கிடந்தன. அவ்விருளோடு இருளாய்க் கலந்து உடல் முழுவதையும் கருப்பு வண்ண துணியொன்றினால் புதைத்துக் கொண்ட ஒரு பெண், எவ்வித ஓசையுமின்றி வீதியில் மெல்ல நடந்து போய்க் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த ஒவ்வொருவரும் என்னவோ முனகிக் கொண்டனர். ‘இது அவள்தானே ?’ ‘ஆமாம். அவளேதான் !’ தங்களுடைய முதுகுகளை வளைத்துக் கொண்டு, தலையைத் தொங்கப் போட்டவாறு, ஒவ்வொருவரும் அமைதியே வடிவாக நடந்து போய்க் கொண்டிருந்தனர். காவல் காக்கும் மனிதர்கள் மெல்ல அவர்களிடம் கேட்டனர். ‘மோனா மரியானா எங்கே போய்க் கொண்டிருக்கிறாள் -? இந்த இரவு நேரத்தில் அவளுக்கென்ன வேலை ? யாராவது பகைவன் கையில் சிக்கி உயிரை இழக்கப் போகிறாள். அவளுடைய முகத்தைக் கண்டதும், அவளுடைய முகத்துக்கு நேர் எதிரே பேச தைரியம் இல்லாததாலோ, அவள் மீது தாங்கள் கொண்டிருக்கும் மரியாதையினாலோ, யாரும் வாய் திறக்கவேயில்லை. அவளைக் கண்டதும், ஆயுதமேந்திய வீரர்கள்கூட ஒன்றுமே பேசாமல் கடந்து போய்க் கொண்டிருந்தனர். அந்த இரவு நேரத்தில் மயான அமைதியை சிறிதும் லட்சியம் செய்யாத பாணையில் அந்த மூதாட்டி நடந்து போய்க் கொண்டிருந்தாள். நகரம் முழுவதும் இரவின் கருமையில் கரைந்து போய்க் கிடந்தது. அவல ஓலங்கள் நகரத்தின் நான்கு திசைகளிலிருந்து மெல்ல எழுந்து, காற்றில் கலந்து, கரைந்து எதிர்ப்புறம் மோதி, மிகப் பெரியதாக வியாபித்துக் கொண்டிருந்தது. அக்கினி ஜுவாலை, அபயக் குரல்கள், பிரார்த்தனை மொழிகள், தோல்வியால் ஏற்பட்ட ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ளும் திராணியினின்றி போர் வீரர்கள் எழுப்பிய ஓலங்கள் - ஒவ்வொன்றுமே தனித்தனியாய், மிகத் துல்லியமாய் விழுந்து கொண்டிருந்தன. அந்த மூதாட்டியும் இதே நகரத்தைச் சேர்ந்தவள்தான். அவளும் ஒரு தாய்தான். தன்னைக் குறித்தும், தன்னுடைய வயிற்றில் ஜனித்த மகனைக் குறித்தும், ஏன் இந்த நாட்டைக் குறித்தும்கூட அவள் ஒவ்வொரு நிமிடமும் சிந்தித்துக் கொண்டுதானிருக்கிறாள். நகரத்தை வளைத்து முற்றுகையிட்டிருக்கும் எதிரிகள் பக்கம் சேர்ந்து கொண்டு தன்னுடைய நாட்டையே தன் தாய் அவதரித்த நாட்டையே எதிர்த்துப் போர் செய்து கொண்டிருப்பவன் வேறு யாருமல்ல - அவளுடைய மகன்தான். கொஞ்சமும் இதயத்தில் அன்னை நாட்டின் மீது பற்றில்லாத அந்த மகன் அவளுடைய வயிற்றில் பிறந்தவன்தான். அவனைப் பற்றித் தன்னுடைய இதயத்தின் அடித்தளத்தில் அவ்வன்னை எப்படி எப்படி எல்லாம் கனவுக் கோட்டைகளைக் கட்டி வாழ்ந்திருந்தாள் ! நாட்டின் மானம் காக்கப் பொங்கி எழக்கூடிய ஒரு மிகச் சிறந்த தளபதியாக அவன் வருவான் என்று எத்தனை தூரம் கனவு கண்டிருந்தாள் ! தான் பிறந்து வளர்ந்த இந்த நகரத்தின் மானம் காக்கும் பெரும் வீரனாக அவன் வருவான் என்று அவள் எந்த அளவிற்கு முன்னோர்களால் உடைத்து உருவாக்கப்பட்ட கற்களால் ஆனவைதாம். அந்த அளவிற்கு நகரத்தின் மூலை முடுக்கெல்லாம் தன்னுடைய முன்னோர்களின் உழைப்பினால், தன் குடும்பமே வியாபித்திருப்பதாகத்தான் அவள் உணர்ந்தாள்.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel