
‘இன்று இரவே நாங்கள் இந்த நகரத்தை தாக்கப்போகிறோம். மேலும் இரவுதான் இதற்குப் பொருத்தமான நேரம். பகல் நேரங்களில் தாக்குவது என்றால், அதில் சகித்துக்கொள்ள வேண்டிய கஷ்டங்கள் நிறைய இருக்கின்றன. சூரியன் ஒளிபட்டு கையில் இருக்கிற போர்க்கருவிகள் பளபளக்கும். அது கண்களைச் கூசச் செய்து, போட்ட திட்டங்களையே பாழாக்கிவிடும். அதனால்தான் சொல்கிறேன். இரவுதான் இம்மாதிரியான லட்சியங்களுக்கு ஏற்றதென்று.’’ மகன் கூறுவதை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த அன்னை ‘வாடா, நான் பெற்ற மகனே! வா... வந்து அன்னையின் மார்பில் சிறிது நேரம் முகம் புதைத்துக்கொள். நீ சிறு குழந்தையாய் இருக்கும்போது எத்தனை அன்பும், பாசமும் உள்ளவனாக இருந்தாய்! உன்னை எந்த அளவிற்கு ஒவ்வொருவரும் நேசித்தனர். வா... வந்து... சிறிது நேரம்தான் அன்னை மேல் சாய்ந்து கொள்! வாடா... என்... அன்பு மகனே!, என்றாள். அன்னையின் மார்பில் மீது தலையைச் சாய்ந்தவாறே பேசினான் அவன். கண்களிரண்டும் மூடியிருந்தன. ‘நான் நானாக இந்த உலகில் வாழ வைத்ததே நீதானம்மா. அதற்கு உன்மீது எத்தனைப் பாசம் செலுத்தினாலும் தகும். உன் மீது எனக்கு எப்போதுமே பிரியம் உண்டு. ‘என் மீது மட்டும்தானா? மற்ற பெண்கள் மீது...? ‘ஏன்? அவர்கள் மீதும்தான். இருந்தாலும் இனிப்பான மற்ற பொருள்களின் மீது தோன்றுகிற மாதிரி, அவர்கள் மேலும் காலம் செல்லச்செல்ல வெறுப்பு உண்டாகிவிடத்தான் செய்கிறது...’ அப்படியானால் உனக்கு குழந்தைகள் வேண்டும் என்ற ஆசை கூட இல்லையென்று சொல்’ - அவள் குரல் சற்று தாழ்ந்து ஒலித்தது. ‘எதற்காக? குழந்தைகளைப் பெற்று என்ன பயன்? கண்டவன் கைப்பட்டுச் சாவதற்காக? என்னைப் போல ஒருவன் அவர்களைக் கொல்லுவான். அது என்னை வேதனைப்படுத்தும். நான் கிழவனாக இருக்கிறேனென்று வைத்துக்கொள். அவர்களை அந்தத் தருணத்தில் காப்பாற்றக்கூட என்னால் முடியாமல் போய்விடும்.’ ‘என்ன இருந்தாலும் நீ மின்னல் மாதிரி...’ கிழவி கூறினாள். ‘உண்மைதான். நான் மின்னலேதான்’ அதரங்களில் புன்சிரிப்பு தவழக் கூறினான் மைந்தன். அன்னையின் மார்பில் சிறு குழந்தையைப் போல் அவன் துவண்டு கிடந்தான். தன்னுடைய உடலை மூடியிருந்த கருப்பு வண்ணத் துணியால் அவனை மூடிய அன்னை. நீண்ட ஒரு கத்தியை அவனுடைய நெஞ்சுக்குள் இறக்கினாள். துடிதுடித்துக் கீழே விழுந்த அவனையே சிறிது நேரம் வைத்த கண் எடுக்காது பார்த்தாள் அவள். தான் பெற்ற மகனின் நெஞ்சுத் துடிப்பை ஒரு அன்னையைத் தவிர இந்த உலகில் யாரால் துல்லியமாகக் கணக்கிட முடியும்? என்ன செய்வதென்றே தெரியாமல் சிலையாய் திகைத்துப் போய் நின்ற போர்வீரர்களை நோக்கி மகனின் இறந்துபோன சடலத்தை வீசியெறிந்த அவள் நகரத்தை நோக்கித் திரும்பி நின்றவாறு கூறினாள். ‘இந்த மண்ணில் பிறந்தவள் என்ற முறையில் நான் பிறந்த மண்ணிற்கு உண்மையாக எதைச் செய்ய வேண்டுமோ, அதைத்தான் இப்போது செய்திருக்கிறேன்`. ஒரு தாய் என்ற நிலையில், நான் என்னுடைய மகனுடனே நிற்கிறேன். எனக்கு இனியொரு மகன் பிறக்கப்போவதில்லை. என்னுடைய வாழ்க்கை யாருக்கும் பயன் விளைவிக்கப் போகிறதுமில்லை.’’ மகனின் நெஞ்சைப் பதம் பார்த்த அதே கத்தியைத் தன்னுடைய நெஞ்சினுள் செருகினாள் மரியானா. கத்தியின் பெரும்பகுதி நெஞ்சிற்குள் சிக்கிக் கிடட்தது. இரண்டு உயிர்களின் குருதியையும் சுவை பார்த்த அந்தக் கத்தி சரியான இடத்தில்தான் சிக்கி விட்டிருந்தது. வேதனையின் உறைவிடமான அந்த அன்பு அன்னையின் நெஞ்சின் எந்தப் பகுதி இப்போது துடித்துக் கொண்டிருக்கும்?
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook