ஒரு தேச துரோகியின் தாய் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by sura
- Hits: 6707
‘நீ யாரம்மா ? உனக்கு என்ன வேண்டும் ?’ - எதிரிப் படை வீரர்களில் ஒருவன் அருகே வந்து விட்டான். ‘உங்கள் தலைவன் வேறு யாருமல்ல. என்னுடைய மகன்தான்’ - இதை அவள் கூறியதுதான் தாமதம். போர் வீரர்கள் அவளைச் சுற்றிக் கூடிவிட்டனர். தங்களுடைய தலைவனின் வீரம் பற்றியும், குணம் பற்றியும் வர்ணிக்கத் தொடங்கிவிட்டனர். தன்னுடைய மகனைப் பற்றிக் கேட்கக் கேட்க அவளுடைய உள்ளத்தில் மெல்ல மெல்ல உறுதியான உத்வேகம் எழுந்து பொங்கி நுரை கக்கிக் கொண்டிருந்தது. தலையை உயர்த்தி அவர்களைப் பார்த்தாள் மரியானா. தன் மகன் பலசாலி... வீரன் என்று அவர்கள் கூறியதற்காக ஒன்றும், அவள் புதிதாகப் பெருமைப்பட்டு விடவில்லை. தன் மகனைப் பறி அந்த அன்னைக்கு தெரியாதா என்ன ? தன் வயிற்றில் பிறந்த அந்த மகன் முன் நின்றாள் அம்மூதாட்டி. பட்டும், வெல்வெட்டும் தரித்து, இரத்தினங்களால் ஆன கருவிகளைக் கையில் ஏந்தி, பெருமிதத்துடன் தலைநிமிர்த்தி தன் முன் நிற்கும் தன் மகனையே நோக்கினாள் அந்த அன்புத்தாய். அவனை இதே கோலத்தில் எத்தனை முறை கனவில் தரிசித்திருக்கிறாள் அவள் ! அவள் கனவில் கண்ட அந்த கோலத்தை இன்று இதோ கண் முன்னால் பார்க்கிறாள். தன் அன்னையின் கரத்தை எடுத்து முத்தமிட்டான் மைந்தன். ‘அம்மா... இன்று நீ என் முன் வந்து நிற்கிறாய். உலகத்தையே கையில் பிடித்துவிட்ட மாதிரி உணர்கிறேன். நான் உன்னுடைய இந்த வரவு என்னுள் வீரத்தைக் கிளர்ந்து எழச் செய்கிறது. வேண்டுமானால் பார். நாளை இந்த நகரத்தையே என்னுடைய காலடிகளின் கீழ் கொண்டு வரத்தான் போகிறேன்.’’ ‘என்ன இருந்தாலும் நீ பிறந்து வளர்ந்த ஊரடா இது’ என்று மகனுக்கு ஞாபகப்படுத்தினாள் மரியானா. தன்னைக் குறித்து என்னவெல்லாமோ மிகவும் உயர்வாகக் கருதிக் கொண்ட அந்த இளைஞன் பேசிக்கொண்டே போனான். ‘இந்த மண்ணில் நான் பிறந்ததே எதற்கென்று நினைக்கிறாய் ? இந்த மண்ணை என் காலடியில் கொண்டு வருவதற்கென்றே பிறந்தவன் நான். என் பெயரைக் கேட்டாலே போதும். அக்கணமே இப்பிரபஞ்சம் ஒரு குலுங்கு குலுங்கிவிடும். எல்லாம் உன் ஒருத்திக்காகத்தான் அம்மா, நான் இந்த நகரத்திற்குக் கேடு விளைவிக்காதிருப்பதே. என்னை முள்ளாகக் குத்திக் கொண்டிருக்கும் நகரமிது. என்னுடைய உயர்வு நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் பாதையில் தடைக்கல்லாய் நின்று கொண்டிருப்பதும்கூட இந்த மண்தான். நாளைக்கு நடக்கப் போகின்ற எல்லாவற்றையும் உனது கண்களால் நீ பார்க்கத்தானே போகிறாய் ?’’ ‘இந்த நகரின் ஒவ்வொரு கல்லுக்கு உன்னைப் போன்ற உயிர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் ஆற்றலுண்டு என்பதை நீ அறிவாயா, மகனே ?’’ மரியானா வினவினாள். ‘மனிதர்களே பேசாமல் இருக்கும்போது, கல் எங்கிருந்து பேசும்? உயர்ந்து நிற்கும் மாமலைகளும் என்னைத் துதிபாட வேண்டும். அதுதான் என் விருப்பமும்.’ ‘அப்படியானால் மனிதர்கள்...’ ‘யார்? மனிதர்களா? அவர்களை மட்டும் நான் மறந்து விடுவேனா என்ன? அவர்களும் எனக்கு அவசியம்தான். என்னைப் போன்ற வீரர்களின் அமரத்துமே இந்த மனிதர்களின் கையில்தானே இருக்கிறது?’ ‘மரணத்தைப் பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாமல், அதையும் எதிர்த்து நின்று உயிர் காக்கிறானே, அவன்தான் உண்மையான வீரன். மரணத்தையே இங்கு உண்டாக்கிக் கொண்டிருப்பவன் உண்மையில்...’ மரியானா சொல்ல வந்ததைச் சரியாக முடிப்பதற்குள் இடைமறித்து அவன் பேசினான். ‘நீ சொல்வது போல் கிடையாது. நகரத்தை உண்டாக்கியவன் எத்தனை மகிமையுள்ளவனோ, அந்த அளவிற்கு மகிமையுள்ளவன் தான் அதை அழிப்பவனும். ரோமாபுரியை உண்டாக்கியது யாரென்று நம்மால் இன்றுகூட உறுதியாகக் கூறமுடியாது. ஈனியஸ்- ரோமுலஸ்- இவர்களில் யார் என்று உன்னால் உறுதியாகக் கூறமுடியுமா? அவர்களை இன்று யாராவது நினைத்துத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? ஆனால், இந்த நகரத்தை அழித்த அலாரிக்கிளையும், மற்ற வீரர்களையும் இன்று யாராவது மறந்து விட்டிருக்கிறார்களா? ‘அப்படிச் சொல்லாதேடா மகனே, எத்தனைப் பேர் அழிக்க வந்தாலும், அம் முயற்சிகளையெல்லாம் மீறி நித்திய ஜீவனாய் நின்று கொண்டிருக்கிறது பார்!... அந்த நகரத்தை நாம் தினமும் தினைத்துக் கொண்டுதானடா இருக்கிறோம்!’ சற்று சப்தமாகவே கூறினாள் கிழவி. அவர்களுடைய இந்த பேச்சுதான் எத்தனை மணி நேரம் தொடர்ந்து கொண்டிருந்தது! மகன் பேசுவதை அவ்வன்னையால் தடை செய்ய முடியவில்லை. அவன் பேசப்பேச அவளுடைய தலை தரையை நோக்கி வளைந்து கொண்டே இருந்தது. அவனைப் பெற்றவள் அந்த அன்னை; வளர்த்து இந்த மண்ணில் இத்தனைப் பெரிய மனிதனாக அவனை உலாவவிட்டதும் அவள் தான். அவள் படைத்தவள்- உருவாக்கினவள்-வாழ்வு தந்தவள். அந்த அன்னையிடம் போய் மரணத்தைப் பற்றியும்- அழிக்கப் போவது பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறான் மைந்தன். தாயின் எண்ணங்களையே எதிர்த்துப் பேசும் அளவிற்கு அவன் துணிந்திருக்கிறான். தான் என்ன பேசுகிறோம் என்பதைக்கூட அறியாமல் பேசுகிறான் அவன். வாழ்வு, உயிர்- எல்லாவற்றுக்கும் எதிராகவே தன்னுடைய பேச்சின் ஒவ்வொரு பகுதியும் இருக்கிறது என்பதைக்கூட அவன் அறிந்திருக்கவில்லை. அவள் மரணத்திற்கெதிரானவள். மனித உயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் கைகள் யாருடைய கைகளாக இருந்தாலும் சரி அவற்றை வெறுத்து ஒதுக்கக்கூடிய குணம் அவளுடையது. ஆனால், அப்படிப்பட்ட தாயின் வயிற்றில் பிறந்த மகனோ? மென்மைக்கப்பால், வீரமும் மன உறுதியும் தன் அன்னைக்கு உண்டு என்பதை அம்மைந்தன் அறிந்திருக்கவில்லை. அதனால் தானோ என்னவோ, தான் நினைத்தபடியெல்லாம் அவன் அன்னையிடம் பேசிக்கொண்டிருந்தான். மரியானா குனிந்த தலையை நிமிர்த்தவில்லை. ஆடம்பரமான அலங்காரங்களுடன் அமைக்கப்பட்டிருந்த தன் மகனின் கூடார வாசலின் வழியே வெளியே பார்த்தாள் அவள். எந்த நகரத்தில் நரக வேதனையை தாங்கிக் கொண்டு அவனைப் பெற்றாளோ, அதே நகரத்தை இன்று அதே மகன் அழிக்கிறேன் என்று கூறிக் கொண்டிருக்கிறான்! நகரம் கல்லறைக்குள் உறங்கும் பிணமாய் ஆகிப்போனது. கல்லறைகளில் எரியும் மெழுகுவர்த்திகளாய் வானில் நட்சத்திரங்கள் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன. விளக்கேற்ற அஞ்சி, இருளோடு இருளாய் கரைந்து வீட்டினுள்ளே அடைந்து கிடக்கும் மனிதர்கள் வசிக்கும் வீடுகள்- இருந்த நெருக்கம்- வீடுகள் ஒவ்வொன்றையும் நோக்கினாள் மரியானா. நகரில் வாழும் மனிதர்கள் எல்லோருக்கும் தான்தான் அன்னை என்றுகூட அவள் அடிமனதுள் ஒரு சிறு உணர்வு- அதுவே வளர்ந்து பெரிதாகி வியாபித்தது. இருள் மூடிய மலை முகடுகளிலிருந்து வெண்மேகங்கள் தாழ்வாரத்தை நோக்கி இறங்கிக் கொண்டிருந்தன. சிறகுகளை அழகாக விரித்துப் பறக்கும் வெண்புறாக்களைப்போல் வானில் சஞ்சரித்த மேகம் ஒரு இடத்தில் உறைந்து நின்றது- நகரத்திற்கு நேர் மேலே.