சட்ட மீறல்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4681
சட்ட மீறல்
தகழி சிவசங்கரப்பிள்ளை
தமிழில்: சுரா
இந்த பெரிய நகரத்திற்கு நான் வந்து சேர்ந்தது என்னுடைய மானத்தை விற்று வாழ்வதற்காக அல்ல. எந்தவொரு இளம்பெண்ணும் தன்னுடைய மானத்தை அப்படி மனதளவில் விட்டெறிவாள் என்றும் தோன்றவில்லை. தன்னுடைய மானத்தை ஒரு கடைச் சரக்காக ஆக்கி ஒருத்தி கூட விற்பனைக்கு வைத்துக் கொண்டு நடந்து திரிய மாட்டாள். மானத்தை இழந்து விட்டு, ஒருத்தி தன்னுடைய சரீரத்தை விற்பனைக்கு வைத்துக் கொண்டு நடந்து திரிகிறாள் என்று வரலாம். ஒரு பெண்ணின் மானம் ஒரே ஒரு தடவைதான் இழக்கப்படும்.
இங்கே பிறகு... நான் எதற்காக வந்தேன் என்று நீங்கள் கேட்டால், அதற்கு என்னால் பதில் கூற முடியாது. என்னால் இங்கு வராமல் இருந்திருக்க முடியும். ஆனால், அதனால் என்னுடைய மானம் இழக்கப்படாமல் இருந்திருக்காது. உலகத்தின் எந்த பகுதியும் எனக்கு ஆபத்து நிறைந்ததாகவே இருந்தது. அதே நேரத்தில் – ஒரு விஷயத்தை நான் உண்மையிலேயே கூறட்டுமா? என்னை நம்ப வேண்டும். இந்த நகரத்திற்கு வந்து சேர்வது வரை, நான் ஒரு பெண்தான் என்ற நினைப்பு எனக்கு இருந்ததில்லை. ஆபத்தைப் பற்றிய உணர்வும் இல்லாமலிருந்தது. ஒரு நாள் வரை ஒரு ஆணின் பார்வையிலும் படாமல் எப்படி இருந்தேன் என்பதும், அன்று எப்படி... எதனால்... ஆணின் பார்வையில் பட்டேன் என்பதும் எனக்கு தெரியாது. கிராமப் பகுதியிலிருந்த ஒரு பெரிய வீட்டின் வேலைக்காரியாக நான் இருந்தேன். மாமிசத்தைத் திருடிச் சாப்பிட்டு விட்டேன் என்ற காரணத்திற்காக எஜமானியம்மா என்னை துடைப்பத்தால் அடித்து வெளியேற்றி விட்டாள்.
இங்கு வராமல் இருந்திருக்கலாம். வந்திருக்க வேண்டியதில்லை. ஆனால், எனக்கு செல்வதற்கு எந்தவொரு இடமும் இல்லாமலிருந்தது. காற்று வீசி பறக்கச் செய்யும் காய்ந்த இலையைப் போல நான் இங்கு வந்து சேர்ந்தேன்.
இங்கு வந்து சேர்ந்ததும், எனக்கு புரிந்து விட்டது – நான் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென்று... காப்பாற்றிக் கொள்வதற்கு சில விஷயங்கள் என்னிடம் இருக்கின்றன என்று. நான்கு பக்கங்களிலும் நான் பயத்துடன் பார்த்தேன். அயோக்கியர்கள்! ஒன்றல்ல... பத்தல்ல... நூறு கண்கள் என் மீது பதிந்தன. நான் எங்கு சென்றாலும், எனக்குப் பின்னால் ஆட்கள் இருப்பார்கள். சீட்டி அடிக்கும் சத்தங்கள்! சில அபிப்ராயங்கள்! நான் அபய இடம் தேடி நகரம் முழுக்க ஓடித் திரிந்தேன். இங்கு எவ்வளவு உயர்ந்த வீடுகள் இருக்கின்றன! சமுதாயத்தின், ஆன்மீகத்தின் காப்பாளர்கள் வசிக்கும் இடங்கள்! நான் பல வாசல் கதவுகளையும் தட்டினேன். எதுவும் திறக்கப்படவில்லை.
‘தெரு முழுவதும் அலைந்து திரியும் பெண்’ என்று என்னைப் பற்றி தீர்மானம் எழுதி விட்டார்கள். நான் என்னையே விற்று விட்டேன் என்பதைப் போல... நான் அழுது விட்டேன்.
என் வாழ்க்கையிலேயே மிகவும் முக்கியமான ஒரு நாளது. என்னுடைய வாழ்க்கைக்கு வடிவம் உண்டான நாள்! நான் வந்து சேர்ந்த தகவல் நகரம் முழுக்க விளம்பரமாகி விட்டதைப் போல தோன்றியது. என்னை என்னுடைய சம்மதம் இல்லாமல், நான் விருப்பப்படாத பாதையின் வழியாக வலிய இழுத்துக் கொண்டு போவார்கள். அது மட்டுமல்ல – என்னுடைய சம்மதத்தை எனக்கே தெரியாமல் தங்களின் கையில் எடுத்துக் கொள்வார்கள் என்ற சூழ்நிலை வரும். நான் சம்மதித்து விடுவேன்.
ஓடி... ஓடி எங்கும் தப்பிக்க முடியாமல் நான் சாயங்கால வேளையில் படகுத் துறையை அடைந்தேன். இரவிலும் பகலிலும் பிரகாசமும் வெளிச்சமும் ஆட்களின் கூட்டமும் உள்ள இடமது. ஒரு பிரகாசமான விளக்கிற்குக் கீழே நான் போய் நின்றேன். சற்று தூரத்தில் நிழலின் கீழும், வட்டமிட்டுக் கொண்டும் எனக்கு முன்னால் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருக்கும் அந்த ஓநாய்கள் இருந்தன. ஒரு விஷயம் ஆச்சரியப்படும் வகையில் இருந்தது. யாரும் என்னுடன் நேரடியாக உரையாடவில்லை. அது ஒரு குறைச்சல் உள்ள காரியமாக தோன்றியிருக்கலாம்.
கொல்லம், கொச்சி முதலான பல இடங்களுக்கும் ஐந்தைந்து நிமிட இடைவெளியில் படகுகள் சென்று கொண்டிருந்தன. பல இடங்களிலிருந்தும் படகுகள் வந்து கொண்டுமிருந்தன. வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருந்தவர்கள் என்னை கவனிக்க ஆரம்பித்தார்கள். இடத்தை விட்டுச் செல்லும் ஏதாவது படகில் ஏறி தப்பிக்க.... அதுவும் சாத்தியமற்றதாக இருந்தது. கையில் பணமில்லை. அந்த செல்லும் காரியமும் தப்பித்தலாக இருக்காது.
நான் இப்போது கூறுவது உங்களுக்கு புரியாது. புரிந்தாலும், நீங்கள் நம்பப் போவதில்லை. இவையெல்லாம் பொய்கள் என்றுதான் தோன்றும். ஏனென்றால், உங்களுடைய கண்களுக்கு முன்னால் நடப்பவற்றை நீங்கள் பார்ப்பதில்லை. உண்மைகளிலிருந்து மிகவும் விலகித்தான் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இங்கு கூறுபவை அனைத்தும் கெட்டுப் போன ஒருத்தி தன்னுடைய தவறுகளை வெள்ளையடிப்பதற்காகச் செய்யும் முயற்சி என்று நீங்கள் நினைக்கிறீர்கள். உங்களிடம் மன்னிப்பு கேட்டு கெஞ்ச வேண்டிய தேவை எனக்கில்லை. உங்களுக்கு என்மீது என்ன தோன்றினாலும், எனக்கு அதனால் ஒன்றுமில்லை. மானம் கெட்டுப் போன ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் இப்படியொரு நாள் இருக்கும். எங்கும் போக முடியாமல், துணைக்கு யாருமில்லாமல் வாயைப் பிளந்து கொண்டு நின்றிருக்கும் ஆபத்திற்கு முன்னால் நின்று நடுங்கிக் கொண்டிருக்கும் ஒரு நாள்! மானத்தின் விலையை அன்று அவள் தெரிந்து கொள்வாள். உங்களுக்கு மானத்தைப் பற்றி சொற்பொழிவு ஆற்றுவதற்குத்தான் முடியும். மானம் என்றால் என்னவென்பதை அதை இழக்கப் போகும் அந்த அதிர்ஷ்டமற்ற பெண் அனுபவித்துத் தெரிந்து கொள்ளவும் செய்கிறாள்.
அடுத்த நிமிடம் எனக்கு என்ன நடக்கப் போகிறது என்பது தெரியாமல் நான் பயந்தேன். எனக்கு தப்பிக்க வழியே இல்லை என்பதை உறுதியாக தீர்மானித்துக் கொண்டேன். ஒருவேளை சில மணித் துளிகளை நகர்த்திக் கொண்டு போவதற்கு இயலலாம்.
அப்படி தூணைப் போல நின்று கொண்டிருப்பது சரியல்ல என்று தோன்றியது. நான் சுவரில் சாய்ந்து அமர்ந்தேன். அந்த அமர்ந்த நிலையில் சரீ களைப்பின் காரணமாக நான் சற்று கண்களை மூடி விட்டேன். எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தேன் என்று எனக்கு தெரியாது. அதிர்ச்சியடைந்து கண் விழித்து, நான்கு பக்கங்களிலும் பார்த்தேன். நான் அமர்ந்திருந்த இடத்திலேயேதான் அமர்ந்திருந்தேன்.
அவ்வாறு கண்களை மூடி தூங்கியது சரியல்ல என்று எனக்கு தோன்றியது. அது என்னுடைய கவனக் குறைவால் உண்டானதல்ல. அதைப் போன்ற ஒரு சூழ்நிலையில் நான் தூங்கலாமா? அப்போதும் சில இளைஞர்கள் என்னை கவனித்துக் கொண்டிருந்தனர்.