சட்ட மீறல் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4685
கஷ்டம்! பலம் கொண்ட ஒரு ஆணின் பலம் உள்ள கரங்களின் வளையத்திற்குள் சிக்கியிருந்தால்...! அப்படி நடந்திருந்தால், எந்த அளவிற்கு நிம்மதி கிடைத்திருக்கும்! அது யாராக இருந்தாலும் சரிதான். ஒரு ஆண் ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த ஆணின் சொத்தாக, அவனுடைய அடிமையாகவே என்றென்றும் வாழ்வதற்கு தயார். அதற்கு அந்த ஆணுக்கு விருப்பமில்லையென்றால், ஆபத்து இல்லாமற் போன இடத்திலேயே என்னை விட்டெறியட்டும். இந்த இரவுப் பொழுதில் ஒரு காப்பாளன் எனக்கு இருந்தால் போதும்.
ஆனால், என் மீது காலையிலிருந்து பதிந்திருந்த எந்தவொரு பார்வையிலும், அந்த இரக்கத்தை நான் பார்க்கவில்லை. எல்லா ஆணுக்கும் நான் வேண்டும். தனக்கு மட்டுமே வேண்டுமென்று தோன்றுவதில்லை. தேவை முடிந்து விட்டால், வீசி எறிந்து விடுவான். வேறு யார் வேண்டுமென்றாலும், எடுத்துக் கொள்ளட்டும், எப்படி வேண்டுமென்றாலும் ஆகட்டும்... அதுதான் நினைப்பு.
அந்த கண்களில் ஒன்றில் கூட ஆழமான சுயநலத்தின் கடுமையைப் பார்த்தால் போதும். எனக்குத்தான் வேண்டுமென்ற, இன்னொரு ஆளுக்கு தர மாட்டேன் என்ற ஒரு ஆவேசம்! அப்படியொரு இடத்தைப் பார்த்தால், நான் அங்கு போய் இருந்து கொள்வேன். என்னை பிய்த்து கடித்துக் கொள்ளட்டும்... பறித்து கிழித்துக் கொள்ளட்டும்... நான் தாங்கிக் கொள்வேன். அது இருக்கட்டும்... என்னை தனியாக ஒருவன் கூட பின்பற்றி வருவதில்லை. செல்லும் வழியில் நண்பர்களையும் அழைப்பார்கள். அப்படியே தனியாக வந்திருந்தால், அது தனிப்பட்ட முறையில் உரிமை கேட்கலாம் என்பதற்காக அல்ல – தனியாக வந்தால்தான் நடக்கும் என்பதால்தான்.
நான் மீண்டும் அமர்ந்து சற்று கண் அயர்ந்து விட்டேன். திரும்பவும் திடுக்கிட்டு கண் விழித்தேன். என்னுடைய மானத்தைப் பற்றி எனக்கு உணர்வு இல்லாமற் போய் விட்டதா?
மானம்! என் ஆன்மாவையே நடுங்கச் செய்யும் ஒரு துணிச்சல் எனக்கு உண்டானது. ஏதோ ஒரு மிகப் பெரிய சக்தி என்னை ஆக்கிரமித்தது. நான் வேறு ஆளாக மாறி, எழுந்தேன். என்னை ஆக்கிரமித்தது எது என்று எனக்கு தெரியவில்லை.
என் தலைக்குள் ஒரு வெளிச்சம் விழுந்தது. நான் யார்? வாழ்க்கையில் முதல் தடவையாக என்னைப் பற்றி அந்த கேள்வியை என்னிடமே கேட்டேன். உறவு உள்ளதாக – ஆமாம்... அப்படித்தான் – ஒரு உயிர் கூட வாழ்க்கையில் இல்லாதவள்! அது ஒரு விருப்பமுமில்லை. என்னுடைய அன்பைச் செலுத்துவதற்கு இடமில்லை. என் மீது அன்பு செலுத்தும் இடமுமில்லை. என் அன்பைச் செலுத்த – எனக்கு அன்பு என்ற ஒன்று இருக்கிறதா? அன்பு செலுத்த நான் படிக்கவில்லை. நான் ஒரு பெண். ஒரு ஆண் என்னை ஏற்றுக் கொள்வானா? அதற்கான சாத்தியம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது!
இன்று வரை என்னுடைய மானத்தை நான் காப்பாற்றியிருக்கிறேன் என்றாலும், நான் அரங்கத்தை விட்டு வெளியே வந்து விட்ட பெண் என்று தீர்மானம் எழுதி விட்டார்கள். மானத்தைப் பற்றிக் கூட... யாருக்கு? தெருவில் சுற்றிக் கொண்டிருக்கும் பெண்ணுக்கா? அவளுக்கு எதற்கு மானம்? எதற்காக, யாருக்காக அவள் மானத்தைப் பத்திரப்படுத்தி காப்பாற்ற வேண்டும்? மானமாம் மானம்! குடும்பத்தை உண்டாக்கி, பிள்ளை, குட்டிகளுடன் சேர்ந்து அப்படியே சந்தோஷமாக வாழும்போது, உங்களுடைய சமூகச் சூழலின் உறுதிக்காகவும் தெளிவான நிலைக்காகவும் சுய நலத்திற்காகவும் நீங்கள் உண்டாக்கி வைத்திருக்கும் ஏற்பாடுதானே மானம்? மானத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று நீங்கள் விரும்புவது எனக்காக அல்ல. உங்களுக்காகத்தான். நான் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியது உங்களுடைய விருப்பம். என் மானம் கெட்டால், நீங்களோ, உங்களுடைய பிள்ளைகளோ எனக்குப் பின்னால் வருவார்கள். உங்களுடைய மனைவியின் மீது அன்பு செலுத்தாத நிலை உண்டாகும். அப்படி நடந்து... நடந்து... நான் உங்களுடைய சமுதாயத்திற்கு ஒரு தொல்லையாக ஆவேன். எனக்கோ? மானத்தைக் காப்பாற்றினாலும், இல்லையென்றாலும்... இந்த தெருக்களில் சுற்றித் திரியும் பெண் சுற்றிச் சுற்றி ஏதாவது பாதையில் விழுந்து அழிவாள்... ஒரு சமுதாய உயிரினம் என்ற நிலையில், நான் ஒரு சட்டத்தை மீறினேன் என்று நீங்கள் வேண்டுமானால் கூறலாம். கூறிக் கொள்ளுங்கள்! சமூக உயிரினம் என்ற நிலையில், எனக்கும் சில குறைந்தபட்ச உரிமைகள் இல்லையா? இல்லாவிட்டால்... பெரிய பெரிய கடமைகள் மட்டும்தான் இருக்கின்றனவா?
எனினும், எனக்குள் ஏதோ பலமான போராட்டம் நடந்து கொண்டிருந்தது. மானத்தைப் பற்றிய உணர்வு எப்படி, என்னிடம் உண்டானது என்பதை நான் சிந்தித்தேன். அந்த உணர்வு எனக்குள்ளேயே இருப்பதுதான். உண்டானது அல்ல. எனக்குள் ஒரு போட்டியே நடைபெற்றுக் கொண்டிருந்தது. உள்ளே நுழைந்த ஒரு பெரிய சக்திக்கும், எனக்குள்ளேயே இருக்கும் சக்திக்குமிடையே!
மீண்டும் நான் பயந்தேன்... சோர்வடைந்தேன்... என்னைக் காப்பாற்றுவதற்கு யாருமில்லையா? நான் என்ன செய்ய வேண்டும்?
ஒரு போலீஸ்காரன் எனக்கு அருகில் வந்தான். காலிலிருந்து தலை வரை பார்வையால் பயணித்து விட்டு, அவன் கேட்டான்:
‘நீ யாருடீ? எதற்காக இங்கே நிற்கிறாய்?’
நான் யார்? என்னால் பதில் கூற முடியவில்லை. இந்த பிறவி சாத்தியமும் அல்ல. நான் யார்? யார்?
போலீஸ்காரனின் முகம் வெறுப்பு காரணமாக சுருங்கியது. அவன் கூறினான்:
‘பிணங்கள்! மற்றவர்களைத் தொல்லைப்படுத்துறதுக்கு என்றே ஒவ்வொண்ணும் வந்து சேருது. நகரம் முழுவதையும் நாசம் செய்றதுக்கு.... இவையெல்லாம் எங்கேதான் பிறந்தனவோ?’
அருகில் நின்று கொண்டிருந்த ஒரு ஆளிடம் அவன் தொடர்ந்து சொன்னான்:
‘நாளைக்கே கேள்விப்படலாம் – நகரத்தில் இதன் மூலம் பத்து இடங்களில் தகராறு உண்டானது என்று. கொலையும் நடக்கலாம். நல்ல குடும்பத்திலுள்ள ஆளும் அதில் இருப்பான். இது தீராத நோய்களின் உறைவிடம். நாடு முழுக்க பரப்புவதற்கு வெளியேறியிருக்கு...!’
அப்போது எனக்கு புரிந்தது – ஒருத்தியின் மானம் போனால், அது சமுதாயத்தை எப்படி பாதிக்குமென்று.
அவன் என்னிடம் நடக்குமாறு கூறினான். நான் நடந்தேன். அவன் எனக்குப் பின்னால்... கையிலிருந்த பிரம்பால் அவன் என்னுடைய பின் பகுதியில் ஒரு அடி அடித்தான். எதற்கோ, ஏனோ! நான் சுருங்கிப் போய் விட்டேன்.
அன்று நான் போலீஸ் ஸ்டேஷனில் படுத்தேன். அடடா! என்ன ஒரு நிம்மதி! நான் தூங்கினேன்.