
பேருந்தை எதிர் பார்த்து நின்றிருந்தாள், கவர்ணா.
பொட்டு இல்லாத அவள் நெற்றியின் நடுவே சிகப்பு நிற ஸ்டிக்கர் பொட்டை மானசீகமாக ஒட்டிப் பார்த்தேன்.
என்னைப் பார்த்த கவர்ணா, மென்மையாக புன்னகை ஒன்றை உதிர்த்தாள்.
“என்னங்க கவர்ணா, பஸ்சுக்கா?” அசடு வழிந்தேன்.
அமைதியாகத் தலையை அசைத்தாள், அவள்.
எப்பொழுதும் கவர்ணா இப்படித்தான். அதிகம் பேசமாட்டாள். என் எதிர் வீட்டில்தான் இரண்டு ஆண்டாக குடி இருக்கிறாள். என்றாலும் கூட பார்க்கும்போது இந்தப் புன்னகையோடு சரி.
அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவளிடம் ஒன்றைக் கேட்க வேண்டும், கேட்க வேண்டும் என்று நினைப்பேன். வாயில் வார்த்தைகள் வராது. இப்படியே நாட்கள் ஓடிவிட்டன. இன்றும் அப்படித்தான். நான் கேட்பதற்குள் பேருந்து வந்துவிட்டது.
ஆனால், மறுநாள் அதற்கு வாய்ப்புக் கிடைத்தது. அரசியல் கலவரத்தால் பேருந்துகள் ஓடவில்லை. ஆட்டோவும் கிடையாது. நடை ராஜாதான்!
எனக்கு சற்று முன்பாக கவர்ணா போய்க் கொண்டிருந்தாள். வேகமாக அவளைத் தொடர்ந்தேன்.
என்னைப் பார்த்ததும் வழக்கம் போல அவளின் இதழ் பிரியாத புன்னகை.
நானும் அவளுடன் நடந்தேன். மனதிற்குள் ஒத்திகை பார்த்தபின் பேசினேன் - “கவர்ணா, உங்களிடம் ஒன்று கேட்கணும்.”
திரும்பிய அவள் புருவங்களை மட்டும் தூக்கியபடி ‘என்ன?’ என்ற பாவனையில் என்னைப் பார்த்தாள்.
‘தனிமையின் கொடுமையை அனுபவிக்கிறாளே; சம்மதிக்கமாட்டாளா என்ன’ நினைப்பு சற்று தைரியம் தர, நேரடியாகவே விஷயத்திற்கு வந்தேன்.
“கவர்ணா… உங்களை… நான் மறுமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்- நீங்கள் சம்மதித்தால்.”
கலகலவென்று வாய் விட்டு சிரித்தாள், அவள். வழக்கத்திற்கு மாறான அந்த சிரிப்பில் ஓராயிரம் பொருள்.
என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், அவளின் சிரிப்பு தந்த தைரியத்தில் பேச்சைத் தொடர்ந்தேன்.
“நீங்கள் ஏன் வெறும் வெற்றியோட வாழணும்? உங்கள் தனிமைக்கு இனிமை சேர்க்கும் துணையாக நான் இருப்பேன். இப்ப வழித்துணையா உங்கள் கூட வர்ற நான் வாழ்க்கைத் துணையா காலம் முழுதும் உங்களை காப்பாத்துவேன். என்ன சொல்றீங்க?”
முகம் தெரியாத அந்த இருட்டில் அவளது உணர்வுகளை அறிய முடியவில்லை. அவள் குரல் கேட்டது –
“பெண்களால் ஆணின் துணையோ, அவன் தரும் சுகமோ இல்லாமல் வாழ முடியாதுன்னு ஏன் நினைக்கிறீங்க? எனக்கு மணமான போது வயது 19. நான் பொட்டு இழந்தபொழுது என்னோட வயது 20. இந்த ஆறு ஆண்டு காலமா, உடல் மட்டுமே இயங்கும் எந்திரமாத்தான் வாழ்ந்துக்கிட்டிருக்கேன். அவர் என் மேல் உயிரா இருந்தார். என்னைப் பிரிந்து வெளியூர் போக வேண்டி வந்தால் கூட குழந்தை மாதிரி கண் கலங்குவார். என்னைத் தன் கண்ணுக்குள் பொத்திப் பொத்தி வைத்திருந்தார். நான் அவர் கூட வாழ்ந்தது என்னவோ ஓராண்டுதான். ஆனால், ஒரு வாழ்நாள் முழுதும் செலுத்த வேண்டிய அன்பை அந்த குறுகிய காலத்திலேயே செலுத்தி வாழ்ந்தார். அவர் கூட வாழ்ந்த அந்த நாட்களில் இனிமை இன்னமும் என் மனதில் பசுமையாக இருக்கு. என்றைக்கும் இருக்கும். அன்பு என்கிற விலங்கை மாட்டி, அவரோட நெஞ்சம் என்கிற சிறையில் என்னை வைச்சிருந்தார். அந்த விலக்கை உடைக்கவோ, அந்த சிறையில் இருந்து விடுதலையாகவோ நான் விரும்பவில்லை. அவர் வெளியூர் போயிருக்கிறதாத்தான் நினைச்சுகிட்டிருக்கேன். என்னை விட்டுட்டுப் போயிட்டார்னு நினைக்கல. ”
நீளமாகப் பேசி முடித்தாள், கவர்ணா.
கைதியே விடுதலையை விரும்பாதபொழுது… நாம் என்ன செய்ய முடியும்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook