கிளி
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6857
நர்சிங் சூப்பிரெண்டின் அறையை விட்டு வெளியே வந்த அந்த மனிதர் மீண்டும் ஜன்னலின் அருகில் போய் நின்றார். அங்கே ஜன்னல் கம்பிகளுக்கு வெளியே கிளி எதிர்பார்ப்புடன் அவருக்காகக் காத்திருந்தது.
கிளி கேட்டது :
‘‘அந்த ஆளு என்ன சொன்னாரு ?’’
அவர் சொன்னார் :
‘‘குறிப்பிடும்படியா ஒண்ணும் சொல்லல...’’
அப்போது கிளி சொன்னது :
‘‘அப்படியில்ல... என்னவோ சொன்னாரு. நான் கேட்டேனே !’’
சிறிது நேரம் ஒன்றுமே பேசாமல் இருந்த அவர் மெதுவான குரலில் சொன்னார் :
‘‘யார் கூட இதுவரை பேசிக்கிட்டு இருந்தீங்கன்னு கேட்டாரு. இங்கே யார் இருக்குறது ? தனியா இருந்து எனக்கு நானே...’’
கிளி சொன்னது :
‘‘என் கூட பேசிக் கொண்டு இருந்ததாச் சொல்ல வேண்டியதுதானே ?’’
அப்படிச் சொன்னபோது கிளியின் உதட்டில் ஒரு சிறு புன்னகை தெரிந்தது. அவர் வருத்தம் கலந்த குரலில் சொன்னார் :
‘‘அதெப்படி முடியும் ? ஒரு மனிதன் ஒரு பறவைகூட பேசிக் கொண்டிருப்பதாகச் சொன்னா. அதைக் கேக்குறவங்க அவனுக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கும்னு நினைக்க மாட்டாங்களா ?’’
கிளி சொன்னது :
‘‘அப்போ உங்களுக்குப் பைத்தியம் இல்லைன்னு சொல்றீங்களா ?’’
வந்த சிரிப்பை அடக்கியவாறு, அவர் திடீரென்று வரவழைத்துக் கொண்ட மிடுக்குடன் சொன்னார் :
‘‘இல்ல... இல்ல... எனக்குப் பைத்தியம் ஒண்ணும் கிடையாது. பைத்தியத்தைக் குணப்படுத்துறதுக்காக நான் இந்த மருத்துவமனைக்கு வரல... எனக்கு சுகக்கேடு இதயத்துலதான்...’’
கிளி அடுத்த நிமிடம் சொன்னது :
‘‘நீங்க சொல்றது சரி இல்லை. என்னோட ஆளின் இதயத்துக்கு ஒரு குறைபாடும் இல்ல...’’
கிளியின் குரல் தெளிவாக இருந்தது. இருந்தாலும், ஒரு கவலையின் கீற்று அந்தக் குரலில் கலந்திருப்பது தெரியாமல் இல்லை. அவர் கிளி சொன்னதைக் கேட்டு ஆச்சரியத்துடன் கேட்டார் :
‘‘என்ன சொன்னே ? ‘என்னோட ஆளு’ன்னா ?’’
கிளி ஒன்றும் கூறவில்லை. அது எதுவும் பேசாதததால், அவரும் எதுவும் பேசவில்லை.
அவர் மிகவும் களைத்துப் போயிருந்தார். ஜன்னல் கம்பிகளை எவ்வளவு பலத்துடன் பிடிக்க முடியுமோ, அவ்வளவு பலத்துடன் பிடித்திருந்தார். அவரின் கண்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கிளியை விட்டு விலகி ஆகாயத்தை நோக்கி உயர்ந்தன.
ஆகாயத்தின் நீல நிறம் இலேசாக மங்கலாகி விட்டிருந்தது.
அவரின் மனத்தின் அடித்தளத்தில் இருந்து ஒரு பழைய பாடலின் வரிகள் புறப்பட்டு மேலே வந்தன.
‘‘பச்சைப் பனங் கிளியே
பொன்னடி பூ முத்தே...’
அவரையும் அறியாமல் வரிகள் கிளம்பி வெளிவந்தன.
‘‘பச்சைப் பனங் கிளியே...’’
இழந்து விட்ட ஆசைகளும், அதனால் உண்டான வருத்தமும் பாடலில் முழுமையாக வெளிப்பட்டது. இந்தப் பாடல் அவருக்கு மிகவும் பிடித்தமான ஒரு கவிஞரின் நாடகத்தில் இடம்பெற்றிருந்தது. ஆனால், இப்போது அந்தப் பாடல் அவரின் சொந்தப் பாடலாகவே ஆகிவிட்டது.
நேரத்தைப் பற்றியோ, காலத்தைப் பற்றியோ அவருக்கு எதுவுமே தெரியவில்லை.
சிறிது நேரம் கழித்து அவர் தான் பாடிக் கொண்டிருந்த பாடலை நிறுத்தினார்.
அவர் பதைபதைப்புடன் கேட்டார் :
‘‘என்ன ? என்ன நடந்துச்சு ? என் பாட்டு உனக்குப் பிடிக்கலையா ?’’
கிளி பதில் எதுவும் சொல்லவில்லை.
சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு கிளி சொன்னது :
‘‘நீங்க என்னை அழ வச்சிட்டீங்க...’’
‘‘அதெப்படி ?’’ என்று அவர் கேட்டபோது, கிளி பதிலெதுவும் சொல்லவில்லை. ‘‘நீங்க என்ன மனிதர் ! உங்களால எதையுமே புரிஞ்சிக்க முடியலையா -?’’ என்றொரு அர்த்தம் கிளியின் செயலில் தெரிந்தது. கிளியின் கண்களில் கவலையின் ரேகைகள் தெரிந்தன. அப்போதுதான் அவருக்கே ஞாபகம் வந்தது. அறிமுகமான ஆரம்ப நாட்களில் ஆண் கிளியைப் பற்றிக் கேட்டதற்கு, கிளி அதைப் பற்றிச் சரியாக பதில் சொல்லவில்லை. பதில் சொல்லாமல் ஓடி ஒளிந்து கொண்டிருந்தது அது.
கிளி திடீரென்று சொன்னது :
‘‘நான் போறேன்...’’
பக்கத்தில் இருந்த நிலத்தில் நிறைந்து நின்றிருந்த பழைமையான பெரிய மரங்களில் ஒரு மரத்தைச் சுட்டிக் காட்டியவாறு அவர் கேட்டார்.
‘‘உன்னோட வீட்டுக்கா ?’’
கிளி அதற்குப் பதில் சொல்லாமல் வேறு எங்கோ தூரத்தில் பார்த்துக் கொண்டிருந்தது.
தூரத்தில் எல்லையற்ற ஆகாயம் மட்டுமே தெரிந்தது.
அவர் மீண்டும் கேட்டார் :
‘‘அப்போ நீ இன்னைக்கு வீட்டுக்குப் போகலையா ?’’
கிளி தனக்குத்தானே பேசிக் கொள்வதைப் போல் மெதுவான குரலில் சொன்னது :
‘‘வீடு ! எத்தனை நாட்கள் அது இருக்கப் போகுது !’’
கிளியின் குரலில் கவலை அதிகமாக வெளிப்பட்டது. அவர் பதைபதைப்புடன் கேட்டார் :
‘‘ஏன் அப்படிச் சொல்ற?’’
மரங்கள் அடர்ந்திருக்கும் நிலத்தைப் பார்த்தவாறு கிளி சொன்னது :
‘‘இங்கே கட்டிடங்கள் வரப் போகுது-.’’
‘‘கட்டிடங்களா ? என்ன கட்டிடங்கள் ?’’
ஆனால், கிளி எதுவும் சொல்வதற்கு முன்பே, அவருக்கு ஒரு விஷயம் ஞாபகத்தில் வந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு நர்சிங் சூப்பிரெண்ட் சொன்னார் : ‘‘இங்கே வர்ற மக்களோட எண்ணிக்கை அதிகமாயிடுச்சு. வரந்தாவுல ஆட்கள் நிற்க இடமே இல்ல... புதுசா கட்டிடங்கள் கட்டினாத்தான் சரியா இருக்கும். மருத்துவமனையோட ஒரு பகுதியை மாற்றி...
அவர் அப்போது கேட்டார் :
‘‘அதற்கான இடத்தைப் பார்த்தாச்சா ?’’
சூப்பிரெண்ட் சொன்னார் :
‘‘காசு கையல இருந்துச்சுன்னா, இடத்திற்கா பிரச்னை ?’’
அதற்குப் பிறகு அவர் அந்த விஷயத்தைப் பற்றி எதுவும் பேசவில்லை. சூப்பிரெண்ட்டும் சொல்லவில்லை. மருத்துவமனை சம்பந்தப்பட்டவர்கள் இடம் வாங்குவதற்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது ? ஆனால், இப்போது கிளியின் வார்த்தைகளைக் கேட்டபோது...
அவர் கிழக்குப் பக்கம் அடர்ந்து நின்றிருந்த மரங்களைப் பார்த்தார். நகரத்தின் நடுவில் இப்படி ஓர் இடமா என்று யாருமே சொல்லப் போனால் ஆச்சரியப்படுவார்கள். ஒரு ஏக்கரை விட அந்த இடம் அதிகமாகவே இருக்கும். அங்கு பழைமையாகி நின்றிருக்கும் இரண்டு சிறிய வீடுகள்... நிலம் முழுக்க கம்பீரமாக நின்றிருக்கும் வயதாகிப் போன பெரிய மரங்கள்... மா, பலா, புளி என பலதரப்பட்டவை. மரங்களில் பறவைகளின் இடைவிடாத பாட்டும் சத்தமும்...
அது ஒரு தனி உலகமாக இருந்தது.