கிளி - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6859
ஆரம்பத்தில் சில நாட்கள் இன்டென்சிவ் கேர் யூனிட்டில் இருந்தபோது, அவருக்கு ஒரே வெறுப்பாக இருந்தது. கண்ணாடியால் ஆன ஒரு பெரிய சவப் பெட்டியில் உயிருடன் தன்னை அடக்கம் செய்ததைப் போல அவர் உணர்ந்தார். தெரிந்தவர்கள் யாரையும் பார்க்க முடியாமல்... யாருடனும் பேச முடியாமல்... தனிமையில் இருப்பது என்பது அவரைப் பொறுத்தவரை ஒரு புதிய அனுபவம் இல்லை. உண்மையாகச் சொல்லப் போனால் தனிமை என்பது அவருடன் எப்போதும் ஒட்டி உறவாடிக் கொண்டிருப்பதுதான். இருந்தாலும்...
இங்கு இனிமேலும் சில நாட்கள் இருந்தால் நிச்சயம் தான் ஒரு மனநோயாளியாக மாறப் போவது உறுதி என்ற எண்ணம் மனதில் தோன்ற ஆரம்பித்தபோது, அவரை மருத்துவமனையின் பின்பக்கம் பெரியதும் நல்ல காற்றோட்டமும் உள்ள ஓர் அறைக்கு மாற்றினார்கள்.
இந்த அறைக்கு தன்னை மாற்றியபோது அவருக்கு உண்டான சந்தோஷத்திற்கான அளவே இல்லை.
அறையின் தெற்குப் பக்கத்திலும், கிழக்குப் பக்கத்திலும் பெரிய ஜன்னல்கள் இருந்தன. அந்த அறை தனியாக இருந்ததால், வாசல் கதவை அடைத்து விட்டால், மருத்துவமனையின் எந்தச் சத்தமும் அவரின் அந்த அறைக்குள் வரவே வராது.
அறையில் தன்னைப் பார்க்க வருபவர்கள் யாரும் இல்லாத நேரங்களில், அவர் கிழக்குப் பக்கம் இருக்கும் ஜன்னலுக்கு அருகில் சென்று வெளிப் பக்கத்தைப் பார்த்து கொண்டிருப்பார்.
பச்சைப் பசேல் என இருக்கும் நிலப்பரப்பு... பழைய வீடுகள்... உயரமாக வளர்ந்து நிற்கும் வயதான பெரிய மரங்கள்... பறவைகள்... அவை பாடிக் கொண்டும் பலவிதப் பட்ட சந்தங்களை உண்டாக்கிக் கொண்டுமிருந்தன. பிறகு... காலைநேரத்திலும் மாலை நேரத்திலும் கொஞ்சமும் தவாறமல் இலைகளுக்கு மத்தியில் தன்னுடைய பொன் கதிர்களைப் பரப்பும் சூரியன்…
அவரின் சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை.
இந்த நாட்களில் ஒரு நாளில்... கடவுளின் அருள் என்றுதான் சொல்ல வேண்டும்.
அந்தக் கிளியின் நட்பு அவருக்கு கிடைத்தது.
பலவற்றையும் சிந்தித்தவாறு நின்றிருந்த அவரைப் பார்த்து கிளி மீண்டும் கேட்டது :
‘‘நான் போகட்டுமா ?’’
அடுத்த நிமிடம் கிளி ஆகாயத்தில் ‘விர்’ என உயரத்தில் போனது. ஆனால், போன அதே வேகத்தில் கீழே இறங்கி வந்து அவருக்கருகில் ஜன்னல் கம்பியில் அமர்ந்தவாறு கிளி தயங்கி தயங்கி சொன்னது.
‘‘என் மேல கோபப்படக்கூடாது. நான் உங்களைப் பார்த்து ஒண்ணு கேட்கலாமா ? உங்களைக் கவனிக்க, கூட இருந்து பார்த்துக்க வீட்ல யாருமே இல்லையா ? இதுவரை நான் யாரையும் பார்க்கல. ஆட்கள் நிறைய பேர் இருக்காங்க. அவங்க வர்றாங்க... போறாங்க... ஆனா....’’
அவர் ஒன்றும் பேசவில்லை.
அப்போது கிளி மீண்டும் சொன்னது :
‘‘இன்னொரு விஷயத்தையும் நான் தெரிஞ்சிக்கணும். இன்னைக்கு காலையில இங்க ஒரு இளம்பெண் வந்தாளே... ரொம்பவும் தூரத்துல இருந்து வர்றது மாதிரி... களைச்சுப் போய் தூக்க கலக்கத்துடன், முடியாம... இருந்தாலும் அவ நல்ல அழகா இருந்தா, அவளோட கண்களை எனக்கு ரொம்பவும் பிடிச்சிருந்தது. அதை எப்படிச் சொல்றதுன்னே தெரியல... அந்தக் கண்கள்ல அன்பு வெளிப்பட்டதை என்னால உணர முடிஞ்சது.’’
கிளி தன் பேச்சை நிறுத்தி விட்டு, அவரின் முகத்தையே பார்த்தது.
ஆனால் அவர் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தார். கிளி திடீரென்று கேட்டது :
‘‘யார் அந்தப் பெண் ?’’
அவர் மெதுவான குரலில் சொன்னார் :
‘‘அந்த மாதிரி பல பேர் இங்கே வந்தாங்களே !’’
கிளி அப்போது கோபத்துடன் சொன்னது :
‘‘வர்ற பல பேரைப் பற்றி நான் பேசல. அந்தப் பெண்ணைப் பற்றி மட்டும்தான் நான் கேக்குறேன்.’’
அவர் ஒன்றும் பேசாமல், மறையப் போகிற சூரியனையே பார்த்தவாறு நின்றிருந்தார்.
கிளி சொன்னது :
‘‘சரி... வேண்டாம்... நான் இதைக் கேட்டிருக்கக் கூடாது இது ஒரு ஆளோட...’’
கிளி அதற்குப் பிறகு என்ன சொன்னது என்று அவர் கேட்கவில்லை.
ஆகாயத்தின் நீல வர்ணத்திற்கு மத்தியில் கிளி பறந்து கொண்டிருப்பதைப் பார்த்தவாறு அவர் அங்கே ஜன்னலருகில் நின்றிருந்தார்.
தனக்குச் சொந்தமான - மிகவும் விலைமதிப்பற்ற ஏதோ ஒன்று நிரந்தரமாக தன்னை விட்டுப் போவதைப் போல் அவர் உணர்ந்தார்.
இரவில் அவருடன் துணைக்குப் படுப்பதற்காக வந்த மருமகன் குட்டி பயத்துடன் சொன்னான் :
‘‘மாமா... மழை பெய்யுது. காற்றும் அடிக்குது. ஜன்னலை மூடட்டுமா ?’’
தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த அவருக்கும் அது தெரியாமல் இல்லை.
அவர் சொன்னார் :
‘‘உன் பக்கம் மட்டும் அடை, கிழக்குப் பக்கம் அடைக்க வேண்டாம்...’’
இருட்டில் அவருக்கு எதுவுமே தெளிவாகத் தெரியவில்லை. இருந்தாலும், அவருக்கு எல்லாமே தெரிந்தது. மரங்களினுனூடை சீறிப் பாயும் காற்றின் வலிமையையும், மழையின் ருத்ர தாண்டவத்தையும்... எல்லாவற்றையும் அவரால் உணர முடிந்தது. ஒரு பொட்டு கூட உறங்காமல் அவர் அங்கேயே படுத்திருந்தார்.
காலையில் பார்த்தபோது, வெளியே இருந்த மரங்களில் பெரும்பாலனவை இல்லாமற் போயிருந்தன. மழையிலும் காற்றிலும் அவை நிலத்தில் விழுந்து கிடந்தன.
அவர் நீண்ட நேரம் அங்கேயே நின்றிருந்தார். அவரின் களைத்துப் போன கண்கள் நிலத்தில் விழுந்து கிடக்கும் மரங்களுக்கு மத்தியில் எதையோ தேடின. ஆனால் அவரின் முயற்சி வீணானதுதான் மிச்சம்.
அவரின் கிளி அங்கு எங்குமே இல்லை.