சட்ட மீறல் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4685
மறுநாள் போலீஸ்காரன் என்னை ஒரு நீதிபதிக்கு முன்னால் கொண்டு போய் நிறுத்தினான். அவர் என்னிடம் சில கேள்விகளைக் கேட்டார். முதல் கேள்வி என்னுடைய பெயர் என்ன என்பது. அந்த பெயரை நான் கூறினேன். அடுத்ததாக என்னுடைய ஊர் எங்கு இருக்கிறது என்பது. எனக்கு ஊர் இல்லை என்று நான் சொன்னேன். அவர் அதை நம்பவில்லை. அவருடைய குற்றமல்ல – ஊர் இல்லாத மனிதர்கள் இல்லை என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள்தானே நீங்கள் அனைவரும்! நான் ஒரு பெரிய திருடி என்று அவர் கூறினார். அடுத்த கேள்வி எனக்கு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது. யாரும் இல்லை என்று நான் சொன்னேன். அதுவும் பொய்யாம்! நான் நினைப்பதற்கு சில மனிதர்களின் பெயர்கள் இருக்கின்றன. உண்மைதான். ஆனால், அவர்கள் எனக்கு யாருமில்லை. அந்த வகையில் சில கேள்விகளுக்குப் பிறகு, ஒரு பதில் கிடைக்கும் என்று எதிர்பார்த்தபடி கிடைக்காததால், நான் பிறந்தது எங்கே என்று அவர் கேட்டார். அது எனக்கு தெரியும். நான் அந்த இடத்தின் பெயரைக் கூறினேன்.
எல்லாவற்றையும் எழுதி விட்டு, என்னை நான் பிறந்த இடத்தில் கொண்டு போய் சேர்க்கும்படி அவர் தீர்ப்பு எழுதினார்.
நீதிபதிக்கு முன்னால் என்னை கொண்டு போய் நிறுத்தியபோது, எனக்கு நிம்மதியாக இருந்தது. ஆபத்து நீங்கி விட்டது என்று நினைத்தேன். அரசாங்கம் என்னை ஆபத்து இல்லாத ஒரு இடத்தில், மானத்தைக் காப்பாற்றக் கூடிய ஒரு சூழலில் கொண்டு போய் சேர்க்கும் என்று நினைத்தேன். ஆனால், நான் பிறந்ததாகக் கூறிய ஊரில் கொண்டு போய் விடும்படி தீர்ப்பு! எதற்கு? ஒருவேளை என்னை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இல்லாமலிருக்கலாம். அரசாங்கம் என்ன செய்ய முடியும்? நான் வரி கட்டுகிறேனா என்ன?
**********
நான் மீண்டும் இந்த நகரத்திற்கே வந்தேன். இன்று நான் விளக்கிற்குக் கீழே பயந்து கொண்டு நிற்கக் கூடியவள் அல்ல. நிழலைப் பின்பற்றி இரவு வேளையில் பயணிப்பவள். பயந்து ஓடுவதில்லை. இரு பக்கங்களிலும் பார்த்து புன்சிரிப்பைத் தவழ விட்டவாறு நடப்பேன். ஆட்கள் என்னைப் பார்த்து பயப்படுவதில்லை.
இன்று நான் சமுதாயத்திற்கு முன்னால் ஒரு கேள்விச் சின்னம் – எனக்கு தெரியும். என் முடிவு என்னவாக இருக்கும் என்பதும் எனக்கு தெரியும். அப்படியே வாழ்க்கை போய்க் கொண்டிருக்கட்டும்.