Lekha Books

A+ A A-

ஸெல்ஃபிச்சிகள்

shell pichigal

ஸெல்ஃபிச்சிகள்! அவர்களின் பெயர்கள் என்றும் வாழ்த்தப்படட்டும்! அவர்கள் தானே உயிர்களுக்கு எல்லாமாக இருப்பவர் கள்!

மேலே சொன்ன புகழ்ச்சியுடன் சேர்த்து ஒரு சிறு செய்தியை நான் இங்கு சொல்ல விரும்புகிறேன்.

பல நூற்றாண்டு களாக என்று கூறுவது தான் பொருத்தமாக இருக்கும்.  ஸெல்ஃப் திருமணமே செய்து கொள்ளாமல் படு சுதந்திரமான மனித னாக வாழ்ந்து கொண்டிருந்தான். ஒரு நல்ல நாளில் ஸெல்ஃபிற்குத் திருமணம் நடக்கிறது. இப்படித்தான் ஸெல்ஃப் பிற்கு ஒரு ஸெல்ஃபிச்சி கிடைத்தாள்.

(உலகத்தில் உள்ள எல்லா ஸெல்ஃபிச்சிகளுக்கும் இன்னொரு முறை வணக்கம்.) ஸெல்ஃபிச்சி வந்தவுடன், ஸெல்ஃபிடம் மனரீதியாக ஒரு மாற்றம் உண்டானது. நிலவில் சேவல் இறங்கினால் எப்படி இருக்கும்- அப்படி ஆகிவிட்டான் ஸெல்ஃப். எந்த விஷ யத்திலும் ஒரு நோக்கமும் இல்லை. திட்டமும் இல்லை. மொத்தத்தில்... என்ன சொல்வது? ஒரு சுகம்தான். (ஸெல்ஃப் முன்பு சீட்டு விளையாட்டில்  மிகப்பெரிய திறமைசாலியாக இருந்தான். காசு வைத்து விளையாடும் விளையாட்டுதான். எப்போது விளையாடினாலும் ஸெல்ஃப் வெற்றி பெற்று விடுவான். திருமணம் முடிந்த பிறகு ஸெல்ஃப் சந்தித்ததென்னவோ முழுக்க முழுக்க தோல்விதான். அறிவு மழுங்கிப் போய்விட்டது என்று ஆட்கள் கூறுவது வழக்கமாகிவிட்டது.) அவர்கள் அவனை அப்படிக் குறை கூறலாம். இருந்தாலும், வாழ்க்கை சுகமாகவே போய்க்கொண்டிருந்தது. அப்போது வருகிறாள் நம் நாணி!

ஸெல்ஃபைப் பொறுத்தவரை நேரம் வெளுத்து விட்டது என்று சொன்னால், மணி பத்தோ பத்தரையோ ஆகிவிட்டது என்று அர்த்தம். தூக்கம் கலைந்து எழுந்து பால் கலக்காத தேநீரை பெட் காஃபியாக குடித்து முடித்து, காலைக் கடனை முடித்து ஒரு வகை உற்சாகத்துடன் ஸெல்ஃபிச்சி தருகிற பால் கலக்காத தேநீரை, பால் கலக்காத தேநீராகவே ரசித்து குடித்து, இடையில் புகை பிடித்து ஊதியவாறு உட்கார்ந்திருக்கிறான். அவனுக்கு நேராக முன்னால் ஒரு பெண்!

ஸெல்ஃப் அமர்ந்திருப்பது  ஸெல்ஃபிச்சியின் வீட்டில். (நாங்கள் வந்து இரண்டு மூன்று நாட்களாகிவிட்டன.) வீடு சற்று மேடான இடத்தில் இருக்கிறது. முன்பக்கம் பத்தடி பள்ளத்தில் சமதளம் இருக்கிறது. கண்ணுக்கெட்டாத தூரம் வரை தென்னை மரங்கள். இடையில் ஆங்காங்கே வீடுகள். அந்த வீடுகள் ஒவ்வொன்றும் துணியில்லாமல் நிற்பதுபோல் இருந்தன. ஒரு வீட்டுக்கும்

வேலியோ வெளிமதிலோ கிடையாது. நல்ல விஷயம்தான். எல்லாரும் எல்லாவற்றையும் பார்க்கலாமே!

ஸெல்ஃபிற்கு முன்னால் தெரிகிற பெண் இரண்டு அங்குலம் இந்தப் பக்கமோ அந்தப் பக்கமோ நகர்ந்தால்கூட தென்னை மரத்திற்குப் பின்னால் அவள் மறைந்து போவாள். நல்லவேளை- அவள் கொஞ்சம்கூட அசையாமல் நேராக நின்றிருக்கிறாள்.

அவள் தன் தலைமுடியை சிவப்பு நிற ரிப்பன் வைத்து கட்டியிருக்கிறாள். ரிப்பன் கட்டைத் தாண்டி ஒன்றரை முழம் நீளத்திற்கு முடி பிரிந்து ஸ்டைலாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது. சிவப்புப் புள்ளிகள் போட்ட வெள்ளை ப்ளவுஸ். நெற்றியில் சிவப்பு நிற பொட்டு, புருவங்களுக்கு நடுவில் அழகாக வைக்கப்பட்டிருக்கிறது. சிவப்பு கரை போட்ட வெள்ளை முண்டு. அவள் பார்க்க கொஞ்சம் கருப்புதான். ஸெல்ஃபையே பார்த்தவாறு நிற்கிறாள். அதாவது- வேறு யாருடனோ அவள் பேசிக் கொண்டு இருக்கிறாள் என்று அர்த்தம்.

அவளிடம் ஒரு நல்ல  பிரேஸியர் இருக்கிறது. அதன்விலை ஆறு ரூபாய் 95 பைசா. அதை அணிந்திருப்பதால்தான் அவளின் பெண்மைத்தனம் முழுமையாக வெளிப்பட்டு நிற்கிறது. தான் அழகாக இருப்பது குறித்து அவளுக்கு உண்மையிலேயே பெருமையோ பெருமை.

ஸெல்ஃபின் கண்களும் அவளின் விழிகளும் அவ்வப்போது சந்தித்துக் கொண்டிருந்தன. அவள் கறுப்பாக இருந்தாலும், பார்க்க அம்சமாகவே இருந்தாள். அவளுக்கு இப்போது இருபது வயது இருக்கும். அவள் நிற்பது தூரத்தில் என்றாலும் இதை எல்லாம் ஸெல்ஃபால் சரியாகக் கணிக்க முடிந்தது.

“ம்ஹும்...'' ஸெல்ஃபிச்சி சொன்னாள்.

“வந்து நிற்கிறதைப் பாருங்க...''

ஸெல்ஃப்: “யாரைச் சொல்றே?''

ஸெல்ஃபிச்சி : “அந்தக் கறுப்பி நாணியைத்தான்...''

"நாணின்றது தான் பேரா? பேரு நல்லாத்தான் இருக்கு. எது எப்படியோ... நாணி, நீ அங்கே நிற்க வேண்டாம். தப்பிச்சு ஓடிடு...’’

“எங்கே இருந்தாலும் நேராக வந்து நிற்பா.'' ஸெல்ஃபிச்சி தொடர்ந்து சொன்னாள்: “அதோட விலை ஆறு ரூபா தொண்ணூற்றஞ்சு பைசா. அது ஒண்ணுதான் அவள்கிட்ட இருக்கு. ஒரு நெளிவும் ஒரு முடி கட்டும்... எவ்வளவு உதவாக்கரையாக இருந்தாலும், அடுத்த நிமிடமே அவள் காலடியிலே விழுந்திடுவான். என்னைப் பார்த்தீங்களா? நான் எவ்வளவு அழகாக இருக்கேன்? அடேயப்பா... அவளும் அவளோட பார்வையும்...''

அப்படி என்றால் நாணிக்கென்று தனியான ரசனை எதுவும் கிடையாது. எந்த உதவாக்கரையையும் உற்றுப் பார்ப்பாள். இந்த வார்த்தையைப் பயன்படுத்துவது ஸெல்ஃபைப் புகழ்வதற்கா இல்லாவிட்டால் இகழ்வதற்கா? இகழ்வது என்றால் சாதாரண மனிதனான இந்த ஸெல்ஃப் அப்படி என்ன பெரிய தப்பைப் பண்ணிவிட்டான்? கண் முன்னால் எது தோன்றினாலும் பார்ப்பான். பார்த்துக் கொண்டே இருப்பான். இதில் நீதி நியாயத்திற்கு இடமே இல்லை. ஸெல்ஃபுகளெல்லாம் குற்றவாளி ஆகிறார்கள். ஸெல்ஃபிச்சிகளெல்லாம் நல்லவர்கள் ஆகிறார்கள். நியாயமும் உண்மையும் ஸெல்ஃபிச்சிகள் பக்கம் மட்டுமே இருக்கின்றன.

“பிறகு...?'' ஸெல்ஃபிச்சி கேட்டாள். கேட்ட கேள்வியே தப்பு. எதுவும் பேசாதிருப்பதே உத்தமம்.

“கொஞ்சம் எந்திரிச்சு பல் தேய்ச்சு குளிச்சு ஏதாவது சாப்பிடலாமே?''

“இந்த ஃப்ளாஸ்க்ல இருக்குற பால் இல்லாத தேநீர் முழுவதும் தீர்ந்த பிறகு எழுந்திரிப்பேன். பல் தேய்ப்பேன். குளிப்பேன். எப்பவும் நடக்குறதுக்கு மாறா நடக்கக் கூடாதுல்ல...?''

“அவளைப் பார்த்தது போதும்ல?''

“பொன்னே.... நான் அவளைப் பார்க்கல. அவளைப் பார்க்கணும்ன்ற எண்ணமும் எனக்கு இல்ல. அவள்மேல எனக் கொண்ணும் காதல் இல்ல. சும்மா... அவ எங்கே வேணும்னாலும் நின்னுட்டுப் போகட்டும். நமக்கென்ன? பாவம்...''

பெண் இனத்தைப் பொறுத்தவரை பாவங்கள் என்று சொல்வதற்கில்லை. வெறுமனே பேச்சுக்காக அப்படிச் சொன்னேன். பாவங்கள் என்று சொல்லப் போனால் ஆண் இனத்தைத்தான் கூறவேண்டும். உலக சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால், இந்த உண்மை நமக்குத் தெரியவரும். ஸெல்ஃப் பேசும் போது வரும் வார்த்தைகளை கவனித்தாலே, லேசாக ஹென்பெக்ட்னஸ் இழையோடி இருப்பது தெரியும். எல்லாருமே பார்த்தால் இப்படி ஹென்பெக்ட்டாகத்தான் இருக்கிறார்கள். அப்படி இருப்பதுதான் சிறந்தது என்று இங்கு பொதுவாகக் கருதப்படுகிறது.

“விஷயம் தெரியுமா?'' ஸெல்ஃபிச்சி சொன்னாள்: “அவ ஒண்ணும் நீங்க நினைக்கிற மாதிரி பாவம் இல்ல...''

"நாணீ, ஓடிப்போயிடு! இதோ என்னுடைய ஸெல்ஃபிச்சி உன்னைக் கொல்லப் பார்க்கிறாள். எங்காவது போய்த் தப்பித்துக் கொள்.’’

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

பார்

பார்

February 15, 2012

கமலம்

கமலம்

June 18, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel