Lekha Books

A+ A A-

புன்னகை

punnagai

ரவு முழுவதும் தூங்காமல் இருக்க வேண்டுமென்று அவன் தீர்மானித்தான். ‘ஒஃபீலியாவின் நிலைமை மிகவும் மோசம்'  என்று மட்டுமே தந்திச் செய்தியில் இருந்தது. அந்தச் சூழ்நிலையில் புகைவண்டியின் அறைக்குள் படுத்து உறங்குவது என்பது நல்ல ஒரு விஷயமாக இருக்காது என்று அவன் நினைத்தான். அதனால் மிகவும் களைப்பாக இருந்தாலும், இரவில் ஃப்ரான்ஸைச் சுற்றி வந்து கொண்டிருக்க, அவன் அந்த முதல் வகுப்பு பெட்டியில் வெறுமனே உட்கார்ந்திருந்தான்.

ஒஃபீலியாவின் அருகில்தான் அவன் இருந்திருக்க வேண்டும். ஆனால், அவளுக்கு அவன் தேவைப்படவில்லை. அதனால் இங்கு இந்த புகைவண்டியின் அறைக்குள் இருக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிவிட்டது.

மனதிற்குள் ஒரு கடுமையான சுமையை அவன் உணர்ந்தான். ஒரு ‘ட்யூம'ரைப் போல ஒன்று... அமைதியாக இருப்பதுதான் அதற்குச் சரியான மருந்து. அப்போது அவன் கௌரவமாகவே வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டிருந்தான். மிகவும் அழகாக சவரம் செய்யப்பட்ட அந்த முகத்தில் அருமையான, அடர்த்தியான புருவங்கள் இருந்திருந்தால், சிலுவையில் அறையப்பட்ட ஏசுவின் சாயல் தெரிந்திருக்கும்.

இரவு வேளையில் அந்த புகைவண்டி நரகத்தைப் போல இருந்தது. எதுவுமே இயல்பாக இல்லை. மிகவும் அருகிலிருந்த இரண்டு ஆங்கிலேயர்கள் எப்போதோ இறந்துவிட்டிருந்தனர். ஒரு வேளை- அவனுக்கு முன்பே கூட அது நடந்திருக்கலாம். அவன் தனக்குள் தானே மரணமடைந்து கொண்டிருந்தான் அல்லவா?

முன்னாலிருந்த மலைகளின் பகுதிகளுக்கு நடுவில் வெண்மை நிறத்தில் புலர்காலைப் பொழுது முகத்தைக் காட்டிக் கொண்டிருந்தது. அவனுடைய மனதில் ஒரு கவிதையின் வரிகள் தோன்றின.

‘கவலையின் சாயலுடன் புலர்காலைப் பொழுது வர

முதல் சாரல் மழைக் குளிர்!

அவளின் சாந்த கண்கள் அடைகின்றன...

அதில் அவள் காணும் புலர்காலைப் பொழுது வேறு!'

அவன் அனுபவித்த புறக்கணிப்பின் எந்தவொரு அடையாளமும் வெளியே தெரியவில்லை. அவனுக்குள் முனிவரின் சஞ்சலமற்ற துன்பம் தெளிவாகத் தெரிந்தது.

அவன் இத்தாலியில் இருந்தான். அவனுக்கு அந்த நாட்டின்மீது ஈடுபாடு எதுவும் உண்டானதேயில்லை. ஒரு வகையான கவித்துவ உணர்வுடன் அவன் கடல், ஆலிவ் மரங்கள் ஆகியவற்றைப் பார்த்தான். தான் வேறு உணர்ச்சிகளுக்கு அடிமையாகி விடுவாமோ என்று அவன் நினைத்தான்.

ஒஃபீலியா பிரார்த்தனைக்காக தங்கிய நீல சகோதரிகளின் இல்லத்தை அவன் அடைந்தபோது, மீண்டும் இரவாகிவிட்டிருந்தது. அவன் மதர் சுப்பீரியருக்கு முன்னால் அழைத்துச் செல்லப்பட்டான். அவனுடைய நாசியையே பார்த்தவாறு நடந்து வந்த அந்த இல்லத்தின் தலைவி எதுவும் பேசாமல் அமைதியாக வணங்கினாள். தொடர்ந்து அவள் ஃப்ரெஞ்ச் மொழியில் கூறினாள்:

"கூறுவதற்கு வருத்தமாக இருக்கிறது. ஆனால், இன்று மதியம் அவள் மரணத்தைத் தழுவி விட்டாள்.''

அவன் அதிர்ச்சியடைந்தாலும், எந்தவித உணர்ச்சியையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அவன் இருட்டையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த இல்லத்தின் தலைவி தன்னுடைய வெண்மையான, மென்மையான கரத்தை அவனுடைய கையில் அழுத்தியவாறு அவன் முகத்தையே உற்றுப் பார்த்தாள்.

"தைரியமாக இருக்க வேண்டும்.'' அந்தப் பெண் சொன்னாள்.

அவன் பின்னோக்கி நகர்ந்து நின்றான். ஒரு பெண் தன் அருகில் வந்து நிற்கும்போது, அவன் பயப்பட்டான். நல்ல ஆடைகளை அணிந்து நின்றிருந்த அந்தப் பெண்ணிடம் அளவற்ற பெண்மைத்தனம் வெளிப்பட்டது.

"சரி... நான் அவளைச் சற்று பார்க்கலாமா?'' அவன் மெதுவான குரலில் ஆங்கிலத்தில் கேட்டான்.

அந்த இல்லத்தின் தலைவி மணியை அடித்தாள். ஒரு இளம் பெண் துறவி அங்கு வந்து நின்றாள். அவளுடைய மூடுபனியைப் போன்ற நிர்மலமான கண்களில் குறும்புத்தனமான ஏதோ ஒன்று மறைந்திருப்பதைப்போல தோன்றியது. அவள் மிகவும் வெளிறிப் போய் காணப்பட்டாள். அந்த இல்லத்தின் தலைவியின் வார்த்தைகளைக் கேட்டு, அவள் வணங்கினாள். இறுதி ஆறுதல் என்பதைப் போல அவன் அவளுக்கு நேராகத் தன் கையை நீட்டினான். அந்த இளம் கன்யாஸத்ரீ வெட்கத்துடன் தன்னுடைய இளம் தளிரைப் போன்ற கையை அவனுடைய கையில் வைத்தாள்- தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு கிளியைப்போல.

அளந்து பார்க்க முடியாத அந்த அமைதியின் ஆழத்திலும் அவன் சிந்தித்தான்.

‘என்ன மென்மையான கை!'

குளிர்ச்சியான இடைவெளி வழியாக நடந்து அவள் ஒரு கதவைத் தட்டினாள். நடந்தபோது அவளுடைய பாவாடையின் அசையும் ஓசைகளை மட்டுமே அவன் கேட்டுக் கொண்டிருந்தான்.

கதவு திறக்கப்பட்டது. உயரமாக இருந்த அந்த அறையில் போடப்பட்டிருந்த ஒரு கட்டிலைச் சுற்றி ஏராளமான மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டிருந்தன. அவன் மிகவும் அமைதியாக நின்றிருந்தான். கறுத்த, பழமையான முகத்தைக் கொண்ட ஒரு கன்யாஸ்த்ரீ மெழுகுவர்த்திக்கு அருகில் குனிந்து உட்கார்ந்திருந்தாள். அந்த கன்யாஸ்த்ரீ அழகான தோற்றத்தைக் கொண்டிருந்தாள். மார்பில் இணைத்து வைத்திருந்த வெண்மையான கைகளுக்கு மத்தியில் ஜெபமாலை தொங்கிக் கொண்டிருப்பதை அவன் பார்த்தான். அவளுக்குப் பின்னால் இருந்த கதவின் வழியாக அந்த இல்லத்தின் தலைவி உள்ளே வந்தாள். இப்போது- மூன்று கன்யாஸ்த்ரீகளுக்கு நடுவில் அவன். மதர் சுப்பீரியர் கவலையுடன் பிணத்தை மூடியிருந்த துணியை உயர்த்தி, முகத்தைப் பார்க்க அனுமதித்தாள்.

மரணமடைந்து, எந்தவித அசைவுமில்லாமல் கிடந்த தன் மனைவியை அவன் பார்த்தான். தன்னுடைய மனதிற்குள் ஒரு சிரிப்பு வெடிப்பதைப் போல அவனுக்குத் தோன்றியது. அவனுடைய முகத்தில் ஒரு வினோதமான புன்னகை வெளிப்பட்டது.

மூன்று கன்யாஸ்த்ரீகள், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஒரு கிறிஸ்துமஸ் பூ மரத்தைப்போல தோன்றினார்கள். அவனுடைய மென்மையான, பரிதாபமான உணர்ச்சிகளை அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த ஆறு கண்களும் பதைபதைப்புடன் இருந்தன. அந்த பதைபதைப்பு, பின்னர் கவலைக்கு இடம் தந்தது. அந்த மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், அந்த மூன்று கன்யாஸ்த்ரீகளையும் பார்த்தபோது, அவனுடைய முகத்தில் ஒரு புன்னகை உண்டானது. தொடர்ந்து அது நிரந்தரமானதாக ஆனது. அந்த மூன்று பெண்களின் முகங்களுக்கும் அந்த புன்னகை பரிமாறப்பட்டது- மூன்று மலர்கள் ஆழமாக விரிவதைப் போல. அந்த வெளிறிய இளம் பெண் துறவியிடம் புன்னகை, வேதனை நிறைந்ததாகவும் குறும்புத்தனத்தின் மென்மை கலந்ததாகவும் வெளிப்பட்டது. கறுத்த கன்யாஸ்த்ரீயின் முகத்தில் பக்தி நிறைந்திருந்தது. பக்குவப்பட்ட ஒரு பெண்ணின் நெற்றியாக அவளுடைய நெற்றி இருந்தது.

மதர் சுப்பீரியரின் இயல்பு குணம் அவனுடைய குணத்தைப் போலவே இருந்தது. அவள் சற்று புன்னகைக்க வலிய முயற்சித்தான். இளம் பெண் துறவிக்கு திடீரென்று அழ வேண்டும்போல தோன்றியது. இல்லத்தின் தலைவி அவளுடைய தோளில் தன் கையை வைத்து ஆறுதல் சொன்னாள். கறுத்த பெண் துறவியோ  மன சஞ்சலமடைந்து ஜெபமணியைப் பிடித்துக் கொண்டும், மறைமுகப் புன்னகையை நிறுத்தாமலும் இருந்தாள்.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel