புன்னகை - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by sura
- Hits: 7508
அவன் தன் மனைவியின் பிணத்தையே பார்த்தான். மரணமடைந்த தன் மனைவி தன்னைப் பார்க்கிறாளா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதைப்போல. அவனுக்கு பயமும் இருந்தது.
அழகாகவும், இதயத்தைத் தொடக்கூடிய விதத்திலும், மரணமடைந்த தன்னுடைய சிறிய நாசியை வெளியே நீட்டிக்கொண்டு, ஒரு குழந்தையின் பார்வையுடன் அவள் படுத்திருந்தாள். அவனுடைய புன்னகை மறைந்தது. அவன் ஒரு சாட்சியைப் போல பார்த்தான். அவன் அழவில்லை. அர்த்தமே இல்லாமல் வெறித்துப் பார்த்தான். அவ்வளவுதான்... தனக்காக இப்படியொரு தியாகம் உண்டாகும் என்று தனக்கு முன்கூட்டியே தெரியும் என்று அவன் நினைத்தான்.
அவள் அந்த அளவிற்கு சோதனை முயற்சிகள் செய்யக் கூடியவளாகவும், அறிவாளியாகவும், குழந்தையைப் போன்றவளாகவும், கறாரான குணம் கொண்டவளாகவும் இருந்தாள். அவளுடைய மரணமும் அதே மாதிரி ஆகிவிட்டது. திடீரென்று அவனுக்கு மிகப் பெரிய வெற்றிடம் உண்டாகி விட்டதைப்போல இருந்தது.
அவர்களுக்கு திருமணம் நடைபெற்று பத்து வருடங்கள் கடந்துவிட்டிருந்தன. அவன் எந்தச் சமயத்திலும் முழுமையான சந்தோஷம் நிறைந்தவனாக இருந்ததில்லை- எந்தவொரு காரணத்தைக் கொண்டும். அவனுடைய மனைவி எப்போதும் தன் விருப்பப்படி செயல்படக் கூடியவளாக இருந்தாள். ஒஃபீலியா அவன்மீது அன்பு வைத்திருந்தாள். கண்டிப்பு நிறைந்தவளாக ஆனபோது, அவள் அவனை ஒதுக்கிவிட்டாள். அவள் கோப குணம் கொண்டவளாகவும் அலட்சிய குணம் கொண்டவளாகவும் மாறினாள். ஆறு முறை அவள் அவனைத் தேடி திரும்பி வந்தாள். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. குழந்தைகள் வேண்டும் என்பது அவனுடைய விருப்பமாக இருந்தது. குழந்தைகள் இல்லாமல் போனதற்காக அவன் கவலைப்பட்டான்.
இனி அவள் அவனைத் தேடி எந்தச் சமயத்திலும் திரும்பி வரப்போவதில்லை. இந்த முறை அவள் போனது- இறுதியான போக்கு. ஒரேயடியாகப் போய்விட்டாள்.
அவள் யார்?
அவன் அந்த மூன்று பெண்களின்மீதும் தன்னுடைய பார்வையைத் திருப்பினான். அவன் சிரித்தான்.
அவன் வெளியே வர முயற்சித்தான். அந்தப் புன்னகை தன்னுடைய உதட்டிலிருந்து மறையவில்லை என்பதை அப்போதும் அவன் கவனித்தான்.
"பாவம்...'' இரக்கத்துடன் அந்த இல்லத்தின் தலைவி சொன்னாள்.
"பாவம் ஒஃபீலியா... அவளுக்கு இவை அனைத்தும் தெரியும்.''
அவர்கள் மூவரும் மரணமடைந்த பெண்ணுக்காக பிரார்த்தனை செய்தார்கள். மெழுகுவர்த்திகளை கீழே அழுத்தி அணைத்தார்கள். கறுத்த பெண் துறவி தன்னுடைய புனித நூலுடன் மீண்டும் அமர்ந்தாள். மற்ற இரண்டு பெண்களும் இடைவெளியில் நடந்தார்கள். அன்னப் பறவைகள் நதியில் நீந்துவதைப் போல அவர்கள் அமைதியாக நடந்து சென்றார்கள். தனியாக முன்னால் நடந்து சென்று கொண்டிருக்கும் அந்த மனிதனை அவர்கள் பார்த்தார்கள். அவர்கள் வேகமாக நடந்தார்கள்.
"மன்னித்து விடுங்கள், மதிப்பிற்குரிய பெண்களே! நான் என்னுடைய தொப்பியை எங்கோ மறந்து வைத்துவிட்டேன்.'' அவன் சொன்னான்.
எதையோ தேடுவதைப்போல அவன் பதைபதைப்புடன் தன் கைகளை முன்னால் நீட்டி அசைத்தான். இப்போது அவனுடைய முகத்தில் புன்னகை இல்லை. கடுமையான விரக்தி மட்டும்...