ஆசை ஆசையாய்...
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 4779
ப்ரியா எனக்கு பிரியமானவள். இரண்டு வருஷத்திற்கு மேலாக என்னால் துரத்தி துரத்திக் காதலிக்கப்படுபவள். நான் பேசும் காதல் வசனங்களை அலட்சியப்படுத்துபவள். அவள் அலட்சியப்படுத்த படுத்த அவள் மீதிருந்த காதல் அதிகமாகியதே தவிர குறைய வில்லை.
அவள் என்னைத் திட்டினாலும் அது திகட்டாத தேனாக இருந்தது. அவள் சொல்லும் 'கெட் லாஸ்ட்' கூட எனக்கு ஐ லவ் யூ வாக கேட்டது. என் முயற்சிகளை தொடர்ந்துக் கொண்டிருந்தேன். கல்லூரிக்குள் நுழைந்தேன். என்னை சைட் அடிக்கும் இளம் சிட்டுக்களை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் என் கண்கள் ப்ரியாவைத் தேடி அலைந்தன. ப்ரியா, பூவரச மரத்தடியில் நகம் கடித்தபடி தனியாக நின்றிருந்தாள்.
வியப்புடன் அவள் அருகே போனேன்.
"உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்." கடித்த நகத்தைத் துப்பியபடி பேசினாள் ப்ரியா. 'ஜிவ் வென்று பறப்பது போல் இருந்தது.
'என்ன சொல்லப் போறாளோ? காதை தீட்டிக் கொண்டு காத்திருந்தேன்.
"அரவிந்த்! இத்தனை நாளா நீங்க என் பின்னாடி சுத்திக்கிட்டு, என்னை காதலிக்கறதா வசனம் பேசிக்கிட்டிருந்தீங்க. உங்களைக் கண்டுக்காத மாதிரி இருந்தாலும், உங்களைப் பத்தின தகவல்கள் எல்லாம் விசாரிச்சுக்கிட்டுதான் இருந்தேன். பெர்ஸனாலிட்டி டெஸ்ட்ல நீங்க பாஸ். ஆனா உங்க கேரக்டர்? அதைப் பத்திதான் தீவிரமா விசாரிச்சேன். நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தது உங்க குடும்பம். அம்மா இல்லை. ஸோ மாமியார் தொல்லை இல்லை. அப்பா அப்பாவி. உங்க கூட பிறந்தவங்க யாரும் இல்லை. ஆகவே நோ பிக்கல். நோ பிடுங்கல். எங்க அப்பா பெரிய தொழிலதிபர்ன்னு உங்களுக்குத்தான் தெரியுமே? அவர் பார்த்து உங்களுக்கு நிதி உதவி செஞ்சார்ன்னா சுலபமா முன்னுக்கு வரக்கூடிய திறமை உங்களுக்கு இருக்கு. நீங்க சம்மதிச்சா எங்க அப்பாவோட ப்ரியா இன்ட்டஸ்ட்ரீஸ்ல உங்களை பார்ட்டனரா கூட ஆக்கிடுவாரு. அதோட என்னோட லைஃப் பார்ட்னரா உங்களையும்தான்..." கேட்டுக் கொண்டிருந்த எனக்கு ப்ரியா என்னை முத்தமிட்டது போலிருந்தது. ப்ரியா தொடர்ந்தாள்.
"அவசரமா சந்தோஷப்பட்டுடாதீங்க. எல்லா டெஸ்ட்லயும் பாஸான நீங்க, ஒரு விஷயத்துல, அதுவும் முக்கியமான விஷயத்துல கோட்டை விட்டிருக்கீங்க."
என் இதயத்தில் திரைப்படங்களில், சோகப் பின்னணி இசைக்காக ஷெனாய் வாசிக்கும் ஒலி கேட்டது.
"உங்க குடிப்பழக்கத்தைத்தான் சொல்றேன். இந்தக் காலத்துல நூத்துக்கு தொண்ணூறு பேர் குடிக்கறவங்க. பத்து பேர் வேண்ணா குடிப்பழக்கம் இல்லாதவங்களா இருக்கலாம். அந்த பத்து பேர்ல ஒருத்தரா என்னோட வருங்கால கணவர் இருக்கணும்னு நான் நினைக்கிறேன். நீங்க ட்ரிங்க் பண்றதை நிறுத்திடறதா ப்ராமிஸ் பண்ணினா உங்களை நான் கல்யாணம் பண்ணிக்கறேன். இப்ப ப்ராமிஸ் பண்ணிட்டு கல்யாணத்துக்கப்புறம் மறுபடியும் குடிக்க ஆரம்பிச்சிடலாம்னு சாமர்த்தியமா திட்டம் போட்டுடாதீங்க. நான் உங்களை விட சாமர்த்தியசாலி. உங்களை டைவோர்ஸ் பண்ற அளவுக்கு தில் இருக்கு. புரியுதா? நிதானமா யோசிச்சு நாளைக்கு பதில் சொன்னாப் போதும்."
"நாளைக்கா? இதோ இப்பவே சொல்றேன். இறந்து போன எங்க அம்மா மேல ஆணை. இனிமேல் குடிக்கவே மாட்டேன். எப்ப நம்ப கல்யாணம்?"
"இந்த வருஷம் படிப்பு முடிஞ்சதும் நம்ப கல்யாணம். நாளைக்கு எங்க அப்பா, உங்க அப்பாவைப் பார்த்து பேசுவார்."
சொல்லிவிட்டு மிடுக்காக நடந்து சென்றாள் ப்ரியா.
'ஐந்து வருடங்களாக அப்பாவின் அறிவுரைக்கும், அழுகை கலந்த கெஞ்சல்களுக்கும் அடி பணியாத நான் எவளோ ஒரு பெண் சொன்ன நிபந்தனைக்குக் கட்டுப்பட்டு அம்மா மீது சத்தியம் செய்து கொடுத்துட்டேன். ப்ரியாவின் அழகு, உடல்கட்டு, இதற்கெல்லாம் மேலாக அவள் அப்பாவினால் கிடைக்கப் போகும் அந்தஸ்து, இதை எல்லாம் விட்டுவிட நான் என்ன மடையனா? சரி, சரி அப்பாவிடம், ஏதோ அவருக்காக குடிப்பதை விட்டு விட்டதாக நடிக்க வேண்டும். அவரை சந்தோஷப்படுத்த வேண்டும்.
வீட்டிற்குள் நுழைய முற்பட்டவன், வாசலில் கூடி இருந்தவர்களைப் பார்த்து திடுக்கிட்டான். அவனை அன்புடன் வளர்த்து 'குடிக்காதே என்று அறிவுரை கூறிய அப்பாவின் உயிரற்ற உடல் வீட்டிற்குள் கிடத்தப்பட்டிருந்ததைப் பார்த்தான்.