
நள்ளிரவு நேரமாக இருக்க வேண்டும்... தாகம் எடுத்து கண் விழித்தபோது, பாட்டி தன்னுடைய படுக்கையில் சுருண்டு படுத்துக் கொண்டிருந்த பதினைந்து வயது கொண்ட சிறுமியைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள். அவளை எழுப்புவதற்கும், அவளுடைய கணவனிடம் திரும்பப் போகும்படி அவளை அனுப்புவதற்கும் பாட்டிக்கு மனம் வரவில்லை. ஆனால் எப்படி எழுப்பாமல் இருக்க முடியும்?
அவள் அந்தச் சிறுமியின் தலைமுடியில் விரலை ஓட்டியவாறு அழைத்தாள்: “அம்மு...”
அம்மு கண்களைத் திறந்தாள். அவை சற்று அழுத கண்களாக இருந்தன. அழுது சிவந்த கண்கள். பாட்டியின் இதயத்தை வேதனைப்படச் செய்தன. எனினும் அவள் சொன்னாள்:
“அம்மு, நீ அங்கே போ. அவன் என்ன நினைப்பான்? எப்போதும் பாட்டியின் படுக்கையிலேயே படுக்க முடியுமா?”
“நான் பாதி இரவு வரை அங்கு இருந்தேன்ல?” அம்மு கேட்டாள்: “இனிமேல் நான் தூங்க வேண்டாமா? கல்யாணம் ஆயிட்டா அதற்குப் பிறகு தூங்க வேண்டாமா?”
பாட்டி சிரித்தாள். அம்மு சுவரைப் பார்த்தவாறு திரும்பிப் படுத்தாள்.
“அவன் என்ன நினைப்பான்...” பாட்டி முணுமுணுத்தாள்.
“பாட்டி...” - அம்மு அழைத்தாள் அவளுடைய குரல் சற்று தடுமாறியது.
“என்ன?”
“நான் தேர்வில் வெற்றி பெற்றிருந்தால் யாரும் என்னைக் கல்யாணம் பண்ணி வச்சிருக்க மாட்டாங்க. சரிதானா?”
“பெண் பிள்ளைகள் கல்யாணம் பண்ண வேண்டாமா?”- பாட்டி கேட்டாள்: “பெண் பிள்ளைகள் கொஞ்சம் படிச்சு என்ன கிடைக்கப் போகுது?”
“நான் வெற்றி பெற்றிருந்தால் இப்போ கல்யாணம் நடந்திருக்காது” - அம்மு சொன்னாள்: “இன்னும் கொஞ்சம் நல்லா படிச்சிருக்கலாம்.”
அம்மு எழுந்து நின்று தன்னுடைய காதிலும் கழுத்திலும் அணிந்திருந்த நகைகளையெல்லாம் கழற்றி, அலமாரியைத் திறந்து அவற்றை ஒரு ட்ராயருக்குள் பத்திரமாக வைத்தாள். தொடர்ந்து தான் அணிந்திருந்த ஜரிகைப் புடவையை அவிழத்து கட்டிலின் தலைப்பகுதியில் எறிந்தாள். சிறிதும் வளர்ச்சி தோன்றாத ஒரு மெலிந்த சரீரத்தை அவள் கொண்டிருந்தாள். பாட்டிக்கு அவள்மீது இரக்கம் தோன்றியது. ஆனால் அவள் சொன்னாள்:
“அம்மு அவன் காத்திருப்பான். நீ இங்கு படுத்துத் தூங்கினால் அவன் என்ன நினைப்பான்?”
அம்மு கட்டிலில் அமர்ந்து தன்னுடைய முகத்தைக் கைகளில் மறைத்துக் கொண்டாள்.
“நான் இன்னும் கொஞ்சம் மனதைச் செலுத்திப் படிச்சிருக்கலாம்.” - அவள் முணுமுணுத்தாள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook