ஒரு தேச துரோகியின் தாய் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by sura
- Hits: 6707
முன்னோர்களின் பிடி சாம்பலோடு, ஒன்றோடு ஒன்றாய்க் கரைந்து பிணைந்துகிடக்கும் மண்ணும், வரலாறுகளும், இசையும், மக்களின் ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் கூட தன்னுடன் சங்கமம் கொண்டிருப்பதாகவே அவள் கருதினாள். ஆனால் இப்போது நடந்து கொண்டிருப்பதோ -? தன் மகனின் செயலை நினைத்து அவ்வன்னையின் இதயம் குமுறிக் கொண்டேயிருந்தது. தான் நாட்டின் மீது வைத்திருக்கின்ற பற்றையும், மகன் மீது வைத்திருக்கின்ற பாசத்தையும் அளவிட்டு நோக்கியபோது, தான் பற்று அதிகம் வைத்திருப்பது யார் மீது என்று அவ்வன்னையால் தெளிவாகக் கணிக்க முடியவில்லை. இரவு முழுவதும் நகர வீதிகளில் அவள் நடந்துகொண்டே திரிந்தாள். அவளை அடையாளம் தெரியாதவர்கள், அவளை ஏதோ ஒரு வகையான பீதியுடன் நோக்கினர். ‘ஒருவேளை இது இறந்து போன ஒரு கிழவியின் ஆவியாக இருக்குமோ ?’ என்று- கூட நினைத்துக் கொண்டனர் சிலர். அவளை நன்கு அறிந்தவர்களோ, அவளுடைய முகத்தைக் கண்டதும் ஒரு தேசத்துரோகியின் அன்னைதானே இவள் ?’ என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு நடந்தனர். ஒரு நாள் இரவு நேரம். பிணமொன்றின் அருகே சிறிதும் சலனமின்றி சிலையாய் அமர்ந்து ஒரு பெண் கேவிக்கேவி அழுது கொண்டிருந்தாள். வானில் மின்னிக்கொண்டிருந்த ஆயிரமாயிரம் நட்சத்திரங்களை தலையை நிமிர்த்தி நோக்கிய அவளின் கண்ணீர் மட்டும் நிற்கவேயில்லை. மூதாட்டியின் முகத்தைக் கண்டதும் அவளை வெறித்து வெறித்து நோக்கினாள் அப்பெண். மதில்களுக்கப்பால், அதனை ஒட்டி நின்று காவல் காத்துக்கொண்டிருந்த வீரர்கள் ஏதோ தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அவர்கள் கையிலிருந்த போர்க்கருவிகள் கல்மேல் பட்டு அடிக்கொருதரம் சப்தித்துக் கொண்டிருந்தன. மூதாட்டி கேட்டாள். ‘இது யார் ? உன் கணவனா ?’ ‘இல்லை...’ ‘பிறகு ? சகோதரனா ?’ ‘இல்லை. இவன் என் மகன். என் கணவன் இந்த உலகை விட்டுப் போய் இன்றோடு பதின்மூன்று நாட்கள் ஆகிவிட்டன. இப்போது இதோ என் மகனும் போய்விட்டான்.’ சிறிது இடைவெளிக்குப்பின் அப்பெண் தொடர்ந்தாள். இப்போது எனக்கு என் கணவனையும், மகனையும் நினைத்துப் பார்க்கும்போது எவ்வளவு மகிழ்ச்சி உண்டாகிறது தெரியுமா ? ‘மகிழ்ச்சியா ? ஏன் ? ஒன்றும் புரியாமல் கேட்டாள் கிழவி. ‘நாட்டின் மானத்தைக் காப்பதற்காகக் தான் பிறந்த இப்புனித தேசத்திற்காகத் தன்னுடைய உயிரையே துச்சமாகக் கருதி என் மகன் பகைவர்களால் தாக்கப்பட்டு, மரணம் அடைந்திருப்பது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிறது தெரியுமா ? நான் அவனைக் குறித்து எப்படியெல்லாம் கவலைப்பட்டிருக்கிறேன் தெரியுமா ? துன்பம் என்பதே என்னவென்று அறியாத அவன் எங்கே மரியானாவின் மகனைப் போல நகரத்திற்கும், நாட்டிற்கும் துரோகியாய் ஆகிவிடப் போகிறானோ என்றுகூட பயந்தேன். ஆனால் நல்ல வேளை... என் பிள்ளை தன்னைப் பெற்ற அன்னைக்கும், தான் பிறந்த மண்ணிற்கும் தன்னுடைய சாவில்கூட நற்பெயர் வாங்கிக் கொடுத்துவிட்டான். மரியானாவின் மகன் ஒரு நம்பிக்கைத் துரோகி, துஷ்டன், எதிரிகளுடன் சேர்ந்து தாய்நாட்டைக் காட்டிக்கொடுத்த வஞ்சகன். அவனைப் பெற்ற தாயின் கருப்பை அழியவேண்டும்.’ மரியானா பதிலுக்கு ஒன்றுமே பேசவில்லை. முகத்தைத் துணியால் மூடிக்கொண்டே அந்த இடத்தைவிட்டு அகன்ற அவள் பின் சிறிது நேரத்தில் இரவோடு இரவாய்க் கரைந்து போனாள். அடுத்த நாள் காலை... நகரத்தைக் காத்துக் கொண்டிருந்த வீரர்களிடம் கூறினாள் அவள். ‘என் மகன் உங்களுக்கெல்லாம் விரோதியாக மாறியிருக்கிறான். இப்போது நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். ஒன்று - அவனைப்பெற்ற குற்றத்திற்காக என்னைக் கொன்று விடுங்கள். இல்லாவிட்டால், அவன் இருக்குமிடத்திற்கு என்னைப் போக அனுமதியுங்கள்.’ அவள் கூறுவதையே வைத்த கண் எடுக்காது கேட்டுக் கொண்டிருந்த வீரர்கள் சிறிது நேர சிந்தனைக்குப்பின் கூறினர். ‘மகன் செய்த குற்றத்திற்காக உன்னைக் கொல்ல எங்களுக்குப் பிரியமில்லை அது சட்டப்படி பார்க்கும்போது நேர்மையான ஒரு காரியமுமல்ல. அவன் செய்கின்ற பெரிய பெரிய தவறுகளுக்கெல்லாம் நீதான் காரணம் என்பதிலும் எங்களுக்கு உடன்பாடு கிடையாது. அன்னையாகிய நீ படும் துன்பத்தை நாங்களும் அறியாமல் இல்லை. உன்னுடைய எண்ணத்தைத் தடைசெய்யவும் நாங்கள் விரும்பவில்லை. ‘மகனே கதி என்று இருப்பதாக எங்களுக்கு நீ தோன்றவில்லை. உன் மகன் வஞ்சகன். துரோகி. பசுத்தோல் போர்த்திய புலி. பெற்ற தாயாகிய உன்னைக்கூட அவன் அனேகமாக இந்நேரம் மறந்து விட்டிருப்பான். உன் விருப்பப்படியே நடக்கட்டும். அதுதான் பெரிய தண்டனையென்றால், அதைத் தடுக்க யாரால் முடியும் ?’ ‘நீங்கள் சொல்வது அத்தனையும் சரி. இறுதியில் உண்மை கொடுக்கும் பரிசு என்னவோ அதுதான்.’ - கிழவி கூறினாள். வாசற்கதவைத் திறந்த அவர்கள் மரியானாவை வெளியே போக அனுமதி அளித்தனர். தன்னுடைய மகன் செய்த குற்றத்திற்காகத் தான் அவதரித்த மண்ணை விட்டே போகும் அம்மூதாட்டியை மதில்களின் அருகே நின்றவாறு போர் வீரர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். தான் இதுவரை வாழ்ந்த - தன்னுடைய வாழ்வுச் சரித்திரத்தின் பெரும்பாலான பக்கங்களைக் கழித்த மண்ணை விட்டுப் பிரிய ஒரு சிறிதும் மனமில்லாமல் திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே போய்க் கொண்டிருந்தாள் மரியானா. வழியின் இரண்டு ஓரங்களிலும் கொல்லப்பட்டுக் கிடக்கும் போர் வீரர்களின் பிணக்குவியல்கள் முன் முழங்கால்படிய அமர்ந்து, நாட்டிற்காகத் தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த அந்த வீர புத்திரர்களுக்கு வணக்கம் செலுத்தினாள் அம்மூதாட்டி. ஒடிந்து ஒரு ஓரத்தில் கிடந்த போர்க்கொடியொன்றை வெறுப்புடன் எடுத்து வீசி எறிந்தாள் கோபத்துடன். அவள் ஏன் வெறுமனே கிடந்த அதை எடுத்து அப்படி கோபத்துடன் வீசியெறிய வேண்டும் ? உயிரைக் காப்பதற்காக அன்றி வேறு வகையில் பயன்படக்கூடும் கருவிகள் மீது எந்த அன்னைக்குமே அப்படியொரு வெறுப்பு இருக்கத்தான் செய்யும் ! வயது முதிர்ந்த அம்மூதாட்டி கூனிக்குறுகி இரவு நேரத்தின் இருளைக் கிழித்தவாறு போய்க் கொண்டிருந்தாள். அவளையே வைத்த கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தனர் போர்வீரர்கள். அவர்களுடைய உருவம் தங்கள் பார்வையை விட்டு மறைந்தவுடன், ஏதோவொரு விலை மதிப்பற்ற பொருளை இழந்துவிட்ட மாதிரியான உணர்வு அவர்களுக்கு எழுந்தது. நடந்து செல்லும்பொழுதே, அடிக்கொரு தரம் நின்று, தான் அவதரித்த மண்ணையே திரும்பித் திரும்பி பார்த்தாள் மரியானா. அவளுடைய இந்தச் செய்கை போர் வீரர்கள் மத்தியில் ஏதோ ஒருவகையான ஆச்சரியத்தைத் தோற்றுவித்தது. பகைவர்களின் முன் அவள் மட்டும் தனியே நின்று கொண்டிருப்பதையும், கரிய உருவங்கள் இங்குமங்கும் நடந்து கொண்டிருப்பதையும் அவர்கள் பார்த்துக் கொண்டேயிருந்தனர்.