ஒரு இலையுதிர் கால மாலை வேளை
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 5397
ஒரு இலையுதிர் கால மாலை வேளை
மாக்ஸிம் கார்க்கி
தமிழில் : சுரா
ஒரு இலையுதிர் கால மாலை வேளையில் நான் தாங்கிக் கொள்ள முடியாத, சந்தோஷமற்ற நிலையில் இருந்தேன். நான் சமீபத்தில் வந்து சேர்ந்த நகரத்தில் கையில் காசு எதுவும் இல்லாமல், தலைக்கு மேலே ஒரு கூரை இல்லாமல் இருப்பதை உணர்ந்தேன். அந்த ஊரில் எனக்குத் தெரிந்தவர் என்று கூறுவதற்கு ஒருவர் கூட இல்லை.
என்னிடம் இருந்த துணிகளில் தேவையற்றது என்று நினைத்த ஒரு துண்டுத் துணியைக் கூட விற்று விட்டு, நகரத்தை விட்டு நீங்கி, புறப் பகுதியில் இருந்த உஸ்ட்டை என்ற இடத்திற்குக் கிளம்பினேன். அங்குதான் ஏற்றுமதி, இறக்குமதி செய்யக் கூடிய இடங்கள் இருக்கின்றன. கப்பல் ஓடும் நாட்களில் அந்த இடம் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். ஆனால், இப்போது அது மிகவும் அமைதியாகவும், அக்டோபர் மாதத்தின் இறுதி நாட்களை நகர்த்திக் கொண்டும் இருந்தது.
ஈரமாக இருந்த மணலில் நடந்தவாறு, ஏதாவது மிச்சம் மீதி உணவு கிடைக்காதா என்று அதை உண்ணிப்பாக கூர்ந்து கொண்டிருந்தான். ஆட்கள் யாரும் இல்லாமல் காலியாக கிடந்த கட்டிடங்களுக்கும், கடைகளுக்கும் மத்தியில் நான் சுற்றிக் கொண்டிருந்தேன். ஒரு முழு சாப்பாடு கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அப்போது நான் நினைத்தேன்.
இப்போதைய நம்முடைய வாழ்க்கை முறையில் உடலின் பசியை விட மனதின் பசியை மிகவும் எளிதாக சரி பண்ணி விட முடியும். நீங்கள் தெருக்களின் வழியாக சுற்றிக் கொண்டிருப்பீர்கள், அருமையான புறத் தோற்றத்துடன் உங்களைச் சுற்றி கட்டிடங்கள் நின்று கொண்டிருக்கும். உள்ளேயும் அவை அழகாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு நிச்சயம் நீங்கள் வந்து விடுவீர்கள். கட்டிடக் கலை, சுகாதாரம் - இவை போன்ற முக்கியமான தலைப்புகள் எதுவாக இருந்தாலும், இப்படிப்பட்ட எண்ணங்கள் தோன்றுவதற்கான ஒரு நடைமுறையை அது ஆரம்பித்து வைக்கலாம். நீங்கள் அதற்குப் பொருத்தமான, நன்கு ஆடைகள் அணிந்திருக்கும் மனிதர்களைச் சந்திப்பீர்கள். அவர்கள் மிகவும் நாகரீக குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். உங்களின் பாதையிலிருந்து விலகிச் செல்லக் கூடியவர்களாக இருப்பார்கள். உங்களிடம் குடி கொண்டிருக்கும் சோகத்தை எந்த காரணத்தைக் கொண்டும் கவனித்து விடவே கூடாது என்பதில் தந்திர குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். உண்மையிலேயே சொல்வதாக இருந்தால்- சாப்பிட்டு இருக்கக் கூடிய ஒரு மனிதனின் மனதை விட பசியில் சிக்கியிருக்கும் ஒரு மனிதனின் மனம் நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கும். நன்றாக சாப்பிட்டு இருக்கக் கூடிய ஒரு மனிதனைப் பற்றி எண்ணும்போது, கொண்டாட்டங்கள் நிறைந்த ஒரு முடிவு வெளிப்படுத்தும் உண்மை இதுதான்.
மாலைப் பொழுதின் ஆட்சி அதிகமாக பரவிக் கொண்டிருந்தது. மழை பெய்து கொண்டிருந்தது. வடக்கு திசையிலிருந்து காற்று பலமாக வீசியடித்துக் கொண்டிருந்தது. காலியாகக் கிடந்த கட்டிடங்கள், கடைகள் வழியாக அது ஓசை உண்டாக்கியவாறு, வாடகைக்கு தங்கும் விடுதிகளின் சாளரங்களில் மோதிக் கொண்டிருந்தது. காற்று வீசிக் கொண்டிருக்க, அதற்குக் கீழே நதி நுரையுடன் ஓடிக் கொண்டிருந்தது. அதன் அலைகள் மணல் நிறைந்த கரையில் சத்தமாக அடித்துக் கொண்டிந்தது. அவை தங்களுடைய வெண்ணிற நுரையை ஒன்றின் மீது ஒன்று ஏறும் வண்ணம், தூரத்து இருட்டை நோக்கி வேகமாக பாயச் செய்து கொண்டிருந்தன. குளிர் காலம் நெருங்கி வந்து கொண்டிருப்பதை நதி உணர்ந்திருப்பதைப் போல தோன்றியது. பனியின் ஆகிரமிப்பிற்கு பயந்து அது வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. அதை வடக்கு திசையிலிருந்து வீசிய காற்று சங்கிலி போட்டு அந்த இரவு வேளையில் கட்டி நிறுத்திக் கொண்டிருந்தது. வானம் மிகவும் அடர்த்தியானதாகவும் கட்டி நிறுத்திக் கொண்டிருந்தது. வானம் மிகவும் அடர்த்தியானதாகவும் தாழ்வான நிலையிலும் காணப்பட்டது. அது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. இரண்டு பட்டைகள் கொண்ட ஒழுங்கற்று வளர்ந்திருந்த வில்லோ மரங்களும், அவற்றின் வேர்கள் இருந்த பகுதியில் தலை கீழாக கவிழ்ந்து கிடந்த ஒரு படகும் தங்களைச் சுற்றியிருந்த இயற்கையின் மரணத்தின் போது இருக்கக் கூடிய சோகத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.
அடிப் பகுதி உடைந்து போய் காணப்பட்ட ஒரு படகு, குளிர் காற்று மோதி, பரிதாபப்படும் நிலையில் இருந்த வயதான மரங்கள்... அனைத்தும் நாசமாகி விட்டிருந்தன. அவை எதுவுமே இல்லாமல், மரணத்தைத் தழுவியிருந்தன. வானம் சிறிதும் நிறுத்தாமல் கண்ணீரைப் பொழிந்து கொண்டிருந்தது. என்னைச் சுற்றிலும் ஒரே இருண்ட வெற்றிடம்... அந்த மரணத்திற்கு மத்தியில் நான் மட்டுமே உயிருடன் இருக்கக் கூடியவன் என்பதைப் போல எனக்கு தோன்றியது. அந்த மரத்துப் போன மரணம் என்னையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதைப் போல நான் உணர்ந்தேன்.
அப்போது எனக்கு பதினேழு வயதுதான்- ஒரு அருமையான வயது!
குளிர்ந்து போய் காணப்பட்ட, ஈரமான மணலின் வழியாக நான் நடந்து போய்க் கொண்டிருந்தேன். குளிராலும் பசியாலும் பற்கள் ஒன்றோடொன்று பேசிக் கொண்டிருந்தன. எதுவுமே இல்லாத நிலையில், நான் உணவிற்காக தேடினேன். நான் ஒரு கடையையே சுற்றிச் சுற்றி வந்தேன். பெண்களின் ஆடைகளை அணிந்திருந்த ஒரு ஒடுங்கிப் போன உருவத்தை நான் கவனித்தேன். அந்த ஆடைகள் மழையில் நனைந்திருந்தன. அவை அந்த உருவத்தின் வளைந்த தோள்களில் தொங்கிக் கொண்டிருந்தன. அவளுக்கு எதிரில் நின்று, அவள் என்ன செய்கிறாள் என்பதைப் பார்ப்பதற்கு நான் முயற்சி செய்தேன். அவள் தன்னுடைய கைகளால் மணலைத் தோண்டிக் கொண்டிருந்தாள். அதன் மூலம் அங்கிருந்த கடைகளின் ஒன்றிற்குள் நுழைவதற்கு அவள் முயன்று கொண்டிருந்தாள்.
'நீ ஏன் அதைச் செய்கிறாய்?'- அவளுக்கு அருகில் நின்று கொண்டு நான் கேட்டேன்.