
அவள் மெதுவான குரலில் அழுது கொண்டே குதித்தாள். இப்போது அவள் நின்று, முழுமையாக பயம் நிறைந்து விட்டிருந்த, தன்னுடைய அகல திறந்த, சாம்பல் நிற கண்களைக் கொண்டு என்னையே பார்த்தாள். என் வயதைக் கொண்ட ஒரு பெண் அவள் என்பதை நான் பார்த்தேன். அவளுடைய முகம் மிகவும் அழகாக இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக மூன்று பெரிய சிராய்ப்புகள் இருந்தன. அது அந்த முகத்தின் அழகைக் கெடுத்தது. அதே நேரத்தில்- அவை குறிப்பிடத்தக்க ஒழுங்கமைப்பில் இருந்தன. அவற்றில் இரண்டு ஒரே அளவைக் கொண்டிருந்தன. அவை கண்களுக்குக் கீழே இருந்தன. இன்னொன்று மூக்குத் தண்டுக்கு மேலே பெரிய அளவில், நெற்றியில் இருந்தது. மனித முகங்களைப் படைக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒரு கை தேர்ந்த கலைஞனின் கை வண்ணம் அந்த ஒழுங்கமைப்பில் வெளிப்பட்டது.
அந்த இளம் பெண் என்னையே பார்த்தாள். படிப்படியாக பயம் அவளுடைய கண்களிலிருந்து காணாமற் போயின. தன்னுடைய கைகளில் ஒட்டிக் கொண்டிருந்த மணலை அவள் தட்டி விட்டாள். தன் தலையில் கட்டியிருந்த பருத்தித் துணியால் ஆன கைக்குட்டையைச் சரி பண்ணினாள். தன் தோள்களை முன்னோக்கி வளைத்துக் கொண்டே அவள் சொன்னாள்:-
'உனக்கும் உணவு தேவைப்படும்னு நான் நினைகிறேன். போய் தோண்டு. என் கைகள் சோர்ந்து போய் விட்டன. அங்கே பார்...'- அவள் ஒரு கடை இருந்த பக்கம் தலையை ஆட்டியவாறு சொன்னாள்:- 'அங்கே கட்டாயம் ரொட்டி இருக்கும். அந்த கடையில் இப்போது கூட அவர்கள் வியாபாரம் செய்கிறார்கள்.'
நான் தோண்ட ஆரம்பித்தேன். சிறிது நேரம் காத்திருந்து, என்னை கவனித்து விட்டு, எனக்கு அருகில் உட்கார்ந்து அவள் எனக்கு உதவ ஆரம்பித்தாள்.
நாங்கள் மிகவும் அமைதியாக வேலை செய்தோம். அந்த நேரத்தில் குற்றச் செயல் என்றால் என்ன என்பதைப் பற்றியெல்லாம் என் மனதில் இருந்தது என்று இப்போது நான் கூற மாட்டேன். ஒழுக்கம், சொத்துரிமை- இவை போன்ற விஷயங்களைப் பற்றியெல்லாம் நன்கு தெரிந்திருக்கும் மனிதர்கள் கூறுவதைப் போல, ஒருவன் தன்னுடைய ஒவ்வொரு தருணத்தையும் எப்போதும் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். முடிந்த வரைக்கும் உண்மையானவனாக இருக்க வேண்டும்.
கடைக்குக் கீழே தோண்டுவதில் நான் மிகவும் சுறுசுறுப்புடன் இருந்தேன் என்பதை நான் கட்டாயம் ஒத்துக் கொண்டே ஆக வேண்டும். அந்த கடையில் என்ன இருக்கும் என்ற ஒன்றைத் தவிர, நான் எல்லா விஷயங்களையும் முற்றிலும் மறந்து விட்டேன்.
இரவு நெருங்க நெருங்க, எங்களைச் சுற்றி குளிரும், ஈரமும், அடர்ந்த இருட்டும் மூட ஆரம்பித்தன. அலைகளின் சத்தம் சற்று அடங்கி கேட்டுக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் - கடையின் பெயர் பலகைகளின் மீது மழை வேகமாக மோதி, உரத்த ஓசையை உண்டாக்கிக் கொண்டிருந்தது. இரவு காவலாளியின் சத்தம் ஏற்கெனவே கேட்டுக் கொண்டிருந்தது.
'கடையின் தரைப் பகுதி தெரிகிறதா?' - எனக்கு உதவிக் கொண்டிருந்த இளம் பெண் ஒரு தாழ்ந்த குரலில் கேட்டாள். அவள் என்ன சொல்கிறாள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் எதுவும் கூறாமல் இருந்தேன்.
'நான் என்ன கேட்கிறேன் என்றால்... இந்த கடைக்கு தரைப் பகுதி தெரிகிறதா? அப்படி தெரிந்தால், நாம் ஒரு பிரயோஜனம் இல்லாத காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறோம். ஒரு குழியைத் தோண்டிய பிறகு, அதைத் தாண்டி கனமான பலகைகள் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். அதை எப்படி உடைப்பது? பூட்டை உடைப்பது நல்லது என்று நினைக்கிறேன். பூட்டு அப்படியொன்றும் பெரிதாக இருக்காது.'
பெண்களின் மனங்களுக்குள் நல்ல திட்டங்கள் மிகவும் அரிதாகவே உதிக்கும். ஆனால், நீங்களே பார்க்கலாம்... அப்படிப்பட்ட விஷயங்கள் பல நேரங்களில் உண்டாகும். நல்ல திட்டங்களை நான் எப்போதும் மிகுந்த மதிப்புடன் நினைப்பேன். அவற்றை வைத்து ஆதாயம் அடைய வேண்டும் என்று முடிந்த வரைக்கும் நான் முயற்சி செய்து பார்ப்பேன்.
தாழ்ப்பாள் எங்கே இருக்கிறது என்று கவனித்த நான், அதைப் பிடித்து இழுத்து, வளையங்களுடன் கழற்றி தனியாக எடுத்தேன். எனக்கு உதவிக் கொண்டிருந்த இளம் பெண் உடனடியாக குனிந்து, கடையின் சதுர வடிவத்திலிருந்த வாசல் வழியாக ஒரு பாம்பு ஊர்வதைப்போல ஊர்ந்து சென்றாள். உள்ளே இருந்து அவளுடைய பாராட்டும் குரல் வெளியே வந்தது:
'அருமையான வேலை!'
அந்தக் காலத்திலிருந்த எல்லா மிகச் சிறந்த சொற்பொழிவாளர்களையும் ஒட்டு மொத்தமாக எடுத்து, அவர்களிடம் இருக்கக் கூடிய மிகச் சிறந்த தகுதிகள் அத்தனையும் இருக்கக் கூடிய ஒரு மனிதனின் புகழ்ச்சியை விட, ஒரு பெண்ணிடமிருந்து வரக் கூடிய சிறிய புகழ்ச்சியைத்தான் நான் பெரிதாக நினைப்பேன். ஆனால், இப்போது நான் பாராட்டப்படுவதை விட, அந்த நாட்களில் நான் மிகவும் குறைவாகவே பாராட்டப்பட்டேன். அந்த இளம் பெண்ணின் பாராட்டில் சிறிது கூட கவனமே செலுத்தாமல், நான் அவளிடம் சுருக்கமாகவும் ஆர்வத்துடனும் கேட்டேன்:
'அங்கே ஏதாவது இருக்கா?'
அவள் தான் கண்டு பிடித்திருக்கும் பொருட்களை ஒரே தொனியில் கூற ஆரம்பித்தாள்:
'புட்டிகள் உள்ள ஒரு கூடை, காலியான கோணிகள், ஒரு குடை, ஒரு இரும்பு வாளி...'
அவை எதுவுமே சாப்பிடக் கூடியவை அல்ல. என்னுடைய நம்பிக்கைகள் மூழ்கிக் கொண்டிருப்பதைப் போல நான் உணர்ந்தேன். திடீரென்று அவள் உற்சாகக் குரலில் கத்தினாள்:
'ஆஹா! அதோ இருக்கு!'
'என்ன?'
'ஒரு ரொட்டி... ஆனால், அது ஈரமா இருக்கு. அதை எடுக்குறேன்!'
ஒரு ரொட்டி என் பாதத்திற்கு அருகில் உருண்டோடியது. அதைத் தொடர்ந்து என்னுடைய தைரியசாலியான அந்த உதவியாளரும். நான் ஏற்கெனவே ஒரு துண்டு ரொட்டியைப் பிய்த்து என் வாய்க்குள் போட்டு, மெல்ல ஆரம்பித்தேன்.
'எனக்கு கொஞ்சம் கொடு,,, நாம் இங்கிருந்து கிளம்பி விட வேண்டும். நாம் எங்கே போவது?'- அவள் எல்லா திசைகளிலும் மூடியிருந்த ஈரமான, சத்தம் நிறைந்த இருட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
'அங்கே... தலை கீழாக கவிழ்ந்திருக்கும் ஒரு படகு இருக்குது. நாம அதை நோக்கி போவோமா?'
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook