Lekha Books

A+ A A-

ஏழை விபச்சாரி

Ezhai Vibachchari

ளம் அழகியான அந்த நர்ஸீக்குச் சிரிப்புத்தான் வந்தது. அவள் தன் காதலனிடம் சொன்னாள் :

"பிறப்பையும் இறப்பையும் நான் ஒவ்வொரு நாளும் பார்த்துக்கிட்டு இருக்கேன். புத்தங்களில் அல்ல, நேரிலேயே. நான் அதில் பங்கெடுக்கவும் செய்யிறேன். சொல்லப் போனால் வாழ்க்கையோட தத்துவத்தைச் சொல்லித் தர்ற பள்ளிக்கூடமே மருத்துவமனைதான்றது என்னோட கருத்து.

மருத்துவமனைக்குள்ளேயே பல மணி நேரங்கள் தொடர்ந்து இருந்தா எப்படி இருக்கும்? அதனாலதான் வெளியே  வந்தவுடனே, பார்த்த மரணம் எல்லாத்தையும் மறக்க முயற்சிக்கிறேன். நல்லா குளிச்சு, அழகா ட்ரெஸ் பண்ணணும். பவுடர் போடணும். சென்ட் அடிக்கணும். வாய்க்கு ருசியா சாப்பிடணும். கொஞ்ச நேரமாவது ஜாலியா இருக்கணும். இந்தச் சமயத்துலதான் நீங்க வந்து தத்துவம் பேசுறீங்க..."

"நான் தத்துவம் பேசல. இந்த உலகத்தில் நிலவக்கூடிய கஷ்டங்கள், அன்பில்லாமை, அக்கிரமங்கள் - இவற்றைப் பற்றி என் சொந்த அனுபவத்துல நான் உணர்ந்ததைச் சொல்றேன்."

"சொந்த அனுபவமா?"

"ஆமா..."

"அப்படின்னா சொல்லுங்க. நானும் கொஞ்சம் தெரிஞ்சுக்கறேன்."

"இடையில ஒண்ணும் பேசக் கூடாது. ஏதாவது சொல்லணும்னு நினைச்சா கடைசியில சொல்லு."

"சரி..."

"நேற்றுச் சாயங்காலம் நான் நகரத்துல பார்க்ல உட்கார்ந்திருந்தேன்" - காதலன் சொல்ல தொடங்கினான். "கொஞ்ச நேரம் கழிச்சு நான் பார்க்குறப்போ எனக்கு எதிரில் இருந்த பெஞ்ச்ல ஒரு இளம் பெண் தனியா உட்கார்ந்திருக்கா. ஏதோ ஒரு பிரச்னையில இருந்தது மாதிரி தெரிந்தது.  குளிச்சது மாதிரி தெரியல. சாப்பிட்ட மாதிரியும் தெரியல. முகம் வாடிப் போய் இருந்துச்சு. உதடுகள் வறண்டு போய் இருந்தன. கட்டியிருந்த வெள்ளைப் புடவையில் செம்மண் ஒட்டியிருந்துச்சு. ஆள் நல்ல வெளுப்பா இருந்தா. கறுப்பு ஜாக்கெட் போட்டிருந்தா. சதைப் பிடிப்பான உடம்புல ஜாக்கெட் நல்லா இறுக்கமா இருந்துச்சு. முன்பக்கம் ரெண்டு கறுத்த பந்து போல மார்புகள்.

பூங்காவில் உட்கார்ந்திருந்த ஆண்களோட பார்வை முழுவதும் அவள் மேலேயே இருந்துச்சு. அவளைப் பற்றிக் கிண்டலா ஏதோ சொல்லிட்டுச் சில பேரு சிரிச்சாங்க. வேற சிலர் அவளையே வச்ச கண் எடுக்காம பார்த்தாங்க. சிலர் அவளைப் பார்த்துக்கிட்டு வேறு எதையோ நினைச்சுக்கிட்டு இருந்தாங்க. மொத்தத்துல அவள் அங்க இருக்கிற யாருக்கும் தெரியாதவள் இல்லை. ஏழைகளோட வேசி அவள்னு சொல்லலாமான்னு பாக்குறேன். அதைவிட அவளை ஒரு வாடகை வீட்டோடு ஒப்பிட்டுச் சொல்றதுதான் சரியா இருக்கும்னு நினைக்கிறேன். பாக்குறதுக்கு ஏதோ அழகாத் தெரியிற சிறு குடிசைன்னு கூட அவளைச் சொல்லலாம்.

இப்படி என்னோட சிந்தனை பல கோணங்களை நோக்கியும் போச்சு. குடிசைகள், வீடுகள், மாளிகைகள், அரண்மனைகள்... இந்த உலகத்தில் இருக்கிற ஒவ்வொரு விபச்சாரியைப் பற்றியும் நான் சிந்திச்சுப் பார்த்தேன். உலகத்துல எல்லா நாடுகள்லயும் விபச்சாரிகள் இருக்கத்தானே செய்யிறாங்க! மொத்தத்தில் விபச்சாரிகள், ஓட்டல்கள் மாதிரி. உடல் ரீதியான பசியையும் தாகத்தையும் தீர்க்கிற ஓட்டல்கள்தான், இந்த வாடகை அழகிகள்!

அங்கே யாரெல்லாம் போறாங்க? சொந்தத்தில் வீடு உள்ளவர்களும் போறாங்க. இல்லாதவர்களும் போறாங்க. ஆண்களில் பெரும்பாலானவர்கள் அவிழ்த்துவிட்ட காளைகளா என்ன? பிறகு ஏன் இப்படித் தெரு தெருவாய் அலைகிறார்கள்? அவுங்களுக்குக் காதல்ன்றது உலகத்துல கிடைக்கலியா? பெரும்பாலானவங்க திருப்தி இல்லாமலேயே இருக்காங்களே! ஒரு வேளை விபச்சாரம் செய்யிற பெண்கள் தங்களோட உடல் அழகைக் காட்டி ஆண்களை இழுக்குறாங்களா? உண்மையாச் சொல்லப் போனால், எனக்கு இதைப்பற்றி ஒரு தெளிவான முடிவுக்கே வர முடியல. ஒரு வகையில இந்த விஷயம் நமக்குச் சம்பந்தமில்லாத ஒண்ணா நமக்குப் படலாம். இருந்தாலும் இதைப்பற்றிச் சிந்திக்காம இருக்க முடியல. ஒரு பெண் எப்படி விபச்சாரி ஆகிறாள்? கட்டாயம் பணத்துக்காகத்தான்னு சொல்லிட முடியாது. பல தொழில்களைப் போல இதையும் ஒரு தொழிலாச் சிலர் ஏத்துக்கிட்டாங்க. விபச்சாரம்தான் உலகத்தில் இருக்கிற தொழில்கள்லேயே புராதனத் தொழில்னு நான் கேள்விப்பட்டிருக்கேன். வாழ்க்கையோட தேவைகளை அடையறதுக்கும், நாடுகளைப் பிடிக்கிறதுக்கும், பதவிகளைக் கைக்குள் போட்டுக்கிறதுக்கும் பெண்களை போகப் பொருட்களாய் பயன்படுத்தி வந்திருக்காங்க. நடிகைகள், பாடகிகள், நடனப் பெண்கள், ராஜகுமாரிகள் - இப்படிப் பலரையும் விபச்சாரத்திற்குப் பயன்படுத்தி இருக்காங்க.

நான் சொன்னேனே என் முன்னால் பெஞ்ச்ல உட்கார்ந்திருக்கிற பெண்ணோட முகத்துல சந்தோஷம் இல்ல... முழுசா கவலை முகத்தை ஆக்கிரமித்திருந்தது. அழகான ஒரு இளம் பெண்ணைக் கவலை நிரம்பியவளா பாக்குறப்போ, அவளோட கவலைக்குக் காரணம் என்னன்னு கண்டு பிடிச்சு அதைத் தீர்த்து வைக்க ஆண் மனம் எண்ணும். அதே நேரத்துல வயதான ஒரு பெண் வாய் விட்டு அழுதால் கூட, யாரும் அவளைத் திரும்பிப் பார்க்க மாட்டாங்க. எதிரில் உட்கார்ந்திருந்தவள் இளம் பெண்ணாகவும், அழகியாகவும் இருந்ததால் ஒரு வேளை அவள் மீது எனக்குக் கருணை பிறந்திருக்கலாம். "என்ன கவலை உனக்கு? நீ எந்த ஊரைச் சேர்ந்தவள்? உன்னோட பேர் என்ன?"

நான் போய் அவள்கிட்ட கேட்கல... பட்டப்பகல்ல ஒரு விபச்சாரப் பெண்கிட்ட போயிப் பேச எனக்குத் துணிச்சல் வரல. அவளோட பிரச்னை என்னன்னு தெரிஞ்சிக்கிறதுக்காக அவள்கிட்ட ஏதாவது கேட்டு, நான் இது வரை சாப்பிடவே இல்லைன்னு சொல்லிட்டான்னு வச்சுக்கோ. அப்போ நான் என்ன செய்யிறது? அவள் என்கிட்ட பேசுற நேரத்தில கால் ரூபாதான் என் பாக்கெட்ல இருக்குன்னு வச்சுக்கோ. அந்தக் காசை வச்சுச் சாப்பாடு வாங்கித் தர முடியுமா? தேவையில்லாம ரோட்ல போற ஒரு விஷயத்தை நாம கூப்பிட்டுத் தலை மேல வச்சிருக்கிறது மாதிரி ஆயிடும்ல! நான் பூங்காவை விட்டு வெளியே வந்தேன். மாலை கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி இரவு ஆகிக்கிட்டிருந்துச்சு. சாலையிலும், தெருக்களிலும் ஒரே மக்கள் வெள்ளம். நான் பொது வாசக சாலைக்குப் பக்கத்தில் போய்க்கிட்டிருந்தேன். சாலையில் நான் வளைவு திரும்பலாம்னு நினைச்சப்போ, அங்கே நின்னுக்கிட்டு இருந்த கறுத்த தடிமனான போலீஸ்காரன் எரிச்சலுடன் சொன்னான் :

"இங்க பாரு வர்றதை... ராஸ்கல்!"

அந்த ஆள் சொன்னதைக் கேட்டு எனக்குத் தூக்கி வாரிப் போட்டிருச்சு. எனக்கு சொல்லப் போனால் கோபமே வந்திருச்சு. உள்ளே நெருப்பு பத்திக்கிச்சுன்னு வச்சுக்கயேன். "ப்ளடி ராஸ்கல்... நீ யாரைப் பார்த்துடா ராஸ்கல்ன்றே...?" என்று கேட்க நினைச்சேன். ஆனால், அந்தப் போலீஸ்காரனோட பார்வை என்னை நோக்கி இல்லை. நான் பின்னாடி திரும்பிப் பார்த்தேன். எனக்குப் பின்னால் அந்த இளம் வாடகை அழகி வந்துக்கிட்டிருந்தாள்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel