ஏழை விபச்சாரி - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 13116
கோபத்துடன் அந்த ஆள் பார்த்தது அவளைத்தான். பாம்பைப் பார்த்த முயலைப் போல அடுத்த நிமிடம் போலீஸ்காரனைப் பார்த்ததும் அவள் அப்படியே நின்னுட்டா. போலீஸ்காரனோட கறுத்து வீங்கிப் போயிருந்த முகத்துல இருந்த இரண்டு சின்ன கண்களும் அவளைப் பார்த்ததும் சிவந்து போயிருச்சு. கடுமையான குரல்ல அந்த ஆள் சொன்னான் :
"எங்கடீ போறே?..."
அவளோட பெரிய விழிகள் கருணை வேண்டிக் கெஞ்சுவது போல் எனக்குப் பட்டுச்சு. அவள் மெதுவான குரல்ல சொன்னாள்.
"வீட்டுக்கு..."
"போடீ... நீயும் உன் வீடும்..."
அவளுக்குப் பின்னாடி டூ விலரில் வந்துக்கிட்டிருந்த ரெண்டு இளைஞர்களை உத்துப் பார்த்துட்டு போலீஸ்காரன் கேட்டான்:
"இவங்க ரெண்டு பேரையும் நீ எங்கே கூட்டிட்டுப் போறே?"
"நான் எங்கேயும் கூட்டிட்டுப் போகல..."
டூ வீலரில் இருந்த ஆண் சொன்னான்: “நாங்க பஜார்ல துணி வாங்கிட்டு வர்றோம்." சொன்னதோடு நிற்காமல் கையில் இருந்த இரண்டு பார்சல்களையும் திறந்து, அதில் இருந்த வெள்ளைத் துணிகளைக் காண்பித்தான்.
"தெரியும்டா" - என்று கூறியவாறு போலீஸ்காரன் அவள் பக்கம் திரும்பினான். "அடியே... நான் எத்தின தடவை சொல்லியிருக்கேன் இந்த ஏரியாவுல உன் முகம் தெரியக் கூடாதுன்னு...!"
இப்படிக் கூறிய போலீஸ்காரன் அடுத்த நிமிடம் கையில் இருந்த கம்பினால் தன் முழு பலத்தையும் பிரயோகித்து அவள் நெஞ்சின்மேல் ஓங்கி குத்தினான்.
மண் நிறைச்ச சாக்கைக் குத்தினது மாதிரி ஓசை கேட்டுச்சு.
"அய்யோ என் தெய்வமே!"ன்னு சத்தம் போட்ட அவள், ரோட்ல சாய்ஞ்சு விழுந்தா. அப்போ ரோட்ல இருந்த எலெக்ட்ரிக் விளக்குகள் எரிஞ்சுச்சு. இந்த சம்பவத்தைக் கூடியிருந்த நூறு... நூற்றம்பது ஆளுங்க வெறுமனே பார்த்து நின்னுக்கிட்டு இருந்தாங்க. ஆனால், ஒருத்தர் கூட முன்னால் வந்து போலீஸ்காரன்கிட்ட ஒரு வார்த்தை கேட்கல. ஒவ்வொருத்தரா அவங்கவங்க வழியைப் பார்த்து போயிட்டாங்க.
அந்த இடம் முழுக்க ஒரே வெளிச்சமாக இருந்துச்சு. வெளிச்சத்துக்கு மத்தியில அவள் விழுந்து கிடக்கா. அவள் தேம்பித் தேம்பி அழுது கொண்டே இருந்தா.
போலீஸ்காரன் என்கிட்ட சொன்னான் - சிரிச்சுக்கிட்டே:
"சார்... இவளை மாதிரிப் பொம்பளைங்களை நெருப்பு வச்சு எரிக்கணும். இந்த மாதிரித் தேவடியாளுங்க நகரத்துல பெருகிட்டாங்க. இவங்களால ஊர் முழுக்க நோய் பரவ ஆரம்பிச்சிடுச்சு. இவங்க தொழிலைச் செய்யிற டி.எம்.கள்தான் இந்த வண்டியில இருக்கிற ஆளுங்க"ன்னு சொன்ன போலீஸ்காரன் வண்டியில உட்கார்ந்து இருப்பவர்களிடம் "வாங்கடா நாய்களா" என்று உரத்த குரல்ல சத்தம் போட்டான். அவ்வளவுதான் - வண்டியில உட்கார்ந்திருந்த ஆளுங்க "நாங்க டாஃபர் மாமாக்கள் இல்லை"ன்னு அவன் கால்ல விழுந்து கெஞ்சினாங்க. ஆனால், போலீஸ்காரன் கேட்டாத்தானே! அவுங்களை இழுத்துக்கிட்டுப் போயிட்டான்.
நான் அவள் பக்கத்துல போய் நின்னேன். என்னைப் பார்த்ததும் அவளோட மார்புகள் ரெண்டும் குலுங்கக் குலுங்க, அவள் அழுதாள். "சார்.. இங்கே பாருங்க"ன்னு சொல்லிக்கிட்டே அவள் ஜாக்கெட்டைக் கொஞ்சம் அகற்றினாள். வலது பக்க மார்பகத்துக்கு மேலே சிவந்து போன ஒரு காயம்... நெய் அப்பம் போல வீங்கிப் போயிருந்துச்சு!
நீதியின் அடையாளமாம் இது! வண்டியில் போன ஆளுங்களுக்கு என்ன கிடைக்கப் போவுதோ?
"சார்... ஒரு விஷயம் தெரியுமா? போன திங்கட்கிழமை நான் விஷம் தின்னு செத்துப் போகலாம்னு பார்த்தேன். பிறகு என்ன நினைச்சேனோ... உயிரை எதுக்குப் பிசாசுக்குக் கொடுக்கணும்னு அந்த எண்ணத்தைக் கை விட்டுட்டேன்" - அந்தப் பெண் சொன்னாள்.
நான் கேட்டேன் : "உனக்கு அம்மா அப்பா இருக்காங்களா?"
"இல்ல... ஒரு தம்பி இருக்கான். குளிர் காய்ச்சல் வந்து ஆஸ்பத்திரியில கெடக்குறான். அஞ்சாறு நாளாச்சு. அவனைத் தினமும் நான் போய்ப் பார்ப்பேன். கேட்ல காவல்காக்குற ஆள் உள்ளேவிட மாட்டான். உள்ளே போறதுன்னா காசு கொடுக்கணும். இன்னைக்குக் காலையில கொஞ்சம் பழைய கஞ்சி சாப்பிட்டேன். இந்த எமன்கள் இருக்கிற வரை உயிரோட வாழ முடியாது. பேசாம செத்தே போயிருக்கலாம். நேத்து ராத்திரி இந்த போலீஸ்காரன் ஒரு இடத்திற்குப் போகச் சொன்னான். போனால், அங்க ரெண்டு போலீஸ்காரங்க இன்னொரு இடத்துக்குக் கூப்பிட்டுட்டுப் போனாங்க."
நான் ஒண்ணும் பேசல. என் கையில் இருந்த கால் ரூபாயை அவள் கையில கொடுத்திட்டுக் கிளம்பிட்டேன். அன்னைக்குப் பாதி ராத்திரி ஆன பிறகும் எனக்குத் தூக்கம் வரல... அவளோட வலதுபக்க மார்பகத்துக்கு மேலே சிவப்பா தடிச்சுப் போய் இருந்த காயம் கண் முன்னாடி தோணிக்கிட்டே இருந்துச்சு.
"அய்யோ பாவம்..." இளம் அழகியான நர்ஸ் கூறினாள்: "சிந்திச்சுப் பாருங்க... இவளை மாதிரி ஏழையா இல்லாம... விலை உயர்ந்த புடவை கட்டிக்கிட்டு, ஹை ஹீல் செருப்பு மாட்டிக்கிட்டு, தோள்ல வானிட்டி பேகைத் தொங்கப் போட்டுக்கிட்டுப் பந்தாவா ஒரு பெண் நடந்து போயிருந்தா, இப்படியெல்லாம் நடக்க தைரியம் வருமா?"