பிதாமகன் - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 6261
நான் அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு ஒருவித அதிர்ச்சிக்கு ஆளாகிவிட்டேன். என்னுடைய சிம்மாசனத்தில் அமர்ந்து அவளை நோக்கி நான் சிரிக்காமல் இருந்ததே பெரிய விஷயம். மீண்டும் ஒருமுறை பார்த்தபோதுதான் என்னாலேயே புரிந்து கொள்ள முடிந்தது. அவள் கண்களில் ஒரு அமைதியான கெஞ்சல் தெரிந்தது. எனக்கு அப்போதுதான் அது புரிந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் அவளும் அந்த இயேசுவிற்குப் பின்னால் சுற்றித் திரிந்திருக்கிறாள். இப்போது வந்து இயேசுவின் உயிருக்காக என்னிடம் கெஞ்சி நின்றிருக்கிறாள். நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன். டேய் இயேசுவே, சரிதான்... உன்னால் நான் காமக்களியாட்டங்களில் கைதேர்ந்த ஒருத்தியை இழக்க வேண்டிய நேர்ந்துவிட்டதே! இந்த ஒரு குற்றத்திற்காகவே உனக்கு நான் மரண தண்டனை அளிக்கலாம். ஹா!ஹா!ஹா! ஆனால், நான் அதைச் செய்யவில்லை. காரணம், நீ எந்தவித பிரச்சினைகளும் இல்லாதவன். பாவம் நீ. இந்தப் பெண்கள் முட்டாள்களாக இருப்பதால் உனக்குப் பின்னால் நடந்து திரிகிறார்கள். என்னால் அதைப் புரிந்து கொள்ள முடிகிறது. நான் உன்னை மன்னிக்கிறேன். இப்படி நான் நினைத்துக் கொண்டிருக்கும் நிமிடத்தில் ஜூலியாவின் வேலைக்காரி அவளுடைய ஒரு செய்தியை எடுத்துக் கொண்டு என்னை நோக்கி ஓடி வருகிறாள். டேய், உன்னால் நம்ப முடிகிறதா? (நீ நம்புவாய்... இந்த மாதிரியான கனவுகளும் தத்துவ சாஸ்திரங்களும் கலந்த அனுபவங்கள் உனக்கும் உண்டல்லவா?) ஜூலியா எழுதியிருக்கிறாள்; நீங்கள் இந்த நல்ல மனிதனை ஒன்றும் செய்யக் கூடாது. இந்த மனிதனை நான் கடந்த இரவில் கனவு கண்டேன்.
நான் திகைத்துப் போய் உட்கார்ந்துவிட்டேன். நான் நினைத்ததைத் தான் ஜூலியாவும் சொல்கிறாள். அதுவும் கனவின் மூலமாக அறிந்து. அப்பப்பா... இயேசு! நான் இயேசுவின் முகத்தையே ஆச்சரியம் மேலோங்கப் பார்த்தேன். யூதப் பெண்களை மட்டுமல்ல. கனவின் வழியாக வந்து என்னுடைய ரோம் நாட்டுக்காரியைக் கூட நீ வசீகரித்திருக்கிறாய் இல்லையா? இயேசு என்னுடைய முகத்தையே பார்த்தவாறு நின்றிருந்தான். திடீரென்று ஏதோ ஞாபகம் வந்ததைப் போல ஒரு மின்னலைப் போன்று தலையைத் திருப்பி அவன் தனக்குப் பின்னால் மரியமும் மற்றவர்களும் நின்றிருந்த இடத்தைப் பார்த்தான். நானும் உடனே மரியத்தைப் பார்த்தேன். அப்போது அவளுடைய கண்கள் மலர்வதையும், அவளின் கண்ணீரால் நனைந்த முகம் பிரகாசமாகத் தெரிவதையும் நான் பார்த்தேன். எனக்கு அதைப் பார்த்து பொறாமையாக இருந்ததடா. நான் மரியத்திற்கு எவ்வளவு வெள்ளி நாணயங்களை வாரி வாரி தந்திருக்கிறேன்! எவ்வளவோ இனிமையான விஷயங்களை அவளிடம் பேசியிருக்கிறேன். ஆனால், ஒரு முறை கூட அவள் என்னை அப்படிப் பார்த்ததில்லை. எனக்காக ஒருமுறை கூட அவளின் முகம் இந்த மாதிரி பிரகாசமாக மாறியதில்லை. அன்டோனியஸ், ஒரு விதத்தில் பார்க்கப் போனால் இந்தப் பெண்களுக்கு உண்மையில் தேவைப்படுவது என்ன என்பதை யாரால் புரிந்து கொள்ள முடியும்?
டேய், என்னுடைய கை வலிக்க ஆரம்பித்துவிட்டது. உன்னுடைய கடிதம் கிடைத்ததால் உண்டான மகிழ்ச்சியில் இந்த அளவுக்கு எழுதிவிட்டேன். உன்னிடம் கூறுவதற்கு இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. நாளை நான் சொல்வதைக் கேட்டு எழுதக்கூடிய இளம்பெண், சக்கரைக் குட்டி வருவாள். அப்போது மீதி கடிதத்தை எழுதுகிறேன். அவள் பெண்ணாக இருப்பது மட்டுமல்லாமல் ஜூலியாவிற்கு மிகவும் விருப்பமானவளாகவும் இருப்பதால் என்னால் அந்த அளவிற்கு எல்லா விஷயங்களையும் மனம் திறந்து சொல்ல முடியாது. இதுவரை எழுதியதை நான் கொண்டு போய் பூட்டி வைக்கிறேன். இந்தப் பெண்களைச் சிறிதும் நான் நம்பத் தயாராக இல்லை. அழகிய இளம் பெண்ணும், நன்றாகப் பழகக்கூடியவளுமான ரூத் நம்முடைய ரகசியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டாம். அவள் அதைத் தெரிந்து கொண்டால் நம் இருவரைப் பற்றியும் என்ன நினைப்பாள்? நாம் இருவரும் கெட்டு நாறிப் போன மனதைக் கொண்ட இரண்டு ரோமன் கிழவன்கள் என்றல்லவா நினைப்பாள். ஹா!ஹா!ஹா! அப்படி அவள் நினைப்பது இவ்வளவு பெரிய ரோம சாம்ராஜ்யத்திற்கும் மக்கள் தலைவனான டைபீரியஸ் சக்கரவர்த்திக்கும் அவமானமான ஒன்று அல்லவா? ஹோ! ஒரு நல்ல ரோம குடிமகனாக வாழ்வதற்கு படவேண்டிய பாடு இருக்கிறதே! அப்பப்பா...
2
கேட்டு எழுதும் பெண்!
சில தவறுகளைக் கண்டுபிடிக்கிறாள்!
யூதர்கள் வசிக்கும் பகுதியின் ரோமன் கவர்னரான பொந்தியோஸ் பீலாத்தோஸின் கேட்டு எழுதும் பெண்ணான ரூத் (வயது 23) ஜெருசலேமில் இருக்கும் கவர்னரின் தனி அறையில் உட்கார்ந்திருக்கிறாள். அப்போது நேரம் காலை பத்து மணி. அங்கு இருக்கும் தூண்களும் சிற்பங்களும் வெயில் பட்டு நிற்கின்றன. செங்கடலில் இருந்து வறண்ட காற்று வீசுகிறது. முதல் நாள் மழை பெய்ததற்கான அடையாளங்கள் மண்ணில் தெரிகின்றன. வெயிலில் மழையின் வாசனை இருக்கிறது. ஒரு வெண்மை நிற பூனை மண்டபத்தைச் சுற்றியிருக்கும் தூண்களில் ஒன்றை உரசியபடி ரூத்தைப் பார்த்து என்னவோ கேட்பது மாதிரி உரத்த குரலில் கத்துகிறது. ரூத் அதை எடுத்து மடியில் உட்கார வைத்து மெதுவாகத் தடவுகிறாள். ரூத் பூனையிடம்; ‘நீ ஒரு ரோமன் பூனை அல்லவா? உனக்கு எவ்வளவு கிடைத்தாலும் போதாது. போக்கிரி என்றவாறு பூனைக்கு முத்தம் தருவதற்காக அவள் குனிகிறாள். அப்போது பூனை சற்று தள்ளி ஒரு பூச்செடியில் அமர்ந்திருக்கும் ஏதோ ஒரு பிராணியைப் பார்த்தவாறு குதித்து ஓடுகிறது. ரூத் பூனையிடம் ‘போடி, போ! போயி உன் முதலாளியை இங்கே அழைச்சிட்டு வா’ என்கிறாள்.
பிடிக்கப் போனது கிடைக்காமல் பூனை திரும்பி வருகிறது. பிறகு ரூத்தின் பாதத்திலிருந்து தன்னுடைய நீலநிறத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் கண்களை உயர்த்தியவாறு அவளைப் பார்த்து மீண்டும் உரத்த குரலில் கத்துகிறது.
ரூத் உதைக்கிறேன் என்பதைப் போல் தன்னுடைய காலைத் தூக்கியபடி பூனையிடம் ‘ச்சீ! நன்றி கெட்டவளே! போ இங்கேயிருந்து!’ என்கிறாள். தொடர்ந்து பூனையைப் பொய்யான கோபத்துடன் உற்று பார்க்கிறாள். ரூத்தின் நீலநிற ஆடைக்குக் கீழேயிருந்து பூனையை பயமுறுத்துவதற்காக வெளியே வந்த வெண்மையான அழகான அவளுடைய கால் அந்த அறையை மேலும் பிரகாசமாக ஆக்குகிறது. பூனை ரூத்தின் மேஜைக்குக் கீழே சுருண்டு உட்கார்ந்து தன் கண்களை மூடிக் கொள்கிறது.
ரூத் என்னவோ சிந்தித்தவாறு அறையின் சுவர்களைத் தாண்டி தூரத்தில் தெரியும் ஜெருசலேம் நகரத்தையே பார்த்தவாறு அமர்ந்திருக்கிறாள்.
+Novels
Short Stories
July 31, 2017,
May 28, 2018,
March 7, 2016,
June 3, 2016,