பிதாமகன் - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 6351
நான் கொலை செய்யும்படி உத்தரவு பிறப்பித்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கணக்கே இருக்காது என்பதை நீ புரிந்து கொண்டிருப்பாய் என்று நினைக்கிறேன். அதைப் பற்றி எனக்கு கொஞ்சமும் வருத்தமில்லை. நான் எதற்கு வருத்தப்பட வேண்டும்? என்னுடைய சக்கரவர்த்திக்காகவும், நாட்டுக்காகவும் செய்யவேண்டிய வேலையை நான் செய்தேன். அவ்வளவுதான். ஆனால், அந்தப் பையனை புரோகிதர்களிடம் அடிக்கவும், கொல்லவும் விட்டதற்காக உண்மையிலேயே நான் வருத்தப்படுகிறேன். அப்படி அவர்களுடன் போக வேண்டிய ஆள் இல்லை அவன் என்று யாரோ என்னைப் பார்த்து கூறுவது போல் இருந்தது. ஆனால், அவர்களுடன் போகாமல் இருக்க முடியாது என்றதொரு சூழ்நிலையை அந்த இளைஞனே உருவாக்கிவிட்டிருந்தான். காரணம்& அவனுடைய மனது வேறெங்கு நோக்கியோ இருந்தது. மனிதனாக இருந்தால் இருக்கக் கூடிய சூழ்நிலையைப் பற்றிய ஒரு தெளிவான அறிவு இருக்க வேண்டாமா? குறிப்பாக ஆபத்தான கட்டத்தில்! டேய், அன்டோனியஸ்! என்னுடைய வாழ்க்கையிலேயே ஒரு மனிதனைக் காப்பாற்ற வேண்டும் என்று நான் நினைத்திருந்தால், அது அவனைத்தான். ஆனால், அதை அவனாவது புரிந்து கொள்ள வேண்டாமா? ரோமசாம்ராஜ்யத்தின் ஒரு உயர்ந்த பதவியில் இருக்கும் மனிதன் எவ்வளவு தூரம் வழியை விட்டு அகன்று போக முடியும்? உண்மையிலேயே சொல்லப் போனால் எனக்கு அந்த மனிதனிடம் ஒருவித ஈடுபாடு தோன்றியது. நிச்சயமாக அது அனுதாபமல்ல. அந்த மனிதன் அனுதாபத்தை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு ஆள் என்பதாக என் மனதிற்குப் படவில்லை. என்னால் புரிந்து கொள்ளக்கூடிய, நெருக்கத்தை உண்டாக்குகிற ஏதோ ஒன்று அந்த மனிதனிடம் இருந்தது. அது அந்த மனிதனின் சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்த முகத்தையும், கஷ்டச் சூழ்நிலையையும் தாண்டி அவனிடம் நிழல் பரப்பி விட்டிருந்தது. யாருக்கும் தலை வணங்காத குணம், மீனைப் போன்றதொரு நழுவும் தன்மை. நாம் எந்த அளவிற்கு கையை நீட்டினாலும் அருகிலேயே நின்றிருப்பேன் என்றொரு பிடிவாத குணம்... அதே நேரத்தில் அந்த மனிதன் நின்று கொண்டிருந்த விதத்திலும், பார்வையிலும், சின்னச் சின்ன அசைவுகளிலும் ஒருவித அன்பு வெளிப்பட்டது. அடிகளை வாங்கி அங்கே நின்று கொண்டிருக்கும் நிமிடத்திலும் அத்தர்மரம் பூத்ததைப் போல அந்த மனிதனிடமிருந்து அன்பு என்றொரு நறுமணம் கிளம்பி நாலா பக்கங்களிலும் பரவிக் கொண்டிருந்தது. அவன் ஒரு திருடனல்ல. பொய் சொல்லக் கூடியவனல்ல. ஏதோ ஒரு கனவிற்குப் பின்னால் நடந்து கொண்டிருக்கும் ஒரு சாது என்பதும், ஆபத்தான நிமிடத்தில் கூட அந்த மனிதன் அந்த கனவின் பிடியில்தான் நின்று கொண்டிருப்பான் என்பதும் நான் புரிந்து கொண்ட விஷயங்கள். நீ சொல்லலாம் அந்த மனிதனைப் பார்த்ததும் எனக்கு எப்போதோ பார்த்த யாரோ ஒரு மனிதனை ஞாபகத்தில் வந்திருக்குமோ என்று இல்லையடா. நிச்சயமாக இல்லை. சத்தியமாகச் சொல்கிறேன் இல்லை. எப்போதாவது ஒரு முறையாவது தெளிவான சிந்தனையுடன் நான் பேசுவதற்கான சூழ்நிலை உண்டாகாதா என்ன? நல்ல விஷயங்களைப் பார்க்கிற போது அதைக் கண்டு உணரக்கூடிய திறமை எப்போதாவது ஒரு முறை எனக்கு இருக்கக்கூடாதா என்ன? நீ என்னைக் கிண்டல் பண்ணினால் கூட பரவாயில்லை. அந்த மனிதனைப் பார்க்கும் போது என் மனதில் தோன்றியது என்ன தெரியுமா? ஒரு பூனைக் குட்டியையோ ஒரு நாய்க் குட்டியையோ கையிலெடுத்து தூக்குவதைப் போல அந்த மனிதனை மார்போடு சேர்த்து வைத்துக் கொஞ்சி ஆறுதல்படுத்த வேண்டும் போல் இருந்தது எனக்கு. இன்னொரு வார்த்தையில் சொல்வதாக இருந்தால் ஒரு பறவைக் குஞ்சைப் போல அந்த மனிதனை எடுத்து உள்ளங்கையில் வைத்து தடவ வேண்டும் போல் நான் ஆசைப்பட்டேன். ஆனால், அப்படி கொஞ்சும் போது ஒரு கடியோ இல்லாவிட்டால் ஒரு கொத்தோ எனக்குக் கட்டாயம் கிடைக்குமென்றும் நான் எதிர்பார்த்தேன். காரணம்& அன்பு என்ற ஒன்றிற்குப் பின்னால் அந்த மனிதன் வேறு ஏதோ ஒன்றை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தது தான். டேய், அன்டோனியஸ்! அந்த மனிதன் ஒரு மந்திரவாதி என்று யாரோ என்னிடம் சொன்னார்கள். அப்படிப்பட்ட ஒரு ரகசிய சக்திதான் அந்த மனிதனுக்குப் பின்னால் யாருக்கும் தெரியாமல் மறைந்து நின்று அவனை மரணத்தை நோக்கிப் பிடித்து இழுத்திருக்க வேண்டும். இதெல்லாம் யாருக்குத் தெரியும்? என்ன இருந்தாலும் யூதர்களின் ரட்சகன் என்று கூறிக்கொண்ட அவன் கடைசியில் ஒரு சிலுவைத்தடி மேல் உடம்பை வளைத்துக் கிடந்து இறுதி விடை சொல்ல வேண்டி வந்தது. அந்த மனிதனும் தப்பிக்க முடியவில்லை. யூதர்களும் காப்பாற்றப்படவில்லை. நான் இந்த விஷயத்தை உன்னிடம் சொல்ல காரணம், நீ உன்னுடைய ஆதரவு இல்லத்தை இதுபோன்ற ஆபத்தான கட்டத்திற்குக் கொண்டு போய் விடக்கூடாது என்பதற்காகத்தான். இதைப்பற்றி நீ நினைத்துப் பார்க்கும் போது உனக்கு என்ன தோன்றுகிறது? நீ நாளைக்கு ஒரு சிலுவையில் வேதனைகளைத் தாங்கிக் கொண்டு இறுதி மூச்சை விடுகிறாய் என்று வைத்துக் கொள். அதனால் யாருக்கு என்ன பிரயோஜனம்? கொஞ்சம் பெயர் கெட்டுப் போயிருக்கும். அவ்வளவுதான். வயது குறைவாக இருக்கும் பட்சம், சில இளம்பெண்கள் அதற்காக வருத்தப்பட்டு நின்றிருப்பார்கள். நான் சொல்வது உண்மைதானேடா, ஹா!ஹா!ஹா!
இனி ஒரு தமாஷான விஷயத்தைச் சொல்கிறேன். நான் அந்த மனிதனை விசாரித்துக் கொண்டிருக்கும் பொழுது சிறிது தள்ளி கவலை தோய்ந்த முகங்களுடன் நின்றிருந்த இளம்பெண்களை நான் ஓரக் கண்களால் பார்த்தேன். எந்தவிதமான எண்ணமும் இல்லாமல் வெறுமனேதான். தீர்ப்பு சொல்பவனுக்கும் அழகுணர்ச்சி என்ற ஒன்று வேண்டும்தானேடா?
அப்போது அங்கே நின்று கொண்டிருக்கிறாள் கண்களில் நீர் வழிந்தபடி& என்னுடைய சினேகிதி, யூத ரசிகைகளின் முடிசூடா மகாராணி சாட்சாத் மக்தலேனாக்காரி மரியம்! என்னுடைய தனி அறைக்கு எத்தனை முறை நான் அவளை யாருக்கும் தெரியாமல் சுவரைத் தாண்டவைத்து, பேரானந்தத்தின் உச்சத்தை அடையும் இரவுகளை அவளுடன் நான் செலவிட்டிருக்கிறேன் தெரியுமா? சுவரைத் தாண்டிக் குதிப்பது என்பது கூட அவளைப் பொறுத்தவரை ஒரு வித காமக் களியாட்டம்தான். சில நாட்களாகவே அவளை நான் பார்க்க முடியவில்லை. அவளைப் பற்றிய எந்தத் தகவலும் எனக்கு வரவில்லை. நான் அவளைப் பற்றி பல இடங்களிலும் விசாரித்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவளோ இப்போது ஒரு பரிசுத்தமான பெண்ணைப் போல அழுது கலங்கிய கண்களுடன் என்னையே பார்த்தவாறு நின்றிருக்கிறாள்.