வெறும் ஒரு இனிப்புப் பலகாரம்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7162
விமலா, ஏன் உன் கணவர் வரவில்லை?" வாசலில் நின்று கொண்டு என்னை அழைத்திருந்த கிருஷ்ணமூர்த்தி கேட்டார்:"ஒரு மணி நேரமாவது வர வேண்டுமென்று நான் கூறினேன் அல்லவா? குடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை... உணவு சாப்பிடுவதற்காவது..."
"டூர் முடிந்து இன்றுதான் பாட்னாவிலிருந்து திரும்பி வந்திருக்கிறார்." நான் சொன்னேன்: "மிகவும் சோர்வடைந்து போய் இருக்கிறார். படுத்து சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டுமென்று சொன்னார்."
"நீயாவது வந்தாயே! சந்தோஷம்". அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்: "வா... வராந்தாவில் அவர்கள் எல்லாரும் உன்னை எதிர்பார்த்து உட்கார்ந்திருக்கிறார்கள். நாங்கள் குடிக்க ஆரம்பித்திருக்கிறோம் அவ்வளவுதான்."
என்னை அழைத்திருந்தவர் ஐம்பத்தைந்து வயதான- ஒரு திருமணம் ஆகாத மனிதர் தடிமனான கழுத்தையும் கனமான கைகளையும் கொண்ட ஒரு மனிதர்.
வராந்தாவில் நான் எதிர்பார்த்திருந்த அனைவரும் இருந்தார்கள். பொதுவாக அந்த வீட்டிற்கு வரக்கூடிய விருந்தாளிகள். பொருளாதார நிபுணர், அவருடைய மனைவி, ஷிப்பிங் கம்பெனியின் இயக்குநரும் திருமணமாகாதவருமான இன்னொர நடுத்தர வயது மனிதர், வெளுத்து தடிமனான கர்ப்பிணிப் பெண்களை ஞாபகப்படுத்தும் உடலமைப்பைக் கொண்ட வக்கீல் ராய், அழகியும் கவிதை எழுதும் பெண்ணுமான மனைவி, கல்கத்தா சொசைட்டியின் விளக்கான மிஸ். இந்திரா ராவ், பந்தயக் குதிரைகளின் உரிமையாளரான மார்வாடி கிழவர், தடித்துப் போய் வெள்ளை நிற ஆடை அணிந்த மகாராணி...
"மேனன் எங்கே?" பொருளாதார நிபுணர் கேட்டார்.
"டூர் முடிந்து இப்போத்தான் திரும்பி வந்திருக்கிறார். மிகவும் சோர்வாக இருப்பதாகச் சொன்னார்." நான் சொன்னேன்.
"மிஸ்டர் மேனனுக்கு எங்களைப் பிடிக்காது. அதனால் இப்படிப் பட்ட சாக்குப் போக்குகளைக் கூறிக் கொண்டிருக்கிறார்." கவிதை எழுதும் பெண் சொன்னாள். அவள் ஒரு திண்டின் மீத கால்களைத் தூக்கிக் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவளுடைய கையில் இருந்த கண்ணாடிக் குவளையில் இரண்டு அங்குலம் விஸ்கி மட்டுமே மீதமாக இருந்தது.
"அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. களைப்பாகத்தான் இருந்தார்." நான் சொன்னேன்.
"விமலா தேவி, விமலா ராணி, பிரியமான விமலா... நீங்கள் எனக்கு அருகில், இந்த ஸோஃபாவில் உட்காருங்க." வக்கீல் தடிமனான கண் இமைகள் வழியாகப் பார்த்துக் கொண்டே தன்னுடைய தெளிவான குரலில் சொன்னார்: "நான் உங்களைப் பார்த்து எவ்வளவு காலம் ஆகிவிட்டது!"
"ஹ... ஹ... ஹ... என் கணவர் உங்கள் மீது காதல் கொண்டிருக்கும் ஒரு மனிதர், விமலா." கவிதை எழுதும் பெண் சொன்னாள்: "எப்போதும் உங்களைப் பற்றித்தான் பேச்சு."
பொருளாதார நிபுணரின் மனைவி என்னுடைய முகத்தையே பார்த்தாள். தொடர்ந்து வக்கீலின் சிவந்த முகத்தையும். அதற்குப் பிறகு அவள் எதுவும் பேசாமல் முகத்தைத் தாழ்த்தி வைத்துக் கொண்டு தன்னுடைய கால் விரல்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"சிந்துராணி, உங்களுக்குப் பொறாமை சிறிதும் இல்லை?" மகாராணி சிவந்த பற்கள் வெளியே தெரியும் வண்ணம் ஒரு சிரிப்பைச் சிரித்தவாறு கேட்டாள்: "இந்தப் புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் வினோதமான பிறவிகள் தான்."
"மகாராஜா இன்னொரு பெண்ணைப் பற்றிப் புகழ்ந்து பேசினால், உங்களுக்குக் கோபம் வருவதுண்டா?" சிந்துராணி கேட்டாள்.
"புகழ்ந்து பேசினாலும் ஆட்சேபனை இல்லை. பேசி மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. அவர் என்னுடைய முகத்தைப் பார்த்தே எவ்வளவு காலம்ம ஆகிவிட்டது!"
மகாராணி தன்னுடைய மெல்லிய சில்க் புடவையின் ஓரத்தை எடுத்து சுருக்கங்கள் விழுந்திருந்த தன்னுடைய முகத்தை ஒரு முறை துடைத்தாள். அவளுடைய கண்களுக்கு நடுவில் கறுத்த நிழல்கள் விழுந்திருந்தன.
"விமல்... உனக்கு என்ன வேண்டும்?" என்னை அழைத்திருந்தவர் கேட்டார்: "கொஞ்சம் குளிர்ந்த ஷெரி வேணுமா? இல்லாவிட்டால் வெர்முத்... ஒயின்... விஸ்கி... கொஞ்சமாவது குடிக்கணும்."
"எனக்கு தக்காளி சாறோ வேறு ஏதாவதோ கொடுத்தால் போதும். நான் குடிப்பதில்லை என்று சத்தியம் பண்ணியிருக்கிறேன்."
"குழந்தைகளின் சத்தியம்! இந்த வயதில் சத்தியத்திற்கு விலை மதிப்பே இல்லை." ஷிப்பிங் இயக்குநரான அருண் சொன்னார்: "எனக்கு நாற்பத்தொன்பது வயது கடந்துவிட்டது. எனினும், சத்தியத்தின் தேவை புரியவில்லை."
"அதனால்தான் உங்களுக்கு ஒரு மனைவி கிடைக்கவில்லை." சிந்துராணி சொன்னாள்.
"சிந்துராணி, நான் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா? எனினும், நீங்கள் என்னைக் கிண்டல் பண்ணுவது..."
"நான் கிண்டல் எதுவும் செய்யவில்லை. எனக்கு கிண்டல் பண்ணுவது சிறிதும் பிடிக்காத விஷயம். இவ்வளவு காலம் ஆன பிறகும் உங்களால் என்னைப் புரிந்து கொள்ள முடியவில்லையே, அருண்? ஆச்சரியம்தான்..."
'உங்களைப் புரிந்து கொள்வதற்கு முடிந்தால், நான் எந்த அளவிற்கு அதிர்ஷ்சாலியாக இருப்பேன்!' பொருளாதார நிபுணர் ஒரு சிகரெட்டை எடுப்பதற்காக நான் உட்கார்ந்திருந்த ஸோஃபாவைத் தேடி வந்தார். "நீ ஏன் என்னுடைய கடிதத்திற்கு பதில் எழுதவில்லை?" அவர் தலையைக் குனிந்து கொண்டு சிகரெட்டை எடுப்பதற்கு மத்தியில் தாழ்ந்த குரலில் கேட்டார்: "என்னுடைய பொறுமையைச் சோதித்துப் பார்க்கிறாயா,"
"சொந்த விஷயங்களைப் பற்றிப் பேசுவதற்கு அனுமதிக்கக் கூடாது, மிஸ்டர் கிருஷ்ணமூர்த்தி." என்னை அழைத்திருந்தவரிடம் வக்கீல் உரத்த குரலில் சொன்னார்: "இதோ, இங்கே இவர்கள் இருவரும் சேர்ந்து சொந்தவிஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்."
ஒரு சிறிய குவளையில் ஒயினை வைத்துக் கொண்டு கிருஷ்ணமூர்த்தி எனக்கு அருகில் வந்தார்.
"குடி..." பொருளாதார நிபுணா சொன்னார்: "இன்று என் மனைவி கூட குடிக்க ஆரம்பித்திருக்கிறாள்."
"ஆனால், எனக்கு தலை சுற்ற ஆரம்பித்திருக்கிறது." அவருடைய மனைவி சொன்னாள்: "எனக்கு இதைவிட காப்பி மீதுதான் விருப்பம். காப்பி இல்லாவிட்டால், நிறைய பால் ஊற்றி சேர்க்கப்பட்ட தேநீர்."
"நான் தேநீரில் பால் ஊற்றுவதே இல்லை." அருண் சொன்னார்: "வெறும் எலுமிச்சம்பழத்தை மட்டும் சேர்ப்பேன்."
"அருண், அதனால்தான் நீங்கள் இப்படி ஒரு எலும்புக்கூடாக இருக்கிறீர்கள்." சிந்துராணி சொன்னாள்.
"தேநீர் குடிப்பதைப் பற்றி கூறியபோதுதான் எனக்கு ஞாபகத்தில் வருகிறது..." மிஸ் இந்திரா ராவ் சொன்னாள்: "நேற்று சாயங்காலம் நான் தேநீர் பருகுவதற்காக திருமதி போஸின் வீட்டிற்குப் போயிருந்தேன். பத்திரிகை ஆசிரியர் வாட்ஸன், நம்முடைய அந்த தடிமனான ராணா... இப்படி பலரும் இருந்தார்கள். வாட்ஸன் தேநீர் கோப்பையைத் தரையில் போட்டுவிட்டார். "பரவாயில்லை... பரவாயில்லை..." என்று திருமதி போஸ் சொல்ல ஆரம்பித்துவிட்டாள். ஆனால், அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் விழுந்து கொண்டிருந்தன. சைனாவின் வேலைப்பாடுகள் கொண்ட கோப்பை அது. வாட்ஸன் சமீப காலமாக பெரிய கவனக்குறைவான மனிதராக ஆகியிருக்கிறார்.