வெறும் ஒரு இனிப்புப் பலகாரம் - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7165
"நீங்கள் ஏன் அந்த ஆளை விட்டெறியக் கூடாது?" அருண் கேட்டார்: "ஒரு திருமண ரத்து செய்து கொள்ளக் கூடாதா?"
அறையின் இன்னொரு பகுதியில் இருந்து மார்வாடி கிழவரின் குரல் உரத்தர ஒலித்தது:
"நான் உங்களுடைய புகைப்படத்தை கடந்த மாதத்தின் 'ஆன்லுக்க'ரில் பார்த்தேன்."
"அப்படியா?" இந்திரா கேட்டாள்: "அது அந்த அரசாங்க இல்லத்தின் விருந்தின் போதுஎடுத்த புகைப்படங்களில் ஒன்றாக இருக்க வேண்டும். என்னிடம்... ஓ... மகாராஜா ஃபோன் பண்ணி சொன்னார். நல்ல புகைப்படம் அது இது என்று... உண்மையிலேயே எனக்கு இந்த விஷயங்களில் எல்லாம் சிறிதும் விருப்பமில்லை. புகைப்படம்... பப்ளிசிட்டி..."
"நல்ல உணவு கிடைக்க வேண்டுமென்றால், இந்த வீட்டிற்கு வரவேண்டும். சந்தேகமேயில்லை. "சிந்துராணி சொன்னாள்: "இங்குள்ள சமையல்காரனைப் போன்ற சமையல்காரன் கல்கத்தாவில் வேறு எங்குமேஇல்லை."
"கல்கத்தாவில் என்ன இருக்கு?" கிருஷ்ணமூர்த்தி கேட்டார்: "சிந்துராணி, உங்களுடைய வங்காளிகளுக்கு வாழ்வதற்கே தெரியவில்லையே! சோம்பேறிகள்..."
"வங்காளிகள் அனைவரையும் எதிர்த்துப் பேசுவது சிந்துராணியை அவமானப்படுத்துவதைப் போன்றது..." அருண் சொன்னார்: "என்னைப் பற்றி கேவலமாக பேசினாலும் பரவாயில்லை. ஆனால், ஒரு முக்கியமான பெண்ணை..."
"பேசாம இருங்க, அருண்." சிந்துராணி சொன்னாள்: "என்னை அவமானப்படுத்துவதற்கு மட்டுமல்ல- என் உடலில் காயம் உண்டாக்குவதற்குக்கூட கிருஷ்ணமூர்த்திக்கு அதிகாரம் இருக்கிறது!"
"பேஷ்!" மார்வாடி கிழவர் சொன்னார்: "பேஷ்! உங்களை விரும்பாத பெண் இல்லை, கிருஷ்ணமூர்த்திஜி."
"பெண்களின் வழிபாட்டை அடைவதற்கு அதிர்ஷ்டம் வேண்டும். அழகோ அறிவோ அதற்குத் தேவையில்லை." அருண் சொன்னார்: "நல்ல அதிர்ஷ்டம்தான் தேவை. எனக்கு அது சிறிதும் இல்லை."
"நீங்கள் ஏன் சாப்பிடுவதற்கு எதுவுமே எடுக்கவில்லை, விமலாதேவி?" வக்கீல் எனக்-கு அருகில் வந்து கேட்டார்: "நான எடுத்துத் தரட்டுமா? கொஞ்சம் பிரியாணி?"
"எனக்கு தூக்கம் வருகிறது." நான் சொன்னேன்: "அதனால்தான் நான் இந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கு குடித்துப் பழக்கமில்லை."
"உணவு சாப்பிட்டால் அதெல்லாம் போய்விடும்." வக்கீல் சொன்னார்: "நான் உருளைக்கிழங்குகள், தக்காளிகள் ஆகியவற்றைக் கொண்டு வந்து தருகிறேன். இல்லாவிட்டால் ஒரு கட்லெட்."
வக்கீல் என் கையில் ஒரு ப்ளேட்டைத் தந்துவிட்டு, எனக்கு அருகில் இருந்த இன்னொரு நாற்காலியில் உட்கார்ந்தார். அவருடைய முகம் சிவந்திருந்தது. கறுத்த முந்திரிப் பழங்களைப் போல இரந்த கண்களில் ஒரு கலக்கம் தெரிந்தது.
"உங்களைப் போன்ற மலையாளிகள் ஒரு நாளில் மூன்று முறையாவது குளிப்பீர்கள் என்று கேள்விப்பட்டது உண்மைதானா?" அவர் கேட்டார்: "நீங்கள் மூன்று முறை குளிப்பீர்களா, விமலா ராணி?"
"இல்லை... இரண்டு முறை மட்டும் குளிப்பேன். ஆனால், நேரம் கிடைக்கும் போதெல்லாம் குளிப்பது விருப்பமான விஷயம்தான்." நான் சொன்னேன்.
"ஒரு உதவி செய்யுங்க, விமலாதேவி." வக்கீல் தன் குரலைத் தாழ்த்தியவாறு சொன்னார்: "என் வீட்டிற்கு வந்து ஒரு நாள் குளிங்க.. என் குளியலறைக்குள் ஒவ்வொன்றும் இந்த அறையைவிட பெரியனவாக இருக்கும். குளியல் தொட்டிக்கு அருகில் ஃபோனும் இருக்கு. ஒரு முறை அங்கு வந்து குளிங்க..."
"யோசிக்கிறேன்."
"யோசிக்கிறதுக்கு என்ன இருக்கு? குளிங்க... குளிக்கும் போது உதவி செய்வதற்கு ஆள் வேண்டுமென்றால்..."
"நீங்கள் ஏன் இந்த கிச்சடியைச் சாப்பிடவில்லை மிஸ்.ராவ்?" மார்வாடி கிழவர் உரத்த குரலில் கேட்டார்: "இது மிகவும் சுவையாக இருக்கிறதே-?"
"எனக்கு தானியங்களைக் கண்டால் பயம்." இந்திரா ராவ் ஒரு வெள்ளரித் துண்டை எடுத்துக் கடித்துக் கொண்டே சொன்னாள்: "சாதத்தையோ சப்பாத்தியையோ சாப்பிட்டால், ஒரே நாளில் நான் தடியாகிவிடுவேன். தடிமனாகிவிட்டால், பிறகு... வாழ்ந்து பிரயோஜனமே இல்லை."
"அதெல்லாம் இந்த வயதில் தோன்றும்." மகாராணி சொன்னாள்: "என் வயதை அடைந்துவிட்டால் உடலில் தடிமனும் மெலியும் முக்கியமே இல்லாத விஷயங்களாக ஆகிவிடும். ஜீரணம் சரியாக இருக்க வேண்டும். தூக்கமும் அப்படித்தான். மனிதர்களுக்கு வேறு எதுவுமே தேவையில்லை.
"நான் காலையில் 'த்ரிபாலா' சாப்பிடுவது உண்டு." கிருஷ்ணமூர்த்தி சொன்னார்: "அதைச் சாப்பிட ஆரம்பித்த பிறகு, என்னுடைய உடல் நலம் மிகவும் நன்றாக ஆகிவிட்டிருக்கிறது."
"எனக்கு உடல் நலம் முற்றிலும் சரி இல்லை." பொருளாதார நிபுணரின் மனைவி சொன்னாள்: "வாந்தி வருவதைப் போல இருக்கு. நான் அதையெல்லாம் குடித்திருக்கவே கூடாது."
"உங்களை நான் மெட்ரோவில் பார்த்தேன்." மார்வாடி கிழவர் இந்திரா ராவின் ப்ளேட்டில் சில உணவுப் பொருட்களைப் பரிமாறிக் கொண்டே சொன்னார்: "உங்களுடன் ஒரு ஆள் இருந்தார். சிவப்பு நிறத்தில் தலையில் துணி அணிந்திருந்த ஒரு வயதான மனிதர்."
"அது பேராசிரியர் கீர்த்திக்கர்." இந்திரா கூறினாள்: "அவரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்களே! அமெரிக்காவில்..."
"விமலா ராணி, நீங்கள் ஏன் எதுவுமே சாப்பிடவில்லை?" வக்கீல் கேட்டார்.
"நான் இங்கு அமர்ந்திருப்பதில் ஆட்சேபனை இருக்கிறதா?" பொருளாதார நிபுணர் ஒரு நாற்காலியை எங்களுக்கு அருகில் எடுத்துப்போட்டுக் கொண்டே கேட்டார்.
"ஆட்சேபனை!" வக்கீல் உதடுகளைக் காட்டிக் கொண்டே சொன்னார்: "என்னுடைய ஆட்சேபனை! அதை யார் பொருட்படுத்துவார்கள்?"
"விமலா, நீ நான் கூறுவதை கவனமாகக் கேட்க வேண்டும்." பொருளாதார நிபுணர் சொன்னார்: "மனிதனின் வெளிச்சம் எது? சூரியன். சூரியன் இல்லாவிட்டால் சந்திரன். சந்திரன் இல்லாவிட்டால் நெருப்பு. நெருப்பு அணைந்துவிட்டால் சத்தம். சத்தம் நின்று விட்டால் எது வெளிச்சத்தைத் தருகிறது? ஆன்மா... அப்படித் தானே?"
"நீங்கள் நிறைய குடித்திருக்கிறீர்கள்!" நான் சொன்னேன்: "இப்போது உபநிஷத்தைக் கற்றுத் தர முயற்சிக்காமல் இருப்பது நல்லது."
"நீங்கள் விமலாவின் குருவா?" வக்கீல் கேட்டார்.
"குருவாக இருப்பதற்கு சிறிதும் விருப்பமில்லை." பொருளாதார நிபுணர் சொன்னார்: "விருப்பம் இருந்தது. அது சிறிதும் இல்லாமல் போய்விட்டது."
"இப்போது என்ன விருப்பம் இருக்கிறது?" வக்கீல் கேட்டார்.
"விமலா... இங்கே பார்..." பொருளாதார நிபுணர் சொன்னார்: "நான் கூறுவதைக் கேள்."
"நான் வீட்டிற்குப் போகிறேன்." நான் சொன்னேன்: "என் கணவர் என்னை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பார்."
"நீங்கள் உங்களுடைய கணவர் மீது அன்பு வைத்திருக்கிறீர்களா?" வக்கீல் கேட்டார்: "உண்மையாகவே நீங்கள் அவரைக் காதலிக்கிறீர்களா?"
நான் தலையைக் குலுக்கினேன்.
"காதல் பற்றிய பேச்சு ஆரம்பமாகிவிட்டது." அறையின் இன்னொரு ஓரத்தில் நின்று கொண்டு அருண் உரத்த குரலில் கூறினார்: "எப்போதும் காதல்தான். எனக்கு இதையெல்லாம் கேட்டுக் கேட்டு மனசே வெறுப்பாயிடுச்சு."
"உங்களுக்கு இதயம் இருக்கிறதா?" சிந்துராணி ரசகுல்லாவைத் தின்று கொண்டே கேட்டாள்: "உங்களுடைய இதயமும் உங்களைப் போல ஈரமே இல்லாத ஒரு பொருளாகிவிட்டது."