வெறும் ஒரு இனிப்புப் பலகாரம் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7165
"அழகு என்று சொன்னால் ஒரு இளம்பெண்." வக்கீல் சொன்னார். அவருடைய மடியில் வைத்திருந்த மஞ்சள்நிறப் பட்டுத் தலையனையை எடுத்து, அதை அவர் இரண்டு முறை முத்தமிட்டார்.
"வக்கீல் கூறிய கூற்றுடன் நானும் உடன்படுகிறேன்." அருண் சொன்னார்.
"என்னுடைய இதயத்தை மேலும் அதிக வேகத்துடன் துடிக்கச் செய்பவள் யாரோ, அவள்தான் அழகி." கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
சிந்துராணி தன்னுடைய கூந்தல் சுருள்களை ஒரு கையால் ஒதுக்கிவிட்டவாறு, கிருஷ்ணமூர்த்தியை அன்புடன் பார்த்தவாறு புன்னகைத்தாள். அதைப் பார்த்ததாலோ என்னவோ, அருண் மேலும் ஒரு பெக் விஸ்கியை உள்ளே தள்ளிவிட்டு, தலையைக் குனிந்து கொண்டு தன்னுடைய செருப்புகளின் அழகைப் பார்த்தவாறு எந்தவித அசைவும் இல்லாமல் உட்கார்ந்திருந்தார்.
"எனக்கு தலை சுற்றுவதன் காரணமாக எழுந்திருக்க முடியாது." பொருளாதார நிபுணரின் மனைவி யாரிடம் என்றில்லாமல் கூறினாள்: "உணவு சாப்பிடுவதற்கு எப்படிப் போவேன்?"
"... உங்களுடன் இன்னொரு பெண்ணும் இருந்தாள்." மார்வாடி கிழவர் சொன்னார்.
"என்னுடைய வாழ்க்கையைத் துன்பமயமாக ஆக்கியதே ஒரு இளம்பெண் தான்..." பொருளாதார நிபுணர் சொன்னார்: "இளம் பெண் என்று கூற முடியாது... முப்பது வயதிற்குக் கீழே..."
"நீங்கள் முகத்தைக் கழுவி விட்டு வாங்க..." கிருஷ்ணமூர்த்தி சொன்னார்: "வாங்க... நான் குளியலறையைக் காட்டுறேன்."
"முகம் கழுவுவதால் என்ன கிடைக்கப் போகிறது? என்னுடைய இதயத்தைத்தான் கழுவ வேண்டும். அவளுடைய குலுங்கல் சிரிப்பு நிறைந்திருக்கும் அந்த இதயம்..."
"இதைக் குடிச்சிருக்க வேண்டாம்." பொருளாதார நிபுணரின் மனைவி சொன்னாள்: "ஏதாவது எலுமிச்சம் பழ நீரையோ காப்பியையோ குடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பம்பாயைச் சேர்ந்த எங்களுக்கு இதெல்லாம் பழக்கமில்லை."
அதுவரை உறங்கிக் கொண்டிருந்த மகாராணி உடல் முழுவதையும் சற்று அசைத்தவாறு கொட்டாவி விட்டாள்.
"ஹரே ராம்... பொழுது போனதே தெரியவில்லை. உணவுக்கான நேரம் ஆகவில்லையா?" அவள் கேட்டாள்.
கிருஷ்ணமூர்த்தி எழுந்து உள்ளே சென்றார்.
"என்னுடன் இருந்தது ராணா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்." இந்திரா சொன்னாள்: "நாங்க ஒரு மாதம் அந்த ஹோட்டலில் ஒன்றாகத் தங்கினோம். அதற்குப் பிறகுதான் ஸ்விட்சர்லாண்ட்டிற்குச் சென்றோம். அங்கு இருக்கும் போது..."
"நானும் இங்கு உட்காரட்டுமா?" வக்கீல் மஞ்சள் நிறத் தலையணையை எடுத்தவாறு எனக்கு அருகில் வந்தார்.
"என்னால் தனியாக ஒரு ஸோஃபாவில் உட்கார்ந்திருக்க முடியாது. ஒரு சந்தோஷமில்லாத செயலைச் செய்வதைப் போல... ஒரு பயம்... விமலா ராணி, என் கையைப் பிடிச்சுப் பாருங்க... இங்கே... எந்த அளவிற்கு குளிர்ச்சியா இருக்கு... இல்லையா?" அவர் சொன்னார்.
"என் கைக்கு அருகில் உங்களுடைய கை எந்தஅளவிற்கு வெள்ளையா இருக்கு. இரவும் பகலும் போல...
விமலாராணி, விமலா... இந்த இரவு இல்லாமல் நான் என்ற பகலால் வாழ முடியாது. ஓய்வெடுக்க முடியாது..."
"நீங்கள் இந்த அளவிற்கு குடித்திருக்க வேண்டியதில்லை." நான் சொன்னேன்.
"கல்கத்தாவில் யார்தான் குடிக்காமல் இருக்கிறார்கள்? மற்றவர்களின் மதுவைக் குடிப்பதுதானே எல்லாருடைய முக்கிய பொழுதுபோக்காக இருக்கிறது!" அருண் சொன்னார்.
"எனக்கு காப்பிதான் பிடிக்கும். நிறைய பால் ஊற்றப்பட்டது." பொருளாதார நிபுணரின் மனைவி சொன்னாள். அவளுடைய வைர நகைகளின் பிரகாசம் திடீரென்று குறைந்துவிட்டதைப் போல தோன்றியது. முகம் வியர்வை காரணமாக நிறம் குறைந்து காணப்பட்டது.
"என் வாழ்க்கையிலேயே சோகம் எது தெரியுமா?" பொருளாதார நிபுணர் கேட்டார். அவருடைய கண்ணாடிக் குவளையில் அப்போதும் கொஞ்சம் ஜின் மீதமிருந்தது. "உங்களுக்கு என்னுடைய சோகம் தெரியுமா?"
"எங்களுக்கு தெரிய வேண்டாம்." மகாராணி சொன்னாள்: "வெறுமனே தேவையற்ற விஷயங்களை இப்போது கூறாமல் இருப்பதே நல்லது."
"இல்லை... நீங்கள் எனக்கு விருப்பமுள்ள நண்பர்கள். நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நான் ஐம்பத்து மூன்றாவது வயதில் முதல் தடவையாக ஒரு காதலில் சிக்கியிருக்கிறேன்."
"என்னவெல்லாமோ கூறுகிறார்." அவருடைய மனைவி வெறுப்புடன் சொன்னாள்: "இதையெல்லாம் குடித்திருக்க வேண்டியதேயில்லை."
"காதல் என்பது ஒரு கொலைச் செயலொன்றும் இல்லையே! பிறகு எதற்கு அதைப் பற்றி எல்லாருக்கும் தெரியப்படுத்த வேண்டும்?" மகாராணி கேட்டாள்.
"நான் காதலிக்கும் பெண் என்னைச் சிறிது சிறிதாக கொன்று கொண்டிருக்கிறாள். பைத்தியம் பிடிக்க வைத்துக் கொல்வது..." அருண் சொன்னார்.
"நீங்கள் திருமணமாகாத பெண்களைக் காதலித்துப் பார்த்திருக்கிறீர்களா?" மகாராணி கேட்டாள்.
"திருமணமாகாத பெண்கள்! அவர்களை யாருக்கு வேண்டும்?" வக்கீல் கேட்டார். அவர் ஒரு மஞ்சள் நிறத் தலையணையில் தன்னுடைய கை நகங்களை அழுத்தினார். "அவர்களை யாருக்கு வேண்டும்?" வக்கீல் மீண்டும் கேட்டார்.
"நீங்கள் மிகவும் மோசமான மனிதர்." இந்திரா சொன்னாள்: "என்னை அவமானப்படுத்தியிருக்க வேண்டியதில்லை."
"ஓ... உங்களைப் பற்றிச் சொல்லவில்லை." வக்கீல் சொன்னார்: "இந்திராதேவி! நீங்கள் ஒரு அனைத்துலக அழகி! தேவதை! உங்களைப் பற்றி நான் இந்தச் சூழ்நிலையில் நினைத்ததேயில்லை."
"அனைத்துலக அழகு! அழகு இருந்தாலும், பரவாயில்லை." இந்திரா தன்னுடைய கை விரல்களை இப்படியும் அப்படியுமாகப் பார்த்துக் கொண்டே சொன்னாள்.
"உங்களடைய அழகில் நான்கில் ஒரு மடங்கு அளவு என்னிடம் இருந்தால்...?" நான் சொன்னேன்.
"விமலா ராணி, உங்களுக்கு அப்படிப்பட்ட அழகு எதற்கு? உங்களுக்கு..."
"காதல் பேச்சுகள் ஆரம்பமாகிவிட்டன! எனக்கு வெறுப்பா இருக்கு!" அருண் சொன்னார்: "எங்கு பார்த்தாலும் காதல்... காதல்..."
"உங்களுக்க காதலைப் பற்றி எதுவும் தெரியவில்லை." பொருளாதார நிபுணர் சொன்னார்: "அது ஒரு சதுரங்க விளையாட்டு. விமலாவிற்கு ஒரு வேளை அதைப் பற்றி எல்லா விஷயங்களும் தெரிந்திருக்கலாம்."
"என்னிடம் எதுவம் கேட்க வேண்டாம்." நான் சொன்னேன். கீழே இருந்த புல்வெளியில் படுத்துக் கொண்டே என்னுடைய மகன் பூனையிடம் சொன்னான்: "இபிட்டி பிபிட்டி ஸிபிட்டி பாஸ்..."
"வாங்க... உணவு தயாராக இருக்கு." கிருஷ்ணமூர்த்தி வராந்தாவிற்கு வந்து எங்களை அழைத்தார். நாங்கள் உணவு இரந்த அறைக்குள் நுழைந்தபோது, பொருளாதார நிபுணர் தாழ்வான குரலில் என் காதில் முணுமுணுத்தார்:
"கிருஷ்ணமூர்த்தியா காரணம்?"
"காரணமா? எதற்குக் காரணம்?"
"உன்னுடைய இந்தப் புதிய நடவடிக்கைகளுக்கு..."
"சொந்த விஷயங்களைப் பேச ஆரம்பித்துவிட்டார்கள்." அருண உரத்த குரலில் கூறினார்.
"எனக்கு தூக்கம் வருகிறது." நான் சொன்னேன்: "ஒரு வேளை, நான்இந்த மேஜை மீது தலையை வைத்துக் கொண்டு தூங்கினாலும் தூங்கிவிடலாம். ஒன்பதரை மணிக்கு வீட்டிற்குத் திரும்பி வந்துவிட வேண்டும் என்று என்னுடைய கணவர் கூறியிருக்கிறார்."