வெளுத்த குழந்தை
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7017
உச்சிப் பொழுது. கோடை வெயில் பயங்கரமாகத் தகித்துக் கொண்டிருந்தது. பூமியிலிருந்து நெருப்பு ஜூவாலைகள் புறப்பட்டுக் கொண்டிருக்கின்றவோ என்பது மாதிரி இருந்தது. அந்த மணல் மீது கால் வைத்தால் நெய்யப்பம்போல கால்கள் வெந்துவிடும். ஒரு மனிதனால்கூட அந்தச் சமயத்தில் அதில் நடக்க முடியாது. எனினும், குஞ்ஞிமோன் நடந்தான். குழந்தைகளை அடையும்போது வெயில் குளிர்ந்துவிடும் அல்லவா? ஆனால், எவ்வளவு நேரம் வெயில் அப்படி குளிர்ச்சியாக இருக்க முடியும்? குஞ்ஞிமோன் அதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்தான்.
வயலுக்கு மத்தியில் இப்படியும் அப்படியுமாக வளைந்து போகின்ற ஒரு வாய்க்கால் இருந்தது. அதை அவன் பார்த்தான். மழைக்காலத்தில் காளைகள் கூட்டம் கூட்டமாக அந்த நீருக்குள் இறங்கிய வண்ணம் இருக்கும். அவற்றின் முதுகில் நீர் திவளை திவளையாகக் காட்சியளிக்கும். கிழக்குப் பக்கம் இருக்கும் ஏதோ மலைக் காடுகளிலிருந்து அவை ஓடி வருகின்றன. இடி முழக்கம் கேட்டு பயந்துபோய் அவை ஓடி வந்திருக்க வேண்டும். இடது பக்கமோ வலது பக்கமோ எதையும் பார்க்காமலே அவை படுவேகமாக ஓடி வரும். அந்தக் காளைகளில் ஏதாவ தொன்றின்மீது ஏறி உட்கார பலமுறை அவன் ஆசைப்பட்டிருக்கிறான். ஆனால், அவை ஒரு நிமிடமாவது ஒரே இடத்தில் நின்றால்தானே! இரண்டு பக்கங்களிலும் வளைந்து நிற்கும் முட்புதர்களில் தாடைகளை உரசியவாறு அவை போய்க் கொண்டிருக்கும். அருகிலுள்ள புதருக்குள் இருந்தவாறு ஒரு பொன்மான் அவற்றை அழைத்து என்னவோ கேட்கும். எங்கே போறீங்க அண்ணன்மார்களே?'' என்று அது கேட்டிருக்க வேண்டும். அதைக் கேட்டவுடன் களகளா'' என்று அந்தக் காளைகள் உரத்த குரலில் சத்தம் உண்டாக்கும். தொடர்ந்து, ஒரே ஓட்டம். இப்போது அந்த வாய்க்காலில் ஒரு காளைகூட இல்லை. இரண்டு மாதங்களுக்கு முன்புகூட ஒரு காளையைக் குஞ்ஞிமோன் பார்த்தான். வண்ணாத்திப் பாறைக்குக் கீழேயிருந்த ஆழமான குழியின் ஒரு ஓரத்தில் பதுங்கிக் கொண்டிருந்தது அது. அதை முழுமையாகப் பார்க்க அவனால் முடியவில்லை. அதற்குள் அவனுடைய தாய் அவனைப் பார்த்து சத்தம் போட்டாள். சாயங்காலம் ஆயிடுச்சு. இங்கே வா பையா'' என்று. இன்று அந்த வாய்க்கால் வழியாகக் காளைகள் போனால்...! பார்க்கலாம். யாரும் அவனைத் தடுக்கப் போவதில்லை.
இப்படி பலவிதப்பட்ட சிந்தனைகளுடன்தான் அவன் வாய்க்கால் வழியே நடந்தான். மனதில் கஷ்டமாகத்தான் இருந்தது. ஒரு புதிய போர்வையை விரித்திருப்பதைப்போல வாய்க்கால் கிடந்தது. குஞ்ஞிமோன் அந்த வாய்க்காலைப் பார்த்தான். ஒரு மெல்லிய காற்று அங்கிருந்து, தாயின் பெருமூச்சைப்போல கிளம்பி வந்தது. அதில் அவனுக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைத்தது. முழுவதுமாகக் காய்ந்து போயிராத வாய்க்காலோரத்தில் வளர்ந்திருந்த புல் பரப்பு வழியாக நடந்தும் போகலாம். சிறிது வளைந்தால்கூட எந்த பாதிப்பும் உண்டாகாது. நேரம் கடந்தால் முதலாளி மிகப்பெரிய ஆர்ப்பாட்டமே பண்ணிவிடுவார் என்பதை அவன் நினைத்துப் பார்த்தான். மனதில் இனம் புரியாத ஒரு நடுக்கம் இருக்கத்தான் செய்தது. எனினும், அந்த வாய்க்கால் கரையை விடத் தோன்றவில்லை. போகும்போது அவன் சிந்தித்துப் பார்த்தான். எதற்காக முதலாளி இப்படி ஆர்ப்பாட்டம் செய்கிறார்? முதலாளி அவனுடனும் முதலாளியம்மா அவனுடைய தாயுடனும் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டுதான் பேசுவார்கள். அது தேவையா? "நாங்க அவங்களுக்கு எதிரின்னு அவங்களுக்கு தோணும்போல இருக்கு.” குஞ்ஞிமோன் தனக்குள் கூறிக்கொண்டான். அவனுடைய தாய் அந்த வீட்டிலுள்ளவர்களுக்காக எதையெல்லாம் செய்து கொடுக்கிறாள்! ஆகாயம் அளவிற்குப் பெரிதாக இருக்கும் செப்புக் குடத்தை நிறைத்து இடுப்பில் வைத்துக்கொண்டு கிணற்றுப் பக்கத்திலிருந்து சமையலறைக்கும் குளியலறைக்கும் எத்தனை முறைகள் அவனுடைய தாய் நடக்கிறாள். ஒவ்வொரு குடம் நீரையும் ஊற்றிவிட்டுத் தன் தாய் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிக் கொண்டு நிற்பதை அவன் பார்த்திருக்கிறான்.
இது போதும், அம்மா.'' குஞ்ஞிமோன் கூறுவான்.
பெரியவர் குளிக்க வேண்டாமா?'' என்று அவனுடைய தாய் கேட்பாள். மழை பெய்து கொண்டிருக்கும்போதும் அவள் நீர் மொண்டு கொண்டு இருப்பாள். அந்த அளவிற்கு நிறைய நீர் வேண்டுமென்றால் பெரியவர் அந்த மழையில் இறங்கி நிற்கலாமே! அதையும் செய்வதில்லை. எவ்வளவு விறகுகளை வெட்டுவது! எவ்வளவு வேட்டிகளைத் துவைப்பது! முற்றத்தைச் சுத்தம் செய்ய வேண்டும்... சாணம் மெழுக வேண்டும்... எல்லாவற்றுக்கும் அவனுடைய தாய் இருந்தாக வேண்டும். எனினும், அவனுடைய தாயிடம் எதற்காக இப்படி ஆர்ப்பாட்டம் பண்ண வேண்டும்? எல்லா வேலைகளும் முடிந்த பிறகு அவனுடைய தாய் தளர்ந்து போய் நின்று மேல் மூச்சு கீழ் மூச்சு விடுவாள். இடுப்பில் கையை வைத்து சமையலறைச் சுவர்மீது சாய்ந்து நின்றிருக்கும் அவளைப் பார்க்கும்போது மனதில் வருத்தமாக இருக்கும். அவள் மூச்சு விடும்போது வாழைக்காய் தோல்களைப்போல வாடித் தொங்கிக் கொண்டிருக்கும் மார்பகங்கள் மேலும் கீழுமாய் அசைந்து கொண்டிருக்கும். அப்போது என் அம்மா...'' என்று கூறியவாறு அவளின் இடுப்பை இறுகப் பற்றிக்கொண்டு நிற்க வேண்டும்போல் அவனுக்கு இருக்கும். எனினும், குஞ்ஞிமோன் அதைச் செய்த தில்லை. முதலாளியம்மா அதைப் பார்த்துவிட்டால் ஒரு பெரிய ஆர்ப்பாட்டமே பண்ணி விடுவாள். இந்த கொஞ்சுற வேலைகளெல்லாம் இங்கே இருக்கக்கூடாது... தெரியுதா?'' என்று சத்தம் போடுவாள். பிறகு அந்தச் செய்தி முதலாளியிடம் போகும். தன் தாயைக் கட்டிப் பிடித்தது ஒரு குற்றமான செயலாக நினைக்கப்படும். அதைப் பற்றி விசாரணை நடக்கும். அதனால் குஞ்ஞிமோன் தன் தாய் பெருமூச்சு விட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டே நின்றிருப்பான். இன்று அப்படிப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தபோது கட்டளைக் குரல் காற்றில் மிதந்து வந்தது. ஓடு.. சலவை செய்கிறவன்கிட்ட போய் எல்லா துணிகளையும் கொண்டு வரச் சொல்லு!'' முதலாளியம்மாவின் பார்வையிலிருந்து விலகும் வரை அவன் ஓடிக்கொண்டேயிருந்தான். அதற்குமேல் அவனால் ஓட முடியவில்லை.
குஞ்ஞிமோன் வாய்க்கால் கரை வழியே மெதுவாக நடந்தான். வெயில் "சுள்'ளென்று அடித்துக் கொண்டிருந்தது. காற்றும் படு வெப்பமாக இருந்தது. எனினும் அவன் அவசரமில்லாமல் சாதாரணமாகவே நடந்தான். அவனுக்கு ஜலதோஷம் பிடித்திருந்தது. பசி எடுத்தது. கொஞ்சம் கஞ்சி வாங்கிக் குடிக்கலாம் என்று போன சமயத்தில்தான் சலவைக்காரனிடம் போகும்படி அவனுக்கு உத்தரவு போடப்பட்டுவிட்டது. கஞ்சியைப் பற்றி நினைத்தபோது அவனுக்கு பசி அதிகமாகியது. எனினும், அவனால் நடக்காமல் இருக்க முடியவில்லை.
வாய்க்கால் கரையில் அப்போதும் வாடாமல் நின்றிருந்த அப்பச் செடிகள் புதரென வளர்ந்திருந்தன. இலைகள் மிகவும் தளர்ந்துபோய் காணப்பட்டன.