வெளுத்த குழந்தை - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7020
வேறு வழியில்லை என்பதை குஞ்ஞிமோன் புரிந்து கொண்டான். அவன் சிறிது நேரம் நீளமான பற்களுடன் திறந்த நிலையில் காட்சியளிக்கும் அந்த அவலட்சணமான வாயையே பார்த்தான். பிறகு சொன்னான்: சரி... என்னை பலசாலியா ஆக்கு.''
இப்போ சொன்னதுதான் புத்திசாலித்தனமானது.'' சைத்தான் பாறையை விட்டு எழுந்து நின்றான். பாறை மீண்டும் காடாக மாறி காற்றில் அசைந்து விளையாடியது. சைத்தான் குஞ்ஞிமோனை அருகில் நிற்க வைத்து பல விஷயங்களையும் கற்றுத் தந்தான். பூமியிலும் ஆகாயத்திலும் சுதந்திரமாகப் பயணம் செய்ய அவனால் முடிந்தது. விருப்பம்போல வடிவத்தை மாற்றிக்கொள்ள சொல்லித் தந்தான். இடம், காலம் எதுவும் அவனுக்குப் பிரச்சினையே இல்லை என்றானது. எல்லாவற்றையும் கற்றுத் தந்த பிறகு சைத்தான் சொன்னான். இப்போ நாம இருவரும் சமபலம் கொண்டவர்களா ஆயிட்டோம். இனி நாம போட்டி போட்டுப் பார்க்கலாம். உன்னால தப்பிக்க முடியுமான்னு பாரு. நான் அதைத் தடுக்க முயற்சிப்பேன்.''
சரி...''
குஞ்ஞிமோன் அடுத்த நிமிடம் புகையாக மாறி மேல் நோக்கி உயர்ந்து போனான். ஆகாயத்திற்குச் சென்று ஒரு மேகக் கூட்டமாக மிதந்து செல்ல ஆரம்பித்தான். சைத்தான் அதைப் பார்த்துச் சிரித்தான். பிறகு பலமாக அவன் ஊதினான். அந்தக் கடுமையான காற்று அந்த மேகக் கூட்டத்தை பூமிக்குக் கொண்டு வந்து சேர்த்தது. பூமியைத் தொட்டதும் குஞ்ஞிமோன் தன்னுடைய சொந்த உருவத்தை அடைந்தான். உடனே குஞ்ஞிமோன் ஒரு நெருப்புத் துண்டமாக மாறி சைத்தானின் சிவப்பு நிற மீசையில் போய் விழுந்தான். சைத்தான் அழ ஆரம்பித்தான். அடுத்த நிமிடம் மிகப் பெரிய அளவில் மழை பெய்ய ஆரம்பித்தது. அந்த மழையில் நெருப்புத் துண்டம் அணைந்தது. குஞ்ஞிமோன் பலமான காற்றாக மாறி வேகமாக வீசினான். சைத்தான் மிகப் பெரிய மலையாக மாறி அந்தக் காற்றைத் தடுத்தான். இப்படி குஞ்ஞிமோன் பல வடிவங்கள் எடுத்து ஓடி ஒளிய முயற்சி செய்தான். எல்லா இடங்களிலும் சைத்தான் எதிர்த்து நின்றான். கடைசியில் இரண்டு பேரும் போர் புரிய நின்றார்கள். இருவரும் பெரிய மலைகளாக மாறிப் போரிட்டார்கள். அதில் குஞ்ஞிமோன் தோல்வியைத் தழுவினான். அவனுடைய தலையிலிருந்து ரத்தம் அருவியென வழிந்து மைதானத்தில் விழுந்து ஓடிக்கொண்டிருந்தது. இறுதியில் குஞ்ஞிமோன் சைத்தானைப் பார்த்துச் சொன்னான்: நான் உன்கூட வர்றேன்.''
சைத்தான் மகிழ்ச்சியடைந்து ஆர்ப்பரித்தான். பிறகு சிறுவனைத் தூக்கித் தன்னுடைய தோளில் வைத்துக்கொண்டு வானத்தின் வழியாகப் பயணம் செய்தான். அப்போது பாசம் பொங்கிய குரலில் சைத்தான் சொன்னான்: நீ நல்லவன். புத்திசாலி. இப்போ பலசாலியும்கூட. உனக்கு எப்படியெல்லாம் வெற்றி பெறணுமோ, அப்படியெல்லாம் வெற்றி பெற்றுக்கொள். நான் உனக்கு உதவுறேன்.''
ம்...'' குஞ்ஞிமோன் சைத்தானின் காதைப் பிடித்தவாறு உட்கார்ந்து கொண்டு மெதுவான குரலில் சொன்னான்.
உன்னால என்னை எப்போ தோல்வியடையச் செய்ய முடியுதோ, அப்போ நீ உன் தாயைத் தேடிப் போகலாம்.''
இது உண்மையா?''
சத்தியமா.''
அதற்குப் பிறகு குஞ்ஞிமோன் எதுவும் பேசவில்லை. அவன் காதைப் பற்றிக் கொண்டு சைத்தானின் தோளில் உட்கார்ந்திருந்தான். கீழே குன்றுகளும் மலைகளும் மைதானங்களும் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. நீர்யானைகள் நிறைந்திருக்கும் பெரிய நதிகள் கண்ணில் தெரிந்தன. தொடர்ந்து திமிங்கிலங்கள் காட்சியளிக்கும் அலை கடல்கள், சித்திர வேலைப்பாடுகளுடன் அமைந்த கோவில் கோபுரங்கள், விஷக்காற்று பட்டு நீல நிறம் பாய்ந்த மிகப் பழமையான பாம்புப் புற்றுகள்... இப்படி ஒவ்வொன்றும் கடந்து போய்க் கொண்டேயிருந்தன. அந்தப் பயணம் சுவாரசியமற்றது என்று கூறுவதற்கில்லை. எனினும், தன் தாயைப் பற்றி எண்ணியபோது குஞ்ஞிமோன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான். புருவத்தின்மீது கையை வைத்து தன்னுடைய மகனை எதிர்பார்த்துக் காத்தவாறு தூரத்தில் தெரியும் நெல் வயல்களைப் பார்த்து நின்றிருக்கும் தன் அன்னையின் முகம் அவனுடைய மனதில் தோன்றியது. அந்த நிமிடமே கீழே குதிக்க வேண்டும்போல் அவனுக்கு இருந்தது. ஆனால், அவனை சைத்தான் விட்டால்தானே? முடியாத விஷயம் அது. அவன் தன்னை அடக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தான். அடுத்த நிமிடம் மூடு பனிக்குள் ஓசையெழுப்பியவாறு அவர்கள் பயணித்தார்கள்.
சைத்தானே!'' குஞ்ஞிமோன் அழைத்தான்.
என்ன குஞ்ஞிமோன்?''
நாம எங்கே போறோம்?''
பிரபஞ்சத்தின் நடுப்பகுதிக்கு.''
நாம ஏன் அங்கே போறோம், சைத்தானே?''
அங்கேதான் நான் வசிக்கிறேன்.''
ஏன் இப்படியொரு மூடுபனி?''
இந்த மூடுபனிதான் எல்லாரையும் இயக்கிக்கிட்டு இருக்கு.'' அதைச் சொன்ன சைத்தான் தன் கையைச் சுழற்றி வீசினான். அங்கிருந்த மூடுபனி சற்று விலகியது. அப்போது மூடுபனியாலான ஒரு புல்லாங்குழல் வழியாக அவர்களின் பயணம் தொடர்ந்தது.
இந்த மூடுபனி எதுக்கு இருக்கு தெரியுமா, குஞ்ஞிமோன்?''
எனக்கு எப்படித் தெரியும்?''
குஞ்ஞிமோன், உனக்கு மன்னனாகணும்ன்ற ஆசை இருக்கா?''
எனக்கு என் தாய்க்கிட்ட போகணும்ன்றதுதான் ஆசை.''
தாயையும் பக்கத்துல வச்சிக்கிட்டு மன்னனாகறதா இருந்தா?''
ஆசை இருக்கு.''
அந்த ஆசையை உண்டாக்கியதே இந்த மூடுபனிதான். சொர்க்கத்து கன்னிப் பெண்களை அழைத்து இதுமேல நிற்க வைத்து அழச் செய்யும். அவங்களோட கண்ணீர்த் துளிகள் பொலபொலவென விழும். அந்தக் கண்ணீர்ல இந்த மூடுபனியை மிதிச்சு குழைச்சுத்தான் ஆசை உண்டாக்கப்படுது. இல்லாட்டி ஒரு உயிருக்குக்கூட ஆசை என்பதே உண்டாகாது.''
அப்படியா?'' குஞ்ஞிமோன் ஆச்சரியத்துடன் வாயைப் பிளந்து உட்கார்ந்திருந்தான். அப்போது வேகமாக வீசிய காற்று வந்து மோதிதான் அவன் தன் வாயையே மூடினான்.
அவன் தூரத்தில் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தான். திடீரென்று தூரத்தில் ஆகாயத்தில் ஒரு பொன் வளையம் தெரிந்தது. அது கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதானது. வளையம் ஒரு மிகப் பெரிய வட்டமானது... கோவில் கோபுரத்தைப் போலானது... குளம் அளவிற்குப் பெரிதானது... அது இந்த பூமிக்கு நடுவில் கட்டப்பட்ட ஒரு பட்டு நூலைப் போலானது.
அது என்ன, சைத்தானே?''
நெருப்பு வளையம்.''
அது வழியாவா நாம போகணும்?''
ஆமா...''
அய்யோ... சுட்டுடாதா?''
பயப்படாதே. இது எதுக்கு தெரியுமா? இதை வச்சுத்தான் நரியோட கண்களும் ஓநாயோட பல்லும் உண்டாக்கப்படுது. காண்டாமிருகத்தோட கொம்புகூட இதுதான்.''
இவ்வளவையும் சொல்லி முடித்தபோது அவர்கள் அந்த வளையத்தை விட்டு வெளியே வந்திருந்தார்கள். குஞ்ஞிமோன் மெதுவாகத் திரும்பிப் பார்த்தான். அது ஒரு மிகப் பெரிய வளையமாகத் தோன்றி எரிந்து கொண்டிருந்தது. தொடர்ந்து இறக்கையை விரித்து நடனமாடும் மலை தெரிந்தது. அந்த மலையிலிருந்து பல அருவிகள் பாய்ந்தோடுவது தெரிந்தது.