
என்னால முடியாது'' என்று கூறிக் கொண்டு அவை நின்றிருந்தன. குஞ்ஞிமோன் ஒரு செடியின் கழுத்தைப் பிடித்துத் தூக்கி, சிறிது நேரம் அதையே பார்த்தவாறு நின்றிருந்தான். பிறகு மெதுவான குரலில் அவன் பாடினான்:
அப்பச் செடிக்கொரு அப்பன் இருந்தான்.
பாவைக்காயைப்போல வளைந்த ஓர் அப்பன்
ஓணப்பூ சூடி வருமோரப்பன்
ஓலக் குடை இல்லாமல் வரும் நேரம்
சூடுள்ள தேவி பிடித்ததில்
உடலெங்கும் கொப்புளம் உண்டாகி செத்துப் போனான்.''
அந்தப் பாட்டைக் கேட்டபோது, அப்பச் செடிகள் வெட்கத்தால் ஒரு மாதிரி ஆகிப் போய் ஆடின. குஞ்ஞிமோன் சிரித்துக் கொண்டே முன்னோக்கி ஓடினான்.
வாய்க்கால் இரண்டு இடங்களில் வளைந்து, மூன்றாவது வளைவில் ஒரு ஆலமரம் இருந்தது. அது எப்போதும் சலசலத்துக் கொண்டே இருக்கும். சிறுவன் இன்னும் விளையாட்டு எண்ணத்திலேயே இருந்தான். திடீரென்று அவனுக்கு ஒரு விஷயம் ஞாபகத்தில் வந்தது. எதிரில் இருந்த கோவில் திருவிழா முடிந்து மூடப்பட்டிருந்தது. திருவிழா முடிந்துவிட்டால் ஏழு நாட்களுக்கு கோவிலைத் திறக்க மாட்டார்கள். இன்றுடன் மூன்று நாட்களே ஆகியிருக்கின்றன. தேவி சைத்தான்களை அவிழ்த்துவிடும் நேரமிது. அதை நினைத்தபோது அவனுக்கு பயமாக இருந்தது. சுற்றிலும் பார்த்தான். யாருமில்லை. இந்த வெயில் நேரத்தில் சைத்தானால் நடக்க முடியுமா? சைத்தான்கள் எப்போது நடப்பார்கள்? அது அவனுக்குத் தெரியாது. இப்போது சைத்தான்கள் ஓடித் திரியக் கூடிய நேரமாக இருந்தால்?
முன்னோக்கி நடக்க வேண்டும் என்ற எண்ணமே அவனுக்கு வரவில்லை. திரும்பிப் போகலாம் என்றால்...? பெரிய அளவில் கலவரம் உண்டாகும். முதலாளியம்மா அவனை அடித்து முதுகைப்பதம் பார்த்து விடுவாள். யாராவது இந்தப் பக்கம் வந்தால் அவர்களுடன் சேர்ந்து அவன் போய்விடுவான். அவன் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பார்த்தான். ஒரு உயிர்கூட கண்ணில் தெரியவில்லை. போகலாமா? திரும்பி விடுவதா? கடைசியில் இரண்டுமே வேண்டாம் என்ற முடிவுக்கு அவன் வந்தான். இந்த ஆலமரத்திற்கு அடியிலேயே இருப்போம். அப்போது யாராவது வருவார்கள் என்று அவன் தீர்மானித்தான்.
இடிந்து சிதிலமடைந்து காணப்பட்ட அந்த ஆலமரத்திற்குக் கீழே இருந்த பீடத்தின்மீது அவன் ஏறினான். ஆலமரத்திற்குக் கீழே தங்க நிறத்தில் புள்ளிகளைக் கொண்ட ஒரு நீல நிற விரிப்பு விரிக்கப்பட்டிருந்தது. முதலாளியம்மாவின் படுக்கையறையில்கூட அந்த அளவிற்கு அழகான விரிப்பு இல்லையென்பதை சிறுவன் நினைத்துப் பார்த்தான். தன்னால் அதில் உட்கார முடியுமா என்றும் அவன் அப்போது சிந்தித்தான். எனினும், உட்கார்ந்தான். என்ன சுகம்! யாரோ வந்து தன் உடம்பைத் தடவி விடுவதைப்போல் அவனுக்குத் தோன்றியது. தன்னுடைய தாய் கைகளால் தடவுவதைப்போல அவன் உணர்ந்தான்.
அவன் மரத்தின் கீழ்ப்பகுதிமீது சாய்ந்து உட்கார்ந்தான். அடடா! அவனுடைய கண்கள் தாமே மூடின. தரையில் விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தில் இருந்த பொன் நிறப் புள்ளிகள் எழுந்து நடக்க ஆரம்பித்தன. நடக்கவில்லை... நீந்தின. வரிசையாகப் பொன் நிறத்தில் படகுகள் முன்னோக்கிப் போய்க் கொண்டிருந்தன. படகுகள் வருகின்றன; போகின்றன. முடிவே இல்லாத ஒரு ஊர்வலம்! அவை பறக்கும் படகுகளா? மேல்நோக்கி உயர்ந்து போய்க் கொண்டே இருந்தன. மேகங்களுக்குள் நுழைந்து மறைந்து கொண்டிருந்தன. சிறுவன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
திடீரென்று தான் சாய்ந்து உட்கார்ந்திருந்த ஆலமரம் மெத்மெத்தென்று இருப்பதைப்போல் அவன் உணர்ந்தான். அவன் மேலும் சாய்ந்து உட்கார்ந்தான். சதைப்பிடிப்பான உடம்பின்மீது சாய்ந்து உட்கார்ந்திருப்பதைப்போல இருந்தது. அவன் தலையையும் மரத்தின்மீது வைத்தான். நல்ல சுகம்!
தலைக்கு மேலேயிருந்து புல்லாங்குழலின் இனிய இசை கேட்டது. அவன் காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டு அதைக் கேட்டான். ஓ... காற்று பாட்டு பாடிக்கொண்டிருந்தது. அந்த இசை உயர்ந்தும் தாழ்ந்தும் கேட்டுக் கொண்டேயிருந்தது. அது தன்னுடைய நரம்புகள் வழியாகப் போய்க் கொண்டிருப்பதை அவன் உணர்ந்தான். கம்பி வழியாகப் பரவுவதைப்போல அந்த ஓசை பயணம் செய்தது. ணிம்... ணிம்... ணிம்... இப்படிக் கேட்டது அது. இனிமையான அனுபவம்தான்!
அதே நேரத்தில் தலைக்கு மேல் ஒரு ஆர்ப்பரிப்பு! சிறுவன் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டான். தலையை உயர்த்திப் பார்த்தான். பயங்கரம்! யானைத் தந்தம்போல வெள்ளை நிறத்தில் அரிவாளைப்போல வளைந்த இரண்டு பற்கள். அவை இரண்டும் வாயின் இரண்டு பக்கங்களிலும் நீட்டிக் கொண்டிருந்தன. நெற்கதிரைப்போல தொங்கிக் கொண்டிருந்த முரட்டு மீசை... பந்தத்தைப்போல சிவந்த கண்கள்... தலை முடிக்கு பதிலாக நெருப்பு ஜுவாலைகள்... சிறுவன் ஒருமுறைதான் பார்த்தான். கண்களைச் சிமிட்டியது மாதிரி இருந்தது. அது ஒரு... சைத்தான்! தான் சாய்ந்து உட்கார்ந்திருந்தது ஒரு சைத்தானின் கால் மீதுதான் என்பதைச் சிறுவன் புரிந்துகொண்டான். அவனால் அந்த இடத்தை விட்டு உடலை அசைக்க முடியவில்லை. ஒட்டி இருக்கவும் முடியவில்லை. மொத்தத்தில் உறைந்து போனது மாதிரி ஆகிவிட்டான் அவன். எதுவும் புரியாமல் விழித்தவாறு உட்கார்ந்திருந்தான்.
மீண்டும் மீண்டும் உரத்த சிரிப்புச் சத்தம் கேட்டது. அந்தச் சத்தம் உடலை என்னவோ செய்தது. கூர்மையான ஊசி குத்துவதைப்போல் அவன் உணர்ந்தான். ஒவ்வொரு சிரிப்பும் முட்களாலான ஏதோவொன்றை உடம்பிற்குள் நுழைத்துக் கொண்டிருந்தது.
திடீரென்று சைத்தான் தன் கால்களை நீட்டினான். அடுத்த நிமிடம் சிறுவன் மல்லாக்கப் போய் விழுந்தான். எழுந்து மேலே அவன் வந்தான். சைத்தான் அவனை பந்தைத் தட்டுவதைப்போல ஒரு தட்டு தட்டினான். சிறுவன் மேலே போய்க் கொண்டே இருந்தான். வெப்பமும் குளிர்ச்சியும் வேகவேகமாக மாறி மாறித் தோன்றிக் கொண்டேயிருந்தன. மேகங்களிலிருந்த நீர்த் துளிகள் உடம்பில் பட்டன. அதே நேரத்தில் சூரியனின் வெப்பம் நிறைந்த கதிர்கள் அவற்றின்மீது விழுந்து அவற்றை ஒன்றுமில்லாமற் செய்தன. பறந்து போய்க் கொண்டிருந்த வெள்ளை நிறப் பறவை களின் சிறகுகள் அவனுடைய மூக்கில் பட்டன. ஒரு இடத்திலும் நிற்காமல் அவன் மேல்நோக்கிப் போய்க் கொண்டேயிருந்தான். மீண்டும் ஒரு பரபரப்பு. சிறுவன் திடீரென்று கீழே விழுந்தான். ஒரு பச்சை மாங்காயைப்போல அந்தக் கறுப்புச் சிறுவன் கீழே விழுந்தான். அப்போது நெஞ்சிலிருந்து ஒரு நெருப்பு ஜுவாலை மேல்நோக்கிச் செல்வதைப்போல அவன் உணர்ந்தான்.
உயிர் போய்விட்டது என்றுதான் அவன் நினைத்தான். ஆனால், அவன் விழவில்லை. பஞ்சு போன்ற ஏதோவொன்றின்மீது தான் இருப்பதை அவனால் உணர முடிந்தது. மேல் மூச்சு கீழ் மூச்சு விட்டவாறு அவன் சுற்றிலும் பார்த்தான். சைத்தானின் உள்ளங்கையில் தான் இருப்பதை அவனால் தெரிந்துகொள்ள முடிந்தது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook