வெளுத்த குழந்தை - Page 6
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7020
என்ன?'' உடனே பின்னாலிருந்து ஒருகேள்வி வந்தது. குஞ்ஞிமோன் திரும்பிப் பார்த்தான். யானைத் தந்தம்போல வெண்மை நிறத்திலும் அரிவாளைப் போன்று வளைந்தும் இருந்த அந்தப் பற்கள் சூரிய வெளிச்சத்தில் பிரகாசித்துக் கொண்டிருப்பதை அவன் பார்த்தான்.
சைத்தானே! நீ சொன்ன வாக்கை மீறுவியா?'' குஞ்ஞிமோன் கேட்டான்.
நிச்சயமா இல்ல. இன்னொரு முறை பலத்தைச் சோதனை செய்து பார்க்கணும்னு நீ நினைக்கிறியா?''
ஆமா...''
சைத்தான் அதற்கு விழுந்து விழுந்து சிரித்தான்.
சரி... ஆரம்பிக்கலாம்.''
இங்கே பாரு...''
சைத்தான் பார்த்தான்.
நான் புன்னகை செய்வேன். அதே மாதிரி நீ புன்னகை புரிந்தால், நான் தோத்துட்டேன்னு அர்த்தம். இல்லாட்டி உனக்குத் தெரியும்ல!''
அதைச் சொன்ன குஞ்ஞிமோன் புன்னகைக்க ஆரம்பித்தான்.
பந்தம் போன்ற கண்கள் ஜுவாலைகளை உண்டாக்கிக் கொண்டிருந்தன.
சைத்தானே! நீ இப்போ புன்னகை செய்...''
சைத்தான் முயற்சித்துப் பார்த்தான். அது ஒரு ஆர்ப்பரிப்பாக இருந்தது.
இது புன்சிரிப்பா?'' என்றான் குஞ்ஞிமோன்.
சைத்தான் மீண்டும் முயற்சித்து, அதில் தோல்வியடைந்தான். மீண்டும் மீண்டும் முயற்சி செய்தவாறு தாமரைப் பொய்கையில் தெரிந்த தன்னுடைய உருவத்தைப் பார்த்தான். இல்லை... அது புன்சிரிப்பாக இல்லை.
வளர்ந்து நீண்டிருந்த பற்கள் அவனைப் புன்னகை செய்ய விடவில்லை. நீண்ட நேர கடுமையான முயற்சிக்குப் பிறகும் சைத்தானால் அதைச் செய்ய முடியவில்லை. தோல்வி அடைந்து விட்டோம் என்ற எண்ணம் அவனுடைய நெஞ்சில் ஒரு பதட்டத்தை உண்டாக்கியது. அந்த நீண்ட பற்களை இழுத்துப் பறிக்க வேண்டும் போல் அவனுக்கு இருந்தது. ஆனால், அப்படிச் செய்தால் அவன் மரணமடைந்து விடுவான். சைத்தான் தன்னை ஒடுக்கிக் கொண்டான். அவன் அங்குமிங்குமாக நடந்தான். அவனுக்கு வியர்த்தது.
என்ன, சைத்தானே?'' குஞ்ஞிமோன் கேட்டான்: தோத்துட்டயா?''
வருத்தத்துடன் சைத்தான் ஒப்புக்கொண்டான்.
நான் உன்னோட அடிமை.''
அப்படின்னா என்னைத் தோள்மீது ஏற்றி, என்னை என் தாய்க்கிட்ட அழைச்சிட்டுப் போ...''
குஞ்ஞிமோன் சைத்தானின் காதுகளைப் பற்றியவாறு தோள்மீது ஏறி உட்கார்ந்தான். பாறையின் கோபுர துவாரம் திறந்தது. பூந்தோட்டம், கோழிக் கழுத்து, நெருப்பு வளையம், மூடுபனி எல்லாவற்றையும் கடந்து அவர்கள் ஆகாயத்தில் பயணித்தார்கள்.
சைத்தானே!'' குஞ்ஞிமோன் அழைத்தான்.
என்ன?''
வருத்தமா?''
இல்ல...''
அடுத்த சில நொடிகளில் அவர்கள் வாய்க்கால் அருகிலிருந்த ஆலமரத்தடியை அடைந்தார்கள்.
சைத்தானே! நானும் என் தாயும் தவிர வேற யாரும் உன்னைப் பார்க்கக் கூடாது.''
சரி...''
அவர்கள் நடந்தார்கள். வீட்டை அடைந்தபோது அவனுடைய தாய் அழுதுகொண்டே படுத்திருந்தாள். குஞ்ஞிமோன் தன் தாயைக் கட்டிப் பிடித்துக் கொண்டான்.
எங்கே போனடா, மகனே?''
அம்மா, நான் உங்களுக்கு ஒரு பொருள் கொண்டு வந்திருக்கேன்.''
அவன் சைத்தானைக் கையால் சுட்டிக் காட்டினான். அன்னை அதிர்ச்சியடைந்து விட்டாள்.
பயப்பட வேண்டாம். அவன் என் அடிமை. இல்லையா சைத்தானே?''
ஆமா...'' சைத்தான் சம்மதித்தான்.
அன்று முதல் தாயையும் மகனையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு சைத்தான்மீது வந்து விழுந்தது. உணவு தேட வேண்டும், உணவு சமைக்க வேண்டும், துணிகளைச் சலவை செய்ய வேண்டும், படுக்கை விரிக்க வேண்டும்- இவை எல்லாவற்றையும் சைத்தான் எந்தவித பிரச்சினையுமில்லாமல் செய்தான். இரவில் காவல் இருப்பதுதான் மிகவும் சிரமமான ஒரு விஷயமாக இருந்தது. சைத்தான் ஒரு நாயாக மாறி குரைக்க வேண்டும் என்பது கட்டளை.
அவன் நாயாக மாறி நின்று குரைத்தான். அதைக் கேட்டு மற்ற சைத்தான்கள் உரத்த குரலில் அவனைக் கேலி செய்தார்கள். அவர்கள் அவனுடைய முகத்தைப் பார்த்து அழைத்தார்கள்.
மனிதனின் நாயே?''
அதைக் கேட்டு சைத்தானின் தலை கவிழ்ந்தது. அவன் ஒரு மூலையில் போய் உட்கார்ந்து தேம்பித் தேம்பி அழுதான்.
கோவிலிலிருந்து வந்த குஞ்ஞிமோனின் தாய் அதைப் பார்த்து பதைபதைத்து விட்டாள். அவன் அருகில் சென்று கேட்டாள்: ஏன் அழற?''
ஒண்ணுமில்ல.''
சைத்தானே! மகனே! நீ ஏன் அழணும்?''
மற்ற சைத்தான்கள் தன்னைக் கிண்டல் பண்ணிய விஷயத்தைச் சொல்லிய அவன் தேம்பித் தேம்பி அழுதான். அன்னை சைத்தானின் பெரிய முதுகைத் தடவியவாறு அவனைத் தேற்றினாள்: வருத்தப்படாதே... நான் குஞ்ஞிமோன்கிட்ட சொல்றேன்.''
தாய் மகனிடம் சொன்னாள். மகன் ஒரே பதில்தான் சொன்னான்: அவனால் புன்னகை செய்ய முடிஞ்சா, தாராளமா போகலாம்.''
இப்படியே நாட்கள் கடந்தோடின. ஒருநாள் மிகவும் கவலையுடன் இருந்த சைத்தானைப் பார்த்து அன்னை கேட்டாள்: சைத்தானே! மகனே! நீ ஏன் புன்னகை புரியாமல் இருக்கே?''
எனக்கு நீளமான பற்கள் இருக்கே!''
அதைப் பிடுங்கினா என்ன?''
அதைப் பிடுங்கிட்டா, நான் இருக்க மாட்டேன்.''
அது தானாகவே கீழே விழுந்திருச்சுன்னா...?''
எப்படி?''
அன்னை சிறிது நேரம் சிந்தனை செய்துவிட்டு சைத்தானிடம் சொன்னாள்: மகனே! ஆட்சேபனை இல்லைன்னா ஒரு வழி இருக்கு...''
என்ன சொல்றீங்க?''
மகனே! நீ ஒரு மனிதக் குழந்தையின் வடிவம் எடுக்கணும். பிறகு கொஞ்ச நாட்கள் என் பாலைக் குடிக்கணும். உனக்கு இதுல ஆட்சேபனை இருக்கா?''
சைத்தான் வேகமாக எழுந்து சொன்னான்: சந்தோஷம்!''
சைத்தான் ஒரு பச்சிளம் குழந்தையாக மாறினான். வெளுத்து, துறுதுறுப்புடன் இருந்த ஒரு அழகான குழந்தை! அன்னை தூணில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு அவனைத் தூக்கித் தன் மடியில் வைத்தாள். மார்புக் காம்பை அவனுடைய வாய்க்குள் திணித்தாள். சைத்தான் பாலை உறிஞ்சிக் குடித்தான்.
முதல் நாள் மார்பு சரியாக சுரக்கவில்லை. மறுநாள் நன்றாகச் சுரந்தது. நான்கு நாட்கள் கழிந்தபிறகு, நீண்ட பற்கள் ஆட ஆரம்பித்தன. ஐந்தாவது நாள் ஒரு பல் கீழே விழுந்தது. ஏழாவது நாள் இன்னொரு பல்லும் கீழே விழுந்தது. அந்த வெளுத்த குழந்தை எழுந்து நின்று புன்னகைத்தது.
குஞ்ஞிமோன் அவனைப் பார்த்துச் சொன்னான்: இனி நீ சுதந்திரமானவன்.''
மகனே... நீ போகலாம்.'' தாயும் சைத்தானிடம் சொன்னாள்: நல்ல வழியில் நடக்கணும். எதற்கும் பயப்பட வேண்டாம். நான் அந்த ஆலமரத்திற்கு அடியில் நின்னு பார்க்குறேன்.''
வெளுத்த குழந்தை அன்னையையே பார்த்துக் கொண்டிருந்தது. அவனுடைய கண்ணிலிருந்து ஒரு துளி கண்ணீர் வந்தது. அவன் தழுதழுத்த குரலில் சொன்னான்: அம்மா, என்னை போகச் சொல்லாதீங்க. நான் இந்த அண்ணன் கூடவே இருந்துர்றேன். அம்மா, நீங்க எனக்கு ஒரு பேர் வைக்கணும்...''
அன்னை இரண்டு குழந்தைகளின் முகங்களையும் மாறி மாறிப் பார்த்தாள். அவளின் மார்பு சுரந்தது. அவள் வெளுத்த குழந்தையையும் கறுத்த குழந்தையையும் மார்போடு சேர்த்து இறுக அணைத்துக் கொண்டாள். அந்த இரண்டு குழந்தைகளும் புன்னகை செய்தன. தாய் ஆனந்தக் கண்ணீர் வடித்தவாறு அழைத்தாள்: என் வெளுத்த மகனே...!''