வெளுத்த குழந்தை - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7020
ஒரு கல் விளக்கில் புகைத்து கொண்டிருக்கும் திரிதான் தான் என்பதை அவனால் உணர முடிந்தது. சைத்தானின் பந்தத்தைப் போன்ற கண்கள் அவனுக்கு நேராகத் திரும்பின. ஜுவாலைகள் அவனுடைய முகத்தின் மீது பட்டன. சைத்தான் மீண்டும் உரத்த குரலில் சிரித்துக்கொண்டே அவனைப் பார்த்துக் கேட்டான்: யார் நீ?''
நான்...'' சிறுவனுக்கு வார்த்தைகளே வரவில்லை. அவன் தன் கைகளால் என்னவோ சைகை செய்தான். அதைப் பார்த்து சைத்தான் தன்னால் முடிந்த அளவிற்கு சாந்தமான குரலை வரவழைத்துக் கொண்டு கேட்டான்: குழந்தை... நீ யார்?''
குஞ்ஞிமோன்.''
குஞ்ஞிமோன், நீ எதற்கு இங்கே வந்தே?''
சலவை செய்யும் ஆளைத் தேடிப் போய்க்கிட்டு இருந்தேன்.''
இது நாங்க இருக்குற இடம்னு தெரியாதா?''
தெரியும்...''
அப்படியா? தெரிஞ்சே வந்திருக்குற உன்னை நான் வரவேற்கிறேன்.'' ஒரு கறுத்த பெட்டியைக் கீழே வைப்பதைப்போல அவனைக் கீழே வைத்த சைத்தான் தொடர்ந்து சொன்னான்:
நீ என் கூட வந்திடு.''
அய்யோ... நான் வரல.''
எதுனால வரல?''
எனக்கு...''
உனக்கு...? முழுசா சொல்லு.''
பயமாயிருக்கு...'' குஞ்ஞிமோன் அழுவதைப்போல சொன்னான்.
என்னைப் பார்த்து பயம் தோணுதா? ஆனா, உன்னை சிறிதுகூட தொந்தரவு செய்ய மாட்டேன். உன்னை என்கூட வசிக்க வைக்கிறேன். உனக்கு தேவைப்படுறதையெல்லாம் நான் தர்றேன்.''
எனக்கு எதுவுமே வேண்டாம்.''
முட்டாள்! சொல்றதை முழுசா கேளு. உனக்கு குடிக்கிறதுக்கு உலகத்திலுள்ள எல்லா மலர்கள்ல இருந்தும் தேன் எடுத்துக் கொண்டு வந்து தர்றேன். ரத்தினம் பதிக்கப்பட்ட ஆடைகள் தர்றேன். பூமிக்கு அடியில நாகங்கள் ஏராளமா பாதுகாத்து வச்சிருக்குற நட்சத்திரங்களைப் போன்ற ரத்தினங்களை உனக்கு விளையாடுறதுக்காக கொண்டு வந்து தர்றேன். சரிதானா?''
வேண்டாம். நான் என் அம்மாக்கிட்ட போகணும். அம்மா எனக்காகக் காத்திருப்பாங்க.''
நினைக்கிறதைவிட மனிதர்கள் சீக்கிரமா மறந்துடுவாங்க. பத்து நாள் கழிஞ்சா, உன் தாய் உன்னை மறந்துடுவா.''
இல்ல... என் தாய் வாழ்றதே என்னை நினைச்சுத்தான்.''
அதெல்லாம் மனிதர்கள் சும்மா சொல்றது. உனக்கு தந்தை இருக்கானா?''
இல்ல...''
உன் தந்தை இறந்தபிறகும் உன் தாய் வாழ்ந்துக்கிட்டுத்தானே இருக்கா?''
நான் என் அப்பா மாதிரியே நகலெடுத்த மாதிரி இருக்கேன்னு அம்மா சொல்லுவாங்க. அப்பா இல்லாத கவலை தீர்றதே என்னைப் பார்த்துத்தான்.''
நீ இல்லைன்னா வேற ஒரு குழந்தையை எடுத்து வளர்த்து அவன்கிட்ட உன்னைப் பார்த்துக்குவா உன் தாய்.''
அது நடக்காது.''
எதை வச்சு சொல்ற?''
நான்தான் அம்மாவோட பாலைக் குடிச்சு வளர்ந்திருக்கேன்.''
அதுல சிறப்பா சொல்றதுக்கு என்ன இருக்கு? அங்கே பாரு...''
குஞ்ஞிமோன் சைத்தான் சுட்டிக் காட்டிய பக்கம் பார்த்தான். அங்கே காட்டிலிருந்த ஒரு மரத்திற்கடியில் ஒரு பெண் சிங்கம் தன்னுடைய குட்டியுடன் படுத்திருந்தது. சைத்தான் கேட்டான்: அந்த பூனைக்கண்ணி எப்பவும் இந்த குட்டிகூட இருக்குமா என்ன? குட்டி வளர்ந்தபிறகு தன் விருப்பப்படி போயிடும். இந்தப் பெண் சிங்கத்தின் தாயை எனக்குத் தெரியும். அது இப்போ எங்கே இருக்குன்னு இதுக்குத் தெரியவே தெரியாது. மறந்துடுச்சு. உன் தாயும் உன்னை மறந்துடுவா.''
என் தாய் சிங்கம் மாதிரி இல்ல. என் தாயால என்னை மறக்க முடியாது.''
இந்த நம்பிக்கைதான் மனிதர்களை பலமில்லாதவர்களா ஆக்குறதே...''
தாயைப் பற்றி நினைக்கிறப்போதான் எனக்கு பலமே உண்டாகுது.''
அதைக் கேட்டு சைத்தான் சிரித்தான். ஆழமான குகைக்குள்ளிருந்து கிளம்பி வரும் ஒரு முழக்கமாக இருந்தது அது.
என்னை விட்டுடு...'' குஞ்ஞிமோன் மீண்டும் கெஞ்சினான்.
நீதான் பலமுள்ளவனாச்சே! உன் தாயை மனசுல நினைச்சுக்கோ. அப்படின்னா உனக்கு அதிக பலம் கிடைக்குமே! அதுக்குப் பிறகு என்னைத் தோற்கடிச்சிட்டு, நீ உன் விருப்பப்படி போ!''
என்னை எதுக்காக இப்படி பிடிச்சு வைக்கணும்?'' குஞ்ஞிமோன் கவலையுடன் கேட்டான்.
பிடிச்சதுனால.. குஞ்ஞிமோன், உன்னை எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு. என்கூட வா.''
மாட்டேன். உன் அளவுக்கு பலமில்லைன்னு நினைச்சு என்னை தூக்கிட்டுப் போறது நல்லதா?''
சைத்தான் சிறிது நேரம் சிந்தித்தான். அந்தச் சிறுவனின் முகத்தை மீண்டும் அவன் உற்றுப் பார்த்தான். அந்த பந்தங்களிலிருந்து கிளம்பிய ஜுவாலைகளுக்கு முன்பு இருந்ததைப்போல உஷ்ணம் இல்லை.
நான் பலத்தைக் கொண்டு உன்னை தோற்கடிக்கணும்னு நினைக்கல. என்கிட்ட இருக்குற அளவுக்கு பலத்தை நான் உனக்கு உண்டாக்கித் தர்றேன். சரிசமமான பலத்தை வச்சிக்கிட்டு நீ என்னைத் தோல்வியடையச் செய்யணும். அதுக்குப் பிறகு நீ என்னை விட்டுப் போகலாம்.''
என்னால ஒரு சைத்தானைத் தோற்கடிக்க முடியுமா?''
முயற்சி பண்ணிப் பாரு. நீ வெற்றி பெற்றால், நான் உன்னோட அடிமையாகத் தயார். நான் வெற்றி பெற்றால், நீ என்னோட அடிமையாக வேண்டாம். என்கூட இருந்தா மட்டும் போதும். என்ன சொல்ற?''
வேண்டாம்...''
நான் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிட்டேன். இனி உன் விருப்பம்...'' சைத்தான் அருகிலிருந்த மரங்களடர்ந்த காட்டைக் கையால் தடவினான். அது அடுத்த நிமிடம் சிவந்த புள்ளிகளைக் கொண்ட ஒரு கரும் பாறையாக மாறியது. சைத்தான் அதன்மீது அமர்ந்து கொண்டு சொன்னான். நீ முடிவெடு.''
சைத்தான் மேல்நோக்கித் தன் கைகளைத் தூக்கியவாறு உரத்த குரலில் கத்தினான். வா...!'' எங்கிருந்து என்று தெரியவில்லை. ஏராளமான சுவையான பழங்கள் கீழே விழுந்தன. அதற்குப் பிறகு காட்டெருமையின் தோல் உரிக்கப்பட்ட தொடைகள் வந்து விழுந்தன. இனிப்பான பழங்களை அவன் குஞ்ஞிமோனிடம் எடுத்துக் கொடுத்தான். இந்தா, சாப்பிடு.'' பிறகு, காட்டெருமையின் தொடைகளைத் தன்னுடைய நீளமான பற்களுக்கிடையில் திணித்து இழுத்தான்.
குஞ்ஞிமோன் அந்தப் பழங்களைக் கையால்கூட தொடவில்லை. அவன் உட்கார்ந்து கொண்டு சிந்தித்தான். சைத்தான் எலும்புகளை சதுப்பு நிலத்தை நோக்கி விட்டெறிந்து கொண்டிருந்தான். அவை மண்ணில் குவிந்து கிடந்தன. ஒரு நிமிடம் கழிந்தவுடன், அந்த எலும்புத் துண்டுகள் பூக்க ஆரம்பித்தன. ரத்தத் துளிகளைப்போல இருந்தன பூக்கள்! எல்லாம் முடிந்தவுடன், சைத்தான் கேட்டான்: நீ ஏன் எதையும் சாப்பிடல?''
நான் என் தாய்கிட்ட போன பிறகுதான் சாப்பிடுவேன்.'' குஞ்ஞிமோன் உறுதியான குரலில் சொன்னான். அதைக் கேட்டு சைத்தானுக்குச் சிரிப்பு வந்தது. அந்தப் பாறை போன்றிருந்த வயிறு அப்போது ஆடியது.
அப்படின்னா என்னைத் தோல்வியடையச் செய்திட்டு நீ உன் தாயைத் தேடிப் போ. நான் முதல்ல உனக்கு எல்லா விஷயங்களையும் சொல்லித் தர்றேன். சம்மதம்தானா?''