ஒரு நல்ல பாம்பு
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7021
படத்தை விரித்து சீறிக்கொண்டு ஆடுகிற ஒரு பயங்கரமான நல்ல பாம்பு. அவனைப் பார்த்தாலே பயமாக இருக்கும். பொதுவாக எந்தப் பாம்பைப் பார்த்தாலும், பயப்படுவது நல்லது. இரவு நேரங்களில் எரிகிற பந்தங்களுடன் கிராமவாசிகள் நடந்து போவார்கள். அவர்கள் கையில் ஒரு கொம்பு வேறு இருக்கும். இப்படி அவர்கள் நடந்து போவதைப் பற்றிக் கேட்டால், நகரத்தில் உள்ளவர்கள் சிரிப்பார்கள்.
வெளிச்சமும், வாகனங்களும், தேவையில்லாத ஆர்ப்பாட்டங்களும் கிராமங்களில் கிடையாது. வயலும், மாடும், குண்டும், குழியும், வரப்பும், குளமும், தென்னைமரத்தாலான பாலங்களும், காடுகளும்- இவைதான் கிராமத்தில் உள்ளவை. எலி, தவளை, கோழிக்குஞ்சுகள் போன்றவை பாம்புகளுக்கு மிகவும் விருப்பமான உணவுப் பொருட்கள். எலிகள் என்றால், கண்டபடி அவற்றுக்கு பொந்துகள் இருக்கும்.
கிராமப் புறங்களில் பாம்பைப் பார்க்க முடியாத நாளே இருக்க முடியாது. பாம்புகளைப் பற்றி பல்வேறு வகையான கதைகள் கூறப்படுவதுண்டு. அந்தக் கதைகளை கிராமத்து மக்கள் முழுமையாக நம்பவும் செய்கிறார்கள். பாம்புகளுக்கு பகை உண்டு. யார்மீது விரோதம் தோன்றுகிறதோ, அவர்கள் எங்கே இருந்தாலும் தேடிப்போய் அவர்களைக் கொத்தும். இந்தக் கருத்தை வலியுறுத்துவதற்காக பல கதைகளை வேறு கிராமத்து மக்கள் சொல்ல ஆரம்பிப்பார்கள். ஆனால், உண்மை என்ன தெரியுமா? பாம்புகளுக்கு புத்தி என்று ஒன்று கிடையாது. கேட்கும் சக்தியும் பார்க்கும் சக்தியும் மிகமிகக் குறைந்த அளவிலேயே இருக்கும். இப்படி இருக்கிறபோது கெடுதல் செய்தவர்களை எப்படி ஒரு பாம்பால் யார் என்று கண்டு பிடித்துப் பழிவாங்க முடியும்? சொல்லப்போனால், பழைய போலீஸ் முறையைத்தான் பாம்புகளும் பின்பற்றுகின்றன. திருடன் கையில் கிடைக்காவிட்டால், கண்ணில் படுகிறவனை தூக்குமரத்தில் தொங்கவிடுவது! உண்மையிலேயே தன்னை வேதனைப் படுத்தியவனை அல்ல- முட்டை இட்டுக் கொண்டிருக்கிற காலத்தில் அந்த வழியே யார் நடந்து போனாலும் அவர்களைப் பாம்பு பாய்ந்து கொத்தும். இதுதான் உண்மை. இது இல்லாமல் வெளியே சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் கதைகள் எல்லாமே கட்டுக் கதைகள்தாம். மூடத்தனமான நம்பிக்கைகள் தாம். அதற்காக அப்படியே இந்த விஷயத்தை விட்டுவிட முடியுமா? உடனே நம்முன் வேகமாக வந்து நிற்கும் புராணங்கள்! இதிகாசங்கள்!
அதனால் ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன்.
இதை விதி என்றோ, பகை என்றோ, எதிர்பாராமல் நடந்தது என்றோ- எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
ஸ்ரீஜித் கூனன் குஞ்ஞெறுக்கன் ஒரு பெரிய பணக்காரர். அவர் பாம்பு எதற்காவது கெடுதல் பண்ணியிருக்கிறாரா என்று தெரியவில்லை. நமக்குத் தெரிய வருவது ஒன்றே ஒன்றுதான். அது- கூனன் குஞ்ஞெறுக்கனுக்கு கூன் இல்லை என்பதுதான். என்ன காரணத்தால் கிராமத்து மக்கள் அந்த மனிதரை அப்படி ஒரு பட்டப்பெயர் வைத்து அழைக்க ஆரம்பித்தார்கள் என்பதைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை.
அவருக்கு கூர்மையான கண்கள். அகன்ற மார்பு. ஆறடி உயரம். நல்ல கருத்த நிறம். இதுதான் கூனன் குஞ்ஞெறுக்கன். அவர் யாரைப் பார்த்தாலும் "அடியே...’’ என்றுதான் அழைப்பார். பெண்களை அல்ல- ஆண்களை.
வாழ்வதற்குத் தேவையான எல்லா வசதிகளும் அவரிடம் இருக்கின்றன. அவருக்கென்று இருக்கும் ஒரு வயலின் ஓரத்தில் சாலையை ஒட்டி இருக்கிறது அவரின் வீடு. இரண்டு அறைகளையும், சமையலறையையும், பெரிய ஒரு வராந்தாவையும் கொண்ட வீடு அது. வீட்டில் அவருடன் அவரின் தாயும், மனைவியும், மூன்று குழந்தைகளும் இருக்கிறார்கள்.
கூனன் குஞ்ஞெறுக்கன் எப்போதும் படுப்பது வராந்தாவில் இருக்கும் கட்டிலில்தான். அந்தப் பகுதி ஒரு கோணியால் மறைக்கப்பட்டிருக்கும்.
சரியாக பகல் பதினொரு மணி ஆகிவிட்டால், கூனன் குஞ்ஞெறுக்கன் கள்ளு குடிக்க ஆரம்பித்து விடுவார். அதற்காக காலை பொழுது புலர்ந்தது முதல் அவர் வேறு எதையும் இதுவரை சாப்பிடவில்லை என்று அர்த்தமில்லை. அவர் காலையில் படுத்திருக்கும் பாயை விட்டு எழுந்தவுடன், ஒரு பெரிய டம்ளர் நிறைய சாராயத்தை ஒரே மடக்கில் குடிப்பார். அதுதான் அவரைப் பொறுத்தவரை பெட் காஃபி. பிறகு ஒரு பீடியை உதட்டில் வைத்துப் புகைத்தவாறு காலைக்கடன் கழிக்க வெளியே புறப்படுவார். அந்த பீடியில் கொஞ்சம் கஞ்சாவும் கலக்கப்பட்டிருக் கும். கஞ்சாவும், சாராயமும், கள்ளும் ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும்? இவன் ஒவ்வொருவனும் தனித் தனியாக இருந்தாலே படு கில்லாடிகள்தான்! எல்லாரும் ஒன்று சேர்ந்தால்... பஹுபஹு தான்! இந்த நிலையில் ஏதாவதொரு நல்ல பாம்பை "அடியே...’’ என்று கூனன் குஞ்ஞெறுக்கன் அழைத்து, அதனால் ஏதாவது பிரச்சினை வந்திருக்குமா என்றெல்லாம் கிராமத்து மக்களுக்குத் தெரியாது. நான் சொல்வது புரிகிறதா? உரிய நேரம் வந்துவிட்டால் அவர் கள்ளு குடிக்க ஆரம்பித்து விடுவார். இந்த நேரம் முதல் கள்ளு குடிக்கும் மனிதர்கள் கிராமத்தில் நிறைய பேர் இருக்கிறார் கள். அவர்கள் கள்ளு குடித்து முடித்து, அவரவர் வழியில் போவார்கள். எல்லா இடங்களிலும் மனிதர்களுக்கு ஏதாவது வேலை நிச்சயம் இருக்கும் அல்லவா? ஆனால், கூனன் குஞ்ஞெறுக்கனைப் பொறுத்தவரை, அவருக்கு வேலை என்று எதுவும் கிடையாது. பன்னிரன்டு மணியாகிறபோது, சாலையில் இறங்கி நிற்பார். யாரையாவது சாலையில் பார்த்தால் ஸ்ரீஜித் கூனன் குஞ்ஞெறுக்கன் உரத்த குரலில் கேட்பார்: