ஒரு நல்ல பாம்பு - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7023
“அடியே! எங்கே போறடி?''
இப்படி வார்த்தைக்கு வார்த்தை "அடியே’’ போட்டு பேசுவது அவரின் வழக்கமாகவே ஆகிவிட்டது.
பெண்களைக் கண்டால் தான் அணிந்திருக்கும் ஆடைகளை அவிழ்த்துப் போட்டு ஆடுவார்.
கூனன் குஞ்ஞெறுக்கன் பொதுவாக வீட்டிற்குப் போய்ச் சேரும்போது இரவு ஒன்பதுமணி ஆகிவிடும்.
கட்டிலில் இருக்கும் பாய் அசையும் சத்தம் கேட்டதும், அவரின் மனைவி வாசலைத் திறந்து விளக்கையும் தண்ணீரையும் எடுத்துக் கொண்டு அவரிடம் வருவாள். சாப்பிட்டு முடிந்ததும், அவர் படுத்து உறங்க ஆரம்பித்து விடுவார்.
அவருக்கு மனைவியைக் கண்டால் பயங்கர பயம். அதனால் வீட்டில் இருக்கிற சமயத்தில் மிகவும் அமைதியான மனிதராக அவர் இருப்பார்.
கூனன் குஞ்ஞெறுக்கனைப் பற்றி நிறைய புகார்கள் போயிருக்கின்றன. தற்போது மட்டும் ஐந்தாறு அடிதடி வழக்குகள் அவர்மேல் இருக்கின்றன. கிராமத்தில் ஒன்றிரண்டு போலீஸ்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மனதில் உண்டாகும் சில கவலைகளால், கொஞ்சம் கள்ளு குடிப்பார்கள். தாங்கள் வாங்கும் சம்பளத்தில் அல்ல அவர்கள் கள்ளு குடிப்பது. ஆதலால், அவர்களைப் பற்றி இங்கு ஒன்றும் சொல்வதற்கு இல்லை. கூனன் குஞ்ஞெறுக்கன் பட்ஜெட்டில் இந்தப் போலீஸ்காரர்களும் இருக்கிறார்கள். கண்ணில் காணும் தெய்வம் என்பது மாதிரி, இந்த போலீஸ் காரர்கள்தானே கண்ணில் காணும் அரசாங்கமாக இருப்பவர்கள்!
அப்போது புகார் கொடுத்தவர்கள் என்ன செய்வார்கள்? "உன்னை பாம்பு கடிக்கட்டும்’’ என்று அந்த கிராமத்து மக்கள் கூனன் குஞ்ஞெறுக்கனைப் பார்த்து சாபமிடுவார்கள். கிராமத்தில் பாம்புகளுக்குப் பஞ்சமே இல்லையே! ஆனால் அவர்கள் நினைத்தது மாதிரி ஒரு பாம்புகூட அவரைக் கடிக்கவில்லை. ஏதோ வேலை நிறுத்தம்போல- சொல்லப்போனால், பாம்பு கிராமத்தில் உள்ள யாரையுமே கடிக்கவில்லை. என்ன காரணம்? ஒருவேளை, கிராமத்தில் இருந்த பாம்புகளெல்லாம் வேறு எங்காவது போய் குடியேறி விட்டனவா என்ன? மொத்தத்தில்- கிராமத்து மக்கள் நினைத்தது மாதிரி எதுவும் நடக்கவில்லை. கண்ணில் காணும் அரசாங்கம் ஒரு மாதிரி என்றால் பாம்புகளின் போக்கு இந்த மாதிரி இருக்கிறது!
கூனன் குஞ்ஞெறுக்கன் சாலையில் ஊர் மக்கள் யாரையும் பார்க்க முடியாமல் போனால், அவர்களின் வீடுகளில் ஏறி இடுப்பில் கை வைத்தவாறு பந்தாவாகக் கேட்பார்:
“என்னடி! உன்னை வெளியிலேயே காணோம். இங்க உட்கார்ந்துக்கிட்டு என்னடி பண்றே?''
அவர் இப்படிக் கேட்கிறபோது, கேட்கப்படும் மனிதர் எந்த பதிலும் கூறாமல் மவுனமாக இருப்பதுதானே உத்தமம்! அப்போது கூனன் குஞ்ஞெறுக்கன் என்ன செய்வார்? அவர் சொல்லுவார்:
“வெளியே ரோட்டு பக்கம் வாடி...''
சொன்னதோடு நிற்காமல், வீட்டில் இருக்கும் ஆளை வலிய இழுத்து சாலைக்கு கொண்டு போய், அவருக்கு நான்கு உதைகள் கொடுத்து அனுப்புவார். இது எல்லாமே ஒருசில நிமிடங்களில் முடிந்துவிடும்.
இப்படித்தான் அந்த கிராமத்து மனிதர்களின் வாழ்க்கை நீங்கிக் கொண்டிருந்தது. வழக்கம்போல சூரியன் உதிக்கிறான். என்றைக்கும்போல அவன் மறையவும் செய்கிறான். அதற்குமேல் சிறப்பாகக் கூறும் அளவிற்கு அங்கு ஒன்றும் நடக்கவில்லை. அப்படியே எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா என்ன? ஒருநாள் விசேஷம் நடக்கத்தான் செய்தது. அந்த விசேஷத்தைப் பார்த்தவள்- கூனன் குஞ்ஞெறுக்கனின் மனைவிதான். உண்மையிலேயே அன்று எந்த அளவிற்கு அவள் பயந்துபோய்விட்டாள் தெரியுமா? இரவு ஒன்பது மணி தாண்டியிருக்கும். கூனன் குஞ்ஞெறுக்கன் வரவேண்டிய நேரம்தான். வராந்தாவில் இருந்த கட்டிலில் பாய் அசையும் சத்தம் கேட்டது. வழக்கம்போல கூனன் குஞ்ஞெறுக் கனின் மனைவி விளக்கையும் நீரையும் எடுத்துக் கொண்டு வாசல் கதவைத் திறந்தாள். என்றைக்கும் நடந்தது அல்ல அன்று நடந்தது.
“அய்யோ... அம்மா!'' என்றொரு அலறல். வயதான தாய் எழுந்தாள். குழந்தைகள் எழுந்தன. எல்லாரும் ஓலமிட்டார்கள்.
சம்பவம் நடைபெற்ற வீடு கூனன் குஞ்ஞெறுக்கனின் வீடாயிற்றே! ஆதலால், கிராமத்து மனிதர்கள் யாரும் வீட்டுப் பக்கம் வரவில்லை. அப்போதும் ஓலமும் கூப்பாடும் தொடர்ந்து கொண்டிருந்தன.
கட்டிலில் கிடந்தது கூனன் குஞ்ஞெறுக்கன் இல்லை. விரிக்கப்பட்ட பாயில் உடலை நிமிர்த்திக் கிடந்தது- ஒரு பெரிய நல்ல பாம்பு! அவன் மெதுவாகத் தலையை உயர்த்தி படத்தை விரித்து சீறியவாறு ஆடினான்.
அன்று இரவு கூனன் குஞ்ஞெறுக்கன் வீட்டிற்கே வரவில்லை. அதற்குப் பிறகும்கூட அவர் வீட்டுப் பக்கமே வரவில்லை. இரவு ஒன்பது மணி வாக்கில் கிராமத்து மனிதர்களில் யாரோ ஒருசிலர் கூனன் குஞ்ஞெறுக்கனைக் கொலை செய்து சாலையில் போட்டிருந்தார்கள்!