
நேற்று முழுவதும் 'பார்க்க வந்தவர்கள்' கூட்டம் தான். நகரத்திலிருந்து வெளிவரும் காலைப் பத்திரிகைகளில் செய்தி வந்ததுதான் தாமதம், அதற்குள் நகரத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் செய்தி பரவிவிட்டது. 'அகில இந்திய ரேடியோ' வின் செய்தி அறிக்கையில் கூட விஷயத்தை விடவில்லை.
அவளைக் கண்டு பாராட்டு தெரிவிக்கத்தான் எத்தனை பேர்! "இந்த 'அவார்டு' பல வருஷங்களுக்கு முன்னாடியே உங்களுக்குக் கிடைச்சிருக்க வேண்டியது. இந்தப் பள்ளிக்கூடம் செய்த பாக்கியம் இந்த ஊரு செய்த பாக்கியம்!" என்று வருவோர் போவோரெல்லாம் மனதிற்குத் தோன்றியபடியெல்லாம் அவளைப் புகழ்ந்தார்கள். சிலர் அவளுக்கு ஏற்கனவே பழக்கம் ஆனவர்களாகவும், வேறு சிலர் அவளுடைய முகத்தை ஒரு முறையேனும் பார்த்தறியாதவர்களாகவும் இருந்தார்கள். அப்படி வந்த சிலரில் அவளைப் பொறாமைக் கண்களுடன் நோக்கியவர்களும் இல்லாமற் போய்விடவில்லை. இந்த விஷயத்தில் ஆசிரியையான வனஜா மற்றவர்களைக் காட்டிலும் ஒரு படிமேல் என்று கூட சொல்லலாம். ஒரு பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியை என்ற முறையில் வனஜாவைப் பல்வேறு சமயங்களில் பல்வேறு காரணங்களுக்காக அவள் தண்டித்ததுண்டு; இடித்துக் காட்டியதுண்டு; மேலிடத்தில் புகார் செய்ததுண்டு. அதற்காக தன் மீது மனதில் வெறுப்பு கொண்டு வனஜா நடந்து திரிவதையும் கௌரி அறிந்து கொள்ளாமல் இல்லை. தன்னைப் பற்றிய சிறிதும் பொருத்தமற்ற பொய்யான செய்திகளைக் கண்ணில் காணும் மற்றவர்களுடைய செவிகளில் வனஜா ஓதிக்கொண்டு திரிவதும் அவளுக்கு வெட்ட வெளிச்சமாக புரியத்தான் செய்தது. என்றாலும், எல்லா வகையான வெறுப்புணர்ச்சியையும் உள்ளத்தின் அடித்தளத்திலேயே பூட்டி வைத்துக் கொண்டு அவளைப் பாராட்டுவதற்காக வனஜாவும் வரத்தான் செய்தாள்.
தன்னைப் பார்க்க வருபவர்களின் கூட்டம் நேற்றோடு முடிந்து விட்டது என்று அவள் நினைத்திருந்த சமயத்தில் வேலைக்காரி ஜானகி வந்து, அவளைப் பார்ப்பதற்காக வெளியே யாரோ காத்து நிற்பதாகத் தெரிவித்தாள்.
'ம்... ம்... யாராக இருந்தால் என்ன? அதற்காகப் பாதிக் குளியலோடு பாத்ரூமை விட்டு வெளியே வர முடியுமா?’
உடம்பில் கமகமக்கும் வாசனை சோப்பைத் தேய்த்து அவன் மீண்டும் குளிப்பதில் ஈடுபட்டாள்.
வழக்கத்தை விட அவள் சீக்கிரமாகவே இன்று குளித்துவிட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும். தன்னைக் காணவந்த ஒரு மனிதரை எவ்வளவு நேரந்தான் வெளியிலேயே நிற்க வைப்பது? குளித்து முடித்த உடம்பை டர்க்கி துவாலையால் இதமாக ஒற்றினாள். பள்ளிக்கு செல்லும்போது அணியக் கூடிய வெள்ளை வெளேரென்று காட்சியளிக்கும் ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டாள். அவளுடைய மென்மையான மேனிக்கு அந்தக் கதர் சேலையும் ப்ளவுஸீம் மிகவும் பொருத்தமாக இருந்தன. மிருதுவான கூந்தலை இரண்டு கைகளாலும் அள்ளி கழுத்துக்குப் பின்புறம் கோதி ஒதுக்கினாள். நீண்டு தொங்கும் கூந்தலின் நுனியில் முடிச்சிட்டாள். மீதி அலங்காரங்களைத் தொடர்ந்து செய்து முடித்தாள். இடையில் இங்கும் அங்குமாக இழையோடி விட்டிருந்த நரைத்த முடிகளை வெளியே தெரியாமல் கறுப்பு முடிகளால் மூடியபடி வேகமாக வெளியே வந்தாள்.
வெளியே தன்னைத் தேடி வந்திருக்கும் மனிதருடைய முகத்தைக் கண்டபோது கௌரியால் சிறிதுகூட நம்ப முடியவில்லை. தான் காண்பது கனவா இல்லை நனவா என்று ஒரு நிமிடம் அவளே சந்தேகப்பட்டாள்.
மெலிந்து போய், இன்றோ நாளையோ என்றிருக்கும் உருவம், சதைகளைத் துருத்திக் கொண்டு வெளியே தெரியும் எலும்புகள், ஒட்டி உலர்ந்து போன முகம். நரையோடிப் போன தலையிலிருந்து நேர் கீழாக கன்னத்தின் வழியே வழிந்து கொண்டிருந்த வியர்வையை, கண்களில் அணிந்திருந்த கண்ணாடியைக் கழற்றியபடி மேல் துண்டால் துடைத்துக் கொண்டிருந்தார் அந்த மனிதர். அவருடைய உதடுகளில் புன்சிரிப்பு தவழ்ந்து கொண்டிருந்தது. சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி கேட்டார்:
"டீச்சருக்கு என்னை யாருன்னு அடையாளம் தெரியுதா?"
சிறிது நேரம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த கௌரி உள்ளே தலையை நீட்டியபடி உரத்த குரலில், "ஜானகி, காபி போட்டுக் கொண்டு வா" என்றாள்.
"நான் காபி குடிப்பதை நிறுத்தி எவ்வளவோ நாளாயிடுச்சு." - அவர் சொன்னார். நாளொன்றுக்கு டம்ளர் டம்ளராக காபி குடித்துக் கொண்டிருந்த மனிதரா இப்படிக் கூறுகிறார்! அவள் மெதுவாக கேட்டாள்:
"உடம்புக்கு ஏதாவது...?"
"ஆமாம்... உடம்புக்கு எல்லாந்தான் வந்து சேருது" - இதைச் சொல்லும்போது அவருடைய குரலில் கொஞ்சமாவது வருத்தத்தின் அறிகுறிகள் தெரிய வேண்டுமே! மாறாக, ஏதோ தமாஷ் ஒன்றைக் கூறுவதுபோல் சிரித்துக் கொண்டே கூறினார். அதிகமாகச் சிரித்ததாலோ என்னவோ, தொடர்ச்சியாக அவருக்கு இருமல் வந்தது. ஏதோ ஒரு விவரிக்க முடியாத உள்ளுணர்வால் உந்தப்பட்ட கௌரி அவருடைய நெஞ்சைத் தன் மென்மையான கரங்களால் மெல்ல தடவி விட்டாள்.
இருமல் நின்றபோதுதான் அவளுக்கு நிம்மதியே வந்தது. தான் அவருடைய நெஞ்சைத் தடவி விட்டது தவறாக இருந்தால்... அதன் விளைவு என்னவாக இருக்கும்? என்ன இருந்தாலும் ஆபத்துக்குப் பாவமில்லை அல்லவா? அவராக இல்லாமல் இதே இடத்தில் வேறு யார் இருந்தாலும் அவள் இப்படித்தான் நடந்து கொண்டிருப்பாள்! இதைப் போய் தவறாக யார் நினைக்கப் போகிறார்கள்? மேலும், இந்தக் காரியத்தை அவள் செய்ய முடியாத அளவுக்கு அவர் அந்நியரா என்ன? அவர் அவளுக்கு எத்தனை நெருக்கமானவர்!
"ம்...ம்... இன்னைக்குக் காலை பேப்பர்ல செய்தியைப் பார்த்தேன்" - தளர்ந்து போன குரல்.
கௌரி அப்போதும் ஒன்றும் பேசாமல் புன்சிரிப்பு தவழ நின்று கொண்டிருந்தாள். அவள் அப்படியே பேச நினைத்தாலும் எதைப் பற்றி பேசுவாள்? ஒரு வேளை அவள் ஏதாவது கூறப் போய், அதுவே ஒரு பெரிய பிணக்குக்கு ஆரம்பமாக ஆகிவிட்டால்....? தான் வேலைக்குப் போவது கூட முன்பு அவருக்கு விருப்பமில்லாத ஒன்றுதான். எழுதிக் கொண்டிருப்பதையும் படித்துக் கொண்டிருப்பதையும் தவிர வாழ்க்கையில் வேறு எதன் மீதும் சிறிதும் பிடிப்பில்லாத அவருடைய போக்கு அவளுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. எங்கேயோ ஆரம்பித்த அந்தப் பிணக்கம் போய் முடிந்தது.
நினைவு அலைகள் காலப் புத்தகத்தின் ஒவ்வோர் ஏட்டிலும் உருண்டோடி எதையோ தேடிக் கொண்டிருந்தன. அந்த நினைவுச் சக்கரத்தின் மாயச் சுழற்சியில் அவள் வீழ்ந்துதான் போனாள்.
"காபி வேண்டாம்னா, வேற ஏதாவது....?"
"கட்டாயம் ஏதாவது சாப்பிட்டுத்தான் ஆகணும்னா, கொஞ்சம் பால் குடுங்க... சாப்பிடுறேன்."
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook