கீறல்கள் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by sura
- Hits: 6974
'கட்டாயம் ஏதாவது சாப்பிட்டுத்தான் ஆக வேண்டுமா?' என்றல்லவா கேட்கிறார்? அவர் எப்போதுமே இப்படித்தான். பல வருடங்களுக்கு முன்னால் ஒரு முறை இதே மாதிரி தான் கூறினார். அன்று நடந்த அந்தச் சம்பவத்தை ஒரு முறை நினைவு படுத்திக் கொண்டாள் கௌரி. வாழ்வில் எதிலுமே அவருக்குப் பற்றில்லை. காபி பருகுவது, சாப்பிடுவது, உறங்குவது, வெளுத்த ஆடைகளை அணிவது - இவை ஒவ்வொன்றையும் தனக்காக அன்றி, ஏதோ காரியத்தைச் செய்வதாக இருந்தாலும், பச்சைக் குழந்தை மாதிரி அவரைக் கையைப் பிடித்துச் செய்ய வைக்க வேண்ட்டியிருந்தது. எழுதுவதிலும் வாசிப்பதிலும் மூழ்கி விட்டாரானால் தான் இருக்கும் உலகத்தையே மறந்து விடுவார். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அவரை யாராவது இடைமறிந்து விட்டால் போதும், அடுத்த நிமிடமே சம்ஹார மூர்த்தியாக மாறி விடுவார்.
ஆனால், அந்த மனிதரின் சக்தி மிக்க, அர்த்தம் பொருந்திய அந்த மவுனத்தின் முக்கியவத்துவத்தை அறிந்து கொள்ளும் நிலையில் கௌரி அன்று இல்லை. இளமை கொழிக்கும் சாதாரண பெண்ணைப் போல அவள் அப்படிப்பட்ட சமயங்களில் அவரை எதிர்த்துப் போராடுவாள். அதன் விளைவு - அவர்கள் இருவருடைய வாழ்விலும் மகிழ்ச்சி என்ற ஒன்றுக்கே இடம் இல்லாமல் போய்விட்டது. அந்தத் திருமண பந்தத்திலிருந்து எப்படியேனும் தான் விடுபட்டு விட வேண்டும் என்று ஒவ்வொரு நிமிடமும் நினைக்கத் தொடங்கினாள் கௌரி. அந்தப் பிரிவினால் நஷ்டம் அடையப் போவது யாருமே இல்லை என்ற நிலை. இது ஒன்றும் அப்படிப்பட்ட பெரிய பிரச்னையாக இருவருக்குமே தோன்றவில்லை; விவாகரத்து பெறுவதற்காக அவர்கள் நீதிமன்ற வாசலில் மாதக் கணக்கில் காத்துக் கிடக்கவும் இல்லை. நீரிலிருந்து ஒரு குமிழ் அதன் மேற்பரப்பில் தோன்ற எவ்வளவு நேரமாகுமோ, அந்த சிறிய கால அளவுக்குள்ளேயே அவர்களுடைய திருமண பந்தமும் முடிவுக்கு வந்தது.
ஆனால் பல வருடங்களுக்குப் பிறகு பலரும் புகழக்கூடிய எழுத்தாளராக மாறிய அவரது அர்த்தம் பொருந்திய மவுனத்தின் மகத்துவத்தை அவள் அறிய நேரிட்டபோது காலம் கடந்து போய்விட்டது என்பதை மட்டும் அவளால் உணர முடிந்தது.
அதன்பிறகு அவர் புகழ்க் குன்றின் உச்சியை நோக்கி உயர்ந்து கொண்டேயிருந்தார். பெரிய பெரிய இடங்களிலிருந்தெல்லாம் அவருக்குப் பரிசுகளும், பாராட்டுக்களும், நன்கொடைகளும் வந்து குவிந்தவண்ணம் இருந்தன. எந்தப் பக்கம் பார்த்தாலும் அவரைப் பற்றிய பேச்சாகவே இருந்தது. இரண்டாவது மனைவி, குழந்தைகளுடன் காட்சியளிக்கும் அவருடைய புகைப்படங்கள் பத்திரிக்கைகளில் வந்ததைக் காண நேர்ந்த சமயங்களில் கௌரி பெருமூச்சுவிடுவாள். கடந்து போன எதை எதையோ நினைத்து அவள் ஏங்கினாள். ஏதோ விலை மதிக்க முடியாத ஒன்றை, தன் தவறு காரணமாக தான் இழந்து விட்டதற்காக வருந்துவாள்.
இத்தனை பெரிய உலகத்தில் அவளுக்கு சொந்தம் என்று உரிமையுடன் கூற யார் இருக்கிறார்கள்? பெற்றோரும் இல்லை; குழந்தைகளும் இல்லை; கூடப் பிறந்த அண்ணன் - தம்பிகளும் இல்லை. இந்த உலகில் அவள் மட்டும் தனி. சொந்தம் என்று இத்தனை வருடங்களாக அவள் கர்வத்துடன் கட்டிக் காத்துக் கொண்டிருந்த இளமைகூட நாள் ஆக ஆக அழிந்து கொண்டே வந்தது. தன் வயதான காலத்தில் தன்னைப் பார்த்துக் கொள்ளப் போவது யார் என்ற கேள்வி அவளது உள்ளத்தின் அடித்தளத்தில் எழும் நேரங்களில் தன்னையும் மீறி அவள் அழ ஆரம்பித்து விடுவாள்.
உடலெங்கும் ஒரு வகையான தளர்ச்சி. அவளுடைய வாழ்க்கையில் இப்படியெல்லாம் நிகழ்ச்சிகள் நடந்ததற்கு அவள் மட்டுமே காரணம் இல்லை. எல்லாம் விதியின் விளையாட்டு என்றில்லாமல் வேறு எதைச் சொல்வது?
எஃகுக் கெட்டிலில் பாலையும் டம்ளரையும் கையில் எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்த கௌரி தன் சேலைத் தலைப்பால் கவலை படர்ந்த தன் முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.
"ஸ்கூலுக்குப் போற நேரத்துல நான் வந்து டீச்சரைத் தொந்தரவு செய்றேன்னு நினைக்கிறேன்"
கடவுளே, இதுவா தொந்தரவு? இவர் ஏன் இப்படியெல்லாம் பேசுகிறார்? அவளுடைய உள்ளத்தை வேதனைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடனேயே அவளைத் தேடி அவர் வந்திருக்கிறாரா? அல்லது எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய உள்ளத்தில் அவள் ஏற்படுத்திய வடுக்கள் முழுமையாக மறைந்து போய்விட்டன என்பதை அவளுக்கு அவர் காட்ட முயல்கிறாரா?
முகத்தில் சிரமப்பட்டு தெளிவை வரவழைத்துக் கொண்டு டம்ளரையும், கெட்டிலையும் அவருக்கு முன்னால் வைத்தபோது கௌரிக்குத் தன் கண்கள் இருண்டு கொண்டு வருவதைப் போல் தோன்றியது. ஒரு நிமிடத்தில் முகம் முழுவதும் வியர்வைத் துளிகள் அரும்பி விட்டன. சேலைத் தலைப்பால் அவற்றை அழுத்தித் துடைத்தாள் அவள்.
பாலைப் பருகி முடித்தவர் எழுந்து நின்றபடியே சொன்னார்: "ம்... ம்... ம்... இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே பொறுத்துக்கிட்டு இருக்க முடியும்? நல்ல ஒரு டாக்டரைப் போய்ப் பார்க்கணும். அதுக்குப் பிறகு செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு. தினமும் கஷ்டங்களுக்கு மத்தியில வாழும் என்னை மாதிரி ஏழை எழுத்தாளனுக்கு அரசாங்கம் ஏதாச்சும் மானியம் கீனியம் தருமோ என்னமோ... ம்.... கொஞ்சம் முயற்சி பண்ணித்தான் பார்ப்போமே!"
"எனக்கு ஸ்கூலுக்குப் போகணும்னு ஒண்ணும் அவசரமில்லை. அதிகமாப் போனா, ஒரு நாள் லீவு போட்டா போச்சு!" என்றாள் கௌரி.
அவள் கூறியதைக் கேட்காதது மாதிரி படிகளில் நின்றபடியே அவர் சொன்னார் : "விருது கிடைச்சிருக்கிற செய்தியைப் பேப்பர்ல தான் நான் தெரிஞ்சுக்கிட்டேன். அப்பவே நினைச்சேன், வந்து ஒரு வார்த்தை பாராட்டிட்டுப் போவோம்னு. என்ன இருந்தாலும் நாமெல்லாம் மனுஷப் பிறவிகளா பிறந்துட்டோம் பாருங்க. நாம ரெண்டு பேரும் இனி ஒரு நாள் இப்படி நேருக்கு நேரா சந்தித்துப் பேசுவோம்னு என்ன நிச்சயம்...?"
அதற்குப் பிறகும் அவர் என்னவோ பேசத்தான் நினைத்தார். ஆனால் பாழாய்ப் போன இருமல் அவரைப் பேச விட்டால்தானே! அதனால்தானோ என்னவோ, விடைபெறும் போதுகூட அவளிடம் கையால் ஆட்டிக் கொண்டுதான் அவரால் போக முடிந்ததே தவிர, வாயால் எதுவும் பேச முடியவில்லை.
ஒன்றுமே பேச முடியாமல் நடந்து போகும் அந்த வயோதிக உருவத்தையே, கண்களில் நீர் மல்க வீட்டின் முற்றத்தில் கற்சிலைபோல பார்த்தவாறு நின்றிருந்தாள் கௌரி டீச்சர்.