வெறும் ஒரு இனிப்புப் பலகாரம் - Page 5
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7165
"ஓ... என் சிந்துராணி..." அருண் அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டே சொன்னார்: "என் சிந்துராணி, நீங்கள் இப்படி கூறியிருக்கக் கூடாது. இதை நீங்கள் சொல்லியிருக்கக் கூடாது."
"த்ரிபலாவை உண்டாக்குவது என்பது பெரிய சிரமமான விஷயமில்லை. "கிருஷ்ணமூர்த்திசோர்வடைந்து போய் காணப்பட்ட பொருளாதார நிபுணரின் மனைவியிடம் சொன்னார்: "முக்கியமான ஒரு பொருள் நெல்லிக்காய். காய வைக்கப்பட்ட நெல்லிக்காய்."
"நான் தட்சிணேஷ்வரத்திற்குப் போயிருந்த போது, என்னுடன் ஐ.வைச் சேர்ந்த ராஜகுமாரன் இருந்தார். அவர் விரைவில் மேற்படிப்பிற்காக இங்கிலாண்டிற்குச் செல்கிறார்." இந்திரா சொன்னான்.
"நீங்கள் கோவில்களுக்குப் போவதுண்டா?" வக்கீல் என்னிடம் கேட்டார்.
"சமீபத்தில் எங்கும் போகவில்லை."
"விமலா ஒரு கம்யூனிஸ்ட்." பொருளாதார நிபுணர் சொன்னார்: "அவளுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை."
"கடவுள் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும் கடவுள் தேவையில்லை என்று உறுதியான குரலில் யாரால் கூற முடியும்?" மகாராணி எங்களை நெருங்கி நடந்து வந்து கொண்டே சொன்னாள்: "அறிவியல், இலக்கியம், கலை... இவை போதும் வாழ்வதற்கு என்று இப்போது உங்களைப் போன்ற இளம் வயதில் உள்ளவர்களுக்குத் தோன்றும். ஆனால், சில சிரமமான தருணங்களில் அவை மட்டுமே போதாது என்பது தெரிய வரும். காதலன் கைவிட்டுப் போகும்போது, பிள்ளைகள் நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தைத் தழுவும் போது, தொண்ணூறு வயது தாண்டி முதுமையன் தொல்லைகளால் துயரங்களைச் சந்திக்கும் போது... அப்போதுத கலை உதவிக்கு வருமா? இல்லை... என் மகளே, கடவுள் மட்டுமே நமக்கு ஒரு அபயத்தை அளிப்பார்."
"நீங்கள் எங்களை பயமுறுத்துகிறீர்கள்." வக்கீல் சொன்னார்.
"பயமுறுத்துகிறேனா? நான் உன்னை பயமுறுத்தினேனா?" மகாராணி என்னிடம் கேட்டாள்.
"இல்லை."
"என் உடலில் சதைப் பிடித்தால், என் இதயத்திற்கும் அழகு கிடைக்குமா? என்ன சொல்றீங்க? சொல்லுங்க சிந்துராணி..." அருண் கேட்டார்.
"நீங்கள் அமைதியாக உட்கார்ந்து உணவைச் சாப்பிடுங்க. எனக்கு பேச வேண்டும் என்று தோன்றவில்லை." சிந்துராணி சொன்னாள்.
"தவறு நேர்ந்துவிட்டது. மன்னிக்கணும்." அருண் சொன்னார்: "மன்னிப்பு தருவீர்கள் அல்லவா?"
"பேசாம இருங்க..." சிந்துராணி சொன்னாள். அவருடைய கண்கள் நான் அமர்ந்திருந்த மூலையில் நகர்ந்து விளையாடிக் கொண்டிருந்தன.
"அப்படியென்றால் மன்னிக்க மாட்டீங்க. அப்படித்தானே சிந்துராணி?" அருண் ஒரு கெஞ்சுகிற குரலில் கேட்டார்.
"கடவுளே! இந்த முட்டாளின் வாய் கொஞ்சம் மூடியிருந்தால் நன்றாக இருக்கும்!" சிந்துராணி ஒரு கையை நெற்றியின்மீது அடித்துக் கொண்டே சொன்னாள். அவளுடைய முகம் மிகவும் சிவந்து போய் காணப்பட்டது.
"வாந்தி எடுக்க வேண்டும் என்று தோன்றியும் பிரயோஜனமில்லை. குளியலறையில் எவ்வளவு நேரமாக நான் நின்றிருந்தேன். வாந்தி எடுக்கவே முடியவில்லை." பொருளாதார நிபுணரின் மனைவி சொன்னாள்.
"வாந்தி எடுப்பதை விட த்ரிபலா நல்லது." கிருஷ்ணமூர்த்தி சொன்னார்: "நீங்கள் பயன்படுத்திப் பாருங்க...
நான் எழுந்து நின்றேன்.
"விமல், நீ புறப்பட்டுவிட்டாயா?" கிருஷ்ணமூர்த்தி கேட்டார்.
"ஆமாம்..."
"விமலா ராணிக்கு என் மீது வெறுப்பு." வக்கீல் சொன்னார்.
"விமலா ராணிக்கு காதல் என்ற விஷயமே வெறுப்பை உண்டாக்கியிருக்கும்." சிந்துராணி உரத்த குரலில் சொன்னாள்.
"அது உண்மையாக இருக்கும்." பொருளாதார நிபுணர் சொன்னார்: "விமலாவிற்கு காதல் என்ற விஷயமே வெறுப்பை அளிக்கக் கூடிய ஒன்றாக ஆகிவிட்டது என்றுதான் எனக்கும் தோன்றுகிறது."
"காதல்!" மகாராணி சொன்னாள்.
"காதல் என்ற சொல்லுக்கு அர்த்தம்கூட உங்களில் யாருக்கும் தெரியும் என்று நான் நினைக்கவில்லை."
"மகாராணி, உங்களுக்குத் தெரியுமா?" வக்கீல் கேட்டார்: "நீங்கள் காதலில் சிக்கியிருக்கிறீர்களா?"
மகாராணி புகையிலைக் கறை படிந்த பற்களை வெளிப்படுத்திச் சிரித்தாள். ஆனால், எதுவும் கூறவில்லை.
"மகாராணி, உங்களுக்கு இன்னும் கொஞ்சம் வயது குறைவாக இருந்திருந்தால், நான்உங்களுடன் காதல் கொண்டிருப்பேன்." கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
"அப்படியென்றால், அது என் மீது கொண்ட காதலாக இருக்காது. என்னுடைய இளமையின் மீது கொண்ட காதலாகத்தான் இருக்கும். அதைத்தான் நான் சொன்னேன்- என் நண்பர்களே, உங்களுக்கு காதல் என்றால் என்ன என்று தெரியவில்லையென்று."
"காதல் என்பது ஒரு இனிப்புப் பலகாரம் அவ்வளவுதான்." அருண் சொன்னான்: "வெறும் ஒரு இனிப்புப் பலகாரம்."
"என்னால் வாந்தி எடுக்கக் கூட முடியவில்லையே!" பொருளாதார நிபுணரின் மனைவி குறைபட்டுக் கொண்டாள்: "இது என்ன ஒரு கஷ்டம்! என்னால் வாந்தி எடுக்கக் கூடமுடியவில்லை."
சிந்துராணி வெறுப்புடன் அந்த நடுத்தர வயதைக் கொண்ட பெண்ணின் முக வெளிப்பாடகளைப் பார்த்துக் கொண்டே, யாரிடம் என்றில்லாமல் புன்னகைத்தாள்.