Lekha Books

A+ A A-

பாம்பும் கண்ணாடியும்

pampum kanadium

“உங்க யாரோட உடம்புலயாவது பாம்பு சுத்தியிருக்கா? ஸ்டைலான ஒரு நல்ல பாம்பு?''

எல்லாரும் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். இந்தக் கேள்வியைக் கேட்டது ஒரு டாக்டர். ஹோமியோபதி டாக்டர் அவர். பாம்புகளைப் பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, இந்தக் கேள்வி வந்தது. நாங்கள் ஆர்வத்துடன் அவரையே பார்த்தோம்.

டாக்டர் தொடர்ந்து சொன்னார்: “பாம்பும் கண்ணாடியும்- இதுதான் சம்பவம்.

நல்ல வெப்பமுள்ள ஒரு ராத்திரி. அப்போ கிட்டத்தட்ட பத்து மணி இருக்கும். நான் ஹோட்டல்ல சாப்பிட்டு முடிச்சிட்டு, அறைக்கு  வந்து கதவைத் திறந்தேன். அப்போ மேலே ஒரு கிருகிரா சத்தம் கேட்டுச்சு. இந்த மாதிரியான சத்தத்தை அப்பப்போ நான் கேக்குறது உண்டு. எலிகளும் நானும்- சொல்லப் போனா- ஒண்ணா அந்த அறையில வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். நான் தீப்பெட்டியை உரசி மேஜைமேல இருந்த விளக்கைக்  கொளுத்தினேன்.

அன்னைக்கு இப்போ மாதிரி மின்சார விளக்கு அந்த வீட்ல இல்ல. அது ஒரு வாடகைக்கு இருக்கிற சின்ன அறை. அப்பத்தான் நான் டாக்டரா பிராக்டீஸ் பண்ண ஆரம்பிச்சிருந்தேன். சம்பாத்தியம் அப்ப ஒண்ணும் பெருசா இல்ல. பெட்டியில அறுபது ரூபா வச்சிருந்தேன். கொஞ்சம் சட்டையும் வேஷ்டியும். பிறகு... ஒரு கறுப்பு நிற கோட்- அது அப்போ என் உடம்புல இருந்துச்சு.''

நான் கறுப்பு கோட்டையும், வெள்ளை சட்டையையும், அவ்வளவு வெண்மையா இல்லாத பனியனையும் கழற்றி கொடியில போட்டேன். பிறகு... ஜன்னல்கள் இரண்டையும் திறந்து விட்டேன். வெளிச்சுவரோடு சேர்ந்து இருக்கிற அறை அது. மாடி இல்ல. உத்திரம் வழியே எலிகள் இப்படியும் அப்படியுமாய் ஓடிக்கிட்டே இருக்கும். நான் படுக்கையைத் தட்டி சுவரோடு சேர்த்துப் போட்டேன். உறக்கம் வருவனான்னுது. கொஞ்சம் காத்து வாங்கலாமேன்னு நான் வராந்தா பக்கம் வந்து நின்னேன். ஆனா, வாயு பகவான் விடுமுறையில இருந்தாரு.

நான் திரும்பவும் அறைக்குள்ளே போயி நாற்காலியில அமர்ந்தேன். மேஜைக்குமேல இருந்த பெட்டியைத் திறந்து மெட்டீரியோ மெடிக்கான்ற புத்தகத்தை எடுத்து திறந்து மேஜை மேல வச்சேன். விளக்குப் பக்கத்துல ஒரு பெரிய கண்ணாடியும், ஒரு சின்ன சீப்பும் இருந்துச்சு.

பக்கத்துல கண்ணாடி இருக்குறதைப் பார்த்தா, அதுல நம்ம முகத்தைப் பார்க்கலாம்ன்ற எண்ணம் யாருக்குமே வருமில்ல? நான் கண்ணாடியை எடுத்துப் பார்த்தேன். அப்போ நான் அழகை ரசிக்கக் கூடிய ஒரு ஆளா இருந்தேன். எனக்கு இன்னும் கல்யாணம் ஆகாத காலம் அது. நான் ஒரு டாக்டர் வேற ஆச்சே! எப்பவும் மிடுக்கா இருந்தாத்தானே நல்லா இருக்கும்! நான் சீப்பை எடுத்து தலைமுடியை வாரி, ஒழுங்காக வகிடு எடுத்தேன்.

அப்போ மேல மீண்டும் அந்த கிருகிரா சத்தம்!

நான் இப்போ என் முகத்தை கண்ணாடியில பார்த்தேன். அப்போ உடனடியா மனசுக்குள்ளே ஒரு முடிவு எடுத்தேன். இனிமேல் தினமும் முகத்தைச் சவரம் செய்யணும்... ஒரு அரும்பு மீசை வச்சிக்கணும்... இப்படி ஒரு முடிவு எடுத்ததற்குக் காரணம்? தெரிஞ்சதுதானே! நான் ஒரு திருமணம் ஆகாத ஆளு... டாக்டர்...

மேலே மீண்டும் அந்த கிருகிரா சத்தம்!

நான் எந்திரிச்சு ஒரு பீடியை உதட்டுல வச்சுக்கிட்டு அறையில இப்படியும் அப்படியுமா நடந்தேன். அப்போ மனசுல ஒரு இனிமையான எண்ணம் தோணுச்சு. கல்யாணம் செஞ்சிக்கணும்... நிறைய பணமும் நல்ல ப்ராக்டீஸும் நல்ல தடிமனாவும் இருக்குற ஒரு அழகான பெண் டாக்டர்தான் எனக்கு மனைவியா வரணும். கட்டாயம் அவள் நல்ல தடியா இருக்கணும். வர்ற மனைவி ஏன் அப்படி இருக்கணும்னு நான் நினைக்கிறேன் தெரியுமா? அப்படின்னாதான் ஏதாவது பிரச்சினை வந்து அவள்கிட்டே இருந்து நாம தப்பிச்சு ஓடினாக்கூட அவளால பின்தொடர்ந்து ஓடி வந்து நம்மளைப் பிடிக்க முடியாது.

இப்படி பலவிதப்பட்ட சிந்தனைகளோட நான் திரும்பவும் நாற்காலியில வந்து உட்கார்ந்தேன். அப்போ இதுக்கு முன்னாடி கேட்ட கிருகிரா சத்தம் மாடியில கேட்கல. அதுக்கு பதிலா ஒரு ரப்பர் குழாய் விழுந்தா எப்படி மென்மையா சத்தம் கேட்கும்... அப்படியொரு சத்தம் கேட்டது. அதுக்கு மேல பெருசா எதுவும் நடக்கல. இருந்தாலும் என்னையும் மீறி பின்னாடி திரும்பிப் பார்த்தேன். திரும்பிப் பார்த்தா... நாற்காலி வழியே ஒரு தடிமனான நல்ல பாம்பு என் உடம்புல ஏறிக்கிட்டு இருக்கு.

நான் பயந்து போய் குதிக்கல; நடுங்கல; கூப்பாடு போடல. காரணம்- மேல சொன்ன எதையும் செய்ற அளவுக்கு நேரமில்ல. பாம்பு என் தோள்மேல ஏறி இடது கை முட்டிக்குமேல சுத்திக்கிட்டு படத்தை விரிச்சுக்கிட்டு இருக்கு. என் முகத்துல இருந்து மூணு நாலு அங்குலம் தூரத்துல அதோட முகம் இருக்கு.

என்னால மூச்சுவிட முடியலைன்னு சொல்றதுகூட தப்பு. நான் ஒரு கருங்கல் சிலை மாதிரி உட்கார்ந்திருந்தேன்னு சொல்றதுதான் சரி. மனசு முழுக்க ஒரே பயம் ஆக்கிரமிச்சிருந்துச்சு. என்னைச் சுற்றி மரணம் சூழ்ந்துகிட்டு இருப்பதை என்னால தெளிவா உணர முடிஞ்சது. இருட்டுல திறந்து கிடக்கிற வாசல்... இருட்டுல மூடியிருக்கிற அறை. எரிஞ்சிக்கிட்டு இருக்கிற விளக்குக்கு முன்னாடி கண்ணாடியிலும் வெளியிலும் நல்ல பிரகாசம். கற்சிலைபோல உட்கார்ந்திருக்கேன்.

இதுதான் எல்லா உலகங்களையும் படைச்ச கடவுளோட மகா சந்நிதி. கடவுள் இங்கே இருக்கார். ஏதாவது சொல்லி அவருக்கு அது பிடிக்காமப் போயிட்டா... நான் என்னோட சின்ன இதயத் துக்கு வெளியே "தெய்வமே'ன்னு பிரகாசமான எழுத்துகளால் எழுதணும்னு நினைச்சேன். கருணை வடிவமான கடவுளே!

இடது கையில் பயங்கர வேதனை. பெரிய ஒரு தடிமனான ஈயக் கம்பி... இல்லை இல்லை... தீக்கட்டையால் உண்டாக்கப்பட்ட ஒரு கம்பி என்னோட கையில் மிகவும் பலமா கொஞ்சம் கொஞ்சமா இறுக்குவதைப்போல நான் உணர்ந்தேன். கை தன்னோட சக்தியை மெதுவா இழந்துக்கிட்டு இருந்துச்சு. என்ன செய்வது?

கொஞ்சம் அசைஞ்சாலும் பாம்பு கொத்தும்.

மரணம் நாலு அங்குல தூரத்துல நின்னுக்கிட்டு இருக்கு. அப்படி அது கொத்திட்டா, உடனடியா என்ன மருந்தைச் சாப்பிடுவது? அறையில தற்போதைக்கு எந்த மருந்தும் இல்ல. அப்பாவியான பலவீனமான முட்டாளான டாக்டர்... எல்லாவற்றையும் மறந்து என் மனம் லேசாக சிரித்தது.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel